உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையே பாசிச எதிர்ப்பின் உயிர்நாடி! - தோழர் கிளாரா ஜெட்கின் பிறந்தநாள்!

துரை. சண்முகம்

உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையே பாசிச எதிர்ப்பின் உயிர்நாடி!  - தோழர் கிளாரா ஜெட்கின்  பிறந்தநாள்!

தோழர் கிளாரா ஜெட்கின்

பிறந்தநாள்! 

.......................( ஜூலை 5, 1857 )

" ஒவ்வொரு தொழிலாளியிடமும் உயர்ந்த வர்க்க உணர்வினை அவரது சிந்தனையில் சிறிதுசிறிதாக ஏற்படுத்த வேண்டும். இந்தப் பணியை நாம் செய்யும்போதே பாசிசத்தை இராணுவரீதியாக தூக்கி எறிந்து வெற்றி காண்பதற்கான தயாரிப்பும் நடைபெறுகிறது. உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையே பாசிச எதிர்ப்பின் உயிர்நாடி!"

 இந்த 

முன்னோக்கிய அரசியலின்

பெண் குரல்தான் 

தோழர் கிளாரா ஜெட்கின்.

பள்ளி ஆசிரியர் தந்தை,

வாழ்க்கை நிலைமை

சொல்லி வளர்த்த அன்னை.

இவர்களுக்கு 

மகளாகப் பிறந்தார்;

பாட்டாளி வர்க்க

ஆசிரியராக உயர்ந்தார்.

பெண் என்றால்! 

தாய் மகள் மனைவி 

என்று சார்ந்து வாழ்வது 

வாழ்க்கை அல்ல, 

அவளும் ஒரு 

உழைக்கும் சமூகத்தின் பிரதிநிதி 

என்று 

உணர்ந்து வாழ வேண்டும்

 உயர்ந்து வாழ வேண்டும்!

எனும் 

எண்ணத்தில் மலர்ந்தார்.

கிறிஸ்தவ பழமைவாதம் ஒதுக்கி,

அரசியல் ஜனநாயகம் 

அவரது ஆர்வமானது. 

அதற்கேற்ற 

அமைப்பில் தொடங்கி 

பின்னர் 

பொதுவுடமைக் கட்சியில் 

பயின்றார். 

கும்பலில் கோவிந்தா போட்டு

 வம்பளக்கவில்லை!

வர்க்க அரசியல் பேசி

திருத்தல் வாதங்களை தெம்பிழக்கும்படி 

சவட்டி அடித்து 

ஒதுக்கித் தள்ளினார்.

பாட்டாளி வர்க்கத்தை 

அரசியல் படுத்த முனையாமல், 

பாராளுமன்றத்திற்கு 

வால் பிடித்துக் கொண்டே போவதால்,

ஜெர்மனியில் பாசிசம் வளர்கிறது! 

என முன்னறிந்து சொன்னார்!

உலகப் போரை 

துணிந்து எதிர்த்தார்.

போரால் பயன்பெறுவது

 உழைக்கும் வர்க்கம் அல்ல!

அதை உருவாக்கும் முதலாளிகளே!

என்பதை அரசியலாக

 பிரச்சாரம் செய்தார். 

முதலாளித்துவ பெண்ணிலைவாதம் ஏமாற்று! 

பாட்டாளி வர்க்க 

அரசியல் பார்வையில்

ஆணும் பெண்ணும் 

உழைக்கும் வர்க்கமாக 

ஒரு அணியில் திரள்வதே

 மாற்று!

எனும் 

சித்தாந்தத் தெளிவின் 

போராட்ட படி மலர் 

தோழர் கிளாரா! 

ரீச் டாக் 

எனும் ஜெர்மன் பாராளுமன்றத்திற்கு

 தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

" வந்தால் 

கொலை செய்யப்படுவாய்!"

என்று நாஜிகள் 

மிரட்டிய போதும்,

அங்கேயே சென்று 

இட்லரின் அரசியலை 

பொட்டலம் கட்டியவர் 

போராளி கிளாரா! 

சவடால் இட்லர்

இறுதியில் 

பயந்து தனிமைப்பட்டான். 

சர்வதேச தொழிலாளர் வர்க்க 

குடிமகளாக 

கிளாரா உலகு தழுவினார்.

பெண்களுக்கு 

கல்வி கற்கும் உரிமை பெண்களுக்கு வாக்குரிமை

என அனைத்துக்கும் போராடி

 உலக அரங்கில் சாதித்தது கிளாராவின் 

உழைக்கும் பெண்கள் இயக்கம்.

தோழர் எங்கெல்சின்

இனிய நண்பர்.

தோழர் லெனினிடம்

கலை இலக்கியம் வரை விவாதித்தவர்.

சர்வதேச மகளிர் நாளை 

தோற்றுவித்த பங்களிப்பாளர். 

ஒரு பெண்ணின் 

தனிப்பட்ட உணர்வுடன் 

சமூக உணர்வு சங்கமித்தால்,

அதுவும் 

கம்யூனிச அரசியல் உணர்வு

மலர்ந்தால்!

அது 

என்னவெல்லாம் அழகிய 

உலகின் ஆற்றலாய் 

ஊற்றெடுக்கும்!

என்பதன் ஒளி 

கிளாரா!

ஒரு பெண் 

ஒரு ஆணை காதலிப்பதுடன்

அழகிய வாழ்க்கை முடிவதில்லை,

உழைக்கும் வர்க்கத்தை

 நேசிப்பது! 

உழைக்கும் வர்க்கத்தால்

 நேசிக்கப்படுவது! 

எனும் விரிந்த பொருளின்

சிறந்த தோழர் 

கிளாரா ஜெட்கின்! 

" எல்லா அரங்கிலும் 

பெண்கள் ஆண்களுடன்

 இணைந்து போராட 

தயாராக இருக்கிறோம் 

எங்கள் உரிமைகளை 

இழந்து விடாமல்!"

என்று 

உழைக்கும்வர்க்க அரசியலின்

 உள்ளடக்கத்தை

உரத்துப் பேசியவர்

 தோழர் கிளாரா!

ஜெர்மனியில் பிறந்தார் மாஸ்கோவில் இறந்தார்

சர்வதேச கம்யூனிஸ்ட்களில்

 ஒருவராய் 

சோவியத் சோசலிச மண்ணில்

 உலறா நினைவுகளுடன், 

நம்மை 

உழைக்கும் வர்க்கத்துக்காக 

இயங்கச் சொல்லி

கிளாரா நினைவில் நிற்கிறார்! 

      - துரை. சண்முகம்

https://www.facebook.com/story.php?story_fbid=1054200620620067&id=100080904177819&rdid=r2Jqay2CmfgF2cpp

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு