திருத்தல்வாதமும் சோவியத் வீழ்ச்சியும்

சுந்தர சோழன்

திருத்தல்வாதமும் சோவியத் வீழ்ச்சியும்

“லெனின் உயிரோடிருந்த போதே அவரது பரிந்துரையின் பேரில் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த  ஜோசப் ஸ்டாலின், லெனினது மறைவுக்குப் பின்னர் அவரது பாதையில் சோவியத் யூனியனை வழிநடத்தினார். 

சோசலிசப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான முன்தேவைகள் குறித்த லெனினது கனவை நனவாக்கும் விதமாக, 1920 மற்றும் 1930ஆம் ஆண்டுகளில் இயந்திரமயமாக்கல் மற்றும் கூட்டுப்பண்ணை மயமாக்கல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. 

1930ஆம் ஆண்டுகளில் மேற்குலக முதலாளித்துவ நாடுகள் மிகக் கடுமையான பொருளாதாரப் பெருமந்தத்தின் காரணமாக நாசகரமான அழிவைச் சந்தித்த அதே சமயம், திட்டமிட்ட சோசலிசப் பொருளாதார மாதிரியை முன்னெடுத்த சோவியத் யூனியன் உற்பத்தித் துறையிலும் விவசாயத்திலும் புதிய எல்லைகளைத் தொட்டிருந்தது. கல்வி பொது சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அது தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கியிருந்தது.

உலகை மறுபங்கீடு செய்வதற்கான ஏகாதிபத்திய முயற்சியையும், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு சோவியத் யூனியன் மீது ஏவி விடப்பட்ட நாஜித் தாக்குதலையும் அந்நாடு வெற்றிகரமாக முறியடித்து வென்றது. மாபெரும் தேசபக்தப் போர் என்றழைக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் முடிவில் சோவியத் யூனியன் லட்சோப லட்சம் உயிரிழப்புகளையும் நாசகரமான பொருளாதாரப் பேரிழப்பையும் சந்தித்து இருந்தது. இருப்பினும் சோசலிச லட்சியத்தை எட்டுவதை நோக்கிய பயணத்தில் இருந்து அது தனது பார்வையைச் சிறிதும் விலக்கவே இல்லை.

அடுத்த சில ஆண்டுகளில் -1950களின் முற்பகுதியில் – சோவியத் யூனியன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்ளும் வல்லமை படைத்த உலகின் மாபெரும் வல்லரசாகவே மாறி இருந்தது.  பொருளுற்பத்தி, விவசாய உற்பத்தி, மக்களின் வாழ்க்கைத் தரம், கல்வியறியு, பொது சுகாதாரம், விண்வெளி ஆய்வுகள் என அனைத்திலும் மிகப் பெரும் உயரங்களைத் தொட்டிருந்தது. 

இவை அனைத்துக்கும் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியும் அதன் வழிகாட்டுதலில் முன்னெடுக்கப்பட்ட சோசலிசப் பொருளாதார மாதிரியும் மட்டுமே காரணமாக இருந்தன. 

1917 முதல் 1953 வரையிலான முப்பத்து ஆறு ஆண்டுக் காலத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், ஒரு நாட்டில் சோசலிசம் ஆகியவை குறித்த லெனினது கருத்தாக்கங்களே சோவியத் யூனியனை வழிநடத்துபவையாக இருந்தன. மனிதகுலமே பெருமை கொள்ளத் தக்க இந்த மகத்தான சாதனைகளுக்குக் கலங்கரை விளக்கமாக நின்று வழிகாட்டின என்றால் அது கொஞ்சமும் மிகையாகாது.”

(திருத்தல்வாதமும் சோவியத் வீழ்ச்சியும்

நூலுக்கு நான் எழுதிய மொழிபெயர்ப்பாளர் உரையில் இருந்து)

வெளியீடு: பொன்னுலகம் புத்தக நிலையம். தொடர்பு எண் 94866 41586 /  88707 33434

- Sundara Cholan