மார்ச்- 8 சர்வதேச மகளிர் தினம்!

சமத்துவத்தை வென்றெடுக்க சபதமேற்போம்!

மார்ச்- 8 சர்வதேச மகளிர் தினம்!

மார்ச்-8 மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தில் தனக்கு விருப்பமான ஆடைகளையோ, நகைகளையோ, இன்னபிற சில்லரை விருப்பங்களையோ தங்கள் கணவன்மார்களிடம் நச்சரித்து போராடி பெறுவதன் மூலம் மேல் நடுத்தரவர்க்க மகளிரின் மகளிர் தினம் நிறைவுறுகிறது. உழைக்கும் வர்க்கத்து ஏழைப் பெண்கள் மகளிர் தினம் என்ற அந்த நன்னாளை பற்றி அறியாதவர்களாகவும், அதன் வீரகாவியம் பற்றி தெரியாதவர்களாகவுமே உள்ளனர். சில மகளிர் குழுக்களின் கொண்டாட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் தவிர்த்து மேற்சொன்ன அடிப்படையிலேயேதான் இவ்வாண்டு மார்ச்-8 மகளிர் தினமும் நகர்ந்தோடியது.

புவிக்கோளம் முழுவதும், இந்தியத் துணைக் கண்டத்திலும் முன்னெப்போதையும் விட பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டலும் பாலியல் வன்கொடுமைத் தாக்குதல் கொலைகளும், பல்வேறு விதமான ஆணாதிக்க அடக்குமுறைகளும் தீவிரம் பெற்றுள்ளன இச்சூழலில், பெண்கள் மீதான அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பதுடன் அதற்கு அடிப்படையான அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகளை வேர் பிடித்துக் காட்டுவதும், பெண் விடுதலைக்கான பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தை பறைசாற்றுவதும் மிக அவசியமாகும். மார்ச்-8 உழைக்கும் மகளிர் தினம் உலகெங்கும் கடைபிடிக்கக் காரணமாயிருந்து, பெண் விடுதலைக்கும், பாட்டாளி வர்க்க விடுதலைக்கும் பல்வேறு தியாகங்களை செய்து உயிரையும் இழந்த வீர மகளிரின் தியாக வாழ்வை நினைவில் நிறுத்துவதும் இழந்துவிட்ட அனைத்து உரிமைகளையும் அவ்வீர மகளிரின் வழியில் போராடி வெற்றி கொள்ள சூளுரைக்கும் தினமாகவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-8 அமையப் பெற வேண்டும்.

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி"


என்று எட்டுத்திக்கும் கேட்க எடுத்துரைத்த பின்பும் அந்த முண்டாசு கவிஞனின் வரிகள் இன்னும் எழுத்துக்களாகவே உள்ளன.

எட்டு மணி நேர வேலை, வாக்குரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் புறப்பட்ட புரட்சிப் பெண்கள் இயக்கம் தன்னை விடுவித்துக்கொள்ள பாட்டாளி வர்க்க விடுதலை கீதம் இசைத்து எதேச்சதிகார ஜாராட்சியை வீழ்த்தி வரலாற்றில் தனது விடிவுக் காண வெளிச்சத்தைக் காட்டியது. தனது லட்சியங்களை நிறைவேற்றிக் கொண்டது. உலகெங்கும் பெண்கள் தங்கள் உரிமைகளை பெறுவதற்கான சுடர் விளக்காய் எரிந்தது. வரலாற்றில் இன்று ஏகாதிபத்தியத்தாலும் அதன் ஏவலர்களாலும் உலக மக்கள் போராடி வென்றெடுத்த அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு, பெண் உரிமைகள் நசுக்கப்பட்டு பெண் மீண்டும் பழைய அடிமைத் தளையில் பூட்டப்பட்டுள்ளாள்.

உலகெங்கிலும் நிதி மூலதன ஆதிக்கம் தீவிரம் பெற்று, பாசிசப் போக்குகள் தலைவிரித்தாடும் இன்றையச் சூழலில் பாசிசத்தை வீழ்த்தி பாட்டாளிவர்க்க ஜனநாயகத்தை வென்றெடுப்பதின் வாயிலாக தன் மீதான தளைகளை அறுத்தெறிய பாட்டாளிவர்க்க இயக்கத்தோடு தோளோடு தோள் நிற்பது பெண்கள் இயக்கம் செய்ய வேண்டியது மிக அவசியப் பணியாகும்.

இந்தியாவில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்

இந்திய நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி விழுக்காட்டினரான பெண்களுக்கு இந்திய சமூகக் கட்டமைப்பு வதை முகமாகவே இருந்து வருகிறது. முதலாளித்துவத்திற்கு முந்தைய அனைத்து விதமான பிற்போக்கு உற்பத்தி உறவுகளின் நீட்டிப்பானது பெண்களை ஆணாதிக்க அடிமை விலங்கில் பூட்டியுள்ளது. பெண்களை கோவில் கட்டி கும்பிடும் இந்நாட்டில்தான் பெண் கற்பழிக்கப்பட்டு நாடு முழுவதும் வீசியெறியப் படுகிறாள். நித்தம் நித்தம் நிர்பயாக்களின் மரண ஓலங்கள் கேட்டுக் கொண்டுதானிருக்கின்றன. இந்துத்துவப் பாசிச மோடி கும்பலின் ஆட்சியில் முன்னெப்போதையும் விட பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிதீவிரம் பெற்றுள்ளன. கும்பல் கற்பழிப்புகள் ஒரு போக்காகவே உருவெடுத்துள்ளது. சமீபத்தில் காவி காமவெறி காலி கும்பல்கள் இசுலாமிய சின்னஞ்சிறு சிறுமி ஆசிபாவை கற்பழித்து கோவிலுக்குள் வீசியதைக் கண்டு நாடே உறைந்துபோனது. இக்கும்பல்கள் இஸ்லாமியப் பெண்களை கற்பழிப்பது இந்துக்களின் கடமை என்ற இந்து மதவெறியன் சாவர்க்கரின் கூற்றிற்கு நடைமுறை வடிவம் கொடுப்பதோடு நாடு முழுவதும் அனைத்து பெண்களுக்கும் எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது இந்துத்துவப் பாசிசக் கும்பல்.

கடந்த பத்தாண்டுகளில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஆசிட் வீச்சுகள், வரதட்சணை கொடுமைகள், சிறுமிகள் மீதான பாலியல் கொலைகள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிவர ஆவணம் தெரிவிக்கிறது.

இந்திய நாட்டில் பெண்கள் அனைத்து விதமான ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு ஆணாதிக்க சிறைக் கூடத்தில் வதைபட்டு சாகின்றனர். வர்க்க பேதம் பாராது எல்லா வர்க்கத்துப் பெண்களும் அதன் ஒடுக்குமுறையால் துன்புறுகிறார்கள். பெண்களை தாழ்ந்தவர்களாகவும், காமம், குழந்தை உற்பத்தி, வீட்டுவேலை ஆகியவற்றிற்கான பொருளாகவும் பார்க்கிற ஒரு ஆணாதிக்க வெறி கண்ணோட்டமானது நீடிக்கின்ற நிலப்பிரபுத்துவ கண்ணோட்டத்தின் ஒரு பகுதியேயாகும்.

பெண்கள் வாழ தகுதியற்ற நாடு இந்தியா

உலகிலேயே இந்தியாதான் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. கீன்சியப் பொருளாதாரக் கொள்கையின் தோல்வியினைத் தொடர்ந்து 'சமூக நல அரசு' கோட்பாடு கைவிடப்பட்டு 'சந்தை நல அரசு' கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய தாராளமய உலகமய கொள்கையினால் பெரும் வேளாண் நாடான இந்தியாவின் வேளாண்மை நலிவுக்குள்ளாகி வறுமை பெருக்கெடுத்தது. வேளாண் குடிகள் நிலத்திலிருந்து பிய்த்தெறியப்பட்டு நாடெங்கும் விரட்டப்பட்டனர். கூடவே சமூக நலத் திட்டங்கள் ஒழிக்கப்பட்டது. சுகாதாரம் மக்கள் நலன் புறக்கணிக்கப்பட்டது. இதன் விளைவாக இன்று இந்தியாவில் 38 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்து குறைபாடுடைய பெண்கள் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் வயதில் ரத்தசோகையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தாயின் ரத்த சோகை காரணமாகப் பிறக்கும் குழந்தையும் ரத்த சோகையுடனும், குறை பிரசவத்திலும் பிறப்பதுடன், தாய்-சேய் மரணங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. உலகில் ஊட்டச் சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 50 சதவீதம் குழந்தைகள் இந்தியாவில் தான் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. (இனி நமது விரல்கள் ஆப்பிரிக்காவை நோக்கி நீளக்கூடாது) பெண்களுக்கு அளிக்கப்படும் ஊட்டச்சத்து. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குறியீடுகளைக் கொண்டு கணக்கிடப்படும் சர்வதேச பாலியல் சமத்துவப் பட்டியலில் இந்தியா 134-வது இடத்தில் (மொத்தம் 189) இருக்கிறது. இது தான் மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம்!

உலகில் 122 சிசு மரணங்களில் 100 பெண் சிசுவாக உள்ளது. இந்தியாவில் பெண் சிசுக்களின் இறப்பு விகிதம் ஆண் சிசுக்கள் இறப்பு விகிதத்தை விட 75% அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2000 பெண் சிசுக்கள் சட்டத்திற்கு புறம்பாக கருவிலேயே கலைக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் கூசபை கூறுகிறது.

வீடா? சுடுகாடா?

வீட்டிற்கு வெளியே சமூகத்தில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்களை விட, தங்கள் வீட்டிற்குள்ளேயே நடைபெறும் தாக்குதல்கள், கொலைகளே அதிகமாகும்.

உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 137 பெண்கள் கொல்லப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அங்கத்தினர் மூலமாகவும் தங்கள் இணையர் மூலமாகவுமே கொல்லப்படுவதாக போதை மற்றும் குற்றங்களுக்கான ஐநா அலுவலகம் புதிய தரவினை வெளியிட்டிருக்கிறது. 2017ஆம் ஆண்டு கொல்லப்பட்ட 87 ஆயிரம் பெண்களில் 50 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் தங்களது நெருக்கமானவர்களின் கைகளாலேயே கொல்லப்பட்டிருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தங்களின் நெருக்கமானவர்களின் கைகளாலேயே பெண்கள் கொல்லப்படுவது ஆசியாவில் தான் அதிகமாகும். 2017இல் மட்டும் இவ்வகையில் பெண்கள் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வகையான கொலைகளுக்கான அடிப்படை காரணங்களாகக் குடும்பத்தினரின் விருப்பத்திற்கெதிரான காதலும், திருமணங்களும் காரணங்களாகக் கூறப்படுகிறது. இது இவ்வாறு இருக்க உலகில் தற்போது உள்ள பெண்களில் சுமார் 700 மில்லியன் பெண்கள் தமது 18 வயதுக்கு முன்னரே திருமணம் முடித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 250 மில்லியன் பேர் தமது 15 வயதுக்கு முன்னர் திருமணம் முடித்துவைக்கப்பட்டுள்ளனர். திருமணமான பெண்களில் 150 மில்லியன் பெண்கள் பலாத்காரமாக உடலுறவில் ஈடுபடுவதற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள் தங்கள் குடும்பத்தினரால் நிகழ்த்தப்படுவதற்கு, இந்திய நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க குடும்ப அமைப்பு முறையே அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இந்திய சமூக குடும்பங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான அநீதிகள், தாக்குதல்கள், கொலைகள் போன்றவை கலாச்சாரத்தைக் கட்டிக்காப்பது என்ற அடிப்படையில் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பால் நியாயப்படுத்தப்படுகின்றன.

இவ்வகையிலான கொலைகளில் கௌரவக் கொலைகள், வரதட்சணைக் கொலைகள் அதிக எண்ணிக்கையாகும். இந்தியாவில் ஒவ்வொரு 90 நிமிடத்திற்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால் கொல்லப்படுவதாக தேசிய குற்றவியல் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 2007இல் 8,093, 2008இல் 8,172, 2010இல் 8,391 என அதிகரித்த வரதட்சணைக் கொலைகள் கடந்த பத்து ஆண்டுகளில் 14 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளன.

2011ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் பதிவான பாலியல் வன்புணர்ச்சி வழக்குகளில் 94.2 சதவீத வழக்குகள் அதாவது 22,549 வன்புணர்ச்சி தாக்குதல்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரிந்தவர்களால்தான் நடத்தப்பட்டதாக தேசிய குற்ற ஆவணத்துறை அறிவித்துள்ளது. இதில் 269 வன்புணர்ச்சி தாக்குதல்கள் பெண்ணின் தந்தை மற்றும் மிக நெருக்கமான உறவினர்களால் நடத்தப்பட்டுள்ளது. 7,835 வன்புணர்ச்சி தாக்குதல்கள் அக்கம் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த ஆண்களால் நடத்தப்பட்டுள்ளன. 1,560 தாக்குதல்கள் தூரத்து உறவினர்களால் நடத்தப்பட்டுள்ளன.

அதிகரிக்கும் ஆணவக் கொலைகள்

இந்தியாவில் பொதுவாக நிலப்பிரபுத்துவத்தின் கீழ் திருமணம் என்பது மனித தன்மையற்றக் காட்டுமிராண்டிதனமான ஏற்பாடாகவே உள்ளது. வலுக்கட்டாயத்தின் அடிப்படையிலேயே பெற்றோர்களால் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டாண்டு காலாமாக 'மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி' என்றுக் கூறியே பெண்ணின் மௌனத்திற்குள் அடங்கி கிடக்கும் அவளது நியாயமான விருப்பங்களையெல்லாம் துளியும் சட்டை செய்யாமலேயே திருமணக் கொடுமைகள் அரங்கேறுகின்றன. திருமண விசயத்தியல் பெண்ணின் சுயதேர்வை (காதலை) இழிவானதாகக் கருதும் சமூக அமைப்பு, பெண்ணிற்கு விருப்பமற்ற ஒருவனுடன் மணமுடித்து வைத்து நிரந்தர இருளில் தள்ளி கடைமை முடிந்ததாய் நிம்மதி பெருமூச்சுவிடும் தாய், தந்தையரின் செயலுக்காய் கிஞ்சிற்றும் முகம் சுழிப்பத்தில்லை. மாறாக அதுதான் கௌவுரவம், தன்மானம் என போற்றப்படுகிறது.எங்கெல்லாம் தன் உரிமையை நிலைநாட்ட பெண் தன்  மௌனத்தை உடைக்கிறாளோ அங்கெல்லாம் ஆணவப்படுகொலை நடத்த சாதிவெறி அரிவாள்கள் எழுந்துவிடுகின்றன.

தமிழகத்தில் ராமதாஸ், கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்ட கொலைகார சாதிவெறி கும்பல்களும் வடஇந்தியாவில் காப் பஞ்சாயத்து போன்றவற்றாலும் பெண்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். உ.பி, ம.பி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா உள்ளடங்கிய 25,000 கிராமங்களுக்கு மேல் சாதி வெறியும், ஆணாதிக்கமும் நிறைந்த காப் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இக்கும்பல்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில்தான் இந்தியாவிலேயே அதிக அளவில் பெண் சிசு கொலைகள் அரங்கேறுகின்றன. இந்த காப் பஞ்சாயத்துகள் இந்திய அரசின் பெயரளவிலான சட்ட திட்டங்களையும் தூக்கியெறிந்துவிட்டு தனி ராஜ்ஜியமே நடத்துகின்றன. இவர்கள் வைத்ததுதான் சட்டம். சிறு, சிறு பிரச்சனைகளுக்கும் மிகக் கடுமையான தண்டனை வழங்கும் இந்த காப் பஞ்சாயத்துகளில் பெரும்பாலும் பெண்களே இலக்கு வைக்கப்படுகிறார்கள். குடும்பக் கோத்திர கௌவுரவங்களை காப்பதென்ற பெயரில் வன்கொடுமைகளையும் கொலைகளையும் நடத்துகிறது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான வன்கொடுமைகளை கட்டவிழ்த்து வரும் பிற்படுத்தப்பட்ட சாதி சங்கங்கள் குறிப்பாக வன்னிய ஆதிக்க சாதிவெறி இராமதாசு கும்பல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராய் சாதிக் கலவரங்களைத் தூண்டி அவர்களின் குடிசைகளை கொளுத்துவதும், உடைமைகளை சூறையாடுவதும் தொடர்வதோடு 'நாடக காதல்' என்ற பெயரில் காதலர்களை கொலை செய்வதும் தனது சொந்த சாதிப் பெண்களை படுகொலை செய்வதையும் தொடர்ந்து செய்து வருகிறது.

தனது சாதிப் பெண்களை தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் டீ சர்ட்டும், ஜீன்ஸ் பேண்ட்டும், கூலிங் கிளாசும் போட்டு மயக்கி விடுவதாக பெண்களை இழிவுபடுத்தி பெண்கள் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறது. நாடகக் காதலைத் தடுப்பது என்ற பெயரில் நாடகமாடி பிற்படுத்தப்பட்ட சாதிச் சங்கங்களைத் திரட்டி தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான சாதிக் கலவரங்களை நடத்தி வருகிறது. பெண்கள் கல்லூரி சென்றால் காதலிக்கிறார்கள் என்பதைக் காரணம் காட்டி, பெண்களின் கல்வி உரிமையைப் பறித்து குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதற்கான காரணமாக இருக்கின்றது. தங்கள் சாதிப் பெண்களைக் காதலித்து மணமுடித்த தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களை ஆணவப்படுகொலை செய்து பெண்களை விதவையாக்குகிறது. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தங்கள் சொந்த சாதி பெண்களையும் படுகொலை செய்கிறது. தர்மபுரி இளவரசன், உடுமலை சங்கர் என ஆணவப்படுகொலைகளை நடத்தும் இக்கும்பலின் நோக்கம் தாழ்த்தப்பட்ட சாதி மக்களை எதிரியாக முன்னிறுத்தி தன் சொந்த சாதி மக்களைத் திரட்டி வாக்கு வங்கியை உருவாக்கி உள்ளூர், மாநில அதிகாரத்தை ருசிப்பதற்கான வேட்கையே ஆகும்.

புதிய வேளாண்மை கார்ப்பரேட் கொள்கைகளால் கிராமத்திலிருந்து துரத்தப்பட்டு திருப்பூர், கோவை உள்ளிட்ட பிற நகரங்களில் ஒப்பந்த வேலை முறைகளால் கொத்தடிமைகளாகச் சுரண்டப்படும் தங்கள் சாதிப் பெண்களுக்காய் மறந்தும் இச்சாதிவெறி கும்பல்கள் குரல் கொடுப்பதில்லை. மாறாக சாதிவெறி ராமதாஸ் தனது மகன் அன்புமணியின் ஒரே ஒரு எம்.பி சீட்டிற்காக தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளைக் கொளுத்தியது பல ஆயிரங்கள்! தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களை திருமணம் புரிந்த இளம் பெண்களை படுகொலை செய்தது ஏராளம்!

தாழ்த்தப்பட்ட சாதி பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்

அரசின் புள்ளி விவரப்படியே ஒவ்வொரு நாளும் மூன்று தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு இரையாகின்றனர். இந்தியாவில் 80 மில்லியன் தாழ்த்தப்பட்ட பெண்கள் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளைச் சந்தித்து வருகின்றனர். நான்கு மாநிலங்களைச் சேர்ந்த 500 தாழ்த்தப்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் 46.8 விழுக்காடு பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களையும், 23.2 விழுக்காடு பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கும் ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்களின் புள்ளிவிவரத்தை பார்க்கும் போது 2006இல் 515, 2007இல் 604, 2008இல் 604, 2010இல் 265 க்கு மேல் உயர்ந்துள்ளதோடு, உயிரிழந்த பெண்களில் 60 விழுக்காட்டினர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்களாவர்.

நாட்டில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்தாட, தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை ஆதிக்க சாதியினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கு ஒன்றில் "கீழ் சாதிப் பெண்ணை உயர்சாதியினர் தொட்டிருக்கமாட்டார்கள் என்று நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆதரவாகக் கூறிய தீர்ப்பானது சாதியத்தையும், ஆணாதிக்கத்தையும் பாதுகாக்கும் பிற்போக்கு கூடாரங்களாக நீதிமன்றங்கள் திகழ்வதை எடுத்துக்காட்டுகிறது.

விவசாய வேலைகள், கட்டிட வேலைகள் என அனைத்து பணி செய்யும் இடங்களிலும் தாழ்த்தப்பட்ட பெண்கள் குறைவான கூலிக்கு ஒட்டச் சுரண்டப்படுவதும் தீண்டாமை தாக்குதல்களும் எதிர்கொள்ளும் அவமானங்களும் சொல்லி மாளாது.

பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டல்

இந்தியாவில் ஒரு நாளுக்கு 400 நிமிடங்கள் ஒரு பெண் வீட்டு நிர்வாக வேலையில் ஈடுபடுகிறாள். ஆனால் ஆணைப் பொறுத்தவரை அது வெறும் 42 நிமிடங்கள் மட்டுமே என ஆய்வுகள் கூறுகின்றன. வீட்டு நிர்வாக வேலையில் (குழந்தை வளர்ப்பு, முதியோர் பராமரிப்பு) கிராமப் புறங்களை விட நகர்புற பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. இந்த அளவானது கிராமப்புறங்களில் 62சதமாகவும் நகர்புறத்தில் 67சதமாகவும் உள்ளது. நகர்ப்புறங்களில் கூலி உழைப்பில் ஈடுபடும் பெண்ணாக இருந்தாலும் சரி, 8 மணிநேர அலுவலகப் பணி மேற்கொள்ளும் நடுத்தரவர்க்கப் பெண்களானாலும்சரி வீடு வந்து சேர்ந்ததும் குழந்தைப் பராமரிப்பு, வீட்டுப் பணி என மீண்டும் உழைக்கத் துவங்கிவிடுகின்றனர். காலையில் எழுந்து இரவு தூங்கச் செல்லும்வரை ஓய்வுக்கான வாய்ப்பே இல்லை.

பெரும் விவசாய நாடான இந்தியாவில் விவசாயப் பெண் தொழிலாளர்கள் 80% பேர் ஆவர். நிலம் வைத்திருக்கும் பெண்கள் 15% ஆவர். இதில் 75% பெண்கள் ஊதியம் இல்லாத விவசாயிகளாக செயல்பட்டு வருகின்றனர். விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆணின் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு கூட வழங்கப்படுவதில்லை. விதைப்பு முதல் அறுவடை வரை விவசாயத்தில் பெண்களின் உழைப்பே அதிகமாகும். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் கூலியோ மிக மிக சொற்பமே.

அமெரிக்காவின் புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் வகையில் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டு தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன. 8 மணி நேர வேலை நேரம் ஒழித்துக் கட்டப்பட்டு 12 மணி முதல் 14 மணி நேரமாக மாற்றப்பட்டுவிட்டது. ஒப்பந்த வேலை முறைகள் திணிக்கப்பட்டு தொழிலாளர்களின் வாழ்வு கொத்தடிமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பெரும்பாலான வணிக ஸ்தலங்களில் ஆண் தொழிலாளர்களிடத்தில் பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு பெண்களின் உழைப்பு மலிவான கூலிக்கு சுரண்டப்படுகிறது. இவ்வாறு நாடு முழுவதும் துணிக்கடை, பாத்திரக் கடை, மளிகைக் கடை, நகைக்கடை உள்ளிட்ட கடைகளில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகும். கிராமப்புறத்தில் தலைவிரித்தாடும் வறுமை வேலையின்மையின் காரணமாக கிடைத்த ஊதியத்திற்கு பெண்கள் இவ்வேலையினைச் செய்கின்றனர். இவர்களில் பெரும் பகுதியானவர்கள் குழந்தைத் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காலையில் கடையைத் திறந்து பெருக்கி சுத்தம் செய்வது முதல் இரவு கடை பூட்டும் நேரம் வரை இவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இது போன்ற கடைகளில் வேலை பார்க்கும் பெண்கள் வாடிக்கையாளர் இல்லாவிட்டாலும் நின்று கொண்டுதான் இருக்க வேண்டும். உட்காருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. பண்டிகைக் காலங்களில் கழிவறை செல்லக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் உடல் நலம் பாதிப்பிற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் சரவண ஸ்டோர் உள்ளிட்ட கடைகளில் கொத்தடிமைகளைவிட மோசமான நிலையிலையே பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. பெரும்பகுதி இப்பெண்களின் சொற்ப வருமானத்திலேயே அவர்களின் குடும்பங்கள் நகர்கிறது. வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி சிறுகச் சிறுகச் சேர்த்து வைக்கும் பணத்தின் மூலமாகவே தன்னை மணக்கும் ஆடவனுக்கு வரதட்சணை தரப்பட்டு கழுத்தில் தாலி ஏறுகிறது. சில பெண்களின் நிலையோ வரதட்சணைக் கொடுப்பதற்காக உழைத்து உழைத்து நெற்றி வகிடை சிவப்பு குங்குமம் அலங்கரிக்கும் முன் வெள்ளை முடி எட்டிப் பார்த்து விடுகிறது.

வீட்டுப் பணியாளர்கள்

அடுத்தவர்களின் வீட்டு வேலைகளைச் செய்யும் வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் 9 கோடிக்கும் மேலாகும். இதில் 20 சதவீதத்திற்கு மேலானவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர். இப்பணிப்பெண்கள் இந்தியாவின் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நடுத்தர மேட்டுக்குடி வர்க்கத்தினர் வீடுகளில் வேலை செய்கின்றனர். வேலை செய்யும் இடங்களில் வாழும் வசதியற்ற சிற்றரைகளில் வாழ்ந்து வருகின்றனர். கேரளா, டெல்லி போன்ற மாநகரங்களில் வீட்டு வேலை செய்வதற்கென்றே தமிழகத்தில் இருந்து சேலம், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பம், குழந்தைகளைப் பிரிந்து பணிப்பெண்களாக வேலை செய்கின்றனர். இப்பெண்களின் ஊதியமானது வீட்டு உரிமையாளரும் அப்பெண்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனங்களின் தரகர்களும் சுரண்டியது போக எஞ்சியதே ஊதியமாக அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பணியிடத்தில் இப்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யவும் படுகின்றனர். எந்தவித பாதுகாப்பும் உத்தரவாதமுமற்ற ஒரு வாழ்வையே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதேபோன்று வீட்டில் இருந்துகொண்டு உயர் தட்டு வர்க்க வீடுகளில் சென்னை போன்ற நகரங்களில் வேலை செய்யும் பெண்கள் அதிகாலை முதல் இரவு வரை பணி செய்ய நேரிடுகிறது. இதனால் தங்கள் குழந்தை வளர்ப்பு, கல்வி போன்றவை பாதிப்புக்குள்ளாவதோடு அவர்களின் குழந்தைகளும் பணிப்பெண் வேலைக்கே திரும்பி விடுகின்றனர். மாட மாளிகைகளில் மாடாய் உழைக்கும் இப்பெண்களின் வாழ்வானது, கூவக்கரைகளிலும் சாக்கடை பள்ளத்து குடிசைகளிலும் இறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நுண்கடன் (Micro finance) எனப்படும் உயிர்கொல்லி

இந்தியாவை புதிய காலனியக் களமாக மாற்றிய அமெரிக்க ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பல்களாலும், அதன் தாசர்களாலும் விவசாயம், தொழிற்துறை என அனைத்தும் அழிக்கப்பட்டு, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி மக்கள் சொல்லொண்ணா துயரத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான புதிய வேளாண் கொள்கை மற்றும் கார்பரேட் வேளாண் கொள்கையை அமல்படுத்தி இந்திய விவசாயத்தை அழித்துவிட்டனர். இக்கொள்கைகள் விவசாயிகளை நாடு விட்டு நாடு மாநிலம் விட்டு மாநிலம் துரத்தி விட்டது. பலரைத் தூக்குக் கயிற்றில் ஏற்றிவிட்டது. எஞ்சியிருப்போரை கிராமத்தில் வைத்தே சமாதி கட்டுகிறது. இந்திய ஆட்சியாளர்கள் அமல்படுத்திய இக்கொள்கையினால் வாழ வழியின்றி வாடி நிற்கும் வரிய மக்களிடையே பல்வேறு நிதி நிறுவனங்களால் நுண் கடன் தரப்படுகின்றன. Micro finance எனப்படும் நுண்கடன் நிறுவனங்கள் பெண்களை குழுவாக இணைத்து இக் கடன்களை கொடுக்கின்றன.

கிராம விடியல் (ஐ.டி.எப்.வி), ஈக்யூடாஸ் நிறுவனம், ஸ்மைல் மைக்ரோ பைனான்ஸ், மைக்ரோ பைனான்ஸ் உஜ்ஜிவன் நிறுவனம் என பல்வேறு நிறுவனங்கள் கடன்களை பெண்களுக்கு கொடுக்கின்றன. இவ்வாறான நிறுவனங்கள் 500க்கும் மேல் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன.

அரசு வங்கி 7 முதல் 9.65 சதவீதம் வட்டிக்கு கடன் வழங்கும் நிலையில் நுண்கடன் நிறுவனங்களை 26% வரை வட்டி வசூலித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. நடைமுறையில் 40 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

இந்திய மக்களின் வாழ்வை அழித்த அமெரிக்க ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பல்கள், இந்திய மக்களின் கடன் சந்தையை கைப்பற்றிக்கொண்டு மக்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியளவில் செயல்படும் பல்வேறு முன்னணி நுண்கடன் நிறுவனங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுடன் பல்வேறு பிணைப்புகளுடன் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களின் மேலாளர்கள் அமெரிக்க பல்கலைகழகங்களில் படித்து பட்டம் பெற்றவர்களாவர். இந்நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் ராக்பெல்லர் அறக்கட்டளை உள்ளிட்டவையே நிதி வழங்குகின்றன.

கந்து வட்டியை விட அநியாய வட்டியில் மக்களை கசக்கிப் பிழியும் இந்நுண்கடன் நிறுவனங்கள் வறுமையை ஒழிப்பதாகவும், கிராமங்களை வளரச் செய்வதாகவும், ஒளியூட்டப் போவதாகவும் பசப்பு வார்த்தைகளைக் கூறி கிராமங்களில் கடன் கொடுத்து நிரந்தரமாக கிராமங்களை இருளில் தள்ளிவிட்டது. ஒருமுறை இக்கடன்களைப் பெற்று விட்டால் பின்பு இதிலிருந்து மீளவே முடியாது. பெண்களை குழுவாக அமைத்து தரப்படும் இக்கடன்கள் குறித்த நேரத்தில் ஒரு பெண் பணம் கட்டவில்லை என்றால் மொத்த பெண்களையும் பொறுப்பாக்கி பணம் செலுத்துவோருக்கும் செலுத்த இயலாதோருக்குமான சண்டையாக உருவெடுத்து உழைக்கும் பெண்கள் தங்களுக்குள்ளாகவே மோதிக் கொள்கின்றனர். கடனை வசூலிக்கும் வரை நுண்கடன் வசூலிப்போர் இடத்தைவிட்டு நகர்வதில்லை. கிராமப்புறத்து வேலையில்லா இளைஞர்களையே இக்கடன் நிறுவனங்கள் தங்கள் அடியாட்படையாக வைத்து கடன் வசூல் செய்கின்றன. பெண்களை தரக்குறைவாக பேசுவதுடன் தவறான வழியில் சென்றாவது பணத்தை கட்டு என்று சொல்லி பெண்களின் கழுத்தை நெறிக்கின்றன இக்கடன் நிறுவனங்கள். கடனை கட்ட இயலாமல் பெண்கள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டு சாகின்றனர். இக் கடன்களை அடைப்பதற்காக பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வது அதிகரித்துள்ளது. இக்கடன் பெண்களை பலவித நிர்பந்தங்களுக்கு உள்ளாக்குகிறது. காலையில் கட்ட வேண்டிய கடனை நினைத்து நினைத்து தூக்கத்தை இழந்து தவிக்கும் பெண்களின் இரவு அவர்களின் கண்ணீருடன்தான் தினமும் விடிகிறது.

கடன் தாங்காமல் தற்கொலைக்கு முயன்று தீக்குளித்து உயிருக்குப் போராடும் பெண்ணிடம் கடனைக் கட்டச் சொல்லி மருத்துவமனைக்கு படையெடுக்கும் அளவுக்கு நுண்கடன் நிறுவனங்களின் கொடுமைகளும் நிகழ்கின்றன.

பெண்கள் மீதான மத ஒடுக்குமுறைகள்

அனைத்து மதங்களும் பிற்போக்கானவை மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரானவையுமாகும். இந்து மதமும் அதன் நால்வர்ண தத்துவமும் புராண இதிகாசங்களும் பெண்களை கீழானவர்களாகவும், ஆண்களை மேலானவர்களாகவும் போதித்து பெண்ணடிமைத்தனத்தைப் போதிக்கிறது. ஆணாதிக்கத்தை உயர்த்திப் பிடிக்கிறது. கற்பு இருபாலருக்கும் பொது என்பதை மறுக்கிறது. 'கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்' என்று ஆண் அடக்குமுறைகளை நியாயப்படுத்துகின்றது. தீட்டு, புனிதம் என்றெல்லாம் கூறி பெண் தெய்வத்தை வணங்குவதற்குகூட பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறது. மாதவிடாய் காலங்களில் பெண்களை வீட்டுக்கு வெளியே தள்ளி பெண்களின் உடலையும் உள்ளத்தையும் வதைக்கிறது. மண விவகாரங்களில் பெண்களின் நியாயமான சுயத் தேர்வையும், காதலையும் மறுத்து பெண்களின் மனித உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் பறிக்கின்றது. சீதையின் கற்பை சோதிக்க அவளை தீயில் தள்ளிய கொடுங்கோலன் ராமனின் வாரிசுகளால் இன்று நாடெங்கும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரம் பெற்றுள்ளன. 'இஸ்லாமிய பெண்களை கற்பழிப்பது இந்துக்களின் கடமை என்றும், கலவரங்களில் இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப் படவேண்டும்' என்ற சாவர்க்கரின் போதனையில் இருந்தும் பெண்கள் மீதான இந்துமதத்தின் ஒடுக்குமுறையைப் புரிந்து கொள்ளலாம். இந்துமதம் இஸ்லாமிய மதப் பெண்களுக்கு மட்டுமல்ல, இந்து மதப் பெண்களுக்கும் எதிரான பெண்ணடிமைத்தனத்தை திணித்து ஆணாதிக்கத்தை நிலை நிறுத்துவது மதமாகும்.

இராணுவத்தினால் கற்பழிக்கப்படும் பெண்கள்

காஷ்மீர், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் தேச விடுதலைப் போராட்டங்களை நசுக்க பத்து பேருக்கு ஒரு இராணுவ வீரர் வீதம் இந்திய அரசு ராணுவத்தை குவித்திருக்கிறது. இவ்விடுதலை போராட்டங்களில் பங்கெடுக்கும் பெண்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளைச் செலுத்தி இந்திய இராணுவம் அட்டூழியம் செய்கிறது. இந்திய இராணுவத்தின் அட்டூழியத்தினால் விதவையான காஷ்மீர் பெண்களின் எண்ணிக்கை 22,000, கற்பழிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 42,000. "இந்திய இராணுவமே எங்களை பலாத்காரம் செய்" என்று மணிப்பூர் பெண்கள் முன்பு நிர்வாணமாக போராட்டம் நடத்தும். அளவிற்கு வடகிழக்கு மாநிலங்களில் பெண்கள் மீதான இந்திய இராணுவப் படையின் அட்டூழியங்கள் தலைவிரித்து ஆடுகிறது.

நீதிமன்றங்களின் அநீதி

பெண்கள் அனைத்துவிதமான ஒடுக்குமுறைக்கும் ஆட்பட்டு நீதி கேட்டு சில வழக்குகள்தான் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டுக்கின்றன. ஆனால் அந்த நீதிமன்றங்களில் நீதி எவ்வாறு தரப்படுகின்றன?

-1993இல் வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணை, அப்பெண் தனக்குத்தானே காயங்களை ஏற்படுத்தி இருக்கலாம் எனக்கூறி வன்புணர்ச்சியில் ஈடுபட்ட குற்றவாளியை விடுதலை செய்தது ஒரிசா உயர் நீதிமன்றம்;

-1991இல் ஒரு வழக்கில் "உடைந்த வளையல்களும் ஜாக்கெட் பட்டன்களும் கழற்றி விடப்பட்டது வழக்கமான பொதுவான நடைமுறை தான் என்றும் வன்புணர்ச்சி நடந்ததை இவை மெய்ப்பிக்க வில்லை" என மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கூறியது.

-1991இல் ஒரு வழக்கில் "பாதிக்கப்பட்ட பெண் ஆணுறுப்பு நுழைந்தது பற்றி அழுத்தமாக ஏதும் சொல்லவில்லை. தன் மானத்தைக் கெடுத்து விட்டதாக மட்டுமே கூறியிருக்கிறார். ஆகவே இதில் குற்றமில்லை" என தீர்ப்பு கூறி மிகக் கேவலமாக நடந்து கொண்டது மத்திய பிரதேச உயர்நீதிமன்றம்.

-இதேபோல் "தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை மேல்சாதியினர் தொட்டு இருக்க மாட்டார்கள்" என்றெல்லாம் நீதிமன்றங்களில் கொடுக்கப்படும் தீர்ப்பானது எவ்வாறு பெண்கள் மீதான வக்கிர புத்தியையும், ஆணாதிக்க வெறிக் கண்ணோட்டத்தையும் நீதிமன்றங்கள் கொண்டிருக்கின்றன என்பதை அம்பலப்படுத்துகின்றன. உண்மையில் இவைகள் நீதிமன்றங்கள் அல்ல பழமைவாத பிற்போக்குத் தனங்களை கட்டிக்காக்கும் "மூடர் மடங்களே" ஆகும்.

"முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் பற்றி அலங்காரமான சொற்றொடர்களும், கம்பீரமான வார்த்தைகளும் மிதமிஞ்சிய வாக்குறுதிகளும், ஆர்ப்பாட்டமாக ஒலிக்கும் கோஷங்கள் அடங்கிய ஜனநாயகம் ஆகும். ஆனால் உண்மையில் பெண்களுக்கு சுதந்திரமும் சமத்துவமும் இல்லாது இருப்பதை உழைக்கும் சுரண்டப்படும் மக்களுக்கும் சுதந்திரமும் சமத்துவமும் இல்லாது இருப்பதை இவை மூடி மறைக்கின்றன".

அன்று தோழர் லெனின் சொன்னதை நிதர்சனமாக எவ்வாறு வெளிப்படுத்துகின்றன நமது நீதிமன்றங்கள், போலி ஜனநாயக இந்திய கட்டமைப்பு!

உண்மையில் பெண்கள் மீதான அனைத்து விதமான ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்டவும், நீதி பெற்றிடவும், பெண்ணடிமைத்தனத்திற்கு அடிப்படையான நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்பைப் பாதுகாக்கின்ற நீதிமன்றங்களில் முறையிடுவதன் மூலமோ, வேறு எந்த வழியிலேயோ நீதி பெற முடியாது. அதற்கு மாறாக பெண்கள் தங்கள் அரசியல் உணர்வுகளை வளர்த்துக் கொள்வதும், பெண் விடுதலைக்கான சமரசமற்ற நெடிய போராட்டத்தை பாட்டாளி வர்க்கத்தின் கரம்பற்றி முன்னெடுப்பதுமே பெண்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளை ஒழித்துக்கட்டி பெண் விடுதலையைச் சாத்தியப்படுத்தும்.

பெண் விடுதலைக்கு எதிரான முதலாளித்துவ பெண்ணியவாதம்

பெண் விடுதலை பெண்ணடிமைத்தனத்தை அகற்றல் என்பது பாட்டாளி வர்க்க விடுதலையின் பிரிக்க இயலாத பகுதி ஆகும். ஆனால் இன்று பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு அடிப்படையான உண்மையான காரணங்களை மறைத்துவிட்டு பாலின வேறுபாடுகளைக் காரணம்காட்டி ஆண்களையும் பெண்களையும் எதிர் நிலைப்படுத்தும் போக்குகளே தலைதூக்குகின்றன. ஆணாதிக்கத்திற்கு எதிரானப் போராட்டம் என்பதற்கு மாறாக ஆண்களுக்கு எதிரான போராட்டமாக திசை திருப்பப்படுகிறது. ஆண்கள் செய்யும் சீரழிவு பழக்கவழக்கங்களில் உரிமை கோருவது, ஆடை சுதந்திரம், பாலியல் சுதந்திரம் என்று கூறிக்கொண்டு ஏகாதிபத்திய சீரழிவு கலாச்சாரப் போக்குகளை பெண்ணிய வாத இயக்கங்கள் முன்னிறுத்துகின்றன. இது முதலாளித்துவ பெண்ணியவாதமே தவிர உழைக்கும் வர்க்கப் பெண்கள் இயக்கத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

உண்மையில் இத்தகைய இயக்கங்கள் பெண்ணடிமைத்தனத்திற்கு அடிப்படையான பொருளாதார அடிப்படைகளை மறைத்து பெண் விடுதலைக்கான பாட்டாளிவர்க்க கண்ணோட்டத்தை திசைத் திருப்பி பெண்ணடிமைத்தனத்தை தக்கவைக்கவே அரும்பாடு படுகின்றன.

இத்தகையோர் தனிச் சொத்துடைமையே பெண்ணடிமைத் தனத்திற்கான அடிப்படை என்பதை மறுத்து, தனி சொத்துடைமையை ஒழித்துக்கட்டக் கூடிய பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தின் ஊடேதான் பெண் விடுதலை சாத்தியம் என்பதை திசைத்திருப்பி, ஆணாதிக்கத்தை எதிர்த்து யோனி மையவாதம் பேசி வரைமுறையற்ற பாலுறவை முன்வைப்பதும், ஓரினச்சேர்க்கையை முன்வைப்பதும், குடும்பமே அதிகார நிறுவனம் என்று கூறி குடும்பத்தை உடைப்பதன் மூலமே பெண் விடுதலை என்று சிற்றுரு அரசியல் பேசி பின்நவீனத்துவம், கட்டுடைத்தல் என்ற கருத்தாக்கங்களை முன் வைத்து பெண்ணுரிமை என்று கூறிக்கொண்டே பெண் விடுதலைக்கு எதிரான கலைப்பு வாத அரசியலை முன்வைத்து ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்கின்றனர்.

ஆண் இரு மனைவி கட்டினால் பெண்ணும் இரு கணவன் கட்டலாம் என்றும், குடும்ப அமைப்பும் குழந்தை பெற்றுக்கொள்வதும் தான் பெண் அடிமையானதற்கு காரணம் என்றும் பெண்கள் கர்பப்பையை வெட்டியெறிய வேண்டும் என்றும் பெரியார் கூறுகிறார். பெண் அடிமைத்தனத்திற்கு தனிச் சொத்துடைமை தான் காரணம் என்ற பொருளியல் அடிப்படையை காண மறுக்கிறார். பெரியாரின் இந்த அறிவியலுக்கு எதிரான அராஜகமான கருத்துகள் தமிழகத்தின் முதலாளித்துவ பெண்ணியவாதிகளுக்கு வழிகாட்டியாக திகழ்கினறன.

நிலவுகின்ற தனியுடைமை சமூக அமைப்புக்குள்ளாகவே முற்போக்கு முகம் தாங்கிய பல்வேறு வகையினரால் பெண் விடுதலைக்கான தீர்வுகள் தேடப்படுகிறது. பெண்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவது, பெண்களுக்கான இட ஒதுக்கீடு கோருவது போன்றவற்றின் மூலமாக பெண் சமத்துவத்தை ஏற்படுத்திவிட முடியுமென வாதிடுகிறார்கள்; உண்மையில் நடிக்கிறார்கள்.

ஏனெனில் பெண்ணின் விடுதலை என்பது சொத்திற்கும் அவளுக்குமான உறவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது உற்பத்தி சாதனங்களின் உறவின் மீதான உரிமையின் அடிப்படையில் பெண்ணின் நிலை தீர்மானிக்கப்படுகிறது. எனவே பெண் விடுதலை என்பது உற்பத்தி சாதனங்கள் மீதான தனியுடைமை ஒழிக்கப்படுவதில் அடங்கியுள்ளது.

எனவே பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதன் மூலமே ஆணுக்கு இணையான சமத்துவத்தை பெறமுடியும் என்கிற வாதமெல்லாம் முதலாளித்துவத்தின் குரல்களே ஆகும். ஆம்! உண்மையில் அவர்களுக்கு பெண்களின் மலிவான கூலி உழைப்பு தேவை.

மார்க்ஸ் கூறுகிறார்:

"உடல் வலிமைக்கு மாற்றாக தரும் இயந்திரங்களைப் பொறுத்தவரை அவை குறைவான உடல் வலு கொண்ட உழைப்பாளிகளை பணியமர்த்துவது, முழுமையான உடல் வளர்ச்சியடையாத பிஞ்சு கை கால்களை உடையவர்களை பணியமர்த்துவதற்கான ஒரு வழியேயாகும். எனவேதான் எந்திரங்களை உபயோகிக்கும் முதலாளித்துவவாதிகள் முதல் அழைப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளின் உழைப்பிற்கானதாகவே இருந்தது".

மேலும் பெண்களின் இயல்பான கபடமற்ற இனிமையான தன்மைகளை முதலாளிகள் தங்கள் சுரண்டலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதை எடுத்துரைக்கும் மார்க்ஸ், அப்பண்புகள் அவர்களுக்கு எதிரான சித்திரவதைக்கும், அடிமைப்படுத்தலுக்குமான ஆயுதங்களாக மாறின என்றும் கூறுகிறார்.

இத்தகைய சமத்துவத்தைத் தான் நமது பெண்ணுரிமைப் போராளிகள் தீர்வாக வைக்கின்றனர்; அவர்களுக்கு இதுதான் பெண்ணுரிமை!

முதலாளித்துவம் பெண்களை உற்பத்தியில் இணைத்துக் கொள்வதன் மூலம் ஒருபுறம் சுரண்டலை அதிகரித்துக் கொள்கிறது. ஆனால் மறுபுறமோ பெண்கள் போராடி தமது உரிமைகளைக் கோருவதற்கான பொருளியல் அடிப்படையையும் இந்த செயல்பாடு ஏற்படுத்தி தருகிறது. எவ்வாறாயினும் ஏங்கல்ஸ் கூறுவது போல பெண்களின் மீதான அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான போராட்டத்தின் ஆரம்பப் புள்ளிதான் அது.

பெண் அடிமைத்தனத்திற்கான பொருளியல் அடிப்படையும் மார்க்சிய தீர்வும்

பெண் அடிமைபடுத்தப் பட்டதற்கான பொருளியல் காரணங்களையும் அப்பொருளியல் அடிப்படை மறைந்து எப்போது பெண் விடுதலை சாதிக்கப்பட்டு ஆண், பெண் சமத்துவம் நிலைநிறுத்தப்படும் என்பதை தோழர் ஏங்கெல்ஸ் தீர்க்கமாக பின்வருமாறு கூறுகிறார்:

மனித குல வளர்ச்சியின் மூன்று முக்கிய கட்டங்களுடன் பொதுவாகவும் மொத்தமாகவும் பொருந்துகின்ற மூன்று முக்கிய மண வடிவங்கள் உள்ளன.

காட்டுமிராண்டி நிலை - குழு மணம்

அநாகரீக நிலை - இணை மணம்

நாகரீக நிலை - ஒருதார மணம்

சட்ட ரீதியிலும் சமுதாய ரீதியிலும் பெண்களுக்கு கொடிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய அதே குற்றம் ஆண்களுக்கு பொருத்த மட்டில் கௌரவமாக கருதப்படுகிறது.

அதிகமாக போனால் அவளுடைய ஒழுக்கத்திற்கு அது அற்பமான கறை அதை அவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறான்.

செல்வம் பெருகிய போது அது ஒரு பக்கத்தில் குடும்பத்தில் பெண்ணைவிட ஆணுக்கு முக்கிய அந்தஸ்தை கொடுத்தது. ஆகவே தாயுரிமை தூக்கி எறிய வேண்டியதாயிற்று.

ஒருதார மண முறையில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பகைமை வளர்வதுடன் பொருந்துகிறது.

முதல் வர்க்க ஒடுக்குமுறை ஆண்பால், பெண்பாலை ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையுடன் பொருந்துகிறது.

ஒருதார மணமுறை வரலாற்று ரீதியில் ஒரு மகத்தான முன்னேற்றம் ஆகும். அதே சமயம் அது அடிமை முறையுடனும் தனிச்சொத்துடனும் சேர்ந்தார் போலவே இன்றளவும் நீடிக்கிற ஒரு யுகத்தை துவக்கியது.

அதில் ஒரு குழுவின் துன்பத்தையும் ஒடுக்கப்படுதலையும் ஆதாரமாகக் கொண்டு மற்றொரு குழு நல்வாழ்க்கையும் வளர்ச்சியும் அடைகிறது, அது நாகரீக சமுதாயத்தின் உயிரணு வடிவமாகும்.

பொதுச் சொத்தைக் காட்டிலும் தனிச் சொத்து மேலோங்கிய பொழுது வாரிசுரிமையில் அக்கறை ஏற்பட்டதுடன் தந்தையுரிமையும் ஒருதார மணமும் மேல்நிலைக்கு வந்துவிட்டன.

எனவே பெண் இனம் அடிமை முறையிலிருந்து விடுதலை பெற பெண் இனம் முழுவதையும் சமூக உற்பத்தியில் மீண்டும் புகுத்துவதுதான் பெண் விடுதலைக்குரிய முதல் நிபந்தனையாகும்.

முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு வந்துகொண்டிருக்கிற அழிவுக்குப் பிறகு பால் உறவுகளை ஒழுங்குபடுத்துவதைப் பற்றி நாம் ஊக்கமாகச் சொல்லக் கூடியது.

உற்பத்திச் சாதனங்களைப் பொதுவுடமையாக்கும் பொழுது கூலி உழைப்பும், பாட்டாளி வர்க்கமும் மறைந்து விடுகின்றன. பெண்கள் பணத்திற்காக தம்மை விற்க வேண்டிய அவசியமும் மறைந்து விடுகிறது, விபச்சாரமும் மறைந்துவிடுகிறது. ஒருதார மணமும் நலிந்து போவதற்கு பதிலாக முடிவில் ஆணுக்கும் சேர்த்து எதார்த்தமாகிறது.

ஏங்கெல்ஸ் மேற்கண்டவாறு தீர்க்கமாக கூறுகிறார்.

ஆனால் ஒருதார மணமுறையும், குடும்பமே அதிகார நிறுவனம் என்றும், குடும்பத்தை உடைப்பதே பெண் விடுதலை என்றும் பேசி புதிய இடதுகள் மார்க்சியத்தை திரிக்கின்றனர், மறுக்கின்றனர். ஒருதார மணமுறை வரலாற்று ரீதியில் மகத்தான முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது பண்பாட்டு ரீதியாக முற்போக்கு அம்சம் கொண்டதாகும். பொருளாதார ரீதியாக அடிமைத் தனத்தையும் தனியுடமையையும் அது கொண்டிருக்கிறது, அந்த அடிப்படை சமூகப் புரட்சியின் மூலம் தகர்க்கப்பட வேண்டும். மாறாக ஒருதார மணமுறையே தகர்க்கப்பட வேண்டும் என்பது பெண் விடுதலைக்கு நேரெதிரான பிற்போக்கு ஏகாதிபத்திய கலாச்சார வாதமே ஆகும்.

மேற்காண் பெண் விடுதலைக்கு எதிரான சீரழிவுப் போக்குகளை எதிர்த்து நின்று பெண் விடுதலையின் திறவுகோலான பாட்டாளிவர்க்க விடுதலைக்கு பெண்கள் இயக்கம் தோளோடு தோள் நிற்க வேண்டும்.

"பாட்டாளி வர்க்கப் பெண்விடுதலை இயக்கமானது முதலாளித்துவப் பெண்கள் இயக்கத்தைப் போன்று அவர்களுடைய சொந்த வர்க்கத்தை சார்ந்த ஆண்களுக்கு எதிராகப் போராடும் இயக்கமாக இருக்க முடியாது. அதனுடைய போராட்டத்தின் இறுதி லட்சியம் அனைத்து ஆண்களுக்கு எதிரான சுதந்திரமான போட்டி அல்ல. மாறாக உழைக்கும் வர்க்க பெண்கள் தமது சொந்த வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து இணைந்து நின்று முதலாளித்துவப் பிற்போக்கு சமுதாயத்தை எதிர்த்துப் போராட வேண்டும்" என்ற தோழர் கிளாரா ஜெட்கினின் வழிகாட்டல் பெண்கள் இயக்கத்திற்கு மிக முக்கியத்துவம் உடையதாகும்.

வரலாற்றில் உபரியின் தோற்றம் தனி சொத்துடைமையை பிரசவித்தது. இக் காரணங்களின் அடிப்படையில் இருந்துதான் தாய் வழிச் சமூக அமைப்பு தகர்த்தெறியப் பட்டு அதனிடத்தில் தந்தைவழிச் சமூக தனியுடைமை அமைப்பு நிலைபெற்றது. ஒரு நபரின் கையில் - ஒரு ஆணின் கையில் கணிசமான அளவுக்கு செல்வம் குவிந்ததிலிருந்துதான் இந்த செல்வத்தை பிற குழந்தைகளுக்கு அல்லாமல் தன் சொந்தக் குழந்தைகளுக்கு விட்டுச்செல்ல வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்துதான் ஒருதார மணம் தோன்றியது. இந்த நோக்கத்திற்காக பெண் ஒருதார மணத்தில் இருப்பது அவசியம். இந்தப் பொருளாதார அடிப்படை தான் பெண் மீது ஆண் ஆதிக்கம் செலுத்துவதற்கான அடிப்படையாகும். இந்த பொருளாதாரக் காரணங்கள் மறையும்போது தான் பெண்ணடிமைத்தனம் மறைந்து பெண்விடுதலை சாத்தியமாகும். தெளிவுபடப் கூறவேண்டுமானால் உற்பத்திச் சாதனங்களை சமுதாய சொத்தாக்கப் போராடும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்ட லட்சியங்கள் வெற்றி அடைவதன் மூலமாகத் தான் பெண்கள் விடுதலை அடைய முடியும். ஆகவேதான் பெண் விடுதலை என்பது பாட்டாளி வர்க்க விடுதலையின் பிரிக்க இயலாத பகுதி என மார்க்சியம் போதிக்கிறது.

பெண்ணடிமை ஒழிப்பதற்கான போராட்டத்தை மிக நீண்டதாக ஆனால் வெற்றி வாய்ப்புள்ளதாக மார்க்சியம் கருதுகிறது.

"சமூக நுட்பங்களும், பழக்கவழக்கங்களும் முற்போக்கான மாற்றத்திற்கு உட்பட வேண்டிய நீண்டதொரு போராட்டத்தை உள்ளடக்கியது. ஆனால் இந்தப் போராட்டம் கம்யூனிசத்தின் முழுமையான வெற்றியுடன் தான் சாத்தியமாகும்" என லெனின் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தில் ஆற்றிய உரையில் சாதிக்கப் படக்கூடிய பெண் விடுதலையின் நெடியப் போராட்டத்தைக் காண்பிக்கிறார்.

"சமூகம் முழுமையும் சோசலிசத்திற்கு மாறும் போதுதான் உண்மையான ஆண் பெண் சமத்துவத்தை அடைய முடியும்" என தோழர் மாவோ கூறுகிறார்.

மேற்கூறிய ஆசான்களின் கூற்றுகள் பாட்டாளி வர்க்க விடுதலையும், பெண் விடுதலையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதது என்பதை தெளிவாக்குகின்றன. ரஷ்ய-சீன புரட்சிகள் பெண்களுக்கான சொத்துரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வென்றெடுத்துக் கொடுத்தது. தனிப்பட்ட வீட்டு நிர்வாகம் சமுதாயத் தொழிலாக மாற்றப்பட்டு குழந்தை பராமரிப்பு, கல்வி முதலியவை பொது விவகாரம் ஆக்கப்பட்டு வீட்டு சிறைகளிலிருந்து பெண்கள் விடுவிக்கப்பட்டு சமூக உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இன்று இந்தியா மட்டுமல்ல உலக முழுவதும் பெண்களின் மீதான ஒடுக்கு முறைகள் தீவிரம் பெற்று வருகின்றன. ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல்களின் மறுபங்கீட்டுப் போட்டி தீவிரமடைந்து உலகெங்கிலும் பாசிசம் தலைவிரித்தாடுகிறது. இந்தியாவில் இந்துத்துவப் பாசிசம் மிகக் கோரமான நரவேட்டையாடிக் கொண்டிருக்கிறது. அது பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளைத் தீவிரப்படுத்தி வருவதோடு பெண்களை கற்பழிப்பதை ஒரு அரசியல் கருவியாகவே பயன்படுத்துகிறது. உரிமைக்காகப் போராடும் பெண்கள் மீது மிகக் கொடுமையான அடக்கு முறைகளை ஏவி வருகிறது. அமெரிக்க ஏகபோக நிதி மூலதன நலன்களிலிருந்து கட்டியமைக்கப்படும் இந்துத்துவப் பாசிசத்தை எதிர்த்து பாசிசத்தால் ஒடுக்கப்படும் வர்க்கங்களுடனும் குழுக்களுடனும் ஒன்றிணைந்து பாசிசத்தை வீழ்த்துவதற்கு பெண்கள் அரசியல் உணர்வு பெற்று களத்திற்கு வந்து சமர் புரிய வேண்டிய மிக அவசியமான தருணம் இதுவாகும்.

மேலும் பாசிசத்தை ஏவுகின்ற ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவ, நிலவுடைமை அரசு கட்டமைப்பைத் தகர்தெரிந்து புதிய ஜனநாயகப் புரட்சி படைப்பதும், சோசலிசத்தை கட்டியமைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தின் வழியிலே பெண் அடிமைத் தனத்திற்கு அடிப்படையாய் இருக்கின்ற தனியுடைமையை ஒழித்துக் கட்டும் நெடிய நிகழ்ச்சிப் போக்கின் மூலமாக, பெண்கள் தங்கள் விடுதலையை சாதித்துக் கொள்ள பாட்டாளி வர்க்கப் போராட்டத்தோடு தோளோடு தோள் நிற்க கிளர்ந்தெழ வேண்டும். இதுவே உழைக்கும் பெண்கள் இயக்கத்தின் கடமையாகும்.

பெண் விடுதலையின் திறவுகோலான பாட்டாளி வர்க்கத்தின் பலாத்காரப் புரட்சியின் மூலமாகத் தான் பெண் விடுதலை சாத்தியமே ஓழிய வேறு எந்த அமைதி வழியிலோ, நிலவுகின்ற அரசமைப்பிற்குள்ளேயே பெண் விடுதலைக்கான தீர்வைத் தேடுவது சுத்தக் கயமைத்தனம் மட்டுமல்ல, பெண் விடுதலைப் போராட்டத்தை திசைத் திருப்புவதுமே ஆகும். எனவே உழைக்கும் பெண்கள் தங்கள் விடுதலையை வென்றெடுக்க பாட்டாளி வர்க்க அரசியல் உணர்வை பெருவதும் பாட்டாளி வர்க்க இயக்கம் அத்தகைய உணர்வை ஊட்டுவதும் மிக முக்கியமானது. பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளை தன் கடமையாக்கிக் கொண்டு புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பது ஒன்றே பெண் விடுதலைக்கான ஒரே வழியாகும்.

சமரன். மார்ச் 2020 மாத இதழ்