நேட்டோ - ஜப்பான் இராணுவ ஒத்துழைப்பு திட்டங்கள்

16 துறைகளில் நேட்டோ படையும், ஜப்பான் படையும் பரஸ்பரம் ஒன்றிணைந்து செயல்படவுள்ளது, பரஸ்பரம் தங்களது போர்க்கருவிகளை பயன்படுத்திக் கொள்ளவுள்ளது - வில்லியனஸ் மாநாட்டில் புதிய இராணுவ ஒத்துழைப்பிற்கான திட்டங்களை கிஷிடா அறிவிக்கவுள்ளார்.

நேட்டோ - ஜப்பான் இராணுவ ஒத்துழைப்பு திட்டங்கள்

புதிய இராணுவ ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் குறித்து நேட்டோ மற்றும் ஜப்பானிற்கு இடையில்  நடந்த பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ள நிலையில் வருகிற வாரத்தில் நடக்கவுள்ள வில்லியனஸ் மாநாட்டில் இதன் முக்கிய அம்சங்கள் குறித்து அறிவிப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாக நிக்கி ஏசியா செய்தித்தளம் கண்டறிந்துள்ளது.

இராணுவ விவகாரங்கள் தொடர்பான 16 துறைகளில் ஒன்றிணைந்து வேலை செய்வதற்காக தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட கூட்டணி திட்டம் (Individually Tailored Partnership Program - ITPP)  வடிவமைக்கப்பட்டுள்ளது. நிக்கி ஏசியா செய்தி நிறுவனத்திற்கு நம்பத்தகுந்த  ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலின்படி இத்திட்டம் மூன்று முக்கியமான நோக்கங்கள் பற்றி பேசுவதாகத் தெரிகிறது. அவை: தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துதல், போர்பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்படுவதை அதிகரித்தல் மற்றும் தற்காத்தலை வலுப்படுத்துவதோடு மீள்தாக்கும் திறனையும் அதிகரித்தல்.

 

நேட்டோ மற்றும் ஜப்பான் படைகளின் தாக்குதல் திறனை மேம்படுத்துவதோடு, ஒன்றிணைந்து போர் பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற விஷயமும் புதிய ஒத்துழைப்பிற்கான திட்டத்தில் ஒரு அம்சமாக இடம்பெற்றுள்ளது. “தாக்குதல் திறனை அதிகரித்தல், ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கைளை அதிகப்படுத்துதல் மட்டுமல்லாது ஒரே விதிமுறைகளின் கீழ் செயல்படுத்துவதற்கான விசயங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பு தருவதற்கு" ஜப்பான் மற்றும் நேட்டோ உறுதியளிப்பது தொடர்பான அம்சமும் புதிய ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்கும்.

நேட்டோ மற்றும் ஜப்பான் படைகளுக்கு இடையிலான ஒத்த கருத்தை உருவாக்குவதற்கு புதிய ஒப்பந்தம் முனைவதோடு, இரு படைகளின் கூட்டுப் பயிற்சிக்கான எல்லையை விரிவுபடுத்துவதை இலக்காக நிர்ணயித்துள்ளது.

நேட்டோ விதிமுறைகளுக்கு ஏற்ப ஜப்பானிய படைகளின் போர்க்கருவிகளை கையாள்வது தொடர்பான விதிமுறைகள் ஒன்றாக்கப்படும்போது, பராமரிப்பு, பழுது நீக்கம் போன்ற விசயங்களும் பரஸ்பரம் ஒன்றாகிவிடுவதால் இரு படைகளும் தங்களது கப்பல் மற்றும் வானூர்தி நிலையங்களையும், பணிமனைகளையும் பயன்படுத்திக்கொள்வதற்கு இத்திட்டம் வழிவகுக்கிறது.

தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகள், ஆயுதங்களை கையாள்வதில் உள்ள கருத்து மாறுபாடுகள், நிதி ஒதுக்குவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் போன்ற சிக்கல்கள் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இடையிலே கூட ஒன்றிணைந்து செயல்படுவதில்  சிக்கல்களை ஏற்படுத்தவே செய்கின்றன.

ஆஸ்திரேலியாவுடனான ITPP ஒப்பந்தம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. தென் கொரியா மற்றும் நியூசிலாந்துடனான ஒப்பந்தம் உருவாக்க நிலையில் உள்ளது. வருகிற செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடக்கவுள்ள நேட்டோ மாநாட்டிற்குள்ளாக இந்த இரண்டு ஒப்பந்தங்களும் தயாராகிவிடுமா என்று உறுதியாக இப்போதைக்கு கூற முடியாது.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிரிஸ் இப்கின்ஸ் முதலானவர்கள் வில்லியனஸில் நடக்கவுள்ள மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நேட்டோ நட்பு நாடுகள்(IP4) என்ற பெயரில் இந்த நான்கு நாடுகளின் தலைவர்களும் நேட்டோ நாடுகளின் தலைவர்கள் சந்திக்கக்கூடிய மாநாட்டில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சந்திக்கவுள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் மற்றும் ரஷ்யாவுடன் சீனா “நிபந்தனையின்றி” நட்பு நாடாக தொடரும் என்ற அறிவித்த சீனாவின் பிரகடனம் போன்ற நிகழ்வுகளை பார்க்கும் பொழுது ஐரோப்பிய-அட்லாண்டிக் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் இராணுவ விவகாரங்கள் பரஸ்பரம் ஒன்றையொன்று பாதிக்கக்கூடிய விசயமாகவே இருக்கிறது என்ற கருத்தை உருவாக்கியுள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நான்கு நேட்டோ நட்பு நாடுகளுடனான (IP4) ITPP ஒப்பந்தங்களை திறம்பட செயல்படுத்துவதற்கு டோக்கியோவில் நேட்டோவிற்கான தொடர்பலுவலகம் அமைப்பது தொடர்பான விவாதங்கள் நேட்டோ உறுப்பு நாடுகள் மத்தியில் துவங்கியுள்ளது.

2023-2026 ஆம் ஆண்டிற்குள்ளான காலப்பகுதியில் கண்கூடாக உறுதிபடுத்தத்தக்க செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு ITPP ஒப்பந்தம் முனைகிறது. கடல்வழியிலான பாதுகாப்பு, இணையவழி பாதுகாப்பு, பல்வேறு முனைகளிலிருந்து வரும் தாக்குதல்களை முறியடிப்பது, வான்வெளி பாதுகாப்பு, காலநிலை மாற்றம், வேகமாக வளர்ந்து வரக்கூடிய பெரும் மாற்றத்தை உண்டாக்கக் கூடிய தொழில்நுட்பங்களிலும் ஒன்றிணைந்து பணியாற்றுவது பற்றியும் இந்த ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், தானியங்கி சாதனங்கள் மூலம் இயங்கும் ரோபோ போர்வீரர்கள் போன்றவை வருங்காலங்களில் போர்க்களத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கக்கூடிய வேகமாக வளர்ச்சி பெற்று வரக்கூடிய தொழில்நுட்பங்களாக அறியப்படுகிறது.

போர்க்களங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற தானே சிந்தித்து செயல்படக்கூடிய  ரோபோ போர்வீரர்களை பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் குறித்தான விவாதங்களும் நேட்டோ ஜப்பானிற்கு இடையில் நடக்கவுள்ளது.

- விஜயன்

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://asia.nikkei.com/Politics/International-relations/Indo-Pacific/NATO-and-Japan-to-cooperate-in-16-areas-align-defense-equipment