"ஸ்டாலின் அரசியல்" - மொழிபெயர்ப்பு: தோழர். சுந்தரசோழன்

கனகு கனகராஜ்

"ஸ்டாலின் அரசியல்" -  மொழிபெயர்ப்பு: தோழர். சுந்தரசோழன்

ஏறத்தாழ பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன் "கார்ட்டூனிஸ்ட் மதன்" உலக சர்வாதிகாரிகள் கதையை ஜூனியர் விகடனில் தொடராக எழுதினார். அதை ஒரு திகில் தொடர் போல எழுதி வந்தார். ஹிட்லர், இடி அமீன் என பல்வேறு சர்வாதிகாரிகளின் வாழ்க்கையை குறிப்பிட்டு எழுதியவர் அந்த வரிசையில் தோழர் ஸ்டாலின் அவர்களையும் சர்வாதிகாரி என்று குறிப்பிட்டு எழுதினார். இது எங்களைப் போன்ற தோழர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மார்க்சிய ஆதரவாளர்கள் பலரும் கடிதங்களை விகடன் குழுமத்திற்கு அனுப்பிவைத்தனர்.

எதிர்ப்புகளை கண்ட மதன் ஒரு 'சர்வாதிகாரிக்கு' இவ்வளவு ஆதரவா? என்று வியப்பு(!?) தெரிவித்தார். பொய்யான ஒரு செய்தியை வெளியிட்ட கூச்ச உணர்வு இன்றி அதற்கு வந்த எதிர்ப்பையே சர்வாதிகாரத்திற்கு ஆதரவு எனத் திரித்த அறிவாளி அவர்.

இப்படி உள்ளூர் மதனிலிருந்து உலகளாவிய அமெரிக்கா வரை ஸ்டாலினைப் பற்றி செய்யாத அவதூறுகளே இல்லை. அவ்வளவு அவதூறுகள் மலைபோல கொட்டிக்கிடக்கின்றன. இந்த அவதூறு மலைகளை பிளப்பதற்கு தமிழில் வெளிவந்த சிற்றுளி தான் "ஸ்டாலின் அரசியல்" என்ற தோழர் சுந்தரசோழனின் மொழிபெயர்ப்பு நூல்.

இந்தக் குறு நூலின் ஆங்கில மூலம் 1984ஆம் ஆண்டு அமெரிக்காவின் மார்க்சிய-லெனினிய கழகத்தினரின் காலாண்டு இதழில் கட்டுரையாக வெளியிடப்பட்டது.

அடிப்படையில் இந்த நூல் ஸ்டாலின் குறித்து இரண்டு கேள்விகளை எழுப்பி அதற்கு விடை காண முயற்சிக்கிறது.

1) அவர் ஒரு கொலைகாரர் மற்றும் கொடுங்கோலர் ஆக இருந்தாரா அல்லது 100 கோடி மக்கள் நம்புவது போல கடந்த சில நூற்றாண்டுகளின் தலைசிறந்த மனிதநேயாளர்கள் மற்றும் ஜனநாயகவாதிகளில் ஒருவராக இருந்தாரா?

2) ஒரு கொலைகாரர் மற்றும் கொடுங்கோலர் இல்லையென்றால் மேற்குலகின் ஆளும் வர்க்கங்களும் அரசாங்கங்களும் தங்கள் மக்களை இந்த பொய்யை நம்ப வைக்க ஏன் இத்தகைய முயற்சிகளைச் செய்தன?

இந்த அடிப்படையான கேள்விகளை முன்வைத்து இந்நூல் விடைகாண முயலுகிறது.

அனைத்து முதலாளிய நாடுகளும் அனைத்து முதலாளிய தலைவர்களும், அறிஞர்களும் வரலாற்றின் அனைத்து மாற்றங்களையும் அல்லது முன்னேற்றங்களையும் தனி நபர்களே அல்லது மக்களை வழிநடத்தும் தலைவர்களே தீர்மானிக்கின்றனர் என்று நம்புகின்றனர். அதே வழிமுறையை அவர்கள் ஸ்டாலின் மீதும் பிரயோகிக்கின்றனர்.

சோசலிசத்தின் மீது, சோசலிச நாடுகள் மீது, புரட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டும் எனில் அதற்கு அந்நாட்டை வழி நடத்தும் தலைவர் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எனவே சோவியத் யூனியனின் முதன்மை தலைவராக விளங்கிய தோழர் ஸ்டாலின் மீது ஏகாதிபத்தியவாதிகள் அவர்களின் கைக்கூலிகள் அவதூறுச் சேறுகளை விசிறி அடித்தனர். சோவியத் கட்சி மீது அதன் ஊழியர்கள் மீது எண்ணற்ற அவர்களை பொழிந்தனர்.

எல்லாவற்றிலும் மையமாக தோழர் ஸ்டாலினைக் குறி வைத்தார்கள். அவர்கள் இவ்வாறு செய்வதற்கு காரணம் இருந்தது. சோவியத் உலகின் முதல் சோசலிச நாடு அதன் முதல் தலைவராக இருந்த தோழர் லெனின் குறுகிய காலமே ஆட்சி செய்தார். அதன் பின்னர் பதவியேற்ற ஸ்டாலினே சோசலிசத்தை அமல்படுத்துவதில் ஒரு மாலுமியைப் போன்று செயல்பட்டார். இது முதலாளியவாதிகளை ஆத்திரம் கொள்ள வைத்தது அவர்கள் ஸ்டாலினை முதன்மையாக்கி அவதூறு செய்தனர்.

இதற்காக தொழில்முறை அடிப்படையில் அவதூறுகளை உருவாக்கி பரப்பினர். இந்த அவதூறுகளை பரப்ப அதற்கான நிறுவனங்கள் ஊழியர்கள் உருவாக்கப்பட்டனர். அவற்றின் மூலம் பொய்யை உண்மையாக்க பாடுபட்டனர் அவை அனைத்தும் எவ்வாறு பொய் என்பதை இந்த குறுநூல் தனது எல்லைக்குட்பட்டு நிறுவுகிறது.

ஸ்டாலின் என்ற சர்வாதிகாரி தன்னிச்சையாக தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்கிறார் என்பதை போல கட்டமைத்தனர். ஆனால் உண்மையில் அவர் அப்படியான முறையில் முடிவுகள் எதையும் எடுத்ததில்லை. கட்சியின் தலைவர் என்ற முறையில் அரசு தலைவர் என்ற முறையில் அனைத்து பிரிவினரின், ஊழியர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். அதில் ஒன்று பட்ட கருத்துகளை வர வைத்தார் அந்த முடிவுகளையே அமல்படுத்தினார். இதற்கு மாறாக தன்னிச்சையான முடிவுகள் குறித்த கருத்துக்கள் அனைத்தையும் அவர் மறுத்தார்.

1930 - 1936 ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியனில் மற்றும் அதன் ஒரு அங்கமாக திகழ்ந்த உக்ரைனில் கடும் பஞ்சம், பசி, பட்டினி ஆகியவை நிலவியதாகவும் இதன் காரணமாக பல மில்லியன் மக்கள் பஞ்சத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள் எனவும் ஏகாதிபத்திய நாடுகள் கதையை அவிழ்த்து விட்டன. இதன் பின்னணியில் ஸ்டாலின் என்ற கொடுங்கோலன், சர்வாதிகாரி இருந்தார்; அவரின் கூட்டுப்பண்ணை திட்டமே அனைத்துக்கும் காரணம் என கதைகளை உருவாக்கினர்.

ஆனால் அவற்றை அக்காலத்தில் சோவியத்தில் வாழ்ந்த, சோவியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரிட்டிஸ் சோஷலிஸ்டுகள் பீட் ரைஸ் வெப் சிட்னி ஆகியோரின் கருத்துக்களும் அன்னா லூயிஸ் ஸ்டிராங் கருத்துக்களும் மறுத்து அம்பலப்படுத்துகின்றன. இவர்கள் அனைவரும் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொண்டார்கள் அல்ல. இவை அனைத்தையும் விட அமெரிக்கன் எண்டர்பிரைசஸ் இன்ஸ்டிடியூட் என்று அமெரிக்க அரசு நிறுவனமே இப்படி ஒன்று நிகழவில்லை என்று கூறிவிட்டது.

1936 - 1938 ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே சோவியத் ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட, சோவியத் ஆட்சியை கவிழ்க்க முயன்ற "பழைய போல்ஷ்விக்குகள்" மீதான சதி வழக்குகளில் ஸ்டாலின் பின் நின்றார் என்ற அவதூறு தொடர்ந்து பரப்பப்படுகிறது. அவர்களில் பெரும்பான்மையோரை இந்த வழக்குகளில் பொய்யாக சிக்க வைத்து பழி வாங்கினார் ஸ்டாலின் என எதிர்ப்பாளர்களால் பரப்பப்படுகிறது. ஆனால் அந்த வழக்கு வெளிப்படையாக எவ்வாறு நடந்தது என்பது குறித்து கூறும் அமெரிக்க தூதர் ஜோசப் ஈ டேவிஸ் பிரிட்டிஷ் வழக்கறிஞர் டின் என் பிரிட் ஆகியோரின் கருத்துக்களை முன்வைத்து ஸ்டாலின் மீதான பொய்களை இந்நூல் முறியடிக்கிறது.

1938 - 1941 ஆம் ஆண்டுகளில் உலகப்போரின் போதும் அதன் பிந்தைய ஆண்டுகளிலும் உலகப்போரை காரணமாக வைத்து தோழர் ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள், சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற பிரச்சாரம் நடக்கிறது. இவற்றில் எப்படி புனைவுகள் உருவாக்கப்படுகின்றன என்பதை ஸ்டாலின் காலத்தில் வாழ்ந்த ரஷ்ய எழுத்தாளர் சோல்ஜெனிட்சின் வாழ்க்கையை முன்வைத்து விளக்க முடியும். தனது எழுத்துக்களில் பாசிச சக்திகளை அதன் ஆதரவாளர்களை சோல்ஜெனிட்சின் எவ்வாறு ஆதரித்தார் இதன் அடிப்படை நோக்கம் என்ன என்று இந்த நூல் விளக்கம் அளிக்கிறது. 

1941 - 1953 ஆம் ஆண்டுகளில் உலகப் போர் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து நாட்டை சீரமைக்கும் பணி தோழர் ஸ்டாலின் முன் நின்றது. ஆனால் இதை மறைத்து ஸ்டாலினையே ஏகாதிபத்தியவாதி போல் சித்தரிக்கும் மோசடியும் நடைபெற்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான செல்வாக்கு மண்டலங்களை பிடித்துக்கொள்ளும் நாடுகளை பங்கிட்டுக் கொள்ளும் ஏகாதிபத்தியவாதியாக ஸ்டாலின் திகழ்ந்தார் என்று அவதூறு செய்தனர். இந்த அவதூறுகளை வாலண்டைன் பெரஷ்கோவ் நினைவுக்குறிப்புகள் சர்ச்சில் ரூஸ்வெல்ட் கடிதங்கள் மற்றும் அமெரிக்க தூதர் ஹாரிமன் நினைவுக் குறிப்புகள் ஆகியவை பொய்யாக்கி விடுகின்றன.

ஆனால் தோழர் ஸ்டாலினோ இந்தக் காலங்களில் நாட்டை நிர்மாணிக்கும் பணிகளில் தனது முழுக்கவனத்தையும் செலுத்துகிறார். அறிவியல், கலை இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சியை கட்டவிழ்த்து விட்டார் இதற்காக தொழிலாளர்கள் உழவர்களின் முன்முயற்சி மற்றும் திறன்களை ஊக்குவித்தார். அவர் பின்பு கட்சி மற்றும் நாட்டு மக்கள் நின்றனர். இதன் வளர்ச்சிப் போக்கில் பாட்டாளிவர்க்க கலை இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகியவை உன்னதமான வளர்ச்சியை அடைந்தன.

இவ்வளவு அவதூறுகள், போர்ச்சூழல் கொடுமைகள், இடையூறுகளுக்கு நடுவிலேயே சோசலிச கனவு உலகத்தை படைத்தனர் தோழர் ஸ்டாலினும் அவர் தம் நாட்டு மக்களும். அதுதான் ஏகாதிபத்திய முதலாளித்துவவாதிகளுக்கு அவர்களின் கூட்டாளிகளுக்கு இன்றும் கூட கொடுங்கனவாக விளங்குகிறது.

எனவே சோசலிசத்தின் சாதனைகளை மறைக்க சோசலிசத்தை வீழ்த்த தோழர் ஸ்டாலின் மீது அவதூறுகள் பொழியப்படுகின்றன. முதலாளித்துவ வாதிகளின் நோக்கம் அவர்களின் அரசியல் என்பது ஸ்டாலின் என்ற தனி மனிதர் அல்ல மாறாக சோசலிசத்தின் மீதான தீராத பகை உணர்வு ஆகும். இந்த முடிவையே இந்த குறுநூல் இறுதியாக வந்தடைகிறது.

அதேநேரம் இந்தப் குறுநூலில் கூறப்பட்டுள்ளவை தோழர் ஸ்டாலின் மீதான தாக்குதலுக்கான எதிர்வினை என்ற எல்லையில் மட்டுமே உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவற்றை தாண்டியும் விவாதிக்க வேண்டியது அவசியம் என்பதை காலம் உணர்த்தி விட்டது.

சோசலிச சமூக அமைப்பு பின்னடைவைச் சந்தித்தது இதுபோன்ற அவதூறுகளாலோ அல்லது கட்சிக்கு உள்ளேயே இருந்த சதிகாரர்களாலோ மட்டுமே அல்ல. சோசலிசக் கட்டுமானத்தை மேற்கொள்வதில் ஏற்பட்ட தவறுகளே அடிப்படைக் காரணம். இது குறித்து விமர்சன பூர்வமாக, விரிவாக தோழர் மாவோ ஆய்வு செய்தார். முதலாளிய மீட்சி குறித்து எச்சரித்தார் அவர் மறைவுக்குப்பின் மக்கள் சீனத்திலும் முதலாளிய மீட்சி நடைபெற்றுள்ளது. இது முதலாளிய மீட்சி குறித்த ஆய்வுகளை தொடர வேண்டியது அவசியம் என்பதை உணர்த்தியுள்ளது.

நோய் தீர்ப்பது அவசியம் என்றாலும் நோய் ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிவது அதைவிடவும் அவசியம். அது இந்த நூலின் எல்லைக்குள் வரவில்லை என்பதால் அது பற்றி விரிவாக பேசுவதை தவிர்க்கிறேன். அதேநேரம் சோசலிச கட்டுமானம் பற்றிய மீளாய்வு அனைத்து பொதுவுடமைக் கட்சிகளின் முன்பும் உள்ள ஒரு வரலாற்றுக் கடமையாகும். 

இவைபோன்ற அறிவுபூர்வமான நூல்கள் தமிழில் மிகக் குறைவே ஆகும். இந்த நூலே 1984 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் வந்தது ஆகும்.  தற்போது 2021ல் தான் தமிழில் வெளிவந்துள்ளது. தமிழக பாட்டாளி வர்க்கம் எவ்வளவு தூரம் உலக சோசலிச இயக்கத்தில் இருந்து பின் தங்கியுள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.

பெரிய கட்சிகள் செய்ய முன்வராத பெரும் பணியை தனி மனிதராகச் செய்த தோழர் சுந்தரசோழன் அவர்களுக்கு தமிழக பாட்டாளி வர்க்கம் கடன்பட்டுள்ளது அதற்கு உறுதுணையாக இருந்து நூல் பதிப்பித்த தோழர் தமிழரசன் அவர்களுக்கும் முன்னுரை வழங்கியுள்ள தோழர் அ.கா. ஈஸ்வரன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொழிலாளி வர்க்கமும் உழைப்பாளி மக்களும் இந்த நூலை படித்துப் பரப்ப வேண்டும்.

நூல் கிடைக்குமிடம்:

செஞ்சோலைப் பதிப்பகம்

 5/1015, பூஞ்சோலை நகர்,

முனீஸ்வர் நகர் விரிவாக்கம்

ஓசூர் - 635 109

விலை : ரூ. 80/-

பேச : 98948 35373

- கனகு கனகராஜ் (முகநூலில்)

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid09tdr3pvq5FRpKUJy4pdpnjgNThmNALy4P6tPwzRyHgrERYYk2z7aygA3Y1JckJV7l&id=100008199160657&sfnsn=wiwspwa&mibextid=6aamW6

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு