அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தத்தின் சவால்கள்

தமிழில்: விஜயன்

அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தத்தின் சவால்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் உலக நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குச் சமஅளவு வரிகளை விதிப்பதாக அறிவித்திருப்பது, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களும், தங்குதடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களும் நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மையை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து மீண்டும் ஒருமுறை கூர்ந்து சிந்திக்க அனைத்து நாடுகளையும் தூண்டியுள்ளது. தமது பொருளாதார நலனைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்தியா, குறிப்பாக மேற்கத்திய நாடுகளுடன், பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்படக்கூடிய, நியாயமான போட்டிக்கு வழிவகுக்கக்கூடிய சந்தை விதிகளை ஏற்கக்கூடிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டியதன் அவசியத்தை இந்தியா ஆழமாக உணர்ந்துள்ளது. ஆகவே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமல்லாது பிரிட்டனுடன் தங்குதடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை முதன்மையாகக் கருதி பேச்சுவார்த்தை நடத்துமாறு அதிகாரிகளுக்கு தெளிவுறுத்தியுள்ளார்.

பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் தங்களது கூட்டணியைப் பலப்படுத்தும் நோக்கில், இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை மிகுந்த முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றன. இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்டமானது, தொழில்துறை மற்றும் விவசாயப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைப்பதிலும், வரியல்லாத வர்த்தக தடைகள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதிலும் கவனம் செலுத்துகிறது. இரண்டாம் கட்டம், 19 முக்கியமான துறைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான அளவிலான பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளத் திட்டமிட்டுள்ளது; இறுதிக் கட்டமோ, ஒப்பந்தத்தை முழுமைப்படுத்துவதிலும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல்களைப் பெறுவதிலும் கவனத்துடன் செயல்படும். இத்தகையதோர் உடன்பாடு, மின்சார வாகனங்கள், கணினி சிப் உற்பத்தி, சுற்றுச்சூழலை பாதிக்காத தூய ஆற்றல் தொழில்நுட்பங்கள் மட்டுமல்லாது விநியோகச் சங்கிலித் தொடர்களை மறுவடிவமைத்தல் போன்ற முக்கியத் துறைகளில் அதிகரித்த ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கும். இருப்பினும், ஒப்பந்தத்தின் முதற்கட்டப் பணிகளை இன்னும் நிறைவு செய்யாததால், அதன் காலக்கெடுவை 2025 ஆகஸ்ட் 1 வரை நீட்டிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அத்தனை கோரிக்கைகளுக்கும் முழுமையாக அடிபணிந்து மேற்கொள்ளப்படும் ஓர் ஒப்பந்தம், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன், வறுமை ஒழிப்பு, மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்தல் போன்ற இந்தியாவின் வளர்ச்சித் தேவைகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்த மிகுந்த ஆவல் நிலவி வரும் வேளையில், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்போது நாடு ஒரு கவனமான, படிப்படியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தியக் கொள்கை வட்டாரங்களில் உள்ள சிலர்  எச்சரிக்கை விடுக்கின்றனர். அமெரிக்காவின் அத்தனை கோரிக்கைகளுக்கும் முழுமையாகப் அடிபணிந்து மேற்கொள்ளப்படும் ஓர் ஒப்பந்தம், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன், வறுமை ஒழிப்பு மற்றும் மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்தல் போன்ற இந்தியாவின் வளர்ச்சித் தேவைகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அமெரிக்காவுடனான தனது பேச்சுவார்த்தைகளில், இந்தியா மூன்று முதன்மைத் துறைகளில்—வேளாண்மை, அறிவார்ந்த படைப்புகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் உள்ள உரிமைகள், இணைய வர்த்தகம்—மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும், ஏனெனில் இவை நாடு முழுவதும் விரிவான சமூக-பொருளாதாரப் பின்விளைவுகளை ஏற்படுத்த வல்லவை.

வேளாண்மைத் துறை

இந்திய விவசாயத் துறைக்குள் அமெரிக்கச் சந்தையின் ஊடுருவல்தான் இந்தியா-அமெரிக்க பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் மிகவும் நுட்பமான விவகாரம். பால் பொருட்கள், மக்காச்சோளம், சோயாபீன்ஸ், கோழி இறைச்சி மற்றும் ஆப்பிள் போன்ற அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைப்பதன் வாயிலாக, அமெரிக்க விவசாயிகளுக்கு இந்தியச் சந்தையில் கூடுதலான தடையற்ற சந்தை வாய்ப்பு கிடைக்கும். ஆயினும், இது இந்திய விவசாயத் துறையைச் சார்ந்து வாழும் கோடிக்கணக்கான மக்களின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கலாம் என்று சிலர் கவலை தெரிவிக்கின்றனர். ஏனெனில், இத்துறை 70 கோடிக்கும் அதிகமானோரின் வாழ்வாதாரமாகவோ அல்லது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ பாதிப் பேரின் வாழ்க்கையையோ தாங்கி நிற்கிறது.

இந்திய விவசாயத் துறை, பேரளவுக்கு ஒழுங்கமைக்கப்படாத நிலையில் உள்ளது. சிறுசிறு நிலப்பிரிவுகளையும், எண்ணற்ற சிறு மற்றும் வறுமைவாய்ப்பட்ட உழவர்களையும் அது கொண்டுள்ளது. அதிகபட்ச வேலைவாய்ப்புகளை நல்கும் துறையாக அது திகழ்ந்தபோதிலும், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்திக்குச் சுமார் பதினெட்டு விழுக்காடு அளவே தனது பங்களிப்பைச் செலுத்துகிறது. இதற்கு மாறாக, அமெரிக்க விவசாயத் துறை முறையான கட்டமைப்புடன் திகழ்கிறது. அது அரசின் நிதி ஆதரவைப் பெறுகிறது, கனரக இயந்திரங்களையும் நவீன தொழில்நுட்பங்களையும் திறம்படப் பயன்படுத்துகிறது, மேலும் தமது விளைபொருட்களைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலேயே முழு முனைப்புடன் திகழ்கிறது. அமெரிக்க விளைபொருட்களுக்காக இந்திய வேளாண் சந்தையின் கதவுகளைத் திறப்பது, இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருட்களிலிருந்து எழும் கடும் போட்டிக்கு இந்திய விவசாயத் துறையை உட்படுத்தக்கூடும். இந்த இறக்குமதிகளுடன் போட்டியிடத் தேவையான பேரளவிலான உற்பத்தித் திறனையோ, போட்டித்தன்மை மிக்க விலைகளையோ, அல்லது மேம்பட்ட தொழில்நுட்பத்தையோ இந்திய உற்பத்தியாளர்கள் இன்னமும் எட்டிவிடவில்லை. இது நாடு தழுவிய பெரும் கிளர்ச்சிகளுக்கும் வழிவகுக்கக்கூடும். உதாரணமாக, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (RCEP) குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலகட்டத்தில், பால் உற்பத்தியாளர்களும் பால் விற்பனையாளர்களும், பிரதமர் நரேந்திர மோடிக்கு லட்சக்கணக்கில் கடிதங்களை அனுப்பி வைத்து, இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது என ஒருமித்த குரலில் வேண்டுகோள் விடுத்தனர். நாட்டின் விவசாயத் துறையின் சிக்கலான அரசியல்-பொருளாதாரச் சூழலையும், தேர்தல் முடிவுகளைப் பெரிதும் பாதிக்கக்கூடிய அதன் வல்லமையையும் கருத்தில் கொண்டு, கொள்கை வகுப்பாளர்கள் வர்த்தகக் கொள்கையில் திடீரென ஏற்படக்கூடிய பாரிய மாற்றங்களை கவனமுடன் கையாள வேண்டும்.

அறிவுசார் படைப்புகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்குமான உரிமைகள்

இரண்டாவதாக, அறிவார்ந்த படைப்புகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்குமான (அறிவுசார் சொத்துரிமை - IP) கடுமையான நெறிமுறைகள் வகுக்க வேண்டுமென அமெரிக்கா முன்வைக்கும் கோரிக்கைகளை இந்தியா ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (Office of the United States Trade Representative) 2025 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில், அறிவார்ந்த படைப்புகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்குமான உரிமைகளுக்குப் போதுமான பாதுகாப்பையும் அமலாக்கத்தையும் கொண்டிராததால், இந்தியா "முக்கிய கண்காணிப்புப் பட்டியலில்" வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் விதிக்கப்படும் கடுமையான அறிவுசார் சொத்துரிமை நெறிமுறைகள், அமெரிக்க மருந்து நிறுவனங்களால் காப்புரிமை செய்யப்பட்ட மருந்துகளுக்கு மேலும் வலிமையான பாதுகாப்பை உருவாக்கும்; இது இந்தியாவின் உள்நாட்டு பொது மருத்துவத் துறையை ஒட்டுமொத்தமாகவே முற்றிலுமாகத் தகர்த்துவிடும் பேராபத்தை விளைவிக்கக்கூடும். இந்தியப் பொதுமருத்துவத் துறை, நாட்டிற்குள்ளும் வெளியிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது; குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமல்லாது ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் மருந்துகளை தயாரித்து வழங்குவதில் முன்னணி நாடாகத் திகழ்கிறது. இத்துறையின் அழிவு ஒரு கடுமையான பொது சுகாதார நெருக்கடியை உருவாக்கக்கூடும்.

இந்திய காப்புரிமைச் சட்டம் 1970 இன் பிரிவு 3 (d) இல் கூறப்பட்டுள்ள பல பொது நல விதிகள், இந்தியாவின் பொது மருந்துவத் துறையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் பெரிதும் துணை நிற்கின்றன. இந்த விதிகள், அமெரிக்க மருந்து நிறுவனங்கள் தங்கள் சந்தை வாய்ப்பை அதிகரிப்பதற்காகத் தேவைக்கும் அதிகமாக காப்புரிமைகளை நீட்டிப்பதைத் கடுமையாகத் தடுக்கின்றன.

டிஜிட்டல் வர்த்தகம்

டிஜிட்டல் வர்த்தகம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டின் போர்த்தந்திர நலன்களுக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறையாகும். எனவே, இதில் இன்றும் கணிசமான அளவில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அமெரிக்கா, வெளிப்படையான, தங்குதடையற்ற டிஜிட்டல் வர்த்தக நெறிமுறைகளை உருவாக்குவதில் மிகுந்த முனைப்புக் காட்டி வருகிறது. தரவுகளை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள்ளேயே சேமிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை (தரவு உள்ளூர்மயமாக்கல்) தளர்த்துவது, தரவுகள் எல்லைகள் தாண்டி எவ்வித தடையுமின்றி எளிதாகப் பரிமாறப்படுவதை அனுமதிப்பது, இலசவ மூல மென்பொருளின் பயன்பாட்டை ஊக்குவிப்பது, மற்றும் டிஜிட்டல் தயாரிப்புகள் மீதான சுங்க வரிகளை நீக்குவது போன்ற மாற்றங்களை வலியுறுத்தி முன்பே பேச்சுவார்த்தை நடத்தியிருந்த்து குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொள்கைகளுடன் இந்தியா முழுமையாக உடன்படுவதில்லை. இந்தியா, டிஜிட்டல் வர்த்தகம் தொடர்பாக, பல நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் உலகளாவிய ஒப்பந்தங்களிலும் (பன்முக), குறிப்பிட்ட நாடுகளுடன் நேரடியாகச் செய்யப்படும் ஒப்பந்தங்களிலும் (இருதரப்பு) மிகுந்த எச்சரிக்கையுடனும், தேசப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான கொள்கையையும் கடைப்பிடிக்கிறது. உதாரணமாக, இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் (CEPA), டிஜிட்டல் வர்த்தகம் சார்ந்த பிரிவில், இரு நாடுகளும் இணைந்து செயல்படத் தங்களால் இயன்ற ஆகச் சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டிருந்தாலும், இது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் வாக்குறுதி அல்ல என்று தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

எதிர்கால விவாதங்களில், அமெரிக்கா இத்தகைய நிலைப்பாட்டை மாற்ற முயற்சிக்கும் என்று பல இந்திய வர்த்தக வல்லுநர்கள் ஆழ்ந்த கவலை தெரிவிக்கின்றனர். ஒரு புதிய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில், இந்தியா கடைப்பிடித்து வரும் 'தங்களால் இயன்ற ஆகச் சிறந்த முயற்சி' எனும் அணுகுமுறையை, சட்டப்பூர்வமாகப் செல்லுபடியாகும் வாக்குறுதியாக மாற்றும்படி அமெரிக்கா கோரலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர். இம்மாற்றம், (1) அரசுத் தரவுகளின் பயன்பாடு, (2) டிஜிட்டல் தயாரிப்புகள் கையாளப்படும் விதம், மற்றும் (3) குறிப்பிட்ட சில வகை தரவுகளை நாட்டிற்குள்ளேயே சேமித்து வைக்கும் (தரவு உள்ளூர்மயமாக்கல்) இந்தியாவின் தற்போதைய கொள்கையைத் தொடர அனுமதிக்குமா என்பன போன்ற முக்கிய விதிகளைப் பாதிக்கக்கூடும்.

டிஜிட்டல் வர்த்தகம் குறித்த அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா ஏற்குமேயானால், தன் நாட்டு டிஜிட்டல் தளங்களையும் கட்டமைப்புகளையும் உருவாக்கி, விரிவாக்குவதற்கான சொந்தக் கொள்கைகளை வகுக்கும் சுதந்திரமான உரிமையை அது இழக்க நேரிடும்.

சிலவகைத் தரவுகள் நாட்டின் எல்லைக்குள்ளேயே சேமிக்கப்பட வேண்டும் என்னும் இந்தியாவின் விதிகள் (தரவு உள்ளூர்மயமாக்கல்) மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை, வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்களை இந்தியாவில் தரவு மையங்கள், சேவையகங்கள் மட்டுமல்லாது தரவு உள்கட்டமைப்புகளை நிறுவ முதலீடு செய்ய ஊக்குவிக்கின்றன. இதேபோன்று, தரவுகள் எல்லை தாண்டிப் பரிமாறப்படுவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் (எல்லை தாண்டிய தரவு ஓட்டம்) இந்திய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உகந்தவை. ஏனெனில், இணையவழி வணிகம் (இ-காமர்ஸ்), பயண பகிர்வுச் சேவைகள் போன்ற துறைகளில் வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய டிஜிட்டல் சந்தையில் எப்போதுமே அசைக்க முடியாத ஆதிக்கத்தைச் செலுத்தி வந்துள்ளன. இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லையேல், இந்தியாவின் உள்நாட்டு நிறுவனங்களும், தளங்களும், விற்பனையாளர்களும் போட்டிக்கு ஈடுகொடுக்க மிகுந்த சிரமப்பட நேரிடும்.

எல்லை தாண்டிய தரவுப் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதிகள் இல்லையெனில், உலகளாவிய பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய நுகர்வோர் தரவுகளை அநியாயமான முறையில் பயன்படுத்தக்கூடும். அவை உள்நாட்டு நுகர்வோர் தரவின் மீது முழுமையான கட்டுப்பாட்டைச் செலுத்தி, சந்தையைப் பிரித்தாள்வதற்கும், குறிப்பிலக்கு விளம்பரங்களைச் செய்வதற்கும் அதைப் பயன்படுத்தலாம். இது இந்திய நிறுவனங்களை முற்றிலும் பின்னுக்குத் தள்ளிவிடும். இக்காரணம் பற்றியே, அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும், இந்தியாவின் கொள்கை வகுக்கும் இறையாண்மைக் கட்டுப்பாட்டைப் பாதிக்காதவாறு உறுதி செய்ய வேண்டும். அதாவது, பின்வரும் உரிமைகளை அது பாதுகாக்க வேண்டும்:

எல்லை தாண்டிய தரவுப் பரிமாற்றக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தும் உரிமை

சேவையக மற்றும் தரவு உள்ளூர்மயமாக்கலை அமுல்படுத்தும் உரிமை

டிஜிட்டல் தயாரிப்புகள் மீதான சுங்க வரிகளைத் தக்கவைத்துக் கொள்ளும் உரிமை

இலவச மூல மென்பொருள் குறியீட்டின்( open-source software code) பயன்பாடு குறித்துத் தீர்மானிக்கும் உரிமை ஆகியவற்றை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது.

இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்குச் சாதகமற்றதாக அமையுமேயானால், இந்திய அரசு இத்தகைய அத்தியாவசிய விதிகளை வகுக்கும் வல்லமையை இழக்க நேரிடும். அதிலும் குறிப்பாக, அதிவேகமாகப் பரிணமித்து வரும் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில், இந்தியா இன்னும் தன் சொந்த டிஜிட்டல் ஒழுங்குமுறைகளை உருவாக்கி வரும் சூழலில் இது நிகழ்வது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய வர்த்தக உறுதிப்பாடுகள், இந்தியாவின் "மீளெழும் உத்திகளை" (catch-up strategies) கடைப்பிடிக்கும் திறனை வெகுவாகக் கட்டுப்படுத்தக்கூடும். இந்த உத்திகள், உள்நாட்டு டிஜிட்டல் நிறுவனங்களும் டிஜிட்டல் தளங்களும் வளர்ந்து, வெளிநாட்டுப் போட்டி நிறுவனங்களுக்கு இணையாக நிற்க உதவும் வகையில் வகுக்கப்படுபவை. ஆகையால், இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையின் போது, இந்தியா தனது கொள்கை வகுக்கும் இறையாண்மையை அதீத கவனத்துடன் தற்காத்துக்கொள்ள வேண்டும்; அதேசமயம், சாத்தியமான பொருளாதாரப் பலன்களையும் நிதானமாக எடைபோட வேண்டும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம் இந்தியா ஈட்டக்கூடிய நன்மைகள் யாவை?

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதன் மூலம் இந்தியா எண்ணற்ற பயன்களை ஈட்ட முடியும். அமெரிக்கா தனது காப்புவரிக் கொள்கைகளில் கொண்டு வந்துள்ள மாற்றங்களால், தற்போது பெரும்பாலான தென்கிழகு ஆசிய நாடுகளைக் காட்டிலும் இந்தியா மிகக் குறைந்த சுங்க வரிகளையே செலுத்தி வருகிறது. இது இந்திய வணிகங்களுக்கு ஒரு புதியதோர் வாய்ப்பை வழங்குகிறது.

குறிப்பாக, மருந்துப் பொருட்கள் உட்பட்ட வேதியியல் துறையில், சீனா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் அமெரிக்காவிற்குத் தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்ய அதிக சுங்க வரிகளைச் செலுத்த வேண்டியிருப்பதால், அந்த இடத்தை நிரப்பும் பெரும் வாய்ப்பு இந்தியாவிற்கு உள்ளது. மேலும், ஆடை, ஜவுளி, தோல் பொருட்கள், அணுசக்தி உபகரணங்கள், மின்னணு சாதனங்கள், வாகனங்கள் போன்ற துறைகளில், பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியா குறைந்த உற்பத்திச் செலவில் பொருட்களைத் தயாரிக்கிறது. இந்தக் குறைந்த உற்பத்திச் செலவினப் போட்டித்திறன், சீனா, வங்கதேசம், வியட்நாம், மெக்சிகோ போன்ற நாடுகளின் உற்பத்தியாளர்களுடன் ஒப்பிடுகையில், இந்தியத் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பெரிய சாதகமான அம்சமாகவே விளங்குகிறது.

எனினும், இத்தகைய பொருளாதாரப் பலன்களைப் பெறுவதற்கு, இந்தியா தனது கொள்கை வகுக்கும் சுதந்திரத்தைப் பாதுகாப்பது அத்தியாவசியமான ஒன்றாகும். வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது, அமெரிக்க அரசாங்கத்தின் வர்த்தகக் கொள்கைகள் முன்கூட்டியே கணிக்க முடியாதவையாக இருப்பதனால், இந்தியத் தலைவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.

இந்திய கொள்கை வகுப்பாளர்கள், ஜப்பான், இந்தோனேசியா, கம்போடியா, மலேசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகளுடன் அமெரிக்கா எவ்வாறு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்கிறது என்பதையும் ஆழமாகப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். உதாரணமாக, இந்த நாடுகள் தங்கள் உள்நாட்டுச் சந்தைகளை முழுமையாகத் திறப்பதில் பெரும்பாலும் தயக்கம் காட்டுகின்றன; அதிலும் குறிப்பாக, வேளாண்மை போன்ற அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இந்தத் தயக்கம் வெளிப்படையாகப் புலப்படுகிறது.

ஆகவே, இந்தியா இரண்டு முக்கியமான அம்சங்களுக்கிடையே சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும்:

முதலாவதாக, தனது சொந்தக் கொள்கைகளின் மீதான இறையாண்மையைத் (கட்டுப்பாட்டை) தன்கண் நிலைநிறுத்திக் கொள்வது.

இரண்டாவதாக, அமெரிக்காவுடனான எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்திலிருந்தும் சாத்தியமான ஆகச்சிறந்த பொருளாதாரப் பயன்களைப் பெறுவதற்கு முனைப்புடன் செயல்படுவது.

இப்போதைய சூழலில், இந்தியாவுக்கு மிக யதார்த்தமான தெரிவு, ஒரு குறு வர்த்தக ஒப்பந்தத்துடன் (mini trade deal) முன்னேறுவதாக அமையலாம். தொழில்துறை சார்ந்த பொருட்கள், காப்பு வரியல்லாத வர்த்தக தடைகளை (non tariff barriers) நீக்குதல் அல்லது குறைத்தல் (இறக்குமதி வரிகள் இல்லாவிட்டாலும், வர்த்தகத்தைப் பாதிக்கக்கூடிய விதிகள் அல்லது தரநிலைகள்), பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம், இந்தியாவின் உள்நாட்டுச் சந்தைக்கு அச்சுறுத்தல் அற்றதாகக் கருதப்படும் சில விவசாயப் பொருட்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் ஒரு குறு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளலாம்.

அமெரிக்காவுடன் வலிமையான பொருளாதார உறவுகளைக் கட்டியெழுப்புவது ஒரு புத்திசாலித்தனமான போர்த்தந்திர நடவடிக்கையாகத் தோன்றினாலும், இந்தியா தனது உள்நாட்டுப் பிரதான முன்னுரிமைகளைப் பாதுகாப்பதில் அதி தீவிர கவனம் செலுத்த வேண்டும். பெரும் அளவிலான வர்த்தக ஒப்பந்தங்கள் என்பது வெறும் வணிகம் அல்லது வியாபாரம் சார்ந்தவை மட்டுமல்ல; அவை ஒரு நாட்டின் சமூக- பொருளாதார முன்னேற்றத்தில் ஆழமான, நெடுங்காலத் தாக்கங்களை ஏற்படுத்தவல்லவை.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம், நாட்டின் முக்கிய கொள்கை விதிகளை மாற்றியமைக்கக்கூடும் என்பதை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் முழுமையாக உணர்ந்திருக்க வேண்டியது அவசியமாகும். அவை பின்வரும் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்:

வேளாண்மை – இந்திய விவசாயிகள் மற்றும் உணவுச் சந்தைகளை பாதுகாப்பதற்கான  கொள்கைளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அறிவுசார் சொத்துரிமைகள் – காப்புரிமைகள், பதிப்புரிமைகள் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டின் மீது கட்டுப்பாடுகள் செலுத்தும் கொள்கைளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மருந்துப் பொருட்கள் கிடைக்குந்தன்மை – அதாவது, மருந்துகள் பொதுமக்களுக்கு மலிவாகவும், எளிதாகவும் தொடர்ந்து கிடைக்கிறதா என்பதை உறுதி செய்யும் கொள்கைளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

டிஜிட்டல் வர்த்தக இறையாண்மை – டிஜிட்டல் சட்டங்கள், தரவு உள்ளூர்மயமாக்கல், மற்றும் இணையவழி வர்த்தகக் கொள்கைகள் மீது இந்தியாவின் கட்டுப்பாடு உரிமையில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இந்தத் துறைகளில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் இன்றி மாற்றங்கள் செய்யப்பட்டால், அவை இந்தியாவின் நெடுங்கால நலன்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடும். ஆகவே, ஒரு விரிவான ஒப்பந்தத்திற்கு அவசரமாக ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, இந்தியா மிகவும் கவனமாகவும், நிதானமாகவும், சாமர்த்தியத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் தலையாய நோக்கம், இரு தரப்பிற்கும் சமமான பயன்களை உறுதி செய்யும் (பரஸ்பரம்), இந்தியாவின் கொள்கை வகுக்கும் இறையாண்மையைப் பாதுகாப்பதோடு நாட்டின் சமூக, பொருளாதார அடித்தளத்தை பலவீனப்படுத்தாத ஒரு இயங்குமுறையை உருவாக்குவதாக அமைய வேண்டும்.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://southasianvoices.org/ec-m-in-r-us-india-trade-negotiation-7-24-2025/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR5U2vyGkRl61zoG8zt-GzRG4VgIwxWnXigHs8vQiPAdRcDrRoyj7BAF_8VSFQ_aem_JJwN5rfw0dKkWGZ760PGsw&sfnsn=wiwspwa

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு