தீபாவளி என்றால் மகிழ்ச்சி பொங்குமாம்! யாருக்கு? யாருக்கோ!!

Dharmar Dharmarr

தீபாவளி என்றால் மகிழ்ச்சி பொங்குமாம்! யாருக்கு? யாருக்கோ!!

பத்து ஆண்டுகளுக்கு முன் 2016-17 ல் 30லட்சம் தீபாவளிக்கு முந்தய நாளில் தொழிலாளர்களுக்கும்,JOB WORK செய்து கொடுத்தோர்களுக்கும் பணப்பட்டுவாடா செய்தேன்.

ஆனால் இன்று நானே Job work நிறுவனமாக சுருங்கியதோடு  தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய 6.5 லட்சம் பணத்திற்கு கந்து வட்டிக்காரர்களின் தயவு தேவைப்படுகிறது.

ரஷ்ய-உக்ரைன், அமெரிக்க / இஸ்ரேஸ்-ஈரான் போர்களால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை,ஆயத்த ஆடைகள் குறித்த நேரத்தில் உரிய நாடுகளுக்கு சென்று சேராத சூழலில் பையர்களும் குறித்த நேரத்தில் பணம் கொடுப்பதில்லை.பொதுவாக 60,90,120 நாட்கள் கடன் தவணையில் தான் ஏற்றுமதி ஆர்டர்கள் செய்யப்படுகிறது.

பெரும்பாலும் LC ல் ஆர்டர் செய்வோர் வங்கி கடன்கள் மூலம் 75% தங்களின் நெருக்கடியை தீர்த்துக் கொண்டாலும்,மற்றவர்கள் சொந்த பொருளாதாரம்/ நடைமுறைச் செலவினங்களுக்கு கையிருப்பு இருந்தால் மட்டுமே கடன் வலையில் மாட்டாமல் தப்பிக்க முடியும்.

 திருப்பூர் பின்னலாடை (பனியன்) தொழில் தற்போது கடும் நிதி நெருக்கடியிலும், தொழிலாளர்களுக்கு வழக்கமான தீபாவளி போனஸ் உள்ளிட்ட பலன்களை முழுமையாக வழங்க இயலாத நிலையிலும் தள்ளப்பட்டுள்ளது.

 இந்தியாவின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் திருப்பூரில், சுமார் 22,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் (MSME), 8 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களும் இந்தத் துறையை நம்பியுள்ளனர்.

வெளிநாட்டு அக்கப்போர்கள் ஒருபுறமென்றால் உள்நாட்டில் மூலப்பொருட்கள் விலை ஏற்றம்,சாயக் கழிவு & ரசாயனங்கள் விலை உயர்வு  100%-க்கும் மேல் அதிகரித்துள்ளது.

அத்தோடு  பருத்தி மற்றும் நூல் விலையில் ஏற்படும் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள் காரணமாக, ஆடைகளுக்கான ஒப்பந்த விலையை முன்கூட்டியே உறுதி செய்து லாபம் ஈட்ட முடியாத சூழல் சிறு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுகிறது.

 அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் திருப்பூரின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளாக இருக்கிறது. மேற்கத்திய சந்தைகளில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக புதிய ஆர்டர்கள் பெருமளவு குறைந்துள்ளதோடு  20% முதல் 30% வரை விலைத் தள்ளுபடி (Discount) வேண்டும் என அழுத்தம் தருவதால், பல ஏற்றுமதியாளர்கள் லாப வரம்பை இழந்து நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை.

2016-17 ல் செக்கிங் சிப்ட் சம்பளம் 245-260.இன்று ₹350-380/-இதைப்போல அனைத்து துறைகளிலும் சம்பளவு உயர்வு உண்டு.ஆனால் 2016-17 ல் தயாரித்த அதே மாடல் பனியன் 2026 லும் Buyer கொடுக்கும் விலை ஏறக்குறைய அதே விலை தான்.டாலர் விலை ஏற்றம் ஏற்றுமதியாளர்களுக்கு கை கொடுத்தாலும் அதே டாலரைக் கொண்டு மூலப்பொருட்கள் இறக்குமதி செய்வதால் நெருக்கடி தான்.

 பெருநிறுவனங்களுக்கு கிடைக்கும் வங்கிக்கடன்களால் பெரும் நெருக்கடியின்றி தப்பித்துக் கொள்கிறார்கள்., 'ஜாப் ஒர்க்' (Job work) எனப்படும் தையல் நிறுவனம்,நிட்டிங்,காம்பேக்டிங்,பிரிண்டிங்,எம்ராய்டரி போன்ற துணைப் பணிகளைச் செய்யும் குறு நிறுவனங்களால் அரசு வழிகாட்டுதலின்படியான குறைந்தபட்ச 8.33% போனஸைக் கூட ஒரே தவணையில் கொடுக்க முடிவதில்லை.

திருப்பூரில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தீபாவளி போனஸ் என்பது குடும்பக் கடன் மற்றும் கல்விச் செலவுகளை அடைக்கும் முக்கிய ஆதாரமாகும். போனஸ் குறைப்பு அல்லது தாமதம் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலையும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகையையும் கடுமையாகப் பாதிக்கும்.

எனவே மத்திய, மாநில அரசுகள் நூல் மற்றும் சாய ரசாயனங்களின் செயற்கை விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

 திருப்பூரின் எம்.எஸ்.எம்.இ (MSME) நிறுவனங்களுக்குக் குறுகிய கால வட்டிச் சலுகையுடன் கூடிய கூடுதல் செயல்பாட்டு மூலதனக் கடன்கள் வழங்கப்பட வேண்டும். பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை விரைவுபடுத்த வேண்டும்.

மேலும் டாஸ்மாக் கடைகளை இழுத்துமூட வேண்டும்.

ஒடிசா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஜவுளித் தொழிலுக்குப் பெரும் சலுகைகளை வழங்கித் தொழிலாளர்களை ஈர்ப்பதால், தமிழகத்தில் தொழிலாளர் பற்றாக்குறை நிழவுகிறது.

திருப்பூருக்கு எனத் தனித்துவமான உள்கட்டமைப்பு திட்டங்களை தீட்டாமல் Smart City என பெருமை பீத்திக் கொண்டு ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழிப்பதால் பனியன் தொழிலுக்கு பத்து பைசா அளவிற்குக்கூட நன்மை இல்லை.

Dharmar Dharmarr

https://www.facebook.com/story.php?story_fbid=3686369514851522&id=100004355291753&post_id=100004355291753_3686369514851522&rdid=3ghcQnfB2ZaHJCHD

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு