உயர்நீதிமன்றத்தில் தமிழ் கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர்களின் உண்ணாவிரத போரட்டமும் திமுகவின் ஏமாற்று வாக்குறுதியும்
மாந்த நேயன்
"உயர்நீதிமன்றத்தில் தமிழ்" கோரிக்கையை வலியுறுத்தி 8 நாட்கள் உயிரைப் பணயம் வைத்து உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய 24 தமிழுணர்வாளர்களின் உறுதியை நெஞ்சார வாழ்த்துகிறோம். இன்றைக்கு பெரிய பெரிய கட்சிகள் எல்லாம் 'பிரியாணி போட்டுத் தான் மாநாடு கூட்டி' பொழப்பு நடத்தும் நிலையில் தமிழுக்காகக் குடும்பத்தைவிட்டு 8 நாட்களாக உடல்வருத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த -ஒருங்கிணைத்த- தோழர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள்.
அதேநேரம் "திராவிட மாடல்" ஆட்சியாளர்களை நம்பிப் போராட்டத்தை 'ஒத்தி வைத்திருப்பது' குறித்துச் சில திறனாய்வுகளை முன்வைக்க விரும்புகிறோம்.
பொதுவாக தமிழ் தொடர்பான தமிழ்நாட்டு மக்களின் தேசிய இனக் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தி.மு.க.வும் அ.தி.முக.வும் நம்பத்தகுந்த கட்சிகள் அல்ல என்பதை வரலாற்றில் பலமுறை பார்த்துவிட்டோம்.
குறிப்பாக "உயர் நீதிமன்றத்தில் தமிழ்" கோரிக்கையைப் பார்ப்போம்.
1. தனது ஆட்சிக் காலத்தில்தான் "உயர்நீதிமன்றத்தில் தமிழ்" கோரிக்கைக்காக 2006 இல் சட்டமுன்வடிவாக்கி அனுப்பியதாகக் கூறிக்கொள்ளும் தி.மு.க. அதன்பிறகு 2011 வரை தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. 2014 வரை ஒன்றியத்தில் தி.மு.க. வின் கூட்டணி ஆட்சிதான் நடந்தது.அந்தக்காலத்தில் "உயர் நீதிமன்றத்தில் தமிழ்" சட்டமுன்வடிவை சட்டமாக்க பெரிய முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை. தனது கட்சியின் ஆதரவு இல்லை என்றால் ஒன்றிய ஆட்சி கலைந்து போகும் என்பது தெரிந்தும் - அந்த அளவுக்கு ஒன்றிய ஆட்சியில் வலுவான இடத்தைப் பெற்றிருந்தும்-தி.மு.க. இக்கோரிக்கையை சட்டமாக்க முயலவில்லை.அதன்பிறகு தமிழுணர்வாளர்களிடமிருந்து கோரிக்கை எழும்போது மட்டும் சும்மாச்சுக்கும் முனகி வைப்பதோடு சரி. தி.மு.க. பெற்றெடுத்த அ.தி.மு.க.வும் இதையேதான் செய்தது.
2. அடுத்து இந்தப் போராட்டம் ஒன்றிய அரசை நோக்கியது என்பது தெரிந்தும் கடைசி வரை "திராவிட மாடல்" ஆட்சியாளர்கள் போராட்டம் நடத்த இசைவு தரவில்லை. வேறுவழியின்றி போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடி இசைவு பெற்றுத்தான் போராட்டத்தைத் தொடங்கினார்கள். போராட்டம் நடத்த "திராவிட மாடல்" இசைவு வழங்க வில்லையே ஏன்?
3. சரி. போராட்டம் தொடங்கி 7 நாட்கள் வரை வாய்மூடிக் கிடந்த தி.மு.க. 7 வது நாளில் ஆர்.எஸ்.பாரதியை விட்டுச் சும்மா ஒரு அறிக்கை விட வைக்கிறது. 8 வது நாளில் சட்ட அமைச்சரை விட்டுப் பேச வைக்கிறது. இத்தனை நாட்கள் என்ன செய்தது?
'ஊழல் அமைச்சர்' செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக கோவையில் மிகப்பெரிய பொதுகூட்டம் நடத்திய தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் "உயர் நீதிமன்றத்தில் தமிழ்" போராட்டத்தை ஆதரித்து ஒரு சிறு ஆர்ப்பாட்டத்தைக் கூட நடத்தவில்லை ஏன்?
4. மார்ச் -4 அன்று போராட்டம் நடக்கும் இடத்தில் இருந்து 4 கல் தொலைவில் நந்தனத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் "உயர் நீதிமன்றத்தில் தமிழ்" குறித்து ஒன்றுமே பேசாமல் மோடியால் போக முடிகிறது. மோடியைப் பேச வைக்கும் வலு தி.மு.க.வுக்கு இருந்தும் தி.மு.க அதைச் செய்ய வில்லை. உண்மையில் தி.மு.க. "உயர் நீதிமன்றத்தில் தமிழ் " கோரிக்கையை உளப்பூர்வமாக ஆதரிக்கும் கட்சியாக இருந்தால் முதல்வர் ஸ்டாலின், மோடி வருவதற்கு முதல் நாள் *உயர் நீதிமன்றத்தில் தமிழ்"கோரிக்கையை ஆதரித்தும் அதைச் சட்டமாக்காத மோடியைக் கண்டித்தும் பேசி இருக்க வேண்டும் .மோடிக்கும் வேறுவழியின்றி அதற்குப் பதில் சொல்ல வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டிருக்கும். தி.மு.க.வுக்கு தேர்தல் நேர ஆதாயம் கூட கிடைத்திருக்கும். ஆனால் அதைச் செய்யாமல் மோடி வந்து சென்றபிறகுதான் இக்கோரிக்கை மற்றும் போராட்டம் குறித்து ஆர்.எஸ்.பாரதியை வைத்து அறிக்கை விட்டுவிட்டு அடுத்த நாள் சட்ட அமைச்சரை விட்டு சமாதானம் செய்கிறார்கள். ஏன்?
ஏனெனில் " உயர் நீதிமன்றத்தில் தமிழ்" கோரிக்கையை தி.மு.க உளப்பூர்வமாக ஆதரிக்கும் கட்சி அல்ல என்பதால் தான். தமிழை வைத்து ஆட்சியைப் பிடித்ததுவிட்டு கல்வியிலும் ஆட்சியிலும் ஆங்கிலத்தை உட்கார வைத்து அழகு பார்க்கும் கட்சி என்பதால்தான். அ.தி.மு.க.வும் 100 விழுக்காடு அப்படிப்பட்ட ஆங்கில அடிமை தமிழ் இரண்டகக் கட்சியே.
5. திராவிட மாடலுக்கு வால் பிடிக்கும் அமைப்புகள். தலைவர்கள் மேற்காணும் திறனாய்வுகளைக் கண்டு எரிச்சலுறுவர். 'இவங்களுக்கு எப்பவுமே திராவிட மாடலைத் திறனாய்வு செய்வதே வேலை' என்பர். எரிச்சலுறுவது உங்கள் உரிமை. அதில் நாம் தலையிட விரும்பவில்லை. ஆனால் தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படையான தமிழின் முதன்மையை ஒன்றிய ஆட்சியாளர்கள் ஏற்பதில்லை என்பது எந்தளவு உண்மையோ அதே அளவு இரு திராவிடக் கட்சிகளும் தமிழின் முதன்மையை கல்வியிலும் ஆட்சியிலும் உளப்பூர்வமாக விரும்புவதில்லை என்பதைக் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இவர்களின் நூற்றுக்கணக்கான சந்தர்ப்பவாத -ஏமாற்று- ஆங்கில அடிமைப் போக்குகளை கவனித்தால் ஒருசில நிமிடங்களில் உணர்ந்து கொள்ளமுடியும். உணரமுடியவில்லை என்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.
6. எனவே இந்தியைக் கொண்டு தமிழையும் ஏனைய பல தேசிய இனங்களின் மொழிகளையும் அழிக்கத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளைப் போலவே ஆங்கிலத்தைக் கொண்டு தமிழின் முதன்மையை இரண்டாம் நிலைக்குத் தள்ளி மெல்ல மெல்ல அழித்து இரண்டகம் செய்யும் திராவிடக் கட்சிகளை நம்பி ஏமாந்து போன வரலாறு நிறையவே இருக்கும்போது மீண்டும் அதே முறையில் போராட்டம் 'ஒத்தி வைக்கப்பட்டிருப்பது' மக்களிடத்தில் நம்பிக்கை இன்மைக்கே வழிவகுக்கும்.
மாந்த நேயன்
ஒருங்கிணைப்புக் குழு,
வினைத்தமிழ் இயக்கம்.
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு