நாடாளுமன்றமும் போலி ஜனநாயகமும்
சமரன்
10 ஆண்டு கால மோடி ஆட்சி அனைத்துத் துறைகளிலும் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து வருகிறது. தினந்தினம் பாசிச கொடிய சட்டங்களை நிறைவேற்றி பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களுக்கு நாட்டை கூறுப் போட்டு விற்று வருகிறது. அதைப் பற்றி கேள்வியெழுப்பினாலே பாசிச அடக்குமுறைகளை ஏவி வருகிறது. தனது தோல்விகளை மூடி மறைக்க சாதி - மத - இனவெறியூட்டி நாட்டை கலவர பூமியாக்கி வருகிறது. மோடி ஆட்சியின் இந்த தோல்விகளையும் பாசிசப் போக்குகளையும் நாடாளுமன்றத்திற்குள் எழுப்பிய குரலின் மூலம் தோலுரித்துக் காட்டியுள்ளனர் நான்கு தேசப்பற்று கொண்ட இளைஞர்கள்.
நாடாளுமன்றத்திற்குள் வண்ணப்புகை
கடந்த டிசம்பர் 13 ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நாட்டைத் திரும்பிப் பார்க்க வைத்தது இளைஞர்களின் அந்தப் போராட்டம். இரண்டு இளைஞர்கள் ஒருவர் மனோரஞ்சன் மற்றொருவர் சாகர் சர்மா - புதிய நாடாளுமன்றத்தின் பால்கனியில் உள்ள பார்வையாளர்கள் இருக்கையில், தங்கள் காலணிகளில் மறைத்துக் கொண்டு வந்திருந்த குப்பிகளை (canister) திறந்து வண்ணப் புகைகளை பரவவிட்டனர். அதில் சாகர் சர்மா மேலே இருந்து அவைக்குள் குதிக்கிறார். முழக்கம் இட்டுக் கொண்டே எம்.பி.க்களின் மேசைகள் மீதே தாவியோடி அவையின் மையப் பகுதி செல்ல முயல்கிறார். அவரை வளைத்துப் பிடித்த எம்.பி.க்கள் கொடூரமாக இந்த இளைஞனைத் தாக்குகின்றனர். மனோரஞ்சன் மேலே இருந்துக் கொண்டே முழக்கம் போட்டதோடு அவர்களின் பிரசுரத்தை அவைக்குள் வீசியெறிகிறார். அதே சமயத்தில் நாடாளுமன்ற வளாகத்தின் வெளியில் அமோல் ஷிண்டே என்பவரும் நீலம் ஆசாத் என்ற பெண்ணும் அதேபோல் வண்ணப்புகையை குப்பிகளில் இருந்து கிளப்பியதோடு பிரசுரங்களை வீசியெறிந்து முழக்கமிடுகின்றனர்.
அவர்கள் முழங்கிய முழக்கம் என்ன?
"வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் பாதிப்பு, மணிப்பூர் கலவரங்களை வேடிக்கைப் பார்க்கும் மோடி அரசே சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து விடாதே!"
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட இந்த குரல் ஆளும் பாஜகவை மட்டுமில்லாது கையாலாகாத நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளையும் வாய் பிளக்கச் செய்தது.
பகத்சிங் மற்றும் அவரின் தோழர்களது போராட்டத்தை நினைவூட்டிய சம்பவம்
வளர்ந்து வந்த தொழிலாளர் வர்க்க இயக்கத்தை நசுக்கிட பொது பாதுகாப்புச் சட்டம், தொழில் தாவா சட்டம் என்ற இரு சட்டங்களைக் கொண்டுவந்தது பிரிட்டஷ் ஏகாதிபத்திய அரசு. அதே காலகட்டத்தில் மீரட் சதி வழக்கு என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் கைது செய்திருந்தது. இவற்றை கண்டித்து இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு சங்கம் நாடாளுமன்றத்தில் குண்டு வீசி தங்களது எதிர்ப்பை நாடறிய செய்வது என முடிவெடுத்தது. அவ்வாறு குண்டு வீசும்போது அது யார் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடாது; கைதை தவிர்த்துத் தப்பிக்க முயலக் கூடாது; கைதான பிறகு நீதிமன்றத்தை பிரச்சார மன்றமாக மாற்றுவது எனவும் முடிவு செய்து அப்பணியை பகத்சிங் மற்றும் படுகேஷ்வர் தத்தாவிடம் ஒப்படைத்தது. ஆபத்து நிறைந்த இப்பணியை 08.04.1929 அன்று பகத்சிங்கும் படுகேஷ்வர் தத்தாவும் இரண்டு புகைக்குண்டுகளை நாடாளுமன்றத்தில் வீசி நிறைவேற்றினர். பிரிட்டிஷார் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது உயிருக்கு பயந்து தலைத்தெறிக்க ஓடினர். ஒரே புகை மண்டலமாக மாறியது. இருப்பினும் அவர்கள் தப்பிக்காமல் முகமலர்ச்சியோடு கைதாயினர். விளக்கப் பிரசுரங்களை நாடாளுமன்றத்தில் வீசினர்.
"கேளாத செவிகள் கேட்கட்டும்! நாங்கள் மனித உயிரை மிகவும் நேசிக்கிறோம் மனிதன் அமைதியையும் முழு சுதந்திரத்தையும் பெற வேண்டும் என நாங்கள் கனவு காண்கிறோம். எனினும் புரட்சிக்காக சில சமயம் இரத்தம் சிந்த வேண்டியுள்ளது என்பதை வருத்தத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அனைவருக்கும் சுதந்திரத்தை அளிக்கும் வல்லமை படைத்த புரட்சி வென்றிடவும். மனிதனை மனிதன் சுரண்டுவதைத் தடுத்திடவும் தனி மனிதனின் தியாகம் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. புரட்சி நீடூழி வாழ்க!"
என அவர்களும் அவர்களது பிரசுரங்களும் முழங்கியது.
இன்று மீண்டும் அதையொத்த ஒரு குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்துள்ளது. அன்று பிரிட்டிஷின் காலனியாதிக்கத்திற்கு எதிராக ஒலித்த குரல் இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும்-அம்பானி-அதானிகளுக்கும் சேவை செய்யும் மோடி அரசின் பாசிச சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒலித்துள்ளது; நாட்டையே கவனிக்க வைத்துள்ளது.
சிறிய எதிர்ப்புக் குரலுக்குக் கூட ஊபாவை ஏவும் பாசிச மோடி அரசு
கேளாத செவிகளும் கேட்க குரல் எழுப்பிய இவர்கள் யார்?
- டி.மனோரஞ்சன் - கர்நாடகா, கணினி பொறியியல் படிப்பை முடித்துள்ளார். நிரந்தர வேலை கிடைக்காததால் தனது தந்தைக்கு -விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில்- உதவியாக இருந்து வந்துள்ளார்.
- சாகர் சர்மா - உத்திரபிரதேசம், தச்சுத் தொழிலாளியின் மகனான இவர் தனது குடும்பத்தின் வறுமை சூழலால் கல்லூரி படிப்பைத் தொடரமுடியாமல் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
- நீலம் ஆசாத் - ஹரியானா, எம்.பில். உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளை முடித்தவர். ஆசிரியப் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில் வெற்றிப் பெற்று இருப்பினும் அவருக்கு வேலை வழங்கப்படவில்லை.
- அமோல் ஷிண்டே - மகாராஷ்டிரா, இராணுவத்தில் சேர்வதற்கான கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வந்த இவருக்கான வாய்ப்பை -மோடி அரசு அமல்படுத்திய-'அக்னிபத்' திட்டம் பறித்தது.
இவர்கள், பானை சோற்றுக்கு பருக்கை பதம் போல இந்திய ஆட்சியாளர்கள் அமல்படுத்தும் அரசியல்-பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் கொரோனா காலக்கட்டத்திற்கு பின்பு அதிகரித்திருக்கும் வேலைவாய்ப்பின்மையையும் வறுமையையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர். இன்னும் கோடிக்கணக்கான நீலம்களும் ஷிண்டேக்களும் நாடு முழுவதும் இத்தகைய வறுமையில் உழல்கின்றனர். அவர்களின் முகமாகத்தான் இன்று நாடாளுமன்றத்தில் வெடித்துள்ளனர்-தங்களை பகத்சிங்கின் வாரிசுகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும்-இந்த அக்கினிக் குஞ்சுகள். சமூக வலைதளத்தில் பகத்சிங் பேன்ஸ் கிளப் என்ற பெயரில் குழுவாக செயல்பட்டுவந்த இவர்கள் சரியான திட்டமிடலோடு-கொரில்லா முறையில்-தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர். இவர்கள் யாரும் எவ்வித சிறு குற்றங்களிலோ அல்லது அரசுக்கு எதிரான இயக்கங்களிலோ செயல்படாதவர்கள்; சாதாராண உழைக்கும் வர்க்கப் பின்னணியைக் கொண்டவர்கள். இதில் நீலம் ஆசாத் மட்டுமே விவசாயிகள் போராட்டம், பூஷன் சிங்கின் பாலியல் கொடுமைகளுக்கெதிரான மல்யுத்த வீராங்கனைகளின் அமைதிவழிப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. அத்தகைய இவர்களைதான் - தனது அரசின் தோல்விகள் மீது கேள்வியெழுப்பிய குற்றத்திற்காக பயங்கரவாதிகள் என முத்திரைக் குத்தி ஊபா (UAPA) கொடுஞ்சட்டத்தை ஏவியுள்ளது. இந்த நால்வர் அல்லாது இவர்களின் போராட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்காக லலித் ஜா என்பவரையும் அவர்கள் தங்குவதற்கு வீடு அளித்த விக்கி சர்மா என்பவரையும் கூட ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து கொடுமைப்படுத்தி வருகிறது இந்த பாசிச அரசு. பகத்சிங் மற்றும் அவர்களது தோழர்களை தூக்கிலிட்ட பிரிட்டிஷ் கொடுங்கோல் அரசுக்கும் பாசிச மோடி அரசுக்கும் என்ன வித்தியாசம்?!
இந்திய நாடாளுமன்றத்தின் போலி ஜனநாயக முகத்திரையை மீண்டும் கிழித்தெறிந்துள்ளது இவர்களின் போராட்டம்
இவர்களின் போராட்டத்திற்கான காரணங்கள் குறித்தும் அதற்கான அடிப்படைகள் குறித்தும் விவாதிக்கக் கூட தயார் இல்லை எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள். நாடாளுமன்ற பாதுகாப்பை பற்றிய ஓர் அம்சத்தை மட்டும் விவாதத்திற்கு உள்ளாக்கினர். அதைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாத பாசிச மோடி அரசு 146 எதிர்க்கட்சி எம்.பி.க்களை தற்காலிக அவைநீக்கம் செய்துள்ளது. ஏற்கனவே மோடி அரசு அதானிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக அவ்வபோது கேள்வி எழுப்பி வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ராவை, கேள்வி எழுப்புவதற்கு பணம் பெறுவதாக கூறி அவைநீக்கம் செய்திருந்தது. தற்போது பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பியதற்காக எதிர்க்கட்சி எம்.பி.களை நீக்கியதோடு, பல்வேறு பாசிச சட்டங்களை விவாதத்திற்கு இடம் அளிக்காமலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
அன்றைய போராட்ட நிகழ்வின்போதும் கூட 3 குற்றவியல் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அதைத் தொடர்ந்து தபால்துறை சட்டத் திருத்தம், தொலைத்தொடர்புத் துறை சட்டத் திருத்தம், நீதிபதிகள் நியமன சட்டத் திருத்தம் உள்ளிட்ட பாசிச கொடிய சட்டங்களை சத்தமின்றி திருட்டுத்தனமாக நிறைவேற்றியுள்ளது. இன்னும் எத்தனை கொடுஞ்சட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்ற தகவல்கள் கூட வெளியில் வராமால் ஊடகங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டி வருகிறது. நம்புங்கள் இதுதான் ஜனநாயக நாடு! இந்த போலி முகத்திரைரையதான் இந்த இளைஞர்களின் போராட்டம் கிழித்தெறிந்துள்ளது. அதேபோல் ஒரு நாடாளுமன்ற அவைக்குள் கூட இவர்கள் பாதுகாப்பு வழங்கும் லட்சணத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது அந்தப் போராட்டம். இந்த அரசுதான் சீனாவின் தாக்குதலிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் வல்லமை படைத்ததாம்; மோடிதான் உக்ரைன் போர், பாலஸ்தீனப் போர் உள்ளிட்ட உலகின் யுத்தங்களைத் தடுத்து நிறுத்தும் சக்திப் படைத்த மீ-மனிதராம் - சங்கிகளின் காமிக்ஸ் கதைகள்! கேலிக்கூத்து!!
அந்த இளைஞர்களின் போராட்டத்தைக் கூட நரித்தனமாக தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது. பாதுகாப்புக் குறைபாடுகளை நீக்குவதற்கு மாறாக பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை என முடிவெடுத்துள்ளது. அதை கேள்வி எழுப்பும் எம்.பி.க்களையும் அனுமதிப்பதில்லை. பார்வையாளர்களே இல்லாத நாடாளுமன்றம்; எதிர்க்கட்சி எம்பிக்களே இல்லாத நாடாளுமன்றம். ஆஹா இதுவல்லவோ நாடாளுமன்ற ஜனநாயகம்!!
நாள் ஒன்றுக்கு 30 விவசாயிகளை கொன்றுக் குவித்து வருகிறது. இந்த 10 ஆண்டுகளில் மட்டும் லட்சக்கணக்கான விவசாயிகளை கொன்றுக் குவித்துள்ளது. அவை அனைத்தையும் நாடாளுமன்ற சட்டங்கள் மற்றும் அரசியல் - பொருளாதாரக் கொள்கைகள் மூலமே பலியிட்டு வருகிறது. இவ்வாறு நாடாளுமன்ற முறை மூலமே அமைதிவழியிலேயே-எவ்வித வெளிப்படையான பயங்கரவாதத்தையும் ஏவிவிடாமலேயே-பாசிசத்தை கட்டியமைத்து வருகிறது மோடி அரசு. இதே அரசியல் பொருளாதாரக் கொள்கைகளைத் தான் அனைத்து ஆளும் வர்க்கக் கட்சிகளும் கடைபிடிக்கின்றன. இதை மக்களிடம் அம்பலப்படுத்தாமல் மூடிமறைக்கின்றனர் நாடாளுமன்ற மாயையில் மூழ்கியுள்ள திருத்தல்வாதிகள். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த இந்த நாடாளுமன்றம் போலி ஜனநாயகத்தன்மைக் கொண்டது என அன்று பகத்சிங் அம்பலப்படுத்தினார். அமெரிக்காவின் புதியகாலனிய ஆதிக்கத்தின் கீழுள்ள இன்றைய நாடாளுமன்றத்தையும் அம்பலப்படுத்தியுள்ளனர் பகத்சிங்கின் இந்த வாரிசுகள்.
ஜனநாயத்திற்காகவும், வேலையின்மைக்கு எதிராகவும் போராடிய இந்த இளைஞர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் தாக்குதல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும் அவர்களின் விடுதலைக்காகப் போராடுவதும் ஜனநாயக சக்திகள் அனைவரது கடமையாகும்.
சமரன்
பிப் - மார்ச் 2024 இதழில்