தனியார் சுற்றுலா நிறுவன லாபவேட்கையே தீ விபத்து!

அறம் இணைய இதழ்

தனியார் சுற்றுலா நிறுவன லாபவேட்கையே தீ விபத்து!

ரயில்வே துறையில் தனியார் டூரிஸ்ட் நிறுவனங்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறப்பதன் விளைவே மதுரையில் நடந்த ரயில் தீ விபத்தாகும். தனியார் டூரிஸ்ட் நிறுவனங்கள் ஒரு ‘பேரலல் ரயில்வே நிர்வாகத்தை’ நடத்துமளவுக்கு அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதை இந்த விபத்து வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது..!

மதுரையில் நடந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் பொய்யான தகவல்களை சொல்கின்றனர். மதுரை ரயிலில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் அந்த கம்பார்ட்மென்ட்டின் ஒரு கழிப்பறை முழுவதும் சமையல் பாத்திரங்களை வைத்திருந்தனர். பெரிய பெரிய டபராக்கள், கரண்டிகள், தட்டுகள், பெரிய பெரிய அண்டாக்கள் என இருந்துள்ளன! அத்துடன் கோதுமை மாவு, அரிசி மூட்டைகள், மளிகை சாமன்கள், சமையல் எண்ணெய் டின்கள், காய்கறிகளோடு மூன்று கேஸ் சிலிண்டர்களுமாக ஒரு கேட்டரிங்கிற்கு தேவையான அனைத்தும் இருந்துள்ளன!

ரயிலில் மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களைக் கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றம். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பட்டாசு, கேஸ் சிலிண்டர், கன் பவுடர் போன்ற தீப்பற்றக்கூடிய பொருட்களோடு ரயிலில் பயணம் செய்யக்கூடாது என்பதெல்லாம் சாதாரண பயணிகளுக்கு மட்டும் தான் போலும்.

இவை அனைத்தையும் ரயில் பெட்டிகளில் ஏற்றும் வரை அதிகாரிகளோ, ரயில்வே ஊழியர்களோ பார்த்திருக்கமாட்டார்களா என்ன? இவ்வளவு சமையல் தினசரி மூன்று வேளைகளும் நடந்துள்ளன! தேனீர் தயாரிப்பும் அவ்வப்போது நிகழ்ந்துள்ளது எனில், என்ன தான் செய்கிறது ரயில்வே துறை என்ற கேள்வி நமக்கு எழும் அல்லவா..?

உண்மை என்னவென்றால், இது போன்ற சுற்றுலா பயணிகளுக்காக பயணத்தை டூரிஸ்ட் நிறுவனங்கள் ஒரு பெட்டி முழுவதையும் முன்பதிவு செய்து கொண்டு, தங்கள் நிறுவனம் சார்பில் நான்கைந்து சமையல்கார்கள் மற்றும் சப்ளையர்களையும் அந்த கோச்சில் பயணிக்க வைக்கிறார்கள். பத்து நாள் அல்லது இருபது நாள் டூர் என்றால், அதற்கேற்ப சமையல் அயிட்டங்களை ஏற்றிக் கொண்டு தான் இவர்கள் வண்டியே ஏறுகிறார்கள்! இதற்கு தோதாக ரயில்வே நிர்வாகம் ரயில்வே ஸ்டேசனில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர்  அல்லது ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அந்தக் குறிப்பிட்ட பெட்டியை மட்டும் நிறுத்தி, சமையல் தொடர்பான பொருட்களை ஒரு சில மணி நேரத்திற்கு முன்பே ஏற்றிக் கொள்ள அனுமதிக்கிறார்கள்!

இந்தக் குறிப்பிட்ட பெட்டி ஒரு ரயில்வே ஸ்டேசன் சென்றவுடன் கழட்டி விடப்பட்டு ஸ்டேசனில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளி நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்படுவதால் ரயில் பெட்டிகளிலேயே குளிப்பது உடை மாற்றுவது உள்ளிட்ட வேலைகளை டூரிஸ்ட் பயணிகள் முடித்துக் கொள்கின்றனர். அந்த நேரம் அனைவருக்குமான சமையல் பணிகளை ரயில் பெட்டியில் உள்ள அடுப்பை கீழே இறக்கி வைத்து சமைப்பார்களாம். தேனீர் மாதிரியான சின்ன சமையல் அயிட்டங்களை பெட்டியிலேயே செய்துவிடுவார்களாம்.

ஆனால், மதுரை ரயில் தீ விபத்து செய்தியாளரிடம் பேசிய தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர் என் சிங் “இந்த விபத்து ஒரு சோகமான நிகழ்வு. லக்னௌ ரயில் நிலையத்தில் பரிசோதனைக்கு பிறகு ரயில் பயணிகள் ரயில் பெட்டியில் ஏற்றி அவரது யாத்திரை பயணத்தை துவங்கியுள்ளனர். சட்டவிரோதமாக சுற்றுலா நிறுவனத்தார் சிலிண்டர், அடுப்புகள், விறகுகளையும் ஏற்றி இருக்கலாம். இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டப்படியும், ரயில்வே சட்டப்படியும் விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.’’ என்கிறார்.

“ரயில் விபத்து குறித்து அந்தக் குறிப்பிட்ட பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் ஊடகங்களிடம் பேசும் பொழுது, ”பாசின் டூர் & டிராவல் நிறுவனத்தில் ரூ.21,700 பணம் செலுத்தி சுற்றுலாவிற்கு வந்தோம். சுற்றுலா பயணிகள் யாரும் சிலிண்டர் போன்ற உபயோக பொருள்களை எடுத்து வரவில்லை. டிராவல்ஸ் நிறுவனத்திலிருந்து 5 முதல் 7 பேர் சமையலுக்காக இந்த ரயில் பயணத்தில் பயணித்தனர். அவர்களே ரயில் நிலையத்தின் வெளிப்புறத்தில் சமைத்து எங்களுக்கு தந்து வந்தனர். இன்று காலை ரயிலின் உள்ளே தேனீர் தயாரித்த போது விபத்து ஏற்பட்டது”, என்று கூறியது கவனத்திற்கு உரியதாகும்.

எரிந்த பெட்டிக்குள் கிடந்த எண்ணெய் டின்!

‘ஆன்மீக சுற்றுப் பயணங்களை ஊக்குவிக்க வேண்டும்’ என்பதற்காகவும், ‘இதற்கான தனியார் டுரிஸ்ட் நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு ரயில்வே ஒத்துழைப்பு நல்க வேண்டும்’ என்பதற்காகவும் இந்த ஏற்பாடுகளுக்கு ரயில்வே நிர்வாகம் ஒத்துழைப்பு தர மத்திய பாஜக அரசால் நிர்பந்திக்கப்படுகிறது ரயில்வே. இதனால், இவர்கள் பயணம் செய்யும் பெட்டிக்கு அதிகாரிகள் இன்ஸ்பெக்‌ஷன் செல்வதில்லையாம்! தனியார் டூரிஸ்ட் நிறுவனங்களும் அந்தந்த ரயில்வே ஸ்டேசன் வந்தவுடன் அந்தந்த ஸ்டேசனின் ரயிலே அதிகாரிக்கு மாமுல் கொடுப்பதும் வழக்கமான நடைமுறையாகவே உள்ளது. இவர்கள் எந்த ஊரிலும் லாட்ஜோ, ஹோட்டலோ எடுத்து குளித்து உடை மாற்றுவதில்லை. ரயில் பெட்டிகளிலேயே அனைத்தையும் முடித்துக் கொள்கின்றனர்.

உதாரணத்திற்கு இவர்கள் ஒரு ஊரின் ரயில்வே ஸ்டேசனுக்கு நள்ளிரவு செல்கிறார்கள் என்றால், அந்தக் குறிப்பிட்ட பெட்டியை மட்டும் கழற்றி, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்டிரீம்லிங்க் லைன் எனப்படும் பெட்டிகளை நிறுத்தி வைக்கும் தண்டவாளத்தில் நிறுத்த அனுமதிப்பார்கள். அதிகாலை வேறு ஒரு ரயில் ஸ்டேசனுக்கு வரும் போது, அந்த ரயிலோடு இந்தப் பெட்டியை இணைத்துவிடுகிறார்கள். இப்படி போடப்படுகிற திட்டப்படி வெவ்வேறு ரயில்களில் இவர்கள் பயணம் செய்தாலும் பெட்டி மட்டும் மாறாது. எந்த ரயில்வே ஸ்டேசனிலும் இவர்கள் பெட்டியில் மட்டும் செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் போய் ஆய்வு செய்வதில்லை. அவர்களுக்கு அந்த டூரிஸ்ட் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஒரு சல்யூட் வைத்து, தர வேண்டியதை தந்து விடுவார்கள்! ஆக, 20 நாட்கள் டூர் என்றால், அந்தப் பெட்டியே லாட்ஜாக மட்டுமின்றி, சாப்பாடு, டிபன், காபி, தேனீர் அனைத்தும் அவரவர் இருக்கை தேடி வந்து தரும் இடமாகிறது.

இத்தகைய சுற்றுலாவை ஐ.ஆர்.சி.டி.சி மூலம் பல்க் டிக்கெட் முன்பதிவின் வழி வருகிறார்கள்! எனக்குத் தெரிந்து 20 ஆண்டுகளாக இந்த நடைமுறைகள் உள்ளன. இந்த ஏற்பாடு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.  தட்சிண ரயில்வே எம்பிளாயிஸ் யூனியன் தொழிற்சங்க தலைவர், தோழர்.  த.இளங்கோவன், (DREU) அவர்களிடம் பேசும் போது ஒரு அதிர்ச்சித் தகவல் சொன்னார். கோத்ராவில் ரயில் தீப் பற்றி எரிந்து அதனால் குஜராத்தில் ஒரு மாபெரும் கலவரமும் இஸ்லாமியப் படுகொலைகளும் நடந்தது அல்லவா? அந்த ரயில் தீப்பிடித்து எரிந்ததற்கு அந்த ரயிலின் இதே போன்ற சுற்றுலா கோஷ்டிக்கு தேனீர் தயாரிப்பின் போது தான் நிகழ்ந்தது. இந்த உண்மை வர்மா கமிஷனிலும் பேசபப்ட்டது என்றார்.

நல்ல வேளையாக இந்த விபத்து பாஜக ஆளும் மாநிலங்களில் நிகழாமல் அமைதி பூங்காவான தமிழகத்தில் நடந்ததே என நிம்மதி அடைவோம். இல்லையென்றால், இதைக் கொண்டும் கலவரம், படுகொலைகளை அரங்கேற்றி இருப்பார்களோ..என்னவோ!

இந்த ரயில் தீ விபத்து தொடர்பாக நாம் கற்க வேண்டிய படிப்பினை என்னவென்றால், தனியார் சுற்றுலா நிறுவனங்களின் லாபவேட்டைக்கு அரசு துணை போகக் கூடாது. பல்க் புக்கிங் செய்து வரும் பயனிகளும், ரயில்பெட்டியும் மற்ற பயணிகளை போலவும், மற்ற ரயில் பெட்டிகளை போலவும் தான் இருக்க வேண்டும். ஆனால், தனியார் நிறுவனங்களை வளர்த்தெடுப்பதையே தன் தாரக மந்திரமாகக் கொண்டுள்ள பாஜக அரசுக்கு நம் குரல் கேட்காது.

தற்போதும் கூட, தேசிய ரயில் திட்டம் என்பதை பாஜக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி  2031  க்குள் அனைத்து சரக்கு போக்குவரத்தையும், இலாபம் தரும் பயணிகள் போக்குவரத்தையும் தனியாருக்கு கொடுப்பது என்று கூறியிருக்கிறது.   ‘வந்தே பாரத்’ என்று பெயர் சொல்லி நானூறு ரயில்களை தனியாருக்கு கொடுக்க இருக்கிறார்கள்.  இது தனியாருக்கு கொள்ளை லாபத்தையும் ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பின்மையையும் தான் ஏற்படுத்தும் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்தி வைப்போம்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/14779/rail-flaming-in-madurai/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு