காலநிலைத் திட்டங்களை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு ஐ.நா. வலியுறுத்தல்

வெண்பா (தமிழில்)

காலநிலைத் திட்டங்களை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு ஐ.நா. வலியுறுத்தல்

தங்களின் காலநிலைத் திட்டங்களைச் சமர்ப்பிப்பதில் தாமதம் செய்துள்ள நாடுகள், அவற்றை விரைவாகச் செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை செப்டம்பர் 3 அன்று கேட்டுக்கொண்டது. உலகின் முக்கிய மாசுபடுத்தும் நாடுகள் உட்பட பல நாடுகள் தங்கள் புதிய உறுதிமொழிகளை இன்னும் வெளியிடவில்லை. பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள சுமார் 200 நாடுகள், பிப்ரவரி மாதத்தில் தங்களின் புதுப்பிக்கப்பட்ட கொள்கைகளை முன்வைத்திருக்க வேண்டும். அதில் 2035-ஆம் ஆண்டுக்கான கடுமையான உமிழ்வுக் குறைப்பு இலக்கு மற்றும் அதை அடைவதற்கான விரிவான செயல்திட்டம் ஆகியவை அடங்கும். ஆனால், சில நாடுகள் மட்டுமே காலக்கெடுவுக்குள் சமர்ப்பித்தன; ஆறு மாதங்களுக்குப் பிறகும், சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற முக்கிய நாடுகள் தங்கள் திருத்தப்பட்ட திட்டங்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை.

ஒரு கடிதத்தில், ஐ.நா. காலநிலைத் தலைவர் சைமன் ஸ்டீல், தாமதம் செய்யும் நாடுகளைத் தங்கள் திட்டங்களை "முடிந்தவரை விரைவில்" சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். "இந்த தேசிய காலநிலைத் திட்டங்கள் வெறும் காகிதத்தில் உள்ள வார்த்தைகள் மட்டுமல்ல; அவை இந்த நூற்றாண்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கான மிகவும் சக்திவாய்ந்த உந்துசக்திகளாகவும், உலகளாவிய காலநிலை நெருக்கடிக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு அடித்தளமாகவும் உள்ளன," என்று அவர் எழுதினார். நவம்பர் மாதம் பிரேசிலில் நடைபெறும் வருடாந்திர ஐ.நா. காலநிலை உச்சிமாநாடான COP30-க்கு முன்னதாக, புதிய உறுதிமொழிகள் குறித்த பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆய்வை காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. மாநாடு (UNFCCC) நடத்த உள்ளது.

UNFCCC-யின் நிர்வாகச் செயலாளர் ஸ்டீல் கூறுகையில், செப்டம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படும் திட்டங்கள், உலகளாவிய காலநிலை நடவடிக்கை குறித்த இந்த "முக்கியமான புதுப்பித்தலுக்கு" தகுதி பெறும் என்றார். நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையின் போது, செப்டம்பர் 24 அன்று நடத்தப்படும் ஒரு சிறப்புக் காலநிலை நிகழ்வின் வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் புதிய கொள்கைகளை அறிவிக்குமாறு அவர் உலகத் தலைவர்களை ஊக்குவித்தார். சுமார் 190 நாடுகள் இந்த ஆண்டு தங்கள் திருத்தங்களைச் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாக UNFCCC-யின் செய்தித் தொடர்பாளர் AFP-யிடம் தெரிவித்தார். சமர்ப்பிப்புகளைக் கண்காணிக்கும் ஐ.நா. தரவுத்தளத்தின்படி, பிரேசில், பிரிட்டன், ஜப்பான், கனடா போன்ற முக்கிய பொருளாதார நாடுகள் உட்பட சுமார் 30 நாடுகள் ஏற்கனவே சமர்ப்பித்துவிட்டன.

அமெரிக்காவும் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது, ஆனால் அது பெரும்பாலும் பெயரளவிலானதாகக் கருதப்படுகிறது; ஏனெனில், டிரம்ப் 2015 பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வாஷிங்டனை விலக்குவதற்கு முன்பு இது செய்யப்பட்டது. இந்த மந்தமான உலகளாவிய பதில் நடவடிக்கை, காலநிலை நடவடிக்கைகளுக்கான ஆர்வம் குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது; நாடுகள் அதிகரித்து வரும் பாதுகாப்பு நெருக்கடிகள் மற்றும் சர்வதேச வர்த்தகப் பதட்டங்களால் திசைதிருப்பப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தேசிய காலநிலைத் திட்டங்கள், பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கான உலக வெப்பநிலை உயர்வை, தொழில்மயமாக்கலுக்கு முந்தைய அளவுகளுடன் ஒப்பிடுகையில், இரண்டு டிகிரி செல்சியஸுக்குக் கீழ் கட்டுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சியைப் பிரதிபலிக்கின்றன.

தற்போது, உலகம் 3 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உலகளாவிய உமிழ்வுகள் அதிகரித்து வருகின்றன, ஆனால் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட பாதுகாப்பான நிலைகளுக்கு உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த, இந்த பத்தாண்டுகளின் இறுதிக்குள் அவை பாதியாகக் குறைக்கப்பட வேண்டும்.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://thewire.in/environment/un-pushes-nations-to-submit-overdue-climate-plans

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு