அமெரிக்காவின் HIRE மசோதா என்றால் என்ன? 250 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை ஏன் கவலை கொண்டுள்ளது?

வெண்பா (தமிழில்)

அமெரிக்காவின் HIRE மசோதா என்றால் என்ன?  250 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை ஏன் கவலை கொண்டுள்ளது?

அமெரிக்க HIRE மசோதா, வெளிப்பணியமர்த்தல் (outsourcing) மீது 25 சதவீத வரி விதிப்பதன் மூலம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அமெரிக்க செனட்டர் பெர்னி மோரேனோவால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், வேலைவாய்ப்புகளை மீண்டும் அமெரிக்காவிற்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், இது தனது வருவாய்க்காக அமெரிக்க வாடிக்கையாளர்களைப் பெரிதும் நம்பியிருக்கும் டிசிஎஸ் (TCS), இன்ஃபோசிஸ் (Infosys), விப்ரோ (Wipro) போன்ற இந்திய தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவின் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான தகவல் தொழில்நுட்பச் சேவைகள் துறையில் தொலைநோக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய சட்டத்தை அமெரிக்கா அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹையர் (HIRE - Halting International Relocation of Employment) சட்டம் என்று அழைக்கப்படும் இந்த மசோதா, இந்த மாதத் தொடக்கத்தில் ஓஹியோவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் பெர்னி மோரேனோவால் அமெரிக்க செனட் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முன்மொழியப்பட்ட சட்டம், வெளிநாடுகளுக்கு வேலைகளை வழங்கும் அமெரிக்க நிறுவனங்கள் மீது கடுமையான அபராதங்களை விதிக்க முயல்கிறது. இதன் மூலம் நிறுவனங்களை உள்நாட்டில் பணியமர்த்த ஊக்குவிக்கவும், வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியா நீண்ட காலமாக தகவல் தொழில்நுட்ப வெளிப்பணியமர்த்தல் மற்றும் அது தொடர்பான சேவைகளின் மையமாக இருப்பதால், இந்த மசோதா இந்திய தொழில்நுட்பத் துறையில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இத்துறை தனது வருவாய்க்காக அமெரிக்க வாடிக்கையாளர்களைப் பெரிதும் சார்ந்துள்ளது.

முன்மொழியப்பட்ட HIRE மசோதா என்ன சொல்கிறது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகள் காரணமாக அமெரிக்க-இந்திய வர்த்தக உறவுகள் ஏற்கனவே சிக்கலில் உள்ள நேரத்தில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வேலைகளை வெளிநாடுகளுக்கு வெளிப்பணியமர்த்துவதைத் தடுக்கும் வகையில் HIRE மசோதா மூன்று முக்கிய விதிகளை முன்வைக்கிறது:

25 சதவீத வெளிப்பணியமர்த்தல் வரி: அமெரிக்க நிறுவனம் அல்லது வரி செலுத்துபவர் ஒரு வெளிநாட்டு நிறுவனம் அல்லது தனிநபருக்குச் செலுத்தும் எந்தவொரு கட்டணத்தின் மீதும் 25 சதவீத வரி விதிக்க இந்த மசோதா முன்மொழிகிறது. அந்த சேவைகளின் இறுதிப் பயன் அமெரிக்காவில் உள்ள நுகர்வோரைச் சென்றடைய வேண்டும்.

வரி விலக்குகளுக்குத் தடை: இது நிறுவனங்கள் தங்கள் வரிக்குட்பட்ட வருமானத்திலிருந்து வெளிப்பணியமர்த்தல் செலவுகளைக் கழிப்பதைத் தடுக்கும், இதனால் வெளிநாடுகளுக்கு வேலையை அனுப்புவதற்கான நிதிச் சுமை அதிகரிக்கும்.

உள்நாட்டுத் தொழிலாளர் நிதி: வெளிப்பணியமர்த்தல் வரியிலிருந்து கிடைக்கும் வருவாய், புதிதாக உருவாக்கப்படும் உள்நாட்டுத் தொழிலாளர் நிதிக்குச் செலுத்தப்படும். இந்த நிதி, தொழிற்பயிற்சிகள், தொழிலாளர் மறுபயிற்சி திட்டங்கள் மற்றும் அமெரிக்கத் தொழிலாளர் தொகுதியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொழிலாளர் மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

இந்த மசோதாவின் நோக்கத்தை நியாயப்படுத்தி மோரேனோ கூறுகையில், "அமெரிக்காவில் கல்லூரிப் பட்டதாரிகள் வேலை தேடித் தவிக்கும் நிலையில், உலகமயமாக்கல் அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் பல பத்தாண்டுகளாக அடிமைத்தனமான கூலி - பெரும் இலாபத்திற்காக நல்ல வருமானம் தரும் வேலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர் – அந்தக் காலம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது" என்றார்.

"அமெரிக்காவின் உழைக்கும் வர்க்க மக்களுக்காகப் போராடவும், அவர்கள் கண்ணியத்துடன் வேலை செய்து ஓய்வு பெறுவதை உறுதி செய்யவும் இதுவே சரியான நேரம். அமெரிக்கர்களுக்குப் பதிலாக வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்த நிறுவனங்கள் விரும்பினால், எனது மசோதா அவர்களை மிகவும் பாதிக்கும் - அதாவது அவர்களின் பணப்பையை தாக்கும்," என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சட்டத்தை விரைவாக முன்னெடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் மோரேனோ கூறினார். "குடியரசுக் கட்சியினர் யார் ஆதரவாக இருக்கிறார்கள், யார் இல்லை என்பதை நாங்கள் அறிந்துகொள்வோம், மேலும் ஜனநாயகக் கட்சியினரையும் வாக்களிக்கச் செய்வோம்," என்று அவர் குறிப்பிட்டார். இந்த முன்மொழிவு புதியதொரு வரியை அறிமுகப்படுத்துவதால், இது முதலில் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் கொண்டுவரப்பட்டு, பின்னர் காங்கிரஸின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு, அமெரிக்க அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

இந்த மசோதா ஏன் நேரடியாக வெளிப்பணியமர்த்தலை குறிவைக்கிறது

பல அமெரிக்க நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகளுக்கு வெளிப்பணியமர்த்தல் நீண்ட காலமாக ஆதாரமாக இருந்து வருகிறது. குறிப்பாகத் தொழில்நுட்பம், நிதி, சுகாதாரம் மற்றும் சில்லறை வர்த்தகம் போன்ற துறைகளில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. பல பத்தாண்டுகளாக, நிறுவனங்கள் திறமையான - குறைந்த செலவிலான தொழிலாளர் வளத்திற்காக இந்தியாவைப் போன்ற நாடுகளைச் சார்ந்துள்ளன. மோரேனோவின் மசோதா இந்தப் போக்கை மாற்றியமைக்கும் விரிவான முயற்சியின் பகுதியாகும். வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது கணிசமான வரியை விதிப்பதன் மூலம், இந்தச் சட்டம் வெளிநாடுகளுக்குப் பணியை அனுப்புவதை நிதி ரீதியாகத் தடுக்கவும், உள்நாட்டுப் பணியமர்த்தலை ஒப்பீட்டளவில் மாற்றவும் முயல்கிறது.

டிரம்ப் தனது பொருளாதாரத் திட்டத்தின் பகுதியாக வேலைகளை மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வருவது பற்றி வெளிப்படையாகப் பேசி வருகிறார். சமீபத்திய மாதங்களில், வெள்ளை மாளிகையின் மூத்த வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, வெளிப்பணியமர்த்தல் மற்றும் வெளிநாட்டுத் தொலைதூர வேலைகளுக்கு வரிகள் விதிக்கப் பரிந்துரைத்து, இந்தக் கருத்தை வலுப்படுத்தியுள்ளார். நவரோவின் நிலைப்பாடு, டிரம்ப்பின் வர்த்தக மற்றும் தொழிலாளர் கொள்கைகளில் கதவடைப்புவாதத்தைப் பிரதிபலிக்கிறது. ஆவணமற்ற தொழிலாளர்களைப் பணியமர்த்தும் நிர்வாகிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை மோரேனோ இதற்கு முன்பும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இது இந்திய தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் BPO துறையை எவ்வாறு பாதிக்கலாம்

கடந்த மூன்று தசாப்தங்களில் வெளிப்பணியமர்த்தல் மூலம் பயனடைந்த நாடுகளில் இந்தியா முக்கியமானதாகும். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல்டெக் (HCLTech), மற்றும் டெக் மஹிந்திரா (Tech Mahindra) போன்ற முக்கிய இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் 50 முதல் 65 சதவீதம் வரை வட அமெரிக்க வாடிக்கையாளர்களிடமிருந்து பெறுகின்றன என்று தொழில் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனங்கள் மென்பொருள் உருவாக்கம், சிஸ்டம்ஸ் ஒருங்கிணைப்பு, கிளவுட் மேலாண்மை மற்றும் வணிக செயல்முறை வெளிப்பணியமர்த்தல் (BPO) உள்ளிட்ட பல்வேறு சேவைகளைக் கையாளுகின்றன. மேலும், சிட்டிகுரூப், ஜேபிமார்கன் சேஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஃபைசர், மைக்ரோசாப்ட், செயிண்ட் கோபெய்ன் போன்ற பல பார்ச்சூன் 500 (Fortune 500) நிறுவனங்களுக்கும் சேவை புரிகின்றன.

25 சதவீத வெளிப்பணியமர்த்தல் வரி மற்றும் அதற்கான செலவுகளைக் கழிக்க இயலாமை ஆகியவை இந்தியப் பங்காளிகளை சார்ந்திருக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கான செலவுகளை வியத்தகு முறையில் அதிகரிக்கக்கூடும். இதன் விளைவாக, இந்த நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டுச் செயல்பாடுகளைக் குறைக்கலாம் அல்லது கூடுதல் செலவுகளை நுகர்வோர் மீது சுமத்தலாம். பன்னாட்டு நிறுவனங்களால் அமைக்கப்பட்ட வெளிநாட்டுத் தொழில்நுட்ப மையங்களான உலகளாவிய திறன் மையங்களின் (Global Capability Centres - GCCs) செயல்பாடுகள் கூட பாதிக்கப்படலாம். நிதி, சில்லறை வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள பல அமெரிக்க நிறுவனங்கள், மென்பொருள் உருவாக்கம், பகுப்பாய்வு மற்றும் பின்னணி அலுவலகப் பணிகளைக் கையாள இந்தியாவில் பெரிய மையங்களை நிறுவியுள்ளன.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு இது மோசமான நேரமாக இருக்கிறது ஏன்?

இந்தியத் தொழில்நுட்பத் துறைக்கு கடினமானதொரு தருணத்தில் HIRE சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதா அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன:

வாடிக்கையாளர்கள் செலவுகளைக் குறைப்பதால் ஏற்படும் இழப்பீடுகள்

பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் அமெரிக்க நிறுவனங்களின் விருப்பச் செலவினங்கள் குறைந்துள்ளன.

பாரம்பரிய சேவைகளுக்கான தேவையைக் குறைக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) இடையூறு.

நிறுவனங்கள் செயல்திறன் மற்றும் தானியங்குபடுத்தலில் கவனம் செலுத்துவதால் பணியமர்த்தல் குறைந்துள்ளது.

வெளிப்பணியமர்த்தல் மீது புதிய வரி விதிப்பது இலாப விகிதங்களை மேலும் குறைக்கும் என்றும், நிறுவனங்கள் ஒப்பந்தங்களை முடிப்பதை கடினமாக்கும் என்றும் தொழில் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த அபாயங்களைக் குறைக்க, பல இந்திய நிறுவனங்கள் ஆசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நார்டிக் நாடுகள், மேற்கு ஆசியா போன்ற பிராந்தியங்களில் தங்கள் வாடிக்கையாளர் தளத்தைப் விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளன. இருப்பினும், இந்தப் விரிவுபடுத்தல் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது, மேலும் பெரும்பாலான பெரிய இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்காவே வருவாயின் முக்கிய ஆதாரமாக உள்ளது.

இந்தியர்கள் ஏன் இப்போதைக்கு கவலைப்படத் தேவையில்லை

உலக வர்த்தக அமைப்பின் (WTO) தற்போதைய விதிகளின்படி, உறுப்பு நாடுகள் டிஜிட்டல் சேவைகள் மீது வரிகளை விதிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு புரிந்துணர்வை எட்டியிருந்தன, அதில் இந்தியா டிஜிட்டல் சேவைகள் மீதான தனது சமன்படுத்துதல் வரியைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டது, இது எல்லை தாண்டிய வரிவிதிப்பு தொடர்பான பதட்டங்களைத் தணிக்க உதவுகிறது.

HIRE மசோதா சட்டமாவதற்கு முன்பு குறிப்பிடத்தக்க தடைகளைச் சந்திக்கும் என்று பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். வெளிநாட்டுத் திறமைகளை நம்பியிருக்கும் அமெரிக்க நிறுவனங்கள், உள்நாட்டுப் பணியமர்த்தல் இந்தியாவைப் போன்ற நாடுகள் வழங்கும் அளவு, திறன்கள் மற்றும் செலவுத் திறனை முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்று வாதிட்டு, இந்த மசோதாவுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சைபர் பாதுகாப்பு, தரவு பகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட மென்பொருள் பொறியியல் போன்ற சிறப்புத் துறைகளில் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவையினை பூர்த்தி செய்யுமளவிற்கு அமெரிக்கத் தொழிலாளர் தொகுப்பில் பயிற்சி பெற்ற வல்லுநர்கள் போதுமான அளவில் இல்லை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த ஆண்டில், கூகிள், ஆப்பிள், மெட்டா, மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன்ஏஐ போன்ற முன்னணி அமெரிக்க நிறுவனங்கள், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் புதிய பொறியியல் மையங்கள், செயற்கை நுண்ணறிவு கூட்டுகள், பெரிய அலுவலகங்களை நிறுவி, இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளன. ஃபேஸ்புக் (மெட்டா), அமேசான், ஆப்பிள், மைக்ரோசாப்ட், நெட்ஃபிளிக்ஸ், மற்றும் கூகிள் (ஆல்பாபெட்) ஆகியவை கடந்த 12 மாதங்களில் இந்தியாவில் 30,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ளன என்று 'மணிகண்ட்ரோல்' செய்தி வெளியிட்டுள்ளது.

இப்போதைக்கு, இந்தத் துறை காத்திருந்து கவனிக்கும் நிலையில்தான் உள்ளது.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.firstpost.com/explainers/us-hire-bill-impact-india-it-sector-13932249.html?utm_source=Whatsapp_FP&utm_medium=Social

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு