பாட்டாளி வர்க்க அரசியலை கைவிட்டதோடு, கேரளாவில் RSS-ன் அரசியல் ஆயுதமாக மாறிவரும் சிபிஎம்

பி.ஜே.ஜேம்ஸ்

பாட்டாளி வர்க்க அரசியலை கைவிட்டதோடு, கேரளாவில் RSS-ன் அரசியல் ஆயுதமாக மாறிவரும் சிபிஎம்

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(CPI-M) தலைமையில் நடக்கும் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் இரண்டாவது பெரிய கூட்டணி கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(CPI) இருந்து வருகிறது. சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக இருக்கும் பினராயி விஜயனை “வேஷ்டி சட்டை அணிந்த மோடி” என்று CPI கட்சி 2017--ல் விமர்சித்திருந்தது. இதுவொருபுறமிருக்க, அதன் பிறகான அடுத்தடுத்த நிகழ்வுகள் சிபிஎம் கட்சி ஒரு முக்கிய நிலையை எட்டியிருப்பதையே எடுத்துக் காட்டுகிறது. RSS--உடனான பினராயி விஜயனின் நெருக்கம் என்பது திட்டவட்டமாக வெளிப்படுவதோடு, ஆழமாகி வருவதையும் பார்க்க முடிகிறது. RSS --ன் பிரதான அரசியல் பிரிவாக பாஜகவை பயன்படுத்துவதற்கு பதிலாக சிபிஎம் கட்சியை பயன்படுத்தும் நிலை அங்கு உருவாகியிருக்கிறது. கேரள மாநில பாஜக தலைமையுடன் வெளிப்படையான மோதல்கள் இருந்தபோதிலும், 2016--ல் சிபிஎம் கட்சியின் முதல்வராக ஆட்சிக்கு வந்தது முதல் அடுத்தடுத்து அம்பலத்திற்கு வரும் நிகழ்வுகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் பினராயி விஜயனுக்கும் நெருக்குமான கூட்டணி உருவாகியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. புதிய தாராளமய, தீவிர வலதுசாரிய கொள்கைகள், கார்ப்பரேட் - பாசிச கொள்கைககள் தங்குதடையின்றி அமல்படுத்தப் படுபவதும், மூத்த காவல் துறை அதிகாரிகள் உட்பட பினராயி விஜயன் அரசால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதிகள் முன்னணி ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன்

சந்தித்து பேசும் கூட்டங்களில் பாஜக தலைவர்கள் அப்பட்டமாக பங்குபெறாமல் தவிர்க்கப் படுவதும் இவர்களுக்கு இடையிலான உறவு என்னவென்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அமெரிக்காவை எவ்வளவுதான் துதிபாடினாலும், ஆர்.எஸ்.எஸ். என்பது “துணை இராணுவக் கட்டமைப்பு கொண்ட, ஊதியத்திற்காக மட்டுமல்லாமல் தொழில்முறைப் பணியாளர்களைக் கொண்ட, பயங்கரவாத குற்றச்சாட்டுகளை சுமந்து வரும், இந்து தேசியம் பேசக்கூடிய வலதுசாரி அமைப்பு” என்றுதான் அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதன்மை ஆராய்ச்சிப் பிரிவான லைப்ரேரி ஆஃப் காங்கிரஸ் விவரிக்கிறது. இன்று, இந்தியாவை பெரும்பான்மைவாத, மதவாத இந்து இராஜ்ஜியமாக மாற்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் என்பது உலகிலேயே நெடுங்காலமாக செயல்பட்டு வரும் மிகப்பெரிய பாசிச அல்லது புதிய பாசிச அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மனுஸ்மிரிதியில் கூறியபடி தலித்துகளை கீழ்நிலை மனிதர்களாகவும், இஸ்லாமியர்களை ‘இரண்டாம் தர’ குடிமக்களாகவும் மாற்றுவதே இந்து இராஜ்ஜியம். பல மொழி, பல கலாச்சாரம், பல மதம், பல மரபினம் மட்டுமல்லாது பல சாதிகள் வேரூண்றிய இந்தியாவை இந்து இராஜ்ஜியமாக மாற்றுவதற்கு பாஜக என்ற ஒற்றை அரசியல் பிரிவு மட்டுமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு போதுமானதாக இராது என்பது புரிந்துகொள்ளக்கூடியதே.

அவ்வகையில், மாநிலங்களின் திட்டவட்டமான தனித்தன்மைகளுக்கு ஏற்ப பாஜகவோடு எந்தவொரு கட்சியையும் தனது அரசியல் ஆயுதமாக பயன்படுத்திக் கொள்வதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தயங்கியதில்லை. உதராணத்திற்கு, 2018--ம் ஆண்டு செம்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் டெல்லியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் குறிப்பிட்ட கட்சியில்தான் வேலை செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை என்பதை அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகவத்தே ஐயத்திற்கிடமின்றி தெளிவுபட பேசியிருப்பார். இந்து ராஜ்ஜியத்தை கட்டியமைக்க எந்தவொரு கட்சியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே இந்தப் பேச்சில் உள்ளுறைந்திருக்கும் அம்சமாகும். இதுமட்டுமல்லாது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் அதன் முதன்மையான அரசியல் பிரிவான பாஜகவிற்கும் எல்லாக் காலங்களிலும் சுமூகமான உறவு நீடிக்கும் என்று சொல்ல முடியாது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுது குறிப்பாக குஜராத் கலவரத்தின் போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீட்டை திட்டமிட்டே, தன்முனைப்போடு விலக்கி வைக்க முயன்றது ஏற்கனவே பலரும் அறிந்த ஒன்றுதான்.

இந்த பின்புலத்தில்தான், பாட்டாளி வர்க்க அரசியலை கைவிட்டதோடு, தத்துவார்த்த ரீதியில் சீரழிந்து, அதிகாரத்துவ போக்குடைய அமைப்பாக மாறி நிற்கும் சிபிஎம் கட்சி ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு வேண்டிய ஊழியர்களை வழங்கும் அமைப்பாக மட்டுல்லாது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு மிகப் பொருத்தமான அரசியல் ஆயுதமாகவும் மாற்றப்பட்டு வருகிறது. செங்கொடியைத் தவிர, சிபிஎம் கட்சியின் - குறிப்பாக சிபிஎம் ஆட்சியதிகாரம் எஞ்சியிருக்கும் கேரளாவில் - தத்துவார்த்த மற்றும் அரசியல்--பொருளாதார உள்ளடக்கம் எவ்வாறு முற்றிலும் ஆளும் வர்க்கத்திற்கான அரசியலாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதை காண முடிகிறது. மேலும், இது நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் போக்காகவே இருக்கிறது. சாதியப் பிரச்சனையை பார்ப்பணிய நிலையிலிருந்து அணுகியபோதிலும்(இதன் காரணமாகவே ‘பார்ப்பணிய பொடியன்களின்’ தலைமை என்று அம்பேத்கர் விமர்சித்திருப்பார்) முன்பிருந்த ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி சிறுபான்மை இஸ்லாமியர்களுடன் – குறிப்பாக காலனியாதிக்கத்தை எதிர்த்த விடுதலை போராட்டத்தில் இஸ்லாமியர்களின் தீரமிக்க பங்களிப்பின் காரணமாக – மிகவும் இணக்கமான உறவையே பேணி வந்தது.

இப்படிப்பட்ட வரலாறு இருந்த போதிலும், ஆளும் வர்க்க அரசியலுக்கு தொடர்ந்து சீரழிந்து கொண்டிருந்த சிபிஎம் கட்சி, தேர்தல் அரசியல் இலாபத்திற்காக இஸ்லாமியர்களை எவ்வளவுதான் திருப்திபடுத்த முயன்றபோதிலும், பெரும்பான்மைவாத தத்துவ--அரசியல் நீரோட்டத்தில் ஒன்றுகலந்த பிறகு, அதன் அடிப்படையாக விளங்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான, இஸ்லாமிய வெறுப்பு போக்குகள் தவிர்க்க முடியாமல் வெளிவர ஆரம்பித்தன. 1980களில் சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளராக ஈ.எம்.எஸ். வந்த பிறகு இந்த போக்குகள் மிக வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தன.  ‘ஷரியத்’ சட்டம், இஸ்லாமிய தனிநபர் சட்டத்திற்கு எதிராக அடுக்கடுக்கான விமர்சனங்களை ஈ.எம்.எஸ் முன்வைத்ததோடு, பொது சிவில் சட்டத் தொகுப்பிற்கு ஆதரவாகவும், உயர்சாதிகள் பயன்பெறும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு கொள்கைக்கு உறுதியான ஆதரவு வழங்கியதும் இந்த போக்கிற்கு சில எடுத்துக் காட்டுகளாகும். நவம்பர் 1990--ல் மத்தியக் குழு தீர்மானத்தின் மூலம் இந்தியாவில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு ஆதரவளித்த முதல் கட்சியாக சிபிஎம் மாறியது. அதேபோல், இதை நடைமுறைக்கு கொண்டு வந்த முதல் மாநிலமாக கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சி அமைந்திருக்கிறது. 

“பணத்தையும், திருமணத்தையும் வைத்து கேரளாவை இஸ்லாமிய அரசாக” மாற்றுவதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முயல்கிறார்கள் என்று அப்போதைய முதல்வர் வி.எஸ். அச்சுதாநந்தன்கூட ஜீலை 2010--ல், டெல்லியில் இருந்த போது படுமோசமான, வெறுக்கத்தக்க வகையில் பேசியிருப்பது சிபிஎம் கட்சிகுள்ளிருக்கும் இஸ்லாமிய வெறுப்பு போக்கையே வெளிப்படுத்துகிறது. இந்தப் பேச்சுதான், இன்று இந்துத்துவ கும்பலும், அவர்களின் கிருத்தவ அடிவருடிகளும் முன்னெடுத்து வரும் “லவ் ஜிகாத்”(காதலின் பெயரால் நடக்கும் மதமாற்றம்) எனும் விஷமப் பிரச்சாரத்திற்கு முன்னோடியாக பார்க்கப்படுகிறது. புதிய தாராளமய கட்டத்தில் ஏகாதிபத்திய--பாசிச சக்திகளால் உலகளவில் முன்தள்ளப்படும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே சிபிஎம் கட்சியின் போக்கும் அமைந்திருக்கிறது. இவையனைத்தும், சிபிஎம் கட்சிக்காரர்களின் இந்துத்துவ உணர்வை கிளரிவிட்டதோடு சிபிஎம் கட்சிக்குள்ளும், கேரள சமூக வாழ்விலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊடுருவுவதற்கு உகந்த விளைநிலத்தை ஏற்கனவே உருவாக்கிவிட்டது. “ஹாசன்--குன்காலி குட்டி--அஜீஸ்”( அப்துல் அஜீஸ் என்பவர் ஜமாத்--இ--இஸ்லாமி அமைப்பின் தலைவர்) முன்னணிதான் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வழிநடத்துகிறது என்று அக்டோபர் 2020ல், சிபிஎம் கட்சியின் கேரள மாநில செயலாளராக இருக்கும் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறியிருந்தார். தேர்தல்களில் பெரும்பான்மைவாதத்தை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்தும் கேடுகெட்ட, வக்கிரமான பிரச்சாரத்தை சிபிஎம் கட்சி முன்னெடுக்கிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணமாகும். கொள்கையளவில் தோற்றுப்போன பினராயி விஜயன் தலைமையில் நடக்கும் ஆட்சியிலும், சிபிஎம் கட்சியிலும் தொடர்ந்து வெளிப்பட்டு வரும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்கள் பல்வேறு வழிகளில் கார்ப்பரேட்– காவி இராஜ்ஜியத்தை கட்டியமைப்பதற்கான அடித்தளத்தை பலப்படுத்தி வருகிறது.

உத்திர பிரதேசத்திற்கு அடுத்து, இந்தியாவில் அதிகமான ஆர்.எஸ்.எஸ். சாகா’களை(கிளைகள்) கொண்ட மாநிலங்களில் ஒன்றாக கேரளா இருந்த போதிலும், தற்போதைய சிபிஎம் ஆட்சியில்தான் உயர்மட்ட நிர்வாக அடுக்கிலும், உயர் காவல்துறை அதிகாரிகள் மத்தியிலும் காவிமயமாக்கல் (ஆர்.எஸ்.எஸ். காரர்களின் ஆதிக்கம்--மொர்.) முன்னிலும் அதிகமாக வெளிப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான், பினராயி விஜயனின் முன்னால் காவல்துறை தலைவரும், காவல் துறை ஆலோசகரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்களாக இருந்தது குறித்து அதீத பரபரப்போடு விவாதிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கேரள காவல் துறையில் ஆணாதிக்க, சாதிவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதிக்கம் குறித்து சிபிஐ(பினராயி விஜயன் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இரண்டாவது பெரிய கட்சி) கட்சியின் தலைவர் ஆனி ராஜா தயங்காமல் கேள்வி எழுப்பியிருந்தார். அரசியல், பொருளாதாரம், பண்பாடு, காவல் துறை உட்பட ஆட்சி நிர்வாகம் என அனைத்து நிலைகளிலும் பாசிச “இரட்டை என்ஜீன்” அனுகுமுறையை புகுத்தி வரும் மற்றப்பிற பாஜக ஆளும் அரசுகள் எந்த அலைநீளத்தில் பயணிக்கிறதோ அதே அளவில்தான் கேரள அரசும் பயணித்து வருகிறது என்பதை சபரிமலை பிரச்சனையிலிருந்தே பார்க்க முடிகிறது. 

ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் கைக்கோர்த்துக்கொண்டு, அரசின் கைக்கூலியாக ADGP--அஜித் குமார் நடத்திய சதிவேலைகள் மூலமாக திருச்சூர் பூரம் திருவிழாவில் வெடித்த சர்ச்சையும், அதைத் தொடர்ந்து எழுந்த இந்துக்களின் எதிர்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியை ஆர்.எஸ்.எஸ்./பாஜக கைபற்றியிருப்பதையும்கூட காவிமயமாக்கல் பிரச்சனையோடு சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது. பினராயி விஜயன் இரண்டாவது முறையாக கேரளாவை ஆளும் சமயத்தில் நடந்து முடிந்துள்ள 18--வது நாடாளுமன்றத் தேர்தலில் இந்துத்துவ சக்திகள் திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் வென்றதோடு கூடவே தங்களது வாக்கு சதவீதத்தையும் 4 சதவீதம் அதிகரித்திருக்கிறார்கள்.மேலும், 11 சட்ட மன்றத் தொகுதிகளிலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் 18வது நாடாளுமன்றத் தேரத்லில் தக்க பதிலடி கொடுத்ததால் பாஜகவால் பெரும்பான்மைகூட பெற முடியாமல் போனதென்பது பாசிச சக்திகளுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. எனினும், வரலாற்றில் முதன்முறையாக, பினராயி விஜயனின் ஆட்சி நடக்கும் கேரளாவில் எதிர்பார்க்காதளவிற்கு அதிகமான வாக்கு வங்கியை பெற்றிருப்பது பாசிச சக்திகளுக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது.

குறிப்பான வரலாற்று நிலைமைகள், பண்பாட்டு நிலைமைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படும் வெவ்வேறான சூழல்களில், உலகளவில் தோன்றியுள்ள புதிய பாசிசம் இன்று வெவ்வேறான தத்துவார்த்த பாதைகளை பின்பற்றலாம். ஆனால், எல்லா இடங்களிலும், பாசிசத்தின் பொருளியல் அடிப்படை என்பது மிகவும் பிற்போக்கான, ஊழல் மலிந்த கார்ப்பேரேட் நிதி மூலதனத்தில்தான் வேர் கொண்டுள்ளது. அவ்வகையில்தான், துவக்கம் முதல், மோடியின் தீவிர வலதுசாரி, கார்ப்பேரட் ஆதரவு கொள்கைகளை கடைப்பிடிப்பதோடு பினராயி விஜயனின் ஆட்சி அதானி போன்ற ஒட்டுண்ணித்தனமான முன்னணி இந்திய முதலாளிகளுடனும், உலகளாவிய புதிய தாராளமய கார்ப்பேரட் கும்பல்களுடனும் இரண்டறக் கலந்துள்ளது. புதிய தாரளமய கொள்கைகளுக்கு தனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், 2016--ல் ஆட்சிக்கு வந்தவுடன் குறுகிய காலத்திலேயே  பிரபல புதிய தாரளவாத, ஹார்வர்ட் பொருளாதார வல்லுநராக அறியப்படும் கீதா கோபிநாத் என்பவரை கேரளாவிற்கான பொருளாதார ஆலோசகராக பினராயி விஜயன்  நியமித்தார். பின்னாளில், இதே கீதா கோபிநாத் அவர்கள்தான் IMF--ன் முதன்மை பொருளாதார வல்லுநராகவும் நியமிக்கப்பட்டார். கேரளாவை கார்ப்பரேட்டுகளுக்கு உகந்த மாநிலமாக மாற்றும் வகையில், “தொழில் செய்வதை எளிமையாக்குவதற்கு” என்னென்ன வழிமுறைகள் எல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆராய்ந்து, அதற்குரிய ஆலோசானைகளை வழங்கும் பொறுப்பை “பன்னாட்டு வரிஏய்ப்பு முறைகளில் கைதேர்ந்த” அமைப்புகளில் ஒன்றாக இருக்கும் KPMG --யிடம் ஒப்படைத்தார். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, கொண்டு வரப்பட்ட புதிய தாராயமய வரிக் கொள்கையில் மிக மிகப் பிற்போக்கான வரிக் கொள்கையாகவும், இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பையே குழிதோண்டு புதைத்த வரிக் கொள்கையாவும் அமைந்திருக்கும் மோடியின் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை முழு மனதோடுட ஆதரித்து வரவேற்ற முதல் மாநில அரசாக பினராயி விஜயன் ஆட்சி இருந்துள்ளது. நவம்பர் 2014ல், உலக வங்கியின் ஆதரவுடன் பன்னாட்டு நிதி மூலதன கார்ப்பரேசன்(IFC) வெளியிடும் ஊக மூலதன மசாலா பத்திரங்களை மோடி அரசு அறிமுகப்படுத்திய பிறகு, பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுதான் முதல் மாநிலமாக அதை வரவேற்றது. மேலும், சர்வதேச ஊக நிதி மூலதனத்தின் மறுவடிவமாக இருக்கும் லண்டன் பங்குச் சந்தையில் மசாலா பத்திரங்களை வெளியிடும் விழாவை துவக்கி வைப்பதற்கு பினராயி விஜயன் நேரடியாக பயணம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதிகமான விவரங்களுக்குள் செல்ல வேண்டியதில்லை – “அதானிக்கு ஈனத்தனமான கொத்தடிமை சேவகம் செய்வதில் இணைபிரியா இரட்டையர்களாக மாறி நிற்கும் சிபிஎம், பாஜக!”(05/12/2022 தேதியிட்ட) என்ற தலைப்பில் Countercurrents வலைதளத்தில் வெளிவந்த கட்டுரையில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டிருக்கிறது –  தீவிர வலதுசாரிய, புதிய தாராளமய கார்ப்பரேட் மயமாக்கல் கொள்கைகளை கேரளாவில் பினராயி விஜயன் அரசு அமல்படுத்திய அளவிற்கு, “இரட்டை என்ஜீன்” ஆட்சி நடப்பதாக சொல்லப்படும் பிற பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட இந்தியாவில் எந்த மாநில அரசும் அமல்படுத்தவில்லை என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகிறது. சிபிஎம் கட்சிக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் இடையிலான கூட்டறவு அதிகமாகி வரும் பின்னணியில், இன்று, கார்ப்பரேட்--காவிகளின் செல்வாக்கு பெற்ற மக்கள் தொடர்பு ஊடகங்களை பினராயி விஜயன் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சைகளை தனித்த ஒன்றாகவோ அல்லது புதிய நிகழ்வாகவோ பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில், அரசாங்கத் தொடர்புடன் தங்க கடத்தல் நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் அன்றைய கட்டத்தில் தலைப்புச் செய்தியாக வெளிவந்து ஒட்டுமொத்த கேரளாவையும் சில ஆண்டுகளுக்கு பிடித்து ஆட்டிய சமயத்தில், தடைசெய்யப்பட்ட பன்னாட்டு முதலீட்டு ஆலோசனை வழங்கும் நிறுவனங்களுக்கும் முதலமைச்சர் அலுவலகத்திற்கும் இடையில் ஏற்பட்ட கள்ள உறவின் தொடர்ச்சிதான் இது.

ஓரிரு வரிகளில் சுருக்கமாக சொல்வதெனில், பினராயி விஜயன் தலைமையிலான கேரள சிபிஎம் கட்சி இன்றைய கட்டத்தில் தத்துவத் துறையிலும், அரசியல் வழியிலும் சீரழிந்து வருவதன் முழு வெளிப்பாடாகவே, சிபிஎம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு இடையில் நெருக்கமான உறவு அதிகமாகி வருகிறது அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் ஆயுதமாக சிபிஎம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஆர்.எஸ்.எஸ்.--ன் அரசியல் ஆயுதமாக மாறிவரும் சிபிஎம் கட்சியின் நிலைமை சொல்ல வரும் செய்தி நேரடியானது, எளிதாக புரிந்து கொள்ளக்கூடியதே: பாட்டாளி வர்க்க அரசியலை கைவிட்ட பிறகும், கொள்கையளவில் சீரழிந்த பிறகும் தங்களைத் தாங்களே கம்யூனிஸ்ட்கள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள் வழக்கமான வர்க்க எதிரிகள் போல ஆபத்தானவர்களே அல்லது அவர்களைவிட மிக ஆபத்தானவர்களே! 

பி.ஜே. ஜேம்ஸ் – சி.பி.ஐ (எம்.எல்) ரெட் ஸ்டார் கட்சியின் பொதுச் செயலாளர்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://countercurrents.org/2024/10/depoliticised-cpi-ms-transition-to-a-political-tool-of-rss-in-kerala/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு