எவரும் எதிர்பார்க்காத வகையில் அமெரிக்க-ரஷ்ய உறவுகள் ஒத்துழைப்பை நோக்கி நகர்கின்றன
நியூயார்க் டைம்ஸ்

சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில், இரு நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் பல ஆண்டு காலத்திற்குப் பிறகு மிகவும் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். உக்ரைன் போர் விவகாரங்கள் ஒருபுறமிருக்க, இருதரப்பு வணிகப் பிணைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் விரிவாகவும் ஆழமாகவும் கலந்துரையாடினர். சவுதி அரேபியாவில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த தீவிர ஆலோசனைகளின் முடிவில், இரு தரப்பினரும் தங்கள் உறவுகளைச் செழுமைப்படுத்துவதற்கும், பரஸ்பர முதலீடுகளைப் பெருக்குவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவதென்று ஒருமனதாக தீர்மானித்தனர். செவ்வாய்க்கிழமை அன்று, அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் உறவை புதுப்பிக்கும் நோக்கில் ஒரு அதிசயமான முன்முயற்சியாக, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருதல், நிதி முதலீடுகளை ஊக்குவித்தல் மட்டுமல்லாது இரு நாடுகளுக்கும் இடையேயான சுமூகமான தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்துதல் போன்ற இன்றியமையாத விஷயங்களில் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர். 2022 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்த போரை அடுத்து ரஷ்யாவை உலக அரங்கில் தனிமைப்படுத்த அமெரிக்கா எடுத்த மூன்று வருட கால முயற்சிகளுக்குப் பின்னர், இவ்விரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையிலான இந்தச் சந்திப்பு ஒரு நம்பிக்கையூட்டும் நல்லிணக்க முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில், உக்ரைனுக்கான அமைதி உடன்படிக்கையை எட்டுவதற்கும், உலக அரசியலிலும், வணிகத்திலும் ரஷ்யாவுடன் இணைந்து செயலாற்றுவதற்கான "குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பு வாய்ப்புகளை" ஆராய்வதற்கும் இரு தரப்பினரும் ஒருமித்த முடிவுக்கு வந்ததாக அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
"நாங்கள் ஒருவர் சொல்வதை ஒருவர் கேட்டுக்கொண்டு மட்டுமிருக்கவில்லை, மாறாக, ஒருவர் மற்றவரின் எண்ணங்களை முழுமையாகப் புரிந்து கொண்டோம்," என்று ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி வி. லாவ்ரோவ் குறிப்பிட்டார். "அமெரிக்கத் தரப்பு ரஷ்யாவின் நிலைப்பாட்டை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறது என்று நம்புவதற்கு எமக்கு சரியான காரணங்கள் உள்ளன."
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு வல்லரசுகளுக்கிடையில் நிகழ்ந்த இந்த விரிவான பேச்சுவார்த்தை, ஐரோப்பாவில் பேரழிவை ஏற்படுத்திய போரைத் தூண்டியதாகக் கூறி ரஷ்யாவைக் கண்டித்து வந்த மேற்கத்திய நாடுகளின் முயற்சிகளிலிருந்து டிரம்ப் நிர்வாகம் விலகிச் செல்லும் ஒரு திருப்புமுனையைக் காட்டுகிறது. பல்லாயிரக்கணக்கான ரஷ்ய வீரர்களின் மரணங்களுக்குக் காரணமான பொருளாதாரத் தடைகள், ரஷ்யாவைத் தனிமைப்படுத்துதல், உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குதல் போன்ற பைடன் நிர்வாகத்தின் கொள்கைகளை மாற்றியமைக்க டிரம்ப் விரும்புகிறார் என்பதை உறுபடுத்துகிறது.
ரஷ்யா உக்ரைனைத் தாக்கியதன் மூலம் சர்வதேச சட்டத்தை மீறியது, அதன் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றங்கள், அல்லது ரஷ்யாவின் எறிகுண்டு தாக்குதல்கள், வான்வழித் தாக்குதல்களால் உக்ரைனின் சில பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்பட்ட பேரழிவு போன்றவற்றை சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிகாரிகள் முதன்மையாகக் குறிப்பிடவில்லை. மாறாக, அதிபர் டிரம்ப் தனக்கு முன்பிருந்த எந்த ஆட்சியாளர்களும் செய்யாத வகையில் ரஷ்யாவுடன் இணங்கிப் பேசி போரை முடிவுக்குக் கொண்டுவர முனைந்ததற்காக அமெரிக்க அதிகாரிகள் திரும்பத் திரும்பப் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
"இன்று நாம் கண்டது போன்ற ஒரு செயலை வேறு எந்தத் தலைவராலும் சாத்தியப்படுத்தியிருக்க முடியாது, கடந்த மூன்றாண்டுகளாக சாத்தியப்படுத்தவும் முடியவில்லை. டொனால்ட் டிரம்ப் ஒருவரால் மட்டுமே உலக அரங்கில் இத்தகையதொரு சாதனையை நிகழ்த்த முடியும். ஏனெனில் அவர் மட்டுமே அந்த வல்லமை பெற்றவர்" என்று ரூபியோ குறிப்பிட்டார்.
ரஷ்யாவைத் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்குப் பதிலாக, ஜனாதிபதி டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் ரஷ்யாவுடன் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்ற மிகுந்த ஆர்வம் காட்டினார் என்பதை அந்தப் பேச்சுக்கள் தெள்ளத் தெளிவாக உணர்த்தின - இந்த அணுகுமுறை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் வி. புதினின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றும் வாய்ப்புகளைக் கொண்டிருந்தது. மேலும், அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு நாடுகளின் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல் செயல்படவும் அவர் தயாராக இருந்தார் என்பது இதன் மூலம் புலப்பட்டது.
இந்தச் சந்திப்பு, ரஷ்யா 2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றிக்கு மறைமுகமாக உதவிய ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பின் நிகழ்ந்துள்ளது. இருப்பினும், ஜனாதிபதி டிரம்ப் தனது முதலாவது பதவிக்காலத்தில் ரஷ்யாவுக்கு நேரடியான நன்மைகளை அளிக்கும் கொள்கைகளை ஒப்பீட்டளவில் குறைவாகவே கடைப்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவில் நடைபெற்ற சந்திப்பு, ஜனாதிபதி டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக்காலம் முற்றிலும் மாறுபட்ட திசையில் பயணிக்கக்கூடும் என்பதற்கான மிகச் சமீபத்திய முன்னறிவிப்பாகும். ஐரோப்பாவிலும் உக்ரைனிலும், அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து கியூவ்வையும் ஐரோப்பிய கூட்டாளிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு தமக்கென ஒரு சமாதான உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முயலக்கூடும் என்ற அச்சம் மேலோங்கத் தொடங்கியுள்ளது என்று பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை நடந்த இந்தச் சந்திப்பிற்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார். உக்ரைன் இந்த விவாதங்களில் சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாளமாக, தான் புதன்கிழமை சவுதி அரேபியாவுக்கு மேற்கொள்ளவிருந்த முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அவர் அறிவித்தார்.
சம்பந்தப்பட்ட முக்கிய நாடுகளின் அனுமதியின்றி அல்லது அவர்களை அறியாமல் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறுவது எவருமே ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், எந்தவொரு முடிவுகளையும் உக்ரைன் மீது "வற்புறுத்தித் திணிக்கக் கூடாது" என்றும் அவர் கண்டிப்பாகக் கூறினார்.
டிரம்ப் உடனான நீண்ட தொலைபேசி உரையாடல் நடந்து முடிந்து சரியாக ஒரு வாரத்திற்குள் இந்தச் சந்திப்பு, சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள அரண்மனையில் அரங்கேறியது. அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், சர்வதேச அரங்கில் சவுதி அரேபியாவின் செல்வாக்கை ஓங்கச் செய்ய முனைப்புடன் செயலாற்றி வருகிறார்.
டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ், மத்திய கிழக்கிற்கான சிறப்புத் தூதரும், டிரம்ப்பின் நெடுநாள் நண்பருமான ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோருடன் ரூபியோவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார். இந்த உரையாடல்கள் "நம்பிக்கையளிப்பதாகவும், சாதகமான போக்கைக் கொண்டதாகவும், ஆக்கப்பூர்வமான விளைவுகளை தருவதாகவும்" இருந்ததாக விட்கோஃப் குறிப்பிட்டார்.
ரஷ்ய தூதுக்குழுவில் ஜனாதிபதி புதினின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ், மற்றும் ரஷ்யாவின் அரசு முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ் ஆகியோர் முக்கியப் பங்கு வகித்தனர். ரஷ்யத் தொலைக்காட்சியில் பேசிய டிமிட்ரிவ், இந்தச் சந்திப்பு மிகுந்த நட்புறவுடன் நிகழ்ந்ததாகவும், "நகைச்சுவைகளும் கலகலப்பான பேச்சுகளும் நிறைந்திருந்ததாகவும்", மேலும் மதிய உணவு "மிகவும் சுவைமிக்கதாக இருந்தது" என்றும் கூறினார். அதே வேளையில், உஷாகோவ் கூறுகையில், டிரம்ப் மற்றும் புதின் ஆகியோருக்கிடையிலான ஒரு சந்திப்பை நடத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் இரு தரப்பினரும் விரிவாக ஆலோசித்ததாகத் தெரிவித்தார், எனினும் அந்தச் சந்திப்பு எப்பொழுது நடைபெறும் என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.
செவ்வாய்க்கிழமை நடந்த இந்த பேச்சுவார்த்தைகளின்போது, லாபத்தின் மீதும், இயற்கை வளங்களின் மீதும் டிரம்ப் கொண்டிருந்த ஆர்வத்தை ரஷ்யா சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டது போல் தெரிகிறது. அமெரிக்காவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களும், இதர வர்த்தக நிறுவனங்களும் ரஷ்யாவுடன் மீண்டும் வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டால் பலநூறு பில்லியன் டாலர்களை ஈட்ட முடியும் என்று ரஷ்யா வாதித்தது.
கடந்த வாரம், ரஷ்யாவில் சிறையிலிருந்த ஒரு அமெரிக்க பள்ளி ஆசிரியரை விடுவிக்க விட்கோஃபுடன் இணைந்து செயலாற்றிய டிமிட்ரிவ், "உறவுகளை மீண்டும் புதுப்பிக்கவும், பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கவும், பொருளாதார வளத்தை மீண்டும் நிலைநாட்டவும்" அமெரிக்காவுடன் பொருளாதார ஒத்துழைப்பை மீண்டும் தொடங்க விரும்புவதாகக் கூறினார்.
"ரஷ்ய மண்ணில் கால்பதித்து வணிகம் செய்த முக்கிய அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் கணிசமான லாபத்தை அறுவடை செய்துள்ளன," என்று டிமிட்ரிவ் செவ்வாய்க்கிழமை அன்று பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பு அளித்த ஒரு சிறிய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையேயான வணிக பந்தங்களை எவ்வாறு மீண்டும் வலுப்படுத்தலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் விவரித்தார். "ரஷ்யா தனது எண்ணற்ற இயற்கை வளங்களை அடைவதற்கான கதவுகளை அவர்களுக்குத் திறந்து வைத்திருக்கும்போது, அவர்கள் ஏன் இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விடுவார்கள்? ஆகவே, அவர்கள் கண்டிப்பாகத் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம்," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
உக்ரைன் விவகாரத்தில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டு, டிரம்ப் நிர்வாகத்துடன் சுமூகமான பேச்சுவார்த்தைகள் நிகழுமாயின், பைடன் நிர்வாகம் ரஷ்யா மீது விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா திரும்பப் பெறக்கூடும் என்று ரஷ்ய அரசியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் .
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எக்ஸான் மொபைல் உள்ளிட்ட முன்னணி மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்களும், பல வணிக நிறுவனங்களும், புதினின் முழுவீச்சிலான உக்ரைன் படையெடுப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து வெளியேறின. இதன் விளைவாக அமெரிக்க நிறுவனங்களுக்கு சுமார் 300 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ள தகவல்களை அமெரிக்க தூதுக்குழுவினரிடம் வழங்க டிமிட்ரிவ் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார் .
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரூபியோ, அமெரிக்காவும் ரஷ்யாவும் அடுத்த கட்டமாக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து மூன்று கட்டத் திட்டத்தை விவரித்தார் .
முதலாவதாக, பல ஆண்டுகளாக இருதரப்பிலிருந்தும் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதால் மிகக் குறைவான ஊழியர்களுடன் இயங்கி வரும் மாஸ்கோவிலும், வாஷிங்டனிலும் உள்ள தங்கள் தூதரகங்களின் செயல்பாடுகள் மீதுள்ள தடைகளை நீக்குவதற்கான வழிகளை இரு நாடுகளும் பேசி ஒரு முடிவுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார் .
இரண்டாவதாக, உக்ரைன் போர் எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவரப்படலாம் என்பதற்கான "நிபந்தனைகளையும் வரையறைகளையும்" வகுப்பதில் அமெரிக்கா ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றும் என்று அவர் குறிப்பிட்டார் .
"உக்ரைன், எமது ஐரோப்பிய நட்பு நாடுகள் மட்டுமல்லாது பிற கூட்டாளிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தைகளும் ஆலோசனைகளும் நடத்தப்படும்," என்று ரூபியோ உறுதி கூறினார் . "ஆனால், இந்த இலக்கை எய்துவதில் ரஷ்யாவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்."
இறுதியாக, ரஷ்யாவும் அமெரிக்காவும் சர்வதேச அரசியல் மற்றும் வணிகத் துறைகளில் புதிய ஒத்துழைப்புக்கான வாயில்களைத் திறக்க ஆராய்வார்கள் என்று அவர் கூறினார். இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வு இந்தப் போருக்குக் கிடைக்கிறபட்சத்தில் "அற்புதமான சாத்தியக்கூறுகள்" உருவாகும் என்று அவர் வர்ணித்தார் .
செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற இக்கூட்டங்கள், 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி புதினின் உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர், அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான உயர்மட்டப் அதிகாரிகளின் நேரடியான முதலாவது சந்திப்பாக அமைந்தது.
ஐரோப்பாவிலும் உக்ரைனிலும் இப்பேச்சுவார்த்தைகள் குறித்த செய்திகள் வியப்பையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தின. ரூபியோ அவர்கள் இச்சந்திப்புகளை ஆரம்பகட்டப் பேச்சுக்கள் என்று குறிப்பிட்ட போதிலும், ஜனாதிபதி டிரம்ப் ரஷ்யாவுடன் தொடர்புகொண்ட விதம் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளுடன் முறையாக ஆலோசிக்கப்படவில்லை அல்லது விவாதிக்கப்படவில்லை என்ற கருத்து ஐரோப்பிய நாடுகள் மத்தியில் பரவலாக நிலவியது.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், அந்நாட்டின் நடைமுறை ஆட்சியாளருமான முகமது பின் சல்மானுக்கு, இத்தகைய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது, மத்திய கிழக்கிற்கு அப்பாலும் செல்வாக்கு மிக்க ஒரு உலகத் தலைவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது.
சவுதி அரேபிய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், "உலகளாவிய பாதுகாப்பையும், அமைதியையும் மேம்படுத்துவதற்கான எங்களது முயற்சிகளின் ஒரு பகுதியாக", ரஷ்ய மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் வருகையை வரவேற்பதாகக் கூறியது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளைப் போலவே, சவுதி அரேபியாவும் உக்ரைன் போரில் நடுநிலை வகிப்பதெனத் தீர்மானித்தது.
அந்நாடு உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிய அதே சமயத்தில், ரஷ்யாவுடன் வலுவான நட்புறவையும் பேணி வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் சுவிட்சர்லாந்தில் ரஷ்யாவின் பங்கேற்பு இல்லாமல் உக்ரைன் போர் குறித்து நடைபெற்ற அமைதி மாநாட்டில், சவுதி அரேபியாவும் அதன் அண்டை நாடான ஐக்கிய அரபு அமீரகமும் இறுதி உடன்படிக்கையில் கையெழுத்திட தயக்கம் காட்டின.
உக்ரைனின் கியூவ் நகரில் இருந்து Andrew E. Kramer மற்றும் Maria Varenikova ஆகியோர் இந்த செய்தி உருவாக்கத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்கினர்.
விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.nytimes.com/2025/02/18/world/europe/us-russia-saudi-ukraine.html