இந்தி எதிர்ப்பு: தமிழ் அழிந்துவிடும் என்பதற்காக அல்ல! ஆங்கிலம் வளரவேண்டும் - ஈ.வெ.ரா
திருச்சி இனியன்
கன்னட பார்ப்பனர் இராஜாஜி என்கிற இராஜகோபாலாச்சாரியாரின்
வாழ்நாள் பிரியா உயிர் நண்பர், (சட்ட)வாடிக்கையாளர், தமது திருமணம் குறித்து ஆலோசனை கேட்ட, தன் வாழ்நாள் இறுதிவரை இராஜாஜியை "ஆச்சரியார்" என்றே அழைத்த ஈ.வெ.இராமசாமி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் செய்த கீழ்க்கண்ட செயல்களுக்குப் பெயர் என்ன ?! : தமிழ் கூறும் உலக மக்களே கூறுக !
+++ 1937 ம் ஆண்டு !
14/7/1937 :
சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலில் 215 இடங்களில் 159 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஈ.வெ.இராமசாமியின் மிக நெருங்கிய வாழ்நாள் உடன்பிறவா கன்னட பார்ப்பன நண்பர் இராஜாஜி என்கிற இராஜகோபாலச்சரியார் 14/7/1937 ஆண்டு சென்னை மாகாண பிரதமர் (முதலமைச்சர்) ஆகிறார்.
+ 11/08/1937 :
சென்னை மாகாணத்தில் உள்ள தமிழ்நாட்டில் 60 பள்ளிகளிலும், ஆந்திராவில் 54 பள்ளிகளிலும், கேரளப் பகுதிகளில் 7 பள்ளிகளிலும், கர்நாடகப் பகுதிகளில் 4 பள்ளிகளிலும் இந்தி கட்டாயம் என்று ஈ.வெ.இராசாமியின் உயிர் நண்பர் சென்னை மாகாண பிரதமர் (முதலமைச்சர்) இராஜாஜி அறிவிக்கிறார்.
+++ இந்திக்கு எதிராக மூச்சே விடாத ஈ.வெ.இராமசாமி :
கன்னட பார்ப்பனர் இராஜி என்கிற இராஜகோபாலாச்சாரியார் மீது தமக்கு ஏன் இவ்வளவு அன்பு என்று ஒருமுறை சுய சோதனை செய்த ஈ.வெ.இராமசாமி அதற்கு அவரே கண்டுபிடித்த காரணம், "இராஜாஜியும் தன்னைப்போலவே கன்னடன்" என்பதால் இருக்கலாம் என்கிறார்.
இதனாலோ என்னவோ அல்லது ஒரு கட்டத்தில் தாமே ஈரோட்டில் இந்தி வகுப்புகள் நடத்தியதாலோ என்னவோ, பிற்காலத்தில் 1965 ல் இந்திக்கு ஆதரவாக இருக்கப்போவதாலோ என்னவே 1937 ம் ஆண்டிலேயே இராஜாஜியின் அறிவிப்பு குறித்து மூச்சே விடவில்லை ஈ.வெ.இராமசாமி.
+++ இந்தி கட்டாயம் என்பதைத் தமிழர்கள் மட்டுமே எதிர்த்தனர் :
ஈ.வெ.இராமசாமி உள்ளிட்ட கன்னடர்கள் மட்டுமல்ல தெலுங்கர்கள், மலையாளிகள் என பிற மொழியாளர்கள் யாரும் இராஜாஜியின் இந்த இந்தி கட்டாயத்தை எதிர்க்கவில்லை. தமிழர்கள் மட்டுமே எதிர்த்தனர்.
காரணம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் சமற்கிருதம், இந்திச் சொற்கள் இல்லாமல் உயிர் வாழாது, ஆனால் தமிழ் மட்டுமே எந்த மொழிச் சொல்லின் உதவியும் இல்லாமல் உயிர் வாழுக்கூடியது என்ற காரணத்தை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.
மேலும், இந்தியைத் திணிப்பதன் மூலம் இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழைப் படிப்படியாக அழித்து விடுவதையும் தமிழர்கள் அனுமதிக்கவில்லை.
+++ இந்தி கட்டாயம் என்பதை நீதிக்கட்சியும் எதிர்க்கவில்லை :
இதே சட்டத்தை அமல்படுத்திய இராஜாஜி மற்றொரு சட்டத்தையும் அதே காலத்தில் அமல் படுத்தினார். அது, ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம். நீதிக்கட்சியின் தலைவர்கள் அனைவருமே ஜமீன்தார்கள். எனவே அவர்களுக்கு இந்தி கட்டாயம் என்பதைவிட ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தை எதிர்ப்பதே "வாழ்வாதார" பிரச்சனையாக இருந்தது. மேலும், நீதிக்கட்சியின் தலைவர்கள் அனைவருமே தெலுங்கர்கள். அவர்களுக்கு இந்தி குறித்துக் கவலையே இருந்திருக்கவில்லை.
+++ பதவியை வீசி எறிந்த தமிழர் நாவலர் சோமசுந்தர பாரதியார் :
பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை எதிர்த்து ஆளும் கட்சிக்காரரும் அதாவது இராஜாஜியின் காங்கிரஸ் கட்சிக்காரரும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இந்தி பிரச்சார சபாவில் பதவி வகித்து வந்தவருமான தமிழர் நாவலர் சோமசுந்தர பாரதியார் அப்பதவியை வீசி எறிந்தார்.
+++ முதலமைச்சர் இராஜாஜிக்குத் தந்தி அடித்த ஈழத்து சிவானந்தம் அடிகள் :
முதலமைச்சர் இராஜாஜியின் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியானவுடன் அதனை எதிர்த்தும் அந்தத் திட்டத்தைக் கைவிடக் கோரியும் முதல்மைச்சருக்குத் தந்தி அடித்து முதன் முதலாக எதிர்ப்பைப் பதிய வைத்தவர் தமிழர் ஈழத்து சிவானந்தம் அடிகள்.
+ 1938 ம் ஆண்டு ! :
+ வாக்காளர்களுக்கு அறிக்கை வெளியிட்ட ஈழத்து அடிகள் :
முதலமைச்சருக்குக் கடிதம் எழுதிய ஈழத்து அடிகள், 12/02/1938 நாளன்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார், அதில் "தமிழ்நாட்டில் இப்போது சட்டமன்றத் தேர்தல் வருகிறது, உங்களிடம் வாக்கு கேட்க வருவார்கள். சட்டமன்றங்களிலும், பிற இடங்களிலும் தமிழ் மொழியே அலுவல் மொழியாக இருத்தல் வேண்டும், தமிழ்நாட்டில் இந்தி உள்ளிட்ட பிற எந்த மொழியும் கட்டாயம் என்ற நிலை இருத்தல் கூடாது. இதற்கு ஆதரவளித்தால் உங்களுக்கு வாக்களிப்போம் என்று கூறுங்கள்." என்று அறிக்கை எழுதி தமிழ்நாடெங்கும் அனுப்பி வைத்தார் ஈழத்து அடிகள்.
+++ மறைமலை அடிகளின் நூலை மொழிபெயர்த்த ஈழத்து அடிகள் :
"இந்தி பொதுமொழியா ?" எனும் தலைப்பில் மறைமலை அடிகள் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, ஜி.டி.நாயுடு மற்றும் பாகனேரி காசி விசுவநாதன் செட்டியார் ஆகியோர் நிதி உதவியுடன் தமிழில் மொழி பெயர்த்து 15,000 பிரதிகள் அச்சடித்துத் தமிழ்நாடு முழுவதும் அனுப்பியவர் ஈழத்து அடிகள்.
+அறிக்கையை வெளியிட மறுத்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கலைக்க முயற்சித்த ஈ.வெ.இராமசாமி :
இத்தகைய அதி தீவிர செயல்பாடுகள் மேற்கொண்ட ஈழத்து அடிகள், தொடர் மறியல் போராட்டம் நடத்த வேண்டும் என்று திட்டமிடுகிறார். அதற்கென போராட்ட அறிவிப்பை ஒரு அறிக்கையாக எழுதி ஈரோட்டில் இருந்த ஈ.வெ.இராமசாமியிடம் தருகிறார். அதை வெளியிட மறுக்கிறார் ஈ.வெ.இராமசாமி.
ஆனால் அதே ஈரோட்டில் இருந்த சண்முக வேலாயுதம் என்பரின் உதவியுடன் ரத்னா பிரின்டர்ஸ் என்ற அச்சகத்தில் அந்த அறிக்கையை அச்சடித்து அனுப்புகிறார் ஈழத்து அடிகள்.
அந்த அறிக்கை 25/4/1938 அன்று தேதியிடப்பட்டது. அதன் இறுதியில், "அறப்போர் 1/6/1938 ல் துவங்குவதாக முடிவு செய்யப்பட்டிருப்பதால், எல்லா விதமான ஏற்பாடுகளும் 25/5/1938 க்குள் முடிவாகித் தொண்டர்கள் எல்லோரும் 1/6/1938 க்குள் சென்னையில் இருக்கவேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
+++ நடராசன் தாலமுத்து
இந்த அறிவிப்பைப் பார்த்தே சென்னைக்குப் படையெடுத்தனர் தமிழர்கள். அப்படி வந்தவர்கள்தான் நடராசன் தாலமுத்து உள்ளிட்டோர்.
+++ மறியல் போராட்டத்தையும் கலைக்க முயன்ற ஈ.வெ.இராமசாமி
இந்த மறியல் போராட்டம் வெற்றிகரமாகத் தொடங்கியது. அந்த இடத்திற்கும் வந்த ஈ.வெ.இராமசாமி, "இந்தப் போராட்டம் எல்லாம் பலன் தராது. ஊருக்கு கிளம்புங்கள், வழிச் செலவுக்கு நானே பணம் தருகிறேன்" என்று போராட்டத்தைக் கலைக்க முயற்சி செய்தார். இதனால், அந்தக் கூட்டத்தைவிட்டு ஈ.வெ.இராமசாமி நாகரிகமாக வெளியேற்றப்பட்டர்.
+ 1938 இந்தி எதிர்ப்பில் ஈ.வெ.இராமசாமியின் பங்களிப்பு ஒன்றுமேயில்லை !
28/05/1938 ல் திருச்சியில் அமைக்கப்பட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு உயர்நிலைக் குழுவின் தலைவர் சோமசுந்தர பாரதியார். செயலாளர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆவார். ஈ.வெ.இராமசாமிக்கு அதில் எந்த முக்கியப் பொறுப்பும் தரப்படவில்லை. குழுவின் நான்கு உறுப்பினர்களில் அவரும் ஒருவர் அவ்வளவே.
திருச்சியிலிருந்து 1/8/1938 தொடங்கி 11/9/1938 வரை 41 நாட்கள் பரப்புரை நடைப்பயணம் மேற்கொண்டபின் சென்னை மெரினா கடற்கரையில் மறைமலை அடிகள் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பலர் பேசினார்கள். சுயமரியாதை இயக்கம் சார்பில் ஈ.வெ.இராமசாமியும் பேசினார். அவ்வளவே.
கி.ஆ.பெ.வியின் பேரனும், பேராசிரியர் வீரமணி, "கடற்கரைக் கூட்டம் ராமசாமி தலைமையில் நடைபெற்றதாக" தவறுதலாக குறிப்பிட்டதன் விளைவு இன்றுவரை ராமசாமி குறித்து பொய்களை அள்ளி வீசி வருகிறார்கள் திராவிட முகமூடிகள். ஆனால், அந்தக் கூட்டம் மறைமலை அடிகள் தலைமையில் தான் நடைபெற்றது.
இந்த லட்சணத்தில் திடீரென 1939 ல் ஒருநாள் "இந்தி மறியல் போராட்டம் நிறுத்தப்பட்டதாக" ஈ.வெ.இராமசாமி தன்னிச்சையாக அறிவித்துவிட்டார். அவருக்கு அதை அறிவிக்க எந்த உரிமையும் இல்லை.
இதை மறுத்து ஈழத்து சிவானந்தம் அடிகள் வெளியிட்ட அறிக்கை 4/11/1939 தி ஹிந்து இதழிலும், மெயில் இதழிலும் வெளியாகியுள்ளன.
அதில், "இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை நிறுத்தும் உரிமை ஈ.வெ.இராமசாமிக்குக் கிடையாது" என்று ஈழத்து அடிகள் குறிப்பிட்டிருந்தார்.
சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், கி.ஆ.பெ.விசுவநாதம், ஈழத்து சிவானந்தம் அடிகள் உள்ளிட்ட தமிழர் தலைவர்கள் தலைமையில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடே கொந்ததளித்துப் போராடிக்கொண்டிருந்த நிலையில்தான் ஈ.வெ.ராமசாமிக்கு "பெரியார்" என்ற பட்டம் சூட்டப்பட்டது என்று பரப்புரை செய்து வருகிறார்கள் திராவிட முகமூடிகள்.
இந்தித் திணிப்பு எதிர்ப்பு முக்கியமா...பெரியார் என்கிற பட்டம் முக்கியமா ? இத்தனை கலவரத்துக்கும் இடையில் பெரியார் என்கிற கிளுகிளுப்பு பட்டத்தை ஏற்பது ஒரு பெரிய மனிதருக்கு நாகரிகமா ? செய்வார்களா எந்தப் பெரியார்களாவது ?!
ஐயய்யோ... இப்போது இந்தி கட்டாயம் எனும் சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் முக்கியம், இந்தப் பெரியார் பட்டமா இப்போது முக்கியம். வேண்டாம் வேண்டாம் என்று மறுத்திருக்க வேண்டுமா வேண்டாமா ஈ.வெ. இராமசாமி ?!
1938 உண்மை வரலாறு இப்படியென்றால் 1965 கதை உலகத்திற்கே தெரியும். இந்திக்கு ஆதரவாக நடந்து கொண்டதுடன், இந்தி எதிர்ப்புக்குக் கடுமையான எதிரியாக ஈ.வெ.இராமசாமி நடந்து கொண்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களைக் காலிகள் என்றும், காலிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்றும் சொன்னவர்தான் ஈ.வெ.இராமசாமி.
1938 லும், "காங்கிரஸ் அமைச்சர்கள் சிலர் குடைச்சல் கொடுக்கவே இந்தி கட்டாய எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தேன்" என்றவர்தான் இராமசாமி.
"தமிழ் அழிந்துவிடும் எனவே இந்தி கூடாது என்பதற்காக அல்ல, ஆங்கிலம் வளரவேண்டும்" என்பதே எனது குறிக்கோள் என்றவர் ஈ.வெ.இராமசாமி.
இப்போது முடிவு செய்துகொள்ளுங்கள்... ஈ.வெ.இராமசாமியின் செயல்களுக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று .
நன்றி;
~வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர், ஆசிரியர் : தமிழ் ஊடகம் வார இதழ்
திருச்சி இனியன்
https://www.facebook.com/share/p/1DYr2FHfrL/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு