இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தின் உண்மை நிலை
தமிழில்: வெண்பா
ரஷ்யாவின் சமீப எண்ணெய் வர்த்தக ஒப்பந்தங்கள் மீது புதிய டிரம்ப் அரசின் பொருளாதாரத் தடைகள் கவனம் குவிக்கக் கூடும். ரஷ்யாவின் ரோஸ்நெப்ட், இந்திய இறக்குமதி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுடன் நாளொன்றுக்கு 5லட்சம் பீப்பாய் விகிதம் ஆண்டுக்கு 13 பில்லியன் டாலர் கச்சா எண்ணெய் வர்த்தகம் என 10 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 0.5% சதவிகிதமாகும். மேலும் இதுதான் ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகும். எண்ணெய் துறையில் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யா, வர்த்தக மாற்றுகளை தீவிரமாக நாடுகிறது. 2022 உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியா அதன் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக மாறியுள்ளது, ஒரு பீப்பாய்க்கு 3லிருந்து 4 டாலர் வரையிலான குறைவான விலையில் பெற்று பயனடைகிறது.
இந்த ஒப்பந்தம் ரஷ்ய-இந்திய ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகிறது. அதோடு, வளைகுடா நாடுகளின் (வளர்ந்து வரும்) இந்திய சந்தைப் பங்கையும் ரஷ்யா கைப்பற்றி வருவதால் ஒபெக் பிளஸ் (OPEC+) நாடுகளிடையே முரண்பாடு ஏற்படக் கூடும். இதனால் சவுதி அரேபியாவும் அரபு நாடும் (UAE) அதிக போட்டியை சந்திக்கின்றன, குறிப்பாக இந்த ஒப்பந்தம் இந்தியாவின் எண்ணெய் தேவையில் வெகுவான பகுதியை கைப்பற்றியுள்ளது. ரிலையன்ஸ் அதன் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலையில் மாதத்திற்கு 20-21 அஃப்ராமேக்ஸ் கப்பல் (ஒரு கப்பல் கொள்ளளவு சுமார் 80ஆயிரம் டன் முதல் 1,20,000 டன் வரை இருக்கும் – மொ-ர்) அளவிலான கச்சா எண்ணெயையும், 3 அஃப்ராமேக்ஸ் கப்பல் அளவிலான எரிபொருள் எண்ணெயையும் இறக்குமதி செய்யும். விலை நிர்ணயம் முந்தைய ஆண்டு சந்தையின் அடிப்படையில் இருக்கும். 2023ல் சராசரியாக நாளொன்றுக்கு 3,88,500 பீப்பாயாக இருந்த இறக்குமதி அளவை, 2024 இல் 4,05,000 பீப்பாயக உயர்த்தியதம் மூலம் ரோஸ்நெஃப்ட்டின் கடல்வழி ஏற்றுமதியில் 50% சதவிகிதத்தை ரிலையன்ஸ் இறக்குமதி செய்கிறது.
எனினும் இந்தியா, சீனா, ரஷ்யாவிற்கு இடையிலான இந்த எண்ணெய் வர்த்தக கூட்டிற்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் தீவிரமடைந்து வருகின்றன. ரஷ்யாவின் தினசரி ஏற்றுமதி முந்தைய மாதத்தை விட நவம்பரில் 12லட்சம் பீப்பாய்கள் குறைந்து 73.3 லட்சம் என்ற அளவுக்கு வீழ்ந்தது. வருவாயிலும் 7% சதவிகிதம் சரிவு இருந்தபோதிலும், ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் இந்த பொருளாதாரத் தடைகளால் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மோசமடையவில்லை. அதன் எண்ணெய் வர்த்தகம் 14.56 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. மறுபுறம், இந்தத் தடைகள் ரஷ்யாவின் ஆர்க்டிக் பிரதேச இயற்கை எரிவாயு (LNG) செயல்பாடுகளையும் கணிசமாக பாதிக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு, எரிவாயு உறையும் நிலையை கட்டுக்குள் வைத்து கொண்டு செல்லும் ஐரோப்பிய ஒன்றிய கிரிஸ்டோப் டி மார்கெரி (Christophe de Margerie) என்ற கப்பல்களின் இயக்கம் தடைபட்டுள்ளது. அதன் கப்பல் கட்டும் தளங்களுக்கும் உதிரி பாகங்கள் விநியோகத்திற்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம். இதனால், ரஷ்யாவைச் சார்ந்த யமல் எல்என்ஜியின் சரக்குகள் முடங்கி கிடக்கின்றன .
(சிரில் வைடர்சவென்)
- வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை : https://oilprice.com/Energy/Crude-Oil/What-The-Largest-Ever-Oil-Deal-Between-India-and-Russia-Really-Means.html