உண்மை என்ன? : "கையில் பெல்ட்டுடன் தமிழ் தொழிலாளர்களை தாக்கும் வட மாநில இளைஞர்கள்.. திருப்பூரில் அட்டூழியம்"

தழல்

உண்மை என்ன? : "கையில் பெல்ட்டுடன் தமிழ் தொழிலாளர்களை தாக்கும் வட மாநில இளைஞர்கள்.. திருப்பூரில் அட்டூழியம்"

பின்னலாடை தொழிற்சாலைகளை பிரதானமாகக் கொண்டது திருப்பூர் நகரம். இங்கு உள்ள பின்னலாடை தொழிலற்சாலைகளில் ஒரிசா, பீகார், உ. பி., ஜார்க்கண்ட் போன்ற வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மிக அதிக அளவில் வேலையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே.

இந்த சூழலில் கடந்த 14 ஆம் தேதி வடஇந்திய மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், சில தமிழ்நாட்டு தொழிலாளர்களை துரத்தி தாக்கும் வீடியோ ஒன்று வெளியானது. தொழிலாளர்களுக்கு நடுவே எழுந்த பிரச்சனையில் நடந்த சம்பவமாக 14 ஆம் தேதி வெளியான அதே காணொளி நேற்றும் இன்றும் .. "தமிழ்நாட்டு தொழிலாளர்களை வடமாநில தொழிலாளர்கள் ஓட விட்டு அடிக்கின்றனர்". "தமிழ்நாட்டுக்குள்ளேயே இந்த நிலையா?", "வடக்கர்கள் அட்டூழியம்", "தமிழ்நாட்டில் நாங்கள் தான் வேலை செய்வோம், நீங்கள் செய்ய கூடாது என வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வட இந்திய இளைஞர்கள் போன்ற writeup மற்றும் voice overகளுடன் வாட்சப், facebook போன்ற ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

தங்களை செய்தி ஊடகங்களாக கூறிக்கொள்ளும் polimer போன்ற ஊடகங்கள், எந்த வித கள ஆய்வும் இன்றி வாட்சப் வதந்தியாக வந்த வீடியோவில் மசாலா எனும் பெயரில் வன்மத்தைக் கலந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. 

இது போன்ற தகவல் பரவியதை தொடர்ந்து இன்று தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு ஆதரவாக சில அமைப்புகள் மூலம் பேட்டிகளும், மாவட்ட ஆட்சியரிடம் புகார்களும் அளிக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதி முழுதும் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. 

விசயங்கள் இப்படியாக இருக்க, இச்சம்பவம் குறித்து அறிந்து கொள்ளும் பொருட்டு திருப்பூரில் உள்ள நமது தோழர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு பேசினோம். 

"ஜனவரி 14 மாட்டுப்பொங்கல் அன்று திலகர் நகரில் உள்ள டீ கடை ஒன்றில் இந்து முன்னணியைச் சார்ந்த 3 நபர்கள் மது போதையில் புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது மீது வேண்டுமென்றேவோ தற்செயலாகவோ அங்கிருந்த வடஇந்திய தொழிலாளி ஒருவர் முகத்தில் புகையை ஊதியுள்ளனர். அதற்கு அவர் ஏதோ பதில் கூற, எங்களையே திட்டுகிறாயா எனக் கூறி அவர்கள் மூவரும் அந்த நபரை தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் தன்னுடன் தங்கியிருக்கும் சக தொழிலாளிகளுக்கு நடந்ததை சொல்லவே அவர்கள் திரும்ப வந்து அந்த மூவரையும் தாக்குவது தான் அந்த வீடியோ. அந்த செயல் முடிந்த பின்னர், திரும்பவும் அந்த 3 நபர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அழைத்து சென்று ஆலையின் உள் சென்று பிரச்சனை செய்தனர். விசயம் அறிந்து வந்த காவல்துறை சமாதானமாக பேசி முடித்ததுடன் யார் மீதும் புகாரும் பதிவு செய்ய வில்லை. இது குறித்த வீடியோ அன்றே வெளியானது.

ஆனால், இத்தனை நாட்கள் போன பின் திரும்பவும் இதே வீடியோ தமிழ்நாட்டு தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க கூடாது எனக் கூறி வடமாநில தொழிலாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக பரப்புகின்றனர். " எனக் கூறினார்.

இந்த முதலாளித்துவ சமூகம் உழைக்கும் மக்களுக்கு இடையே மோதல்களை உண்டு பண்ணி அவர்களுக்கு உள்ளாகவே பகையும் வன்மையும் வளர்த்து விட்டு அந்த முரனை கொண்டு தங்கள் லாபத்தை பெருக்கி வருகிறது. இது தொழிலாளர்கள் அவர்களுக்கு உள்ளாக போட்டி போட்டு தங்களை மலிவாக சுரண்டக் கொடுப்பதற்கும், தங்கள் மீதான முதலாளிகளின் சுரண்டல்களை கேள்வி கேட்பதற்கு பதிலாக தங்களை போன்ற உழைக்கும் மக்களை எதிரியாக பாவிக்கும் மனநிலைக்கும் வழி வகுக்கிறது.

தன் வீட்டை விட்டு, ஊரை விட்டு, மொழி தெரியாத ஊரில், எந்த ஒரு உத்திரவாதமும் பணிப்பாதுகாப்பும் இல்லாத சூழலில் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகி, குறைந்த கூலிக்கு 12 மணி நேரம் வரை உழைத்துக் கொடுக்கும் வடமாநில தொழிலாளர்களின் அவலத்தை/கஷ்டத்தை கேலி பேசுவதும் அவர்கள் மீது வன்மம் பாராட்டுவதும் இங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதனூடே இது மாதிரியான செய்திகளும் வெளியிடப்படும் போது. வடமாநில தொழிலாளர்கள் குறித்த பொதுமக்கள் மனநிலை என்பது எவ்வாறாக அமையும்?

இச்செய்திகளை பார்க்கும் மக்கள் நாளை தங்கள் பகுதியில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களை எப்படி நடத்துவார்கள்?

இந்த செய்திகள் கட்டமைக்கும் சூழல் எத்தனை ஆபத்தான மோதல்களை விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது ?

பதினைந்து நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை, தற்போது நடந்ததாக பரப்பப்படுவது எதற்காக?

கொஞ்சமும் அறம் அற்ற இந்த அற்பத் தனங்களுக்கான விலையை இவர்கள் கொடுத்தே தீர வேண்டும். மேலும் இவர்கள் கட்டமைக்கும் இந்த மோசமான பரப்புரைகளுக்கு எதிரான தொழிலாளர்கள் ஒற்றுமை குறித்த பரப்புரைகளும் விழிப்புணர்வுகளும் அத்தனை வடிவங்களிலும் மக்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும். 

உழைப்போர் யாவரும் ஒன்றென்றறிவோம் 

உழைப்பாரை ஏய்ப்பார்கள் எவராயினும்

அவர் செய்திகள் யாவும் சதியென்றறிவோம்

- தழல்

(முகநூலில்)

https://www.facebook.com/111982434853062/posts/pfbid02yj3ZKC7ZhLR2i1yoSN2S434zqDYLFVJVDSzYG2QuMCGD57PRePuZXgWMCLeUFeYrl/?sfnsn=wiwspwa

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு