மாபெரும் வெற்றியும், இழிவான தோல்வியும் ஏன்? எதனால்?
அறம் இணைய இதழ்
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதற்கான காரணங்களை வரிசைப் படுத்தினாலே, எதிர்கட்சிகள் ஏன் தோல்வி அடைந்ததன என்பதற்கான விடை தெரிந்து விடுகிறது. இந்த தோல்வியை தவிர்ப்பதற்கான பல வாய்ப்புகளை இந்தியா கூட்டணி ஏன் அலட்சியப்படுத்தியது என்பது புதிராகும்; விரிவாக பார்ப்போம்;
மகாராஷ்டிரா என்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரதிபலிக்கும் ஒரு மாநிலமாகும். அந்த அளவுக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை அங்கு உள்ளது. மேலும் இது இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்பதால் இங்கு இது ஒரு பவர் சென்டராகவும் உள்ளதால், இங்கு எந்த மாதிரியான அரசியல் வெற்றி பெறுகிறது என்பது முக்கியமாகிறது.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டப் பேரவைத் தொகுதிகளில், ஆளும் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளை வென்றுள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி 50 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது.
தேர்தலில் கட்சிகள் நின்ற இடங்களையும் வென்ற இடங்களையும் பார்க்கும் போது, இந்த தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளதை உணர முடியும். மும்பையில் உள்ள என் பத்திரிகையாள நண்பர்களோடு பேசுகையில், பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற மைண்ட் செட்டப் பொதுத் தளத்தில் வலுவாக இருந்ததாகத் தெரிவித்தனர். காரணம், எதிர்கட்சிகளின் தேர்தல் வேலைகளே அவற்றை உணரச் செய்தன…என்றனர். காங்கிரஸ்-உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசிய வாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளிடையே ஒன்றிணைந்த செயல்பாடுகள் வலுவாக முன்னெடுக்கபடவில்லை.
அதே சமயம் ஆளும் கட்சிகளிடையே ஒன்றிணைந்த செயல்பாடுகள் மிக இணக்கமாக, கச்சிதமாக இருந்துள்ளது. அங்குமிங்கும் சில சலசலப்புகள் இருந்தாலும், அவை விரைந்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், எதிர்கட்சிகளிடம் அந்த நிலை இல்லை. காரணம், சரத்பவார் மிகவும் தளர்ந்து விட்டார். அந்தக் கட்சியின் எதிர்காலமாக நீண்ட நெடுங்காலமாக அடையாளப்படுத்தப்பட்ட அஜித்பவார் கட்சியை பிளந்து, தனிக் கட்சி கண்டு துடிப்புடன் இயங்கினார். என்.சி.பி.சி கட்சிக்குள் அந்த குடும்பத்தை தவிர்த்து வேறு தலைவர் யாரும் தலை எடுக்க முடியாத நிலைமை பலகாலமாக இருந்தது. அங்கே அஜித்பவார் மகளை விட்டால் மக்களை ஈர்க்கும் தலைவர் இல்லை. ஆகவே, அந்தக் கட்சிக்கே எதிர்காலம் இல்லை என்பதாகிவிட்டது.
சிவசேனை அடிப்படையில் பாஜகவை ஒத்த இந்துத்துவ சிந்தனை உள்ள கட்சி. ஆகவே, அந்த தன்மைக்கான வாக்காளர்களை மட்டுமே தன் வாக்கு வங்கியாக வைத்திருந்த கட்சியாகும். அது மதச்சார்பற்ற புதிய சாயத்தை பூசி தோற்றம் காட்டுவதை அந்தக் கட்சியின் நீண்ட நாள் வாக்காளர்கள் நிராகரித்து விட்டனர். அங்கும் வாரிசு அரசியல் மேலோங்கி வேறு தலைவர்கள் யாரும் தலை எடுக்க முடியாது எனும் போது, ஏக்நாத் ஷிண்டே கட்சியில் அந்த வாய்ப்பை பெற முடியும் என கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் முடிவு செய்துள்ளனர். தனக்கு கிடைத்த முதல்வர் வாய்ப்பை ஷிண்டே மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு கட்சியை வளர்த்து மக்கள் நம்பிக்கையையும் வென்றேடுத்துவிட்டார்.
இறுதியாக காங்கிரஸ் கட்சி தான் இந்த மாபெரும் பின்னடைவின் பிதாமகன் எனலாம். ஒரு காலத்தில் மகாராஷ்டிராவும், அதன் தலைநகர் மும்பையும் காங்கிரசின் கோட்டையாக இருந்தது. ஆனால், டெல்லி தலைமை மாநிலத்தில் மக்கள் செல்வாக்கு இல்லாத தனக்கு தலையாட்டும் தலைவர்களை அங்கு திணிப்பதன் மூலம் அந்த செல்வாக்கை படிப்படியாக இழந்தது. தற்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் திக்கித் திணறி வெறும் 208 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வென்றுள்ளார் என்பதை கவனிக்க வேண்டும்.
சமீபத்திய நாடளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 14 மக்களவை தொகுதிகளை மக்கள் தந்திருந்தனர். அந்த எம்.பிக்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் சரியாக வேலைக செய்யவில்லை. அதே போல ஏற்கனவே சட்டசபையில் கணிசமான இடங்களை பெற்று இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மக்களிடையே எந்த அளவுக்கு நற்பெயர் வாங்கியுள்ளனர் என்பதற்கும் இந்த தேர்தல் விடை சொல்லி உள்ளது.
மேலும் மகாயுதி கூட்டணியின் பெரும் பலம் ஆர்.எஸ்.எஸ் தான். அவர்கள் திட்டமிட்டு சிஸ்டமேட்டிக்காக பிரச்சாரங்களை மட்டுமின்றி வீடுவீடாகப் வாக்கு சேகரித்தனர். கங்கிரஸ் கட்சிக்குள் இது போல மதச் சார்பற்ற மற்றும் காந்திய-சோசலிச கருத்தாக்கத்தை வலுப்படுத்தி மக்களிடையே செயல்படும் அமைப்பு இல்லை என்பதை நாம் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறோம்.
எந்த ஒரு கட்சியானாலும் அதற்கு கொள்கைகளும், சித்தாந்த பின்புலமும் பலமாக இருந்தால் தான் அந்த கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும். சரியோ, தவறோ அது பாஜகவிடம் உள்ளது. அந்த பின்புலத்தில் தான் அதற்கு ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், இந்து அமைப்புகள் ஆதரவு உறுதியாக உள்ளது. அவர்களின் கள வேலைகளை குறைத்து மதிப்பிட முடியாது.
அடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்திற்காக பத்து இடங்களில் பேசினார். அமித்ஷா 16 இடங்களில் பேசினார். ஆனால், ராகுல் காந்தியோ மூன்று இடங்களில் மட்டுமே பேசியுள்ளார். வயநாடு தொகுதி என்ற ஒற்றை தொகுதியில் தன் தங்கை வெற்றிக்காக மூன்று நாட்கள் செலவிட்டது போல மகாராஷ்டிராவிலும் மூன்று நாட்கள் செலவிட முடிந்திருந்தால் இன்னும் சில தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கும். அத்துடன் காங்கிரஸ் பிரச்சாரத்தில் உள்ள பலவீனங்களைக் கண்டறிந்து களைந்திருக்கலாம்.
தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே என்பவர் மக்களை வசீகரிக்கும் தலைவர் அல்ல. குறைந்தபட்சம் சிறந்த நிர்வாகியும் அல்ல. அவர் சிறந்த நிர்வாகியாக இருந்திருந்தால், தன் சமூகத்தை சேர்ந்த அம்பேத்காரின் வாரிசு பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வி.பி.ஏ கட்சியையும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியையும் காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டு வந்து தலித் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் அள்ளியிருக்கும் வாய்ப்பை நழுவவிட்டிருக்க மாட்டார்.
மகாராஷ்டிராவில் உள்ள தலித்களின் வாக்குகளும் முஸ்லீம்களின் வாக்குகளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு கணிசமாக கிடைத்தால் ஒழிய அந்த கூட்டணிக்கு இவ்வளவு பெரிய வெற்றி சாத்தியமே இல்லை. தங்களுக்கான வாக்காளர்களிடமே காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஷ் அகாடியால் நம்பிக்கையை வென்றெடுக்க முடியவில்லை என்பது தான் தேர்தல் முடிவுகள்; சொல்லும் செய்தியாகும்.
மகாயுதி கூட்டணியின் தற்போதைய அரசு மகளிருக்கு மாதாமாதம் ரூ1,500 தந்து வருவதும், அதை தேர்தல் வெற்றிக்கு பிறகு 2,100 ஆக்குவேன் என்றதும் பெண்கள் வாக்குகளை கணிசமாக வெல்ல உதவியதாக சொல்லப்படுகிறது. இந்த மாதிரியாக அரசு கஜானாவை தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்தும் ஆரோக்கியமற்ற அணுகுமுறைக்கு சட்ட ரீதியாக முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.
கடைசியாக நாம் கவனிக்க தவறிய விஷயம் என்னவென்றால், அரசின் நிர்வாக அமைப்புகள், காவல்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவை மகாயுதி கூட்டணிக்கு சார்பாக இயங்கியதை தடுக்கவோ, அம்பலப்படுத்தவோ, மாற்றி அமைக்கவோ எதிர்கட்சிகளுக்கு பலம் இல்லை, துணிச்சல் இல்லை என்பதை விட, அதற்கான சிறு முனைப்பு கூட இவர்களிடம் இல்லை என்பதேயாகும்.
(சாவித்திரி கண்ணன்)
- அறம் இணைய இதழ்
https://aramonline.in/19939/maharshtra-election-bjp-cong/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு