நூல் அறிமுகம்: அரசியல் பொருளாதார நூல்களின் சாரம் தொகுதி – 2

ஜி.மஞ்சுளா

நூல் அறிமுகம்: அரசியல் பொருளாதார நூல்களின் சாரம் தொகுதி – 2

‘நம்ம பசி தீர்ந்ததற்கு பிறகு சாப்பிடுகிற அடுத்த இட்லி இன்னொருத்தரது’ இது கம்யூனிசம் குறித்து ஒரு தமிழ் திரைப்படத்தில் வரும் வசனம். நம் தேவைக்கு அதிகமாக இருப்பதை அடுத்தவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே இந்த வசனத்தின் அர்த்தம். மார்க்சியம் முன்னிருத்தும் ‘கம்யூனிசம்’ விஞ்ஞானத் தன்மை உடையது என்பதைஅறியாமல், இவ்வாறு கம்யூனிசம் எளிய முறையில் புரிந்துக் கொள்ளப்படுகிறது. இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், உழைக்கும் மக்களால் உருவாக்கப்படும் செல்வத்தை (பொருட்களை) அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளித்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்,  சமத்துவம் வந்து விடும் என்று  எளிமைப்படுத்தி தவறாக சொல்வது தான். 

மார்க்சுக்கு முந்திய பொருளாதார அறிஞர்கள் மனித உழைப்பே செல்வத்திற்கான மூலகாரணம் என்பதை சரியாகவே கூறினார்கள். ஆனால் அவர்களும் பொருள் வினியோகத்தில் தான் சிக்கல் என்பதாக கூறி வந்தனர். ஆனால் மார்க்ஸ் தான் பிரச்சனை வினியோகத்தில் இல்லை, உண்மையான பிரச்சனை முதலாளித்துவ உற்பத்திமுறையில் தான் இருக்கிறது என்று கூறி, அக்கருத்தை விஞ்ஞானபூர்வமாக நிலைநிறுத்தினார். 

முதலாளித்துவ உற்பத்திமுறையில், பொருள் உற்பத்தி நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்வுபோக்கிலேயே தொழிலாளர்கள் சுரண்டப்படுவது நிகழ்த்தப்பட்டு விடுகிறது. அது தனித்து வெளியே தெரிவதில்லை. தொழிலாளர்களது மொத்த உழைப்பின் மதிப்புக்கு நிகரான பணம் (சம்பளம்) தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. அதுவும் கூட, உற்பத்தியை தொடர்ந்து செய்வதற்கு, தொழிலாளர்கள் உயிருடன் இருக்க வேண்டிய அவசியம் கருதியே, முதலாளிகளால் கொடுக்கப்படுகிறது. தொழிலாளர்கள் உயிருடன் வாழ்வதற்கான ஒரு குறைந்தபட்ச தொகையே, அதாவது, அவர்களின் உழைப்பு சக்திக்கான கூலி மட்டுமே தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. முதலாளிகளால் அபகரிக்கப்பட்ட ‘கொடுபடாத கூலியே’ முதலாளிகளின் இலாபமாக மாறுகிறது.  சுரண்டலைத் தவிர வேறு எந்த வகையிலும் முதலாளிக்கு  இலாபம் வரவே முடியாது என்பதை மார்க்ஸ் தனது “மூலதனம்” நூலில் விஞ்ஞானபூர்வமாக விளக்குகிறார். 

ஒன்றுகுவிக்கப்பட்ட இலாபம் எவ்வாறு மூலதனமாக மாறுகிறது என்பதை “மூலதனம்” நூல் விளக்குகிறது. அதில் கூறப்பட்டுள்ள உண்மைகள் எல்லாம் தொழிலாளர்களுக்கு புரிந்து விட்டால்  முதலாளித்துவ அரசுகளின் கதி அதோகதிதான் என்பதை முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள் உணர்ந்தே உள்ளனர். அதனால்தான் முதலாளித்துவத்தை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் அவர்களின் முதல் எதிரிகளாக உள்ளனர். ஆனால் தொழிலாளர்களின் நலன் விரும்புவர்கள் அனைவரும் “மூலதனம்” நூலை பயிலுவதன் அவசியத்தை உணர்ந்துள்ளார்களா? என்பது கேள்விக்குரியதாகும்.

இந்த சூழலில் தான் தோழர் அ.கா.ஈஸ்ரன் அவர்களின் இந்நூல் மிகுந்த முக்கியத்துவம் உடையதாகிறது.

தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் கூலியின் அளவை சற்று உயர்த்திக் கொடுப்பதற்கான போராட்டங்களே, தொழிற்சங்க போராட்டங்கள். 

“மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை அறிந்திடாமல், எந்த ஒரு கம்யூனிஸ்ட்டும் தொழிற்சங்கத்தில் சிறப்பாக பணிபுரிந்திட முடியாது. தொழிற்சங்கத்தின் வழியாக நடைபெறும் போராட்டம் பொருளாதார அடிப்படையிலானது. தொழிலாளி எவ்வாறு சுரண்டப்படுகிறான் என்பதை மார்க்சிய வழியில் அணுகுவதற்கு, மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை அறிந்திருக்க வேண்டும்………. 

தொழிற்சங்கத்தில் பணிபுரிபவர் மட்டுமல்ல, அனைத்துக் கம்யூனிஸ்டும் அரசியல் பொருளாதாரத்தையும் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும் நிச்சயமாக நன்றாகஅறிந்திருக்க வேண்டும். ஒரு கம்யூனிஸ்ட்டின் விஞ்ஞான அணுகுமுறை இந்த இரண்டில்தான் அடங்கியிருக்கிறது.” என “மூலதனம்” நூலை யார் அவசியம் படிக்க வேண்டும் என்பதை இந்நூலின் ஆசிரியர் வலியுறுத்தி கூறியுள்ளார்.

“மூலதனம்” முதல் தொகுதிக்காக, மார்க்ஸ்-எங்கெல்ஸ் இருவரும் எழுதிய முன்னுரைகள், பின்னுரைகள் ஆகியவை மேலும், முதல் தொகுதிக்காக பத்திரிகைகளில் எங்கெல்ஸ் எழுதிய மூன்று மதிப்புரைகள் மற்றும் “மூலதனம்” நூலின் முதல் நான்கு அத்தியாயங்களுக்கு எங்கெல்ஸ் எழுதிய பொழிப்பு (Synopsis of Capital) ஆகியவற்றின் சாரத்தை இந்நூல் தொகுத்தளித்துள்ளது. ஓர் அரசியல் பொருளாதார நூலை மிக எளிதாக படிக்கும்படியும் சுவாரசியமாகவும் நூலாசிரியர் தந்திருப்பது நமக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளிக்கிறது.

முதலாளி ஒரு பொருளின் விலையை ஏற்றி வைத்து இலாபம் ஈட்ட முடியும் தானே? என நீங்கள் கேள்வி எழுப்புவீர்கள் எனில், பொருட்களின் சம மதிப்புக்குத்தான் பரிவர்த்தனை நடைபெறுகிறது என்பதால், விலையை ஏற்றி இலாபம் ஈட்ட முடியாது என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. 

ஒரு முதலாளியும் தொழிலாளியும் எதிர் எதிராக நிற்பதற்கான காரணம் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது அல்ல, முதலாளித்துவ உற்பத்தி முறையின் காரணமாகவே, இருவேறு வர்க்க நலன் கொண்டவர்களாக அவர்கள் முரண்பட்டு நிற்கின்றனர் என்பதை மார்க்ஸ் எழுதியுள்ளவற்றின் அடிப்படையில் இந்நூல் விளக்கி கூறியுள்ளது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் காரணமாக கிடைக்கும் இலாபமும் அதன் விளைவான முதலாளித்துவ தனிச்சொத்துடையும் ஓழிக்கப்பட்டால் தான் தொழிலாளர்களின் நல்வாழ்விற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதும்  சமத்துவ சமூகம் அமைவதற்கான பெரும்பணி துவங்கப்படும் என்பதும் இவற்றின் மூலம் நமக்கு புரிய வைக்கப்படுகிறது.

சரி, தொழிலாளர்களின் போராட்டத்தினால் வேலைநேரம் குறைக்கப்பட்டு விட்டதே? ஏன் முதலாளிகளை குறை கூறிக் கொண்டே இருக்க வேண்டும்? சுரண்டலின் மூலம் அவர்கள் இலாபம் சம்பாதிப்பதாகவே இருக்கட்டும். ஆனால் அவர்கள் தானே வேலைவாய்ப்பை தருகிறார்கள் என ஒருவர் வாதாடலாம்.

ஆனால், கூடுதல் இலாபம் பெறுவதற்காக, முதலாளிகளிடையே நடைபெறும் போட்டி காரணமாக, முதலாளித்துவ உற்பத்தி முறையில் நவீன இயந்திரங்கள் புகுத்தப்படுவது தொடர்ந்து நிகழ்கிறது. இதனால் தொழிலாளர்களில் பலர் வேலை இழக்கின்றனர். வேலையில்லாதோர்  பட்டாளம் பெருகிக் கொண்டே போகிறதே தவிர அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை. அதோடு, கூலி உயர்வுக்கான பேரத்தில் தொழிலாளர்களின் கைதாழ்ந்து போகும் நிலைமைகள் தான் ஏற்படுகிறது என மார்க்சின் நூல் விளக்குகிறது. 

உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருளுக்கு, பயன் மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பு என இரண்டு மதிப்புகள் உள்ளது என எடுத்துரைத்து, அதில் பரிவர்த்தனை மதிப்பு எப்படி உபரியை உருவாக்குகிறது என்பது விளக்கப்படுகிறது.  முதலாளி உற்பத்தியில் முதலீடு செய்யும் மூலதனமும் நிலையான மூலதனம், மாறுகின்ற மூலதனம் என இரு பகுதிகளாக உள்ளதையும் அதில் உழைப்பு சக்தியில் முதலீடு செய்யப்படும் மாறும் மூலதனம் மூலமே உபரி மதிப்பு உருவாகிறது என்பதும் விளக்கப்படுகிறது. 

தொழிலாளியின் உழைப்புசக்தியை பயன்படுத்தி மட்டுமே மூலதனத்தை முதலாளி பெருக்கி கொள்ள இயலும் என்பதை மார்க்சின் நூல் விஞ்ஞான பூர்வமாக நிறுவுகிறது. நிலவுடைமை சமூக அமைப்பில் இருந்து முதலாளித்துவ உற்பத்தி முறை சுரண்டலின் தன்மையில் எவ்வாறு வேறுபட்டு உள்ளது என்பதை இந்த விளக்கங்களின் மூலம் நாம் எளிதில் புரிந்துக் கொள்ள முடிகிறது.

வாங்குவதற்காக விற்பது என்பது சரக்கில் (பண்டம்) தொடங்கி சரக்கிலேயே முடிவடைகிறது. அதாவது தன்னிடம் உள்ள சரக்கை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு தனக்கு தேவைப்படுகிற வேறு சரக்கு வாங்கப்படுகிறது. இது வாங்குவதற்காக விற்பது ஆகும். ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையில், விற்பதற்காக வாங்குவது நடைபெறுகிறது. இந்த உற்பத்தி இயக்கத்தில் பணம் எவ்வாறு மூலதனமாக மாற்றமடைகிறது என்பது இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தியின் நோக்கம் பரிவர்த்தனை மட்டுமே, அதாவது, முதலாளிகளின் இலாபத்துக்கானது மட்டுமே என்பதை பயன்மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு பற்றிய விளக்கங்களில் இருந்து நாம் எளிதாக புரிந்துக் கொள்ள முடிகிறது. 

மார்க்சின் பொருளாதார நூல்கள் அனைவரும் படித்து அறியக்கூடியதே, இருப்பினும், அது படிப்பதற்கு சிரமமாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். பொருளாதார விஷயங்கள் விஞ்ஞான அடிப்படையில் விளக்கப்படுவதை படித்தறிவதற்கு, பயிற்சி தேவைப்படுவது உண்மைதான்.அப்படிப் பட்டவர்களை மனதில் கொண்டுதான் தோழர் அ.கா.ஈஸ்வரன் மார்க்சிய பொருளாதாரக் கருத்துக்களை சுருக்கமாகவும் சாரமாகவும் இந்த நூலில் தொகுத்து தந்து  மூலதனம் நூலை ஆர்வத்துடன் படிக்க தூண்டுகிறார்.

முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறிவிட்ட சூழலில் “மூலதனம்” நூல் வாசிப்பது தேவைதானா? பலனுள்ளது தானா?

“இன்றைய ஏகாதிபத்திய உள்முரண்பாட்டை புரிந்து கொள்வதற்கு “மூலதனம்” சுட்டுகிற முதலாளித்துவ உள்முரண்பாட்டை நன்றாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். “மூலதனம்” நூலை நேரடியாகப் படித்தறியாதவரை இந்நூல் “இன்று பொருந்துமா” என்கிற கேள்வி எழவே செய்யும்.

இயந்திர மனிதனைப் (Robot) பயன்படுத்துகிற இன்றைய நிலையைப் புரிந்து கொள்வதற்கு “மூலதனம்” நூலே நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது.” என தோழர் அ.கா. ஈஸ்வரன்அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.

ஆதியில் முதலாளிகள் உருவானது எப்படி? தொழிற்துறை முதலாளிகள் விவசாயத்துறை முதலாளிகளிடம் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றனர், உடைமை பறிக்கப்பட்டோருக்கு எதிராக இயற்றப்பட்ட கொலைகாரச் சட்டங்கள் ஆகியற்றை பற்றிய சுருக்கமான வரலாறு இந்நூலில் இடம்பெற்றிருப்பதானது கடினமான பொருளாதார நூலை சுவாரசியமானதாக மாற்றிவிடுகின்றது.

மார்க்ஸ்-எங்கெல்சின் முன்னுரைகள் மற்றும் மதிப்புரைகளை மட்டுமே தொகுத்து, அதன் வழியே மூலதனம் நூலின் சாரத்தை தோழர் அ.கா.ஈஸ்வரன் சிறப்பாக தொகுத்தளித்திருக்கும்  முயற்சி புதுமையானது. பாராட்டுக்குரியது.

முதலாளித்துவம் அழியாது என கனவு காண்பவர்களுக்கு பதிலுரைக்கும் விதத்தில், “உன் வழியில் நீ செல், பேசுவோர் பேசட்டும்” என மார்க்ஸ் முன்னுரையில் கூறியதை தோழர் அ.கா.ஈஸ்வரன் எடுத்துரைத்து, “ஆம் பேசுவோர் பேசட்டும்! நாம் மார்க்சிய விஞ்ஞான வழியில் செல்வோம்.” என நமக்கு மிகுந்த நம்பிக்கையூட்டும் வகையில் ஒரு சிறந்த நூலை படைத்தளித்திருக்கிறார்.  

தோழர் அ.கா.ஈஸ்வரன் தொடர்ந்து எழுதி வருகிற, இந்த பொருளாதார நூல்களின் சாரம் என்கிற நூல் வரிசைகள், மார்க்சின் பொருளாதார நூல்களைப் படிப்பதற்கு வழிகாட்டியாக இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

- ஜி. மஞ்சுளா

நூலாசிரியர் : அ.கா.ஈஸ்வரன்

வெளியீடு : பொன்னுலகம் புத்தக நிலையம்,

விலை : ரூ.100/-

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு