சிவப்புச் சந்தை

ஸ்காட் கார்னி

சிவப்புச் சந்தை

நவீன மருத்துவ அறிவியல் இன்று எண்ணிப்பார்க்க இயலாத அளவிற்கு பிரமாண்டமான வளர்ச்சியை எட்டியுள்ளது. நவீன மருத்துவ அறிவியலின் பிரமாண்ட வளர்ச்சியினை நாம் ஒருபுறம் கொண்டாடிக் கொண்டிருந்தாலும் இந்த பிரமாண்ட வளர்ச்சிகள் அனைத்துமே உலகிலுள்ள இருவேறு வர்க்க மக்களுக்கானது என்றே எழுதப்படாத விதியாகவே பிரிக்கப்பட்டுள்ளது.

அதுவும் ஒரு பிரிவான பெரும்பான்மை உழைக்கும் வர்க்க மக்களின் ஏழ்மையின் மூலம் அவர்கள் உடலுறுப்புகள், ரத்தம், சதை, எலும்பு, ஏன் உயிரற்ற உடல்களை கூட விட்டுவைக்காமல் ஒட்டாக சுரண்டப்பட்டு தான் மருத்துவம் இன்றைய நவீன வளர்ச்சியினை எட்டியுள்ளது. 

மேலும் நவீன மருத்துவ அறிவியல் வளர்ச்சிகளின் ஊடாக உழைக்கும் வர்க்க மக்களின் உயிருள்ள உடம்புகள், உயிரற்ற உடம்புகள் ஆகியவற்றினை மூலப்பொருளாக வைத்து பெரும் லாபம் ஈட்டும் "சிவப்புச் சந்தை” வணிகமும் கற்பனையில் எண்ணி பார்க்க இயலாத அளவிற்கு உலகம் முழுவதும் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. சிவப்புச் சந்தைகளின் வியாபாரங்கள் பற்றி சிலவற்றை பார்த்தோமானால்...

2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் தமிழ்நாட்டில் வாழ்விழந்த மக்களை அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா அரசு கண்டுகொள்ளாமல் விடவும், கடும் வறுமையில் சிக்கியிருந்த அந்த மக்கள், உடலுறுப்பு புரோக்கர்கள் மூலமாக மூளைச்சலவை செய்யப்பட்டு, தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்காக சரசரவென வேறு வழியின்றி தங்கள் சிறுநீரகத்தை 15,000, 20,000 என மிகவும் அற்பமான தொகைக்கு விற்பனை செய்தனர். வறுமை காரணமாக சிறுநீரகம் விற்பனை செய்ததின் மூலம் பாதிக்கப்பட்ட 500க்கு மேற்பட்டவர்களை சில சமூக செயல்பாட்டாளர்களால் ஒன்றிணைக்கப்பட்டு வழக்காடுமன்றத்தில் வழக்கு தொடுத்தும், அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி அரசிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையோ, உதவியோ இல்லாமல் அந்த சம்பவம் அப்படியே மூடி மறைக்கப்பட்டது. பலநாடுகளில் அகதிகள் எல்லைகளை கடப்பதற்காக தங்கள் சிறுநீரகத்தை நுழைவு சீட்டாக பறித்து கொடுக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இப்படி சிறுநீரக திருட்டுகள் பல்வேறு வழிகளிலும்...

இந்தியாவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏழை எளிய பெற்றோர்களின் குழந்தைகளை நாங்கள் பராமரித்து படிக்க வைத்து வளர்க்கிறோம் என்று உறுதி கூறி, படிப்பறிவற்ற பெற்றோர்களிடமிருந்து கைநாட்டு, கையொப்பம் பெற்று, குழந்தைகளை வாங்கியும், ஆள் வைத்து கடத்தியும் அனாதை குழந்தைகள் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு அக்குழந்தைகளை தத்தெடுப்பு என்று பெயரில் விற்பனை செய்வது இன்று பல்வேறு வழிகளிலும்...

இந்தியாவில் பல கிராமங்களில் கல்லறைகள் சூரையாடப்பட்டு அதன் எலும்புகள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் கால் முட்டிக்கு கீழ் உள்ள எலும்புகள் புல்லாங்குழல் செய்வதற்காகவும், மண்டை ஓட்டின் உச்சி தலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட எலும்பு பிராத்தனை கிண்ணங்கள் மற்றும் பிற பொருள்கள் தயாரிப்பதற்காகவும் திபெத் புத்த மதத்தை சார்ந்தவர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்படி எலும்பு திருட்டுகள் பலவேறு வழிகளிலும்...

மர்மமான மரணம், வெளிநாட்டவர்கள் மரணம், தற்கொலை, கொலை என்று இறந்தவர்கள் உடலை, இறைச்சிக்காக நாய் மோப்பம் பிடித்து பின்தொடர்வது போன்று அந்த உடலை பின்தொடர்ந்து அதனை புகைப்படம், வீடியோக்கள் எடுத்து அதனை பயன்படுத்தி தங்கள் பத்திரிக்கைகள், நாளிதழ்கள், தொலைகாட்சிகளில் என நெஞ்சை உருக்கும் தலைப்பில் செய்திகள் வெளியிட்டு அதன் மூலம் பல்வேறு வழிகளில் லாபம் ஈட்டுவதும்...

உரிமைக்காக போராடும் பாலஸ்தீன மக்களை கொத்து கொத்தாக கொன்று இஸ்ரவேலிய ராணுவம் அவர்கள் கண்களை திருடி வருமானம் பார்த்த வரலாறும், தற்போது அந்த கண் திருட்டுகள் வேறுபல வழிகளிலும்...

உலகின் பல பாகங்களில் பலர் கொலை செய்யப்பட்டு அவர்களின் கொழுப்பை அழகு சாதன நிறுவனங்களுக்கு விற்பதும் பல்வேறு வழிகளிலும்...

மாடு வளர்த்து தினம்தோறும் பால் கறந்து விற்பனை செய்வது போன்றே இந்தியாவில் மனிதர்களை கடத்தி அடைத்துவைத்து, அவர்களின் ரத்தங்களை தேவைக்கு ஏற்றது போல ஒவ்வொரு நாள்களாக உறிந்து எடுத்து விற்பனை செய்வது இன்று பல்வேறு வழிகளிலும்...

வறுமை சூழ்ந்து வாழ வழியின்றி தவிக்கும் இந்திய பெண்கள் தங்கள் சினைமுட்டைகளை ஒரு சில ஆயிரங்களுக்கு விற்பனை செய்வதும், தன்னை போன்றே ஆனால் கோடிகளில் புரண்டு சொகுசு வாழ்க்கை வாழும் உலக முழுவதும் உள்ள சீமாட்டிகளுக்காக தங்கள் கருப்பையை வாடகைக்கு (வாடகைதாய்) விடுவதும்...

ஒரு சில ஆயிரங்களுக்காக தங்கள் உடல்களை புது மருந்துகளின் பரிசோதனைக்காக வாடகைக்கு விடுவது, ஸ்டெம் செல்களை விற்பனை செய்வது, எலும்பு மஞ்ஞையை விற்பனை செய்வது, மனிதத் திசுக்களை விற்பனை செய்வது, ஏன் நாம் குப்பைகளில் தூக்கி வீசும் தலைமுடிகளை வரை சேகரித்து அதன் மூலம் பணம் ஈட்டுவது என எண்ணி பார்க்க இயலாத அளவுக்கு இந்த சிகப்புச் சந்தை மிகப்பெரிய வளர்ச்சியடைந்துள்ளது.

சிகப்புச் சந்தையின் வளர்ச்சிகள் அனைத்துமே நவீன மருத்துவ அறிவியலின் வளர்ச்சியின் ஊடாகவே வளர்ச்சி அடைந்தவையே. இதில் பெரும் கொடுமை என்னவென்றால் உழைக்கும் மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்தியே நவீன மருத்துவ அறிவியல் வளர்ச்சியடைந்தது. ஆனால் அந்த நவீன மருத்துவ அறிவியல் எந்தளவுக்கு அதே உழைக்கும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பார்த்தோமானால் எந்த வகையிலும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. யானை கரும்பு உண்ணும் போது கரும்பிலிருந்து சாறி ஒன்றிரண்டு துளிகள் கீழே சிந்தும். அதுபோன்றே நவீன மருத்துவ வளர்ச்சியில் உழைக்கும் மக்கள் பெற்ற நன்மைகள்.

அதே நேரம் இந்த நவீன மருத்துவத்திற்கு தேவையான மூலப்பொருள்களாக ஏழை எளிய உழைக்கும் மக்கள் மாறியிருப்பது தான் முதலாளித்துவ சமூகத்தின் இயல்பை மேலும் வெட்டவெளிச்சமாக நமக்கு உணர்த்துகிறது. நவீன மருத்துவத்தின் பார்வையில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் நடுத்தர வர்க்கத்தினரின் மூலப்பொருளாக தான் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களின் நிலை மாறியுள்ளது.

இவை அனைத்தையும் ஒட்டி அரசுகள் ஆயிரம் வழிமுறைகளையும், வழக்காடுமன்றங்கள் ஆயிரம் உத்தரவுகளையும், ஏன் பாராளுமன்றம் கூட தனது பங்கிற்காக பல்வேறு சட்டங்களை ஏற்றியுள்ளது. ஆனால் இவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்துவது யார் ? 

உடலுறுப்பு மோசடிகள் பற்றி செய்தித்தாள், ஊடகங்கள் என பரவலாக பல செய்திகள் வந்த வண்ணமே உள்ளது. ஆனால் இன்றுவரை ஏதாவது ஒரு பெரும் மருத்துவமனை மீது அரசு நடவடிக்கை எடுத்து கேட்டிருப்போமா ? 

அரசுகளும் தனியார் மருத்துவமனைகளும் வெவ்வேறு அல்ல. வெவ்வேறாக இருப்பீன் அரசு மருத்துவமனைகளின் தரம் ஏன் இன்று இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறது என்பதோடு நாம் ஒப்பிட்டு புரிந்துகொள்ளலாம் ? 

இப்படியாக அரசின் அளிக்கப்படாத அங்கீகாரத்தோடு உழைக்கும் மக்கள் சிகப்புச் சந்தையின் மூலப்பொருள்களாக பெரும் நவீன மருத்துவ முதலாளிகளுக்கு லாபம் ஈட்டி கொடுக்கும் ஒரு சந்தை பொருளாகவே இருக்கின்றனர் என்பதையே இப்புத்தகம் அதற்கே உண்டான பாணியில் குருதி ஒழுக தோலுரித்து காட்டுகிறது.

- Bright singh Johnrose

நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்

விலை : ரூ. 300

நூலாசிரியர்: ஸ்காட் கார்னி

வெளியீட்டாளர்: அடையாளம்

பதிப்பு : 2019

தொடர்புக்கு:

செந்தளம் பதிப்பகம்

+91 96003 49295