தமிழரைத் தேடி
த. தங்கவேல்
முக நூலின் வழியே எனக்கு அறிமுகமான நண்பர் JeyaVeera Pandian அவர்கள். முன்பு அடிக்கடி அவருடன் தொலைபேசியில் உரையாடுவது வழக்கம். தமிழர் வரலாறு பற்றி மிகுந்த ஈடுபாடு கொண்டவர். வரலாற்று ஆய்வாளர். நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவாரங்களுக்கு முன் அவரிடம் பேசி கொண்டிருந்த பொழுது "தமிழரைத் தேடி" என்ற நூலை தங்கவேல் என்பவர் எழுதியுள்ளார் அந்த நூல் படித்துள்ளீர்களா? ஆய்வு எப்படி? என்று கேட்ட பொழுது சிரித்து கொண்டே சொன்னார் நான் தான் தோழர் அந்த தங்கவேல் என்றார். நானும் சிரித்துக் கொண்டேன் வேறென்ன செய்ய முடியும். இந்த நூல் எழுதிக் கொண்டிக்கும் காலத்திலே இது பற்றி பேசியிருக்கிறார். முகவரி கொடுத்த உடனே நூலினை அனுப்பி விட்டார். இரண்டாம் பதிப்பு கண்டு விட்ட இந்த நூலினை தற்பொழுதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். படித்து முடித்த பின்பு விரிவாக எழுத வேண்டும்.
முன்னுரையில் இருந்து சில பகுதிகள் ...
"தமிழ் சமூக வரலாற்று ஆய்வில் ஏற்பட்டிருந்த நீண்ட கால தேக்க நிலை கீழடி அகழ்வாய்வின் மூலம் முடிவிற்கு வந்துள்ளது எனலாம். சிந்துவெளி நகர நாகரிகம் அழிந்த பின் மீண்டும் இந்திய பண்பாட்டு உருவாக்கம் கங்கை கரையில் இருந்து தொடங்குவதாக வரலாற்று ஆய்வுலகம் இதுவரை நம்பி வந்தது. கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற தொல்லியல் தளங்களில் ஆய்வு முடிவுகள் வந்தபின் நிலைமை முற்றிலும் மாறியுள்ளது".
"அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் தமிழ்ச்சமூக வரலாற்று ஆய்வில் இருந்த தேக்க நிலையை ஒரு வகையில் போக்கியுள்ளது. ஆனால் வரலாற்று ஆய்வாளர்களிடம் உள்ள தமிழ்ப்பண்பாடு இந்திய பூர்வீக குடி மக்களால்
தன்னிச்சையாக தோற்றுவிக்கப்பட்டது என்ற அகவய விருப்பம் தமிழ்ச் சமூக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதில் மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கிறது.
சில தொல்லியல் அறிஞர்கள் தமிழகத்தின் தொல்லியல் தளங்களில் கிடைக்கும் பண்பாட்டுப் பொருட்கள் சுமேரியா,
ஏலமைட் , மத்தியதரைக் கடலோர நாடுகள், வட ஆப்பிரிக்க நாடுகள் போன்ற தொன்மைமிக்க பண்பாடுகளின் பயன்படுத்தப்பட்டவற்றை ஒத்திருப்பதை மிக அதிக அளவில் எடுத்துக்காட்டியுள்ளனர். சிந்துவெளி பண்பாட்டுடன் ஒப்பிடும்படியான பயன்பாட்டு பொருட்கள் எதுவும் நம் தொல்லியல் தளங்களில் இதுவரை கிடைக்கவில்லை எனினும் தென்னிந்திய பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகள் பலவும் சிந்துவெளி குறியீடுகளுடன் ஒத்திருப்பதே அதிக ஆர்வத்துடன் விவாதிக்கின்றனர். அதே வேளையில் இக்குறியீடுகள் கிரீத் (Crete) தீவின் மினோயன் லீனியர் B (Linear B Script) எழுத்துக்களையும் ஒத்திருப்பதை அதிகம் விவாதிப்பதில்லை. சிந்துவெளியில் ஏறுதழுவுதல் தொடர்பாக கிடைத்த ஒரே ஒரு முத்திரையை கொண்டு அதை தமிழ் சமூகத்துடன் தொடர்புபடுத்தும் முயற்சி செய்கின்றனர். ஆனால் மினோயன் பண்பாட்டினரிடம் ஏறு தழுவுதல் என்ற வீர விளையாட்டு மிகப் பிரபலமாக விளங்கியதை ஆய்வாளர்கள் பலரும் கவனத்தில் கொள்வதில்லை. ஆதிச்சநல்லூரில் கிடைத்த பயன்பாட்டு பொருட்கள் எதுவும் சிந்து வெளி நாகரிகங்களின் பயன்பாட்டுப் பொருட்களை ஒத்திருக்கவில்லை. ஆனால் பாலஸ்தீனம், சிரியா, சைப்ரஸ் போன்ற மத்தியதரை கடலோர நாடுகளில் கிமு 2000 - கிமு 1200 காலகட்டத்திற்குரிய பயன்பாட்டு பொருட்களுடன் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பல பொருட்கள் அப்படியே ஒத்திருப்பதை நீலகண்ட சாஸ்திரியும், கே. கே. பிள்ளையும் 50 ஆண்டுகளுக்கு முன்பு சுட்டிக்காட்டி விட்டனர்".
"அடுத்து பெருங்கல் சின்னங்கள் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இதே போன்ற சின்னங்கள் பாலஸ்தீனம், சிரியா, துருக்கி, ஏஜியன் பகுதி, வட ஆப்பிரிக்கா, ஈரான்,
தென் அரேபியா, காக்கசஸ் மலைப்பகுதி, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, பிரேஸில், ஸ்பெயின், நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், கொரியா, ஜப்பான், இந்தோனேசியா, வியட்நாம், பசுபிக் கடலில் உள்ள தீவுகள் என உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. உலக அளவில் பெருங்கல் சின்னங்களின் வகைகளையும் எண்ணிக்கையும் அதிக அளவில் சங்ககால தமிழகத்தில் தான் பார்க்க முடிகிறது. சங்க கால வாழ்வியலை பெருங்கல் மரபினர் தான் உருவாக்கினர் என்பது பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்தாகவும் உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பெருங்கல் சின்னங்களை உலகளாவிய அளவில் ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டிய தேவையை நாம் உணர வேண்டும்.
ஆரியமயமாதல் அல்லது சமஸ்கிருதமயமாதலின் மூலம் தான் சங்க கால தமிழ் சமூகம் உள்ளிட்ட இந்திய பண்பாட்டு உருவாக்கம் நடைபெற்றது என்ற நம்பிக்கை பெரும்பாலான வட இந்திய ஆய்வாளர்களிடம் உள்ளது. இதை நம்பிக்கை தவறு என்று இந்த நூல் தெளிவாக்குகிறது. தமிழ் பண்பாடு தான் மூல பண்பாடாக அமைந்து இந்திய பண்பாட்டு உருவாக்கத்தில் முதன்மை பங்களிப்பு செய்தது என்பதே இந்நூல் விரிவாக ஆராய்ந்து நிறுவப்பட்டுள்ளது".
- ராமன் ராஜு
(முகநூலில்)
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு