தேர்தல் பத்திரங்களுக்கு பிரத்யேக அடையாள எண்களை SBI பதிவு செய்யும் முறை ‘முற்றிலும் சட்டவிரோதமானது’
முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் கார்க்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பாரத ஸ்டேட் வங்கியின் நடவடிக்கைகள் "முற்றிலும் சட்டவிரோதமானது மட்டுமல்ல அதிர்ச்சீயூட்டுவதாகவும் உள்ளது" என்று முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் கார்க் விமர்சித்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த கார்க், தேர்தல் பத்திரங்களுக்கு பிரத்யேக எண்-எழுத்துகளைக் கொண்ட அடையாளக் குறியீடுகளைப் பதிவு செய்ய SBI வங்கிக்கு அனுமதி இல்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
"தேர்தல் பத்திரத் திட்டத்தின்(2018) கீழ் அநாமதேய நிலை அல்லது பெயரறியா நிலை கடைப்பிடிக்கப்படும்” என்று நன்கொடையாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை SBI வங்கியின் செயல்கள் மீறியுள்ளன என்று சுபாஷ் கார்க் சனிக்கிழமை தெரிவித்தார். பத்திரங்களுக்கு எண்-எழுத்து அடையாளக்குறியைப் பதிவு செய்வதன் மூலம் பத்திரங்களை வாங்கியது யார், அவற்றைப் பணமாக்கிய அரசியல் கட்சிகள் யார் என்பதும் தெரியவரும் என்று அவர் விளக்கினார்.
"தேர்தல் பத்திரங்களுக்கு எண்ணெழுத்து அடையாளக் குறியீடுகளை பதிவு செய்து வரும் SBI வங்கியின் செயல்பாடு, அநாமதேயமாக, தனிப்பட்ட விவரங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்குவதை எளிதாக்குவதற்காக 2018-ம் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக உள்ளது" என்று அவர் எடுத்துரைத்தார்.
தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ சமர்ப்பித்த முதல் பிரமானப் பத்திரம் “முழுக்க முழுக்க பொய்யான தகவல்களை” கொண்டுள்ளதென்று கார்க் குற்றம் சாட்டினார். நன்கொடையாளர்களின் தகவல்களும், அதை பணமாக்கிய கட்சிகளின் தகவல்களும் தனித்தனியாகச் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அதை ஒன்றோடு ஒன்று சரியாகப் பொருத்திப் பார்த்து முழுமையான தகவல்களை வெளியிடுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என்று முதல் பிரமானப் பத்திரத்தில் SBI வங்கி கூறியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“SBI வங்கி, முதலில் வேறுவிதமாகக் கூறினாலும், அடுத்தடுத்து நடப்பதைப் பார்க்கும் போது, மின்னணு முறையில் தகவல்களைப் சேமித்து வைத்திருப்பது தெரியவந்தது. இந்த முன்னுக்கு பின் முரணான பதில்கள்தான், மக்களைவத் தேர்தல் முடியும் வரை, தரவுகள் வெளியிடுவதை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முதல் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. SBI வங்கி எதற்காக இப்படியொரு முழுக்க முழுக்க போலியான பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்தது என்று கார்க் கேள்வி எழுப்பினார்.
முழுமையான தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் இணங்கிய சில தினங்களிலேயே சுபாஷ் பேட்டியளித்துள்ளார். இந்த புதுப்பிக்கப்பட்ட தரவுத்தொகுப்பில் அடையாளத்திற்காக எண்-எழுத்து குறியீடு சேர்க்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2019 முதல் ஜனவரி 2024 வரை தேர்தல் பத்திரங்களை வாங்கிய நன்கொடையாளர்கள், அதை பணமாக்கிய அரசியல் கட்சிகளின் விவரங்கள் இரண்டு தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன.பத்திரங்களை பணமாக்கிய அரசியல் கட்சிகளின் விவரங்கள் 552 பக்கங்களுடன் ஒரு தொகுப்பாகவும், தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை வழங்கியவர்களின் விவரங்கள் 386 பக்கங்களுடன் ஒரு தொகுப்பாகவும் மொத்தம் இரண்டு தொகுப்பாக வெளியிடப்பட்டது.
தேர்தல் பத்திரங்களை விற்கவும், பணமாக்கவும் அதிகாரம் பெற்ற ஒரே வங்கி பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே. பத்திரங்கள் முதன்முதலில் மார்ச் 2018-ல் வெளியிடப்பட்டன; பிப்ரவரி-15 அன்று உச்ச நீதிமன்றத்தால் இத்திட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று அறிவிக்கப்படும் வரை விற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- சகா (தமிழில்)