கருப்பு சிவப்பு நீலம் எனும் ஒட்டு கோட்பாடு பொது நடைமுறையில் வெட்டுக்குத்தாகி நிற்கிறது

துரை. சண்முகம்

கருப்பு சிவப்பு நீலம் எனும் ஒட்டு கோட்பாடு பொது நடைமுறையில் வெட்டுக்குத்தாகி நிற்கிறது

1

கருப்பு சிவப்பு நீலம் என்று 

மண்ணுக்கேற்ற மார்க்சிய அரசியல் கடந்த ஆட்சியில் பாசிச எதிர்ப்பு எனும் பெயரில் முன்வைக்கப்பட்டது.

சித்தாந்த ரீதியாக ஒன்றுக்கொன்று இணைவு கொள்ள முடியாதது என்று கருத்து சொல்பவர்களை இந்தப் பிரிவினர் பாஜகவின் ஆட்கள் என்று வாரிவிட்டார்கள்.

முக்கியமாக மார்க்சியத்தை சித்தாந்த அளவில் மற்ற இரண்டு கருத்துகளோடு சமப்படுத்தவும் பொருத்தப்படுத்தவும் முடியாது.

நடைமுறையில் பல்வேறு சித்தாந்த போக்குள்ள இயக்கங்கள் பொது எதிரிக்கு எதிராக திட்ட வகைப்பட்ட ஜனநாயக நடைமுறை இயக்கங்களை வேண்டுமானால் சேர்ந்து மேற்கொள்ளலாம். இதுதான் சாத்தியம் என்றபோது,

இன்று இணைவது காலத்தின் கட்டாயம் என்ற வகையில் விளக்கம் கொடுத்தார்கள். 

சித்தாந்தத்தை விடுங்கள்! இது பாசிச எதிர்ப்புக்கான தேர்தல் என்று  கூட்டமைந்தவர்கள் தேர்தலுக்குப் பிறகு  இணைய முடியாமல் எதிர் எதிர் முகாமாக ஆகிவிட்டார்கள்.

நடைமுறை ரீதியாகவும் கட்சிகளின் வர்க்க நோக்கங்கள் நலன்களுக்கு ஏற்ற வகையில் இந்த முகாம் பிரிவது நடக்கிறது.

கருப்பு சிவப்பு நீலம் எனும் ஒட்டு கோட்பாடு பொது நடைமுறையில் வெட்டுக்குத்தாகி நிற்கிறது.

சிபிஐ, சிபிஎம் , விசிக இவைகள் கருப்பால் வெளுக்கப்படுகிறது.

முரசொலியால் மொத்தப்படுகிறது.

வெட்கம் கெட்டவர்கள் என்கிறார் ஆ. ராசா. 

உங்க வரலாறே இப்படித்தான் !

என கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக சவட்டுகிறது. முரண்பாடு வந்தவுடன் முரண்பட்ட கருத்துவாதங்களை தொடங்குகிறது. மார்க்சியம் திராவிடம் முரணை விட்டு விட்டு பார்த்தாலும், மார்க்சிஸ்ட் கட்சி திராவிட கட்சி கருத்தியலே முதலில் கருப்பு சிவப்பு என இணைய முடியவில்லை எனும் எதார்த்தத்தை பிரதிபலிக்கிறது.

தனக்கான வர்க்க கொழுப்பின் சிரசாசனத்தை விட்டு விலகியவுடன் சோபா செட்டு வாங்கியவர்கள் என இழிவுபடுதுகிறது.

ஏன் இந்த நிலைமை? 

பாசிசத்தை எதிர்ப்பதற்காக நடைமுறையில் அதற்கான வேலைக்கு ஒன்றுபட்டும் சகிப்புத்தன்மையோடும் ஏன் இருக்க முடியவில்லை?

ஏனென்றால் கோட்பாட்டு அளவில் கருத்து ஒற்றுமை இல்லாத அடிப்படையிலிருந்து அனைத்தும் பிறக்கின்றன. 

திமுக முன்வைத்த பாசிச எதிர்ப்பு என்பது தேர்தல் வெற்றிக்காக தேவையான ஆற்றல்களை வளைத்துக் கொள்ளும் பழைய பாம்பு பஞ்சாங்கம்தான்.

அதில் பல்லி விழும் பலன்தான்  இச்சு கொட்டியவர்களின் நிலைமை.

தங்களுடைய வர்க்க நலனுக்கு உகந்ததாக இல்லாத அடுத்த நொடியே "பார் நாங்கதான் அந்த பாசிசம்! " என முகத்தை காட்டுகிறது கருப்பு!

கோட்பாட்டு ரீதியாக கொள்கை திட்ட ரீதியாக தேர்தல் ஜனநாயகத்தில் சரி கட்டி நின்ற சந்தர்ப்பவாதத்திற்கு சரியாக அடி விழுகிறது இப்போது !

இப்போதுதான் கூட்டணி குலைந்து வந்தவர்களுக்கு பேச்சு சுதந்திரமே வந்திருக்கிறது. 

என்ன பேசுகிறார்கள் பார்க்கலாம்!

எதை பேசுகிறார்கள் பார்க்கலாம்!

https://www.facebook.com/100080904177819/posts/1044228374950625/?rdid=TkbKPTLWpEySL0Pp

============================================

2

முதலாளித்துவக் கட்சிகளை விமர்சிக்கும் போது கூட எது உண்மையோ! எது சரியோ! அதைப் பேச வேண்டும் அப்படி அணுகுவதுதான் அடிப்படை ஜனநாயக பண்பு. 

கம்யூனிச ஆசான்களும் சிறந்த கம்யூனிஸ்டுகளும் கூட முதலாளித்துவ எதிர்ப்பு அரசியலை செய்த போதும் பொய் புரளிகளை அண்டி நின்று அரசியல் செய்தது இல்லை. 

எதிரிகள் கூட வியக்கும் அளவுக்கு நேர்மையும் நெஞ்சுரமும்   உண்மைகளை பேசும் உயர் துணிவும் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். 

இங்கு என்னடா என்றால் முற்போக்காளர்கள் இடதுசாரி சிந்தனையாளர் இடதுசாரி செயல்பாட்டாளர் எனும் பட்டங்களை வைத்துக்கொண்டு 

பக்கா பிராடு வேலைகளை செய்கிறார்கள். 

தவெக தவறுகளை விஜயின்

அரசியல் ஓட்டாண்டித்தனங்களை அம்பலப்படுத்தலாம். அதையும் மக்கள் பிரச்சனைகளுக்காக அரசியல் செய்ய வேண்டும்.

அதை விடுத்து விட்டு ஏதோ இப்போதுதான் சட்டமன்றத்தின் யோக்கியதை இப்படி ஆனது போல சினிமா சூட்டிங் ஆக மாற்றிவிட்டார் என்பதை நேரடிவ் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

மொத்தத்தில் இது மக்களுக்கு உதவாத வெட்டி மன்றம் என்று தோலுரித்தால் என்ன! அதைச் செய்தால் என்ன? 

அப்படியெல்லாம் பேசினால் இவர்களின் கதா காலேட்சபம்  கச்சேரி தேங்கா மூடி வசூலுக்கு பிரச்சனையாகும் என்பதால், பக்கம் பிரித்துக் கொண்டு விஜய் வந்து கெட்டுப் போச்சு என்பது போல் அரற்றுகிறார்கள். இதன் மூலம் திரும்பவும் திமுகவுக்கு காவடி தூக்கும் அரசியலை மக்கள் மத்தியில் திணிப்பதை செய்கிறார்கள். கெடுத்து வைத்த கும்பலும் சேர்ந்து கொண்டு பேசினால் எப்படி? 

ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் வெளிநடப்பு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசும் போது," சட்டமன்றத்தில் விசில் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள் , இனி 'ஐட்டம் சாங்' வரும்" என்று மிக இயல்பாக பேச முடிகிறது எனில் இவருடைய பண்பியல் தரம் என்ன? சினிமா சூட்டிங்கை விட்டு இவரே முதலில் வெளியே வரவில்லையே! 

விமர்சனத்துக்கு உரிய அரசியலை கொண்ட நபராக இருந்தாலும் முதலமைச்சரின் விஜய் வாயில் கருணாநிதி என்று வந்தவுடன் சாரி! சாரி! என பலமுறை சொல்லிவிட்டு கலைஞர் என்று சொல்கிறார்.  விமர்சனத்துக்கு உரியவராக இருந்தாலும் அந்தாளிடம் வெளிப்படும் பண்பாடு உங்கள் செய்கையில் இல்லையே! 

இந்த வயசுல இவ்வளவு பொய்யா? என்பது போல நேற்றைய சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசும்போது குறிப்பிட்ட நிமிடங்கள் இருந்து விட்டு புறப்பட்ட காட்சி ஊருக்கே தெரிகிறது. நாங்க வீட்டுக்கு போன பிறகு டிவியில பார்த்தோம் என்று எடப்பாடிக்கே டஃப்பு கொடுக்கிறார்.

நீங்க அட்லிய வச்சு இட்லியை போட்டீங்க! இது சினிமா செட்டிங் வசனம் இல்லாமல் வேறு என்ன?

பதிலுக்கு அந்த ஆளு உங்க அப்பாவை வச்சி சட்னி ஆக்கிட்டாரு! 

அப்பாவை காணோம்! என்று சட்டமன்றத்தில் வெற்றி பெறாததை எள்ளி நகையாடியதற்கு பதிலாக "பொண்டாட்டிய காணோம்! "என ட்ரெண்டு செய்து கொண்டிருக்கிறீர்கள்! 

இந்த லட்சணத்தில் அரசியல் மாண்பு பற்றி பேசுவதற்கு அரசியல் ரீதியாக பதில் சொல்லும் அடிப்படையே இல்லையே! 

மொத்தத்தில் உங்க ரெண்டு பேருக்குமான தனிப்பட்ட பட்டிமன்றமாக அம்பலப்பட்டு போனது. 

தூய்மைப் பணியாளர்களை தனியார் மயமாக்கும் பிரச்சினையிலோ, 

தமிழ்நாட்டு உரிமையை மறிக்கும் மேகதாது பிரச்சினையிலோ 

எதிரும் புதிருமாக கேள்வி கேட்டு மோதிக் கொள்ளாமல் பக்குவமாக அணுகிக் கொண்டு, அட்ஜஸ்ட் செய்து கொண்டு, அதாவது தேசிய மற்றும் தனியார் முதலாளித்துவ பிரச்சனைகளில் நட்பாக நயந்து கொள்கிறீர்கள்.

 அதிகாரத்தை பறிகொடுத்த வயிற்றெரிச்சல் தனிநபர் சண்டையை விடவா நீங்கள் பெண்ணுடல் ஆட்டத்தை இழிவுபடுத்தி சொல்லும் "ஐட்டம் சாங்" அருவருப்பானது?!

https://www.facebook.com/100080904177819/posts/1044166931623436/?rdid=VjJCwTBe4TPJEVwB

===================================================

3
தேவை: வர்க்கப் பார்வை!

தேர்தலுக்கு முன்பு விஜயை பாஜகவின் ஆள் என்று பிரச்சாரம் செய்தார்கள் திமுக மற்றும் திமுக ஆதரவாளர்கள்.

தமிழ்நாட்டின் பாஜக எதிர்ப்பு உணர்வை தமக்கான தேர்தல் வாக்குகளாக அறுவடை செய்யும் நோக்கில் சொல்லப்பட்ட காரணங்கள் வெற்றி பெறவில்லை.

மக்கள் 'அறிவு குறைவாக' இருப்பதால் திமுகவுக்கான அறிவேற்று நிலையங்கள் மீண்டும் பம்பு செட்டை போட்டுள்ளனர்.

தேர்தலுக்குப் பிறகு இப்போதும் தவெக என்பது பாஜக வின் வாகனம் என்று திமுகவின் அறிவுசார் குழு மூளைகள்

தொடர்கின்றன. ஏன்?

பாஜக எதிர்ப்பு அரசியல் பேசி தமிழகத்தில் சகல அரசியல் சக்திகளையும் தன்வயப்படுத்தி அதிகாரத்திற்கு வந்த திமுக தனது அதிகாரத்தை பயன்படுத்தி பாஜக ஆர் எஸ் எஸ் கும்பலை

ஒடுக்கவோ ஒழிக்கவோ எந்த இயக்கங்களையும் எடுத்ததில்லை.

மாநில உரிமை எனும் எல்லையில் இருந்து சட்ட வரம்புக்குள் பாசிச எதிர்ப்பை மட்டறுத்து அதற்கு எதிராக போராடிய சமூக ஆற்றல்களை எழவிடாமல் அடக்கி ஆண்டது. கூடுதலாக தன்கட்சி தலைவர் அருமை பெருமைகளை பேசவும் நாணயம் வெளியிடவும் ஆர்எஸ்எஸ் பாஜக பெருச்சாளிகளையே அழைத்து வந்து கௌரவித்தது.

இந்தியா கூட்டணியில் இருந்த மம்தா போன்றவர்களே திமுக பாஜகவுடன் கள்ளக் கூட்டு எனும் அளவுக்கு விமர்சனம் வந்தது.

பாசிச எதிர்ப்பை தேர்தல் ஆதாயமாக மட்டும் சுருக்கிக்கொண்ட திமுக ஆட்சிப் பொறுப்பில் அந்த முறைமைகள் இல்லாத இந்த சூழலிலும் அதை முதன்மை படுத்தி இயக்கங்களை எடுக்கவோ அதற்கான கூட்டணிகளை சேர்க்கவோ தயாராக இல்லை. ஏனென்றால் அதன் இயல்பிலேயே அது இல்லை.

பாஜக எதிர்ப்பை மழுங்கடித்து கைவிட்டு இன்னும் சொல்லப்போனால் பாஜக கூட்டாளியான அண்ணா திமுகவுடன் சேர்ந்தால் என்ன தப்பு? நாங்கள் திராவிட கட்சிகள்!

என்று நியாயவாதம் பேசும் அளவுக்கு வெளிப்பட்டு விட்டது. அவனை நிறுத்தச் சொல்! நான் நிறுத்துகிறேன்! என்று நாயகன் பட பாணியில் கொள்கை பேசுகிறது.

விஜய்க்கு என்ன கொள்கை இருக்கிறது? என்று கேட்டுக்கொண்டே நானும் விஜய் போலத்தான் என வெளிறிவிட்டது.

எனவேதான் ஆட்சி அதிகாரத்திற்கான ஒரே இலக்காக தவெக எதிர்ப்பை முதன்மைப்படுத்துகிறது. பாஜக எதிர்ப்பை ஏன் பிரதானப்படுத்தவில்லை என்ற கேள்விக்கு பதிலாக "அதாண்ணே இது!" வாழைப்பழ கதையாக தவெக தான் பாஜக என நேரடிவ் செய்கிறது.

இதுவரையிலுமான பின்னணி

அணுகுமுறை விவரங்களை பார்க்கையில் நான் ஏற்கனவே பதிவிட்டது போல தவெக பாஜகவின் பின்னணி கொண்டது அல்ல.

இந்திய ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவான காங்கிரஸ் வகையிலான பின்னணி கொண்டதாகவே இன்னும் கருத முடிகிறது. பாஜகவும் காங்கிரசும் சமமா? எனும் பழைய பல்லவியை திமுகவின் ஆஸ்தான வித்வான்கள் இப்போது கச்சேரியில் சேர்ப்பதில்லை.

பாஜக வின் அரசியல் பொருளாதார கொள்கைகள் காங்கிரசின் அரசியல் பொருளாதார கொள்கையும்

வேறு வேறு அல்ல. முழுக்க முழுக்க இந்திய பெரும் முதலாளிகள் நலன்களை உள்ளடக்கியதுதான்.

இதை அமல்படுத்தும் முறையில் செயல்முறைகளை வேறுபாட்டுடன் கையாண்டு கொள்கின்றன.

பாஜக இந்து மத தேசியவாதம் என்றால் காங்கிரசு மென் இந்துத்துவாவை உள்ளடக்கிய இந்திய தேசிய வாதம் பேசும்.

காங்கிரசின் இந்தப் பின்னணி சாயல் கொண்டதுதான் தவெக.

இந்திய ஆளும்வர்க்கத்தின் பெரு முதலாளிகள் உடனான கூட்டு சக்தியாகத்தான் இதுவும் இருக்கும்.

திமுக போத்திக் கொண்டிருந்த மதச்சார்பற்ற கூட்டணி கட்சி போர்வையை தவெக கழட்டி விட்டது. இதன் மூலம் தெரிய வருவது என்ன? திமுக எந்த கொள்கை திட்ட ஒப்பந்த அடிப்படையிலும் ஒரு பாசிச எதிர்ப்பு பாஜக எதிர்ப்பு கூட்டணியை நிறுவவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகிறது.

முழுக்க முழுக்க முதலாளித்துவ தேர்தல் ஜனநாயக கட்சி ஆதாய நடைமுறையில் இருப்பதால் தங்களுக்கென்று உள்ளதாக சொல்லும் கொள்கைகளை எல்லாம் உதறிவிட்டு , திராவிடத்தை பொளந்து கட்டிய சீமான் உட்பட நட்பு சக்தியாகி

விஜயின் தேர்தல் அரசியலை எதிர்கொள்ள நேற்று வந்த கட்சியிடம் அதே பாணிதான் நானும் என்பதை போட்டுக் காட்டுகிறது.

தவெக வை பொறுத்தவரை முற்று முழுதான முதலாளித்துவ சித்தாந்த கட்சியாக வெளிப்படுத்திக் கொள்கிறது.

நல்லதே நடக்கும்! காண்பிடென்ட்டா இருங்க! எனும் முதலீட்டு நிறுவன கொள்கையை

நேரடியாக பேசுகிறது.

ஆனால் திமுக முதலாளித்துவத்திற்கு முகமூடி போட்டு அனைவருக்குமான வளர்ச்சி !திராவிட மாடல்! என முகமூடி போட்டு நிற்கிறது.

பாசிச கூட்டு பங்காளி கட்சியாக இருந்து கொண்டு முற்போக்காக இருப்பதாக வசனங்கள் பேசி நடிக்கிறது.

நிலை மறுப்பின் நிலை மறுப்பு எனும் வளர்ச்சி விதிப்படி முதலாளித்து ஜனநாயகம் தன்னை மறுத்துக் கொண்டு பாசிச

படி நிலைக்கு வருகிறது. இனி ஒப்பனைகள் தேவைப்படாத முதலாளித்துவ பரிணாமக் கட்சி

ஆளும் வர்க்கத்துக்கு தேவைப்படுகிறது.

அதன் அடிப்படைகளை எதிர்த்து பாட்டாளி வர்க்க அரசியல் சார்பில் நின்று கம்யூனிஸ்டுகளுக்கான அரசியலை முன்னெடுப்பது தான் வரலாறு கோரும் வழி! திரும்பவும் திமுக எனும் சவளப்பிள்ளைகள் சங்கீதம் நமக்குத் தேவையில்லை.

சமூக அறிவியல் படி மாறிய சூழலை சரிவர அணுகாவிடில்

பின்னோக்கிப் போய்விடுவோம்.

கடந்து வந்த கட்டங்களின் முதலாளித்துவ கருத்து ஒன்றில் தேங்கி விடாமல் புதிய சூழலை

திறனாய்ந்து முதலாளித்துவ சக்திக்கு எதிரான போராட்ட வர்க்கங்களை எப்படி கைப்பற்றுவது எனும் கம்யூனிச அரசியல் குறியே நமது இலக்காக இருக்க வேண்டும்.

முதலாளித்துவ போட்டி குழுக்கள் ஏதாவது ஒன்றில் தேங்கி நிற்பது அல்ல.

இங்கே புதிய ஆட்சி அரசு இதன் மக்கள் விரோத தன்மைகளை எதிர்த்து முறியடிப்பது என்பது பாட்டாளி வர்க்க அரசியல் நோக்கில் இருக்க வேண்டுமே ஒழிய முகமூடி இட்ட திராவிட வாதத்தின் பின்னே கம்யூனிச அரசியலை காவு கொடுப்பது அல்ல!

தோழர் லெனின் அரசு பற்றிய விவாதத்தில் கூறுவது போல,

" அரசு என்பதன் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய வரலாற்றை மேலோட்டமாகவாவது பார்வையிட வேண்டும். சமூக அறிவியல் பற்றிய பிரச்சினையில் மிக மிக நம்பகமான ஒன்றும் பிரச்சனையை சரிவர அணுகும் பழக்கத்தை உண்மையிலேயே பெறுவதற்கும்; சில்லறை விவரங்களின் திரளிலோ ஒன்றை ஒன்று எதிர்க்கும் கருத்துக்களின் மிகப்பெரிய வேறுபாட்டிலும் சிக்கி வழி தவறி விடாமல் இருப்பதற்கு மிக மிக அவசியமானது ஒன்று இந்த பிரச்சனையை அறிவியல் வழியில் அணுகுவதற்கு மிக மிக முக்கியமானதொன்று என்னவென்றால் அடிப்படையான வரலாற்றுத் தொடர்பை மறவாதிருப்பதும் ஒவ்வொரு பிரச்சனையையும் ஆராயும் போது குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சி வரலாற்றில் எவ்வாறு தோன்றியது? அது தன் வளர்ச்சி போக்கில் என்னென்ன முக்கியமான கட்டங்களை கடந்து சென்றது? என்ற நிலைகளில் நின்று ஆராய்வதும் இந்த வளர்ச்சி நிலையிலிருந்து குறிப்பிட்ட பொருள் இன்று என்னவாக ஆகியிருக்கிறது ? என்பதை ஆராய்வதும் ஆகும்."

https://www.facebook.com/photo/?fbid=1049456584427804&set=a.117409004299238

துரை. சண்முகம்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு