ராகுல்காந்தி தகுதி நீக்கம்! மோடி கும்பலின் பாராளுமன்ற - நீதிமன்ற பாசிசம் ஒழிக!!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

ராகுல்காந்தி தகுதி நீக்கம்! மோடி கும்பலின் பாராளுமன்ற - நீதிமன்ற பாசிசம் ஒழிக!!

பாசிச மோடி ஆட்சியால் பாராளுமன்றத்திலிருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது என்பது ஐயத்திற்கிடமின்றி பாராளுமன்ற - நீதிமன்ற - அரசியல் அமைப்புச் சட்டத்தின் வாயிலாகவே மோடி கும்பலின் "திருட்டு ஆட்சியால்" நிகழ்த்தப்பட்டுள்ள மிக மோசமான பாசிச ஒடுக்குமுறையாகும். இம்மன்றங்களின் போலி ஜனநாயகத்தன்மையை இந்த நிகழ்வு பட்டவர்த்தனமாக எடுத்துக்காட்டியுள்ளது.

ராகுல் மீதான வழக்கு விவரம்

2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று கர்நாடகாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி பேசியதற்காக அப்போது தொடுக்கப்பட்ட வழக்கிற்கு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குஜராத் பாஜக ஆட்சியின் உதவியுடன் இரவோடு இரவாக ஒரு ஆர்.எஸ்.எஸ் நீதிபதியை நியமித்து இந்த தீர்ப்பை பெற்றுள்ளது மோடி ஆட்சி. மிக முக்கியமாக பாஜக எம் பிக்கள் கடந்த 17 ஆம் தேதி சபா நாயகரை சந்தித்து ராகுலை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தனர். அதன் பிறகு இந்த தீர்ப்பு வந்துள்ளது. ஆகவே இது திட்டமிட்ட சதி என்பதும் பழி வாங்கும் நடவடிக்கை என்பதும் தெளிவாக அறிய முடிகிறது 

அப்பிரச்சாரத்தில் ராகுல் காந்தி “அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டிருக்கின்றனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிகிறது. அது ஏன்?” என்று பேசியிருந்தார். 

இதை எதிர்த்து குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது குற்றவியல் அவதூறு (criminal defamation) வழக்கு தொடர்ந்திருந்தார். அவ்வழக்கின் தீர்ப்பு மார்ச் 23 அன்று வெளியானது. ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ₹15,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நாட்டை கொள்ளையடிக்கும் கும்பலை திருடன் என்று சொன்னதும் நீதி மன்றத்திற்கு வர்க்கப் பாசம் பொங்கிவிட்டது. ராகுல் காந்தியின் ஜாமீன் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதோடு மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் கால அவகாசமும் வழங்கியது.

அதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தியை எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து மக்களவை செயலகம் அன்று மாலையே உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் மேல் முறையீடு செய்ய ஒரு மாதம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் ராகுல் சட்டரீதியாகப் போராடவும் கூட அனுமதிக்காமல் அன்று மாலையே தகுதி நீக்கம் செய்துள்ளது மோடி ஆட்சி. இதன் மூலம் ராகுல் காந்தியால் 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழலை சதித்தனமாக திட்டமிட்டு உருவாக்கியுள்ளது. குஜராத் மதக்கலவரங்களுக்கு தலைமை தாங்கிய மோடி பிரதமராக உள்ளார். அவருக்கு நீதி மன்றங்கள் வளைந்து கொடுக்கின்றன. கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட , மதக்கலவரத்தில் ஈடுபட்ட காவிக் காடையர்கள் எம்.பிக்களாக வலம் வருகின்றனர். அவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. நடவடிக்கையும் இல்லை. ஆனால் சட்டம் தன் கடமையை செய்ததாக கூசாமல் பாஜக கும்பல் பொய் பேசுகிறது.

ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவே குற்றவியல் அவதூறு வழக்கிற்கு வழங்கப்படும் அதிகபட்சத் தண்டனையான இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை என்பது வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (Representation of the People Act, 1951) பிரிவு 8-இன்படி, பதவியில் இருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு தண்டிக்கப்பட்டால் அவர்களின் பதவி தகுதிநீக்கம் செய்யப்படும்.

மேலும், தண்டனை காலம் முடிவடைந்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட இயலாது. அதாவது ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து, இத்தீர்ப்பை முறியடிக்காவிட்டால் அவரால் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட இயலாது. இந்த குற்றவியல் அவதூறு சட்டம் ஒரு காலனிய கால சட்டமாகும். இச்சட்டம், இதுவரை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவே 90% பயன்படுத்தப் பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் கருத்து சொல்லியுள்ளது; ஆகவே இந்த காலனிய சட்டத்தை இரத்து செய்யவும் நாம் கோர வேண்டியுள்ளது. 

பலம் பெறும் பாசிசம்

முன்னதாக பாராளுமன்றத்தில் அதானி - மோடி உறவு பற்றி ராகுல் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மோடி பதில் தரவில்லை. மாறாக ராகுல் லண்டனில் இந்தியாவை அவமதித்துவிட்டதாக கூறி பாஜக எம்.பிக்களை விட்டு பாராளுமன்றத்தை முடக்கினார். ஏற்கனவே உக்ரைன் போரில் ரசியாவை ஆதரித்ததால் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளுக்கும் மோடி ஆட்சிக்கும் முரண்கள் நீடிக்கின்றன. ஆகவே மோடி ஆட்சியை கட்டுப்படுத்தவும், ஆட்சி மாற்றம் செய்யவும் அமெரிக்காவும் பிரிட்டனும் முயன்று வருகின்றன. காங்கிரசு கட்சி இந்த முரண்பாட்டை பயன்படுத்தி ஆட்சிக்கு வர நினைக்கிறது. அதற்கு ஹிண்டன்பர்க் அறிக்கையை பயன்படுத்துகிறது.

ராகுல் காந்தி பிரிட்டன் - அமெரிக்க ஏகாதிபத்தியங்களிடம் ஆசீர்வாதம் பெறவே அங்கு சென்றார். அதன் பொருட்டே உக்ரைன் போரில் மோடி நிலைப்பாட்டை விமர்சித்தார். தற்போது அதானி பங்குச்சந்தையில் சீனாவின் சட்டவிரோத முதலீடு பற்றி கேள்வி எழுப்பி வருகிறார். ராகுலின் சீன - ரசிய எதிர்ப்பை அமெரிக்கா விரும்புகிறது. அதை மோடியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வர வெறித்தனமாக செயல்படுகிறது. அதன் நீட்சியே ராகுல் மீதான இந்த நடவடிக்கை.

ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவின் (காங்கிரசு கட்சி) மீதே மோடி கும்பல் பாசிச ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பிரதான எதிர்க் கட்சிக்கே - அதுவும் ஒரு பாசிசக் கட்சிக்கே - இந்த கதி எனில் உழைக்கும் மக்களின், ஜனநாயக அமைப்புகளின், சிறிய அரசியல் கட்சிகளின் எதிர்காலம் என்ன என்பதை மோடி ஆட்சி இதன் மூலம் குறிப்பால் உணர்த்தியுள்ளது. பாராளுமன்றம், நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டத்தின் வாயிலாகவே பாசிசத்தை அரங்கேற்ற முடியும் என்பதை இதன்மூலம் மோடி ஆட்சி நிரூபித்துள்ளது.

மோடி கும்பலின் இந்துத்துவ பாசிசம் என்பது இந்திய நாஜிசமே என்பதை நாம் அறிவோம். எனவே ராகுலை தகுதி நீக்கம் செய்வது என்பது எதிர்க்கட்சி இல்லா இந்தியா -காங்கிரசு இல்லா இந்தியா - ஒற்றைக் கட்சி ஆட்சி முறை எனும் ஹிட்லர் வகைப்பட்ட நாஜிச மாடலின் திட்டவட்டமான நடைமுறை திட்டமே.

காங்கிரசும் பாஜகவும் இந்திய பாசிசத்தின் இரு முகங்களாக திகழ்கின்றன. காங்கிரசு கட்சிதான் முதன்முதலில் இந்தியாவில் பாசிச ஆட்சியை கட்டியமைக்க துவங்கியது. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், தமிழீழம் மற்றும் இந்திய மக்களின் இரத்தக்கறை கை சின்னத்தில் இன்னமும் படிந்தேயுள்ளது. அவற்றை மக்கள் மறக்கவில்லை. அரசியல் பொருளாதாரம், இராணுவம் மற்றும் வெளியுறவுக் கொள்கை என அனைத்திலும் பாஜகவும் காங்கிரசும் ஒரே கொள்கையைத்தான் கடைப்பிடிக்கின்றன. உக்ரைன் போரில் மோடி ஆட்சியின் ரசிய ஆதரவு நிலைப்பாட்டையும், அதானி - சீன மூலதன உறவுகளையும் ராகுல் அம்பலப்படுத்துவதும் கூட, தான் அமெரிக்காவின் விசுவாசி என்று காட்டிக்கொள்வதற்கே தவிர வேறு காரணம் இல்லை. மோடி கும்பல் அமெரிக்கா - ரசியா இரண்டின் விசுவாசியாகவும் தன்னைக் காட்ட முயல்கிறது. காங்கிரசு கட்சி தான் அமெரிக்காவின் விசுவாசி மட்டுமே என தன்னைக் காட்ட முயல்கிறது. அதற்காக அமெரிக்க - ரசிய முரணைப் பயன்படுத்துகிறது. மேலும் அதானி - அம்பானி முரண்பாட்டையும் கூட பயன்படுத்தி வருகிறது. காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் கூட பாசிசத்தின் வடிவம் மட்டுமே மாறும். பாசிசம் தொடர்ந்து நீடிக்கவே செய்யும்.

காங்கிரசின் பெருந்தேசிய வெறி பாசிச மாடலை பின்னுக்குத் தள்ளி தனது இந்துத்துவ பாசிச மாடல் மூலம் ஆட்சிக்கு வந்தது பாஜக. அது முதல் தனக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் ஹிட்லர் பாணியில் பல குறுக்கு வழிகளில் அழித்து வருகிறது. இதற்கு திரிபுரா, மகாராஷ்ட்ரா என பல உதாரணம் உண்டு. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் ஆட்சி நடத்துகிறது. அரை குறை ஜனநாயகத்தையும் நசுக்கி வருகிறது. எதிர்க்கட்சி இல்லாத இந்தியா - காங்கிரசு இல்லா இந்தியா என்ற பாசிச திட்டத்தின்படி செயல்பட்டு வருகிறது.

எனவே ராகுல் தகுதி நீக்கத்தை நாம் கண்டிப்பது என்பது அது ஜனநாயக கட்சி எனும் அர்த்தத்தில் அல்ல. இன்னொரு ஆளும் வர்க்க பாசிச கட்சியின் மீதே இத்தகைய ஒடுக்குமுறை எனில் உழைக்கும் வர்க்கத்தின் கதி என்ன?  நம்மைப் போன்ற புரட்சிகர - ஜனநாயக அமைப்புகள் , சிறிய கட்சிகள், மாநில கட்சிகளின் கதி என்ன? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஹிட்லரின் இந்திய வாரிசுகள் இவர்கள் என்பதை நாம் உணர வேண்டும். இந்த நடவடிக்கை பாசிசம் பலம் பெற்று வருவதன் எடுப்பான உதாரணம் ஆகும்.

ஆகவே, ஆளும் தகுதியை இழந்துவிட்ட மோடி ஆட்சியை - ஹிட்லர் பாணியிலான நாஜிச ஆட்சியை அகற்றவும், மக்கள் ஜனநாயக குடியரசை அமைக்கவும் நாம் அணி திரள வேண்டியது நமது அவசர, அவசிய கடமையாகும்.

ராகுல்காந்தி தகுதி நீக்கம்! மோடி கும்பலின் பாராளுமன்ற - நீதிமன்ற பாசிசம் ஒழிக!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பியை குறுக்குவழியில் பதவி நீக்கம் செய்யும் மோடி கும்பலின் பாசிச ஒடுக்குமுறையை கண்டிப்போம்! 

ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவின் மீதே ஒடுக்குமுறை என்பது பாசிசக் காட்டாட்சியின் முன்னோட்டமே! 

எதிர்க்கட்சி இல்லா இந்தியா - ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை எனும் மோடி கும்பலின் ஹிட்லர் வகைப்பட்ட நாஜிச மாடலை முறியடிப்போம்! 

அதானி -நீரவ் மோடி - லலித் மோடியின் திருட்டிற்கு காவல் காக்கும் நரேந்திர மோடி தலைமையிலான திருட்டு ஆட்சியை ஒழித்துக்கட்டுவோம்! 

பாராளுமன்றம் - நீதிமன்றம் - அரசியல் அமைப்புச் சட்டம் வாயிலாகவே பாசிசத்தை கட்டியமைக்கும் மோடி ஆட்சியை அகற்றுவோம்! 

மக்கள் ஜனநாயக குடியரசமைக்க அணிதிரள்வோம்!

நன்றி: மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு