ஈடு செய்ய முடியாத இழப்பு – போபால் விஷவாயு பெருவிபத்து

செந்தளம் செய்திப்பிரிவு

ஈடு செய்ய முடியாத இழப்பு – போபால் விஷவாயு பெருவிபத்து

உச்ச நீதிமன்ற தீர்ப்புச் சுருக்கம்

“ஏற்கனவே தீர்வு காணப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதென்பது சட்டப்படி செல்லாததோடு நியாமற்றதாகும். சரத்து 142 ன் கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தியே அன்று நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1991 ல் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின் படி ஒரு மக்கள் நல அரசு பாதிக்கப்பட்டவர்களின் பெயரில் காப்பீடு திட்டம் உருவாக்கியிருந்தால் விபத்தின் துணை அல்லது நீண்டகால விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்க முடியும். எனவே அரசின் பெருங் கவனக்குறைவையும், மனுவில் கோரப்பட்ட 7,000 கோடி நிவாரணத்தொகையும் ஏற்க முடியாது” எனக் கூறி உச்ச நீதி மன்றம் மறு சீராய்வு மனுவை கடந்த மார்ச்-14 அன்று தள்ளுபடி செய்துள்ளது. 

30 ஆண்டுகளுக்கு மேலாக நீதி வேண்டி போராடும் போபால் மக்கள்

1984 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் டிசம்பர் 23 ம் தேதி இரவன்று விஷவாயு பெருவிபத்து ஏற்பட்டது. மத்திய பிரதேச அரசாங்கம் அளித்துள்ள அதிகாரப்பூர்வமான தகவலின் படி 3,787 பேர் பலியானதாகவும். 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சில ஆய்வுகள் பலி எண்ணிக்கை 15,000 க்கும் அதிகம் எனக் கூறுகின்றனர். ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் கழகம் 6,00,000க்கும் அதிகமானோர் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊனமடைந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

இழப்பீடு நாடகம்

கிட்டத்தட்ட 140 வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் இழப்பீடு கோரி தொடுக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கை எங்கள் நாட்டில் விசாரிப்பதை காட்டிலும் இந்திய மண்ணில் விசாரிப்பதே உசிதமானது என்று காரணம் கூறி அத்தனை வழக்குகளையும் அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இழப்பீடுகளை பெற்றுத் தருவதற்கென இந்திய நாடாளுமன்றத்தில் 1985-ல் தனிச்சட்டம் இயற்றப்பட்டது. உண்மையில் மத்திய அரசாங்கம் 17,000 கோடிக்கும் அதிகமான தொகையை நஷ்ட ஈடாகக் கோரி அமெரிக்காவில் அன்று வழக்குத் தொடுத்திருந்தது. அதுவும் அங்கு நிராகரிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற பார்வைக்கு வெளியே நடந்த சமரச பேச்சுவார்த்தையின் மூலம் யூனியன் கார்பைடு நிர்வாகம் 725 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர முன்வந்ததை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. ஒப்புக்கொள்ளப்பட்ட இழப்பீடு மிகக் குறைந்தது என்றும், நியாயமற்றது என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக மத்திய அரசு சீராய்வு மனு ஒன்றை 1991-ல் தாக்கல் செய்திருந்தது. அப்போது நீதிமன்றம் முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் தொடங்குவதற்கு போதிய காரணங்கள் இல்லையென்று அன்றே மறுத்துவிட்டது. இனி வருங்காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெற வேண்டுமெனில் அரசாங்கம் அவர்களுக்கு காப்பீடு திட்டங்களை உருவாக்கித் தரலாம் என்று வழிகாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆன்டர்சனை தப்பிக்க வைத்த ராஜீவ் அரசு

விஷவாயு பெருவிபத்து ஏற்பட்டு நான்கு நாள் கழித்து ஆலை முதலாளி ஆன்டர்சன் கைது செய்யப்ப்பட்டதாகவும், வீட்டுச் சிறையில் வைக்கப்போவதாக கூறி டெல்லியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு தனி விமானத்தில் கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு சென்று ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ஜாமீன் வழங்கப்பட்டு அமெரிக்காவிற்கு போலீஸ் பந்தோபஸ்துடன் தப்பிச் செல்வதற்கு உச்ச நீதிமன்றமும், உயர் அதிகாரிகளும் உதவி செய்துள்ளனர். அன்று தப்பியோடிய ஆன்டர்சனை பிடிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அந்த வழக்கு விசாரனையின் போதும் அவர் ஆஜராகவில்லை. வயது மூப்பின் காரணமாக 30 ஆண்டுகள் கழித்து கடந்த 2014-ல் அவரது மரணச் செய்தி மட்டும் இந்தியாவுக்கு வந்தது.

கார்ப்பரேட்களின் பொறுப்புணர்வு எங்கே?

1999-ல் யூனியன் கார்பைடு நிறுவனத்தை டவ் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனமும், டியுபாண்ட் டி நிமர்ஸ் என்ற நிறுவனமும் விலைக்கு வாங்கியது. 2010-ல் தவறான இறப்பு எண்ணிக்கை, அரைகுறையாக கணக்கிடப்பட்ட பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இழப்பீடு போதாது என்று  போராடி வந்த பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றை 2010ல் தாக்கல் செய்திருந்தது. “எல்லா பிரச்சினைகளும் தீர்வு கண்ட நிலையில்தான் நாங்கள் யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளோம். எனவே, யூனியன் கார்பைடு மீது விழும் எந்த கடப்பாடுகளும் எங்களை பொறுப்புக்குள்ளாக்காது என்று டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் கூறியதோடு கூடுதலாக இழப்பீடு தருவது தொடர்பாகவோ, வழக்கு விசாரணையில் ஆஜராவது தொடர்பாகவோ அல்லது விஷவாயு விபத்தினால் மாசுபாடடைந்த பகுதியை சீரமைத்து தருவது தொடர்பான எந்தவொரு விஷயமும் எங்களை கட்டுப்படுத்தாது” என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். 39 ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் 400 டன்களுக்கும் அதிகமான விஷவாயுக் கழிவுகளின் ஆபத்தை விட அதை சரிசெய்ய முன்வராத கார்ப்பரேட்களின் பொறுப்பற்றதனமே மிக ஆபத்தானது.

சட்டவாதம் என்ன சொல்கிறது?

ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்ட தீர்ப்புமே பெருந்தவறாகவும், பிழையாகவும் மாறுகிற பட்சத்தில் மட்டுமே மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும் என்று சட்டம் சொல்கிறது. இதுபோன்றதொரு குறுகிய எல்லையில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைக்கான இறுதித் தீர்ப்பு கடந்த 14 மார்ச் 2023 அன்று வெளியானது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வில் ஒருமனதாக மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். 1989-ல் வழங்கப்பட்ட நிவாரணம் இறுதியானது என்றும் அதை மாற்றவோ கூட்டவோ முடியாது என்றும் கூறியுள்ளனர். அடுத்தவர்கள் பையிலிருந்து பணத்தை எடுத்துத் தரச் சொல்லிக் கேட்பதற்கு முன்பாக தன் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை கொடுத்துதவ முன்வாருங்கள் என்று மத்திய அரசை பார்த்து கேட்டுள்ளது. டை கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் வாதத்தை ஏற்று இந்த வழக்கில் எவ்வித தொடர்பும் அற்ற ஒருவரை இழப்பீடு தரச் சொல்லிக் கேட்பதென்பது உலக நீதிமன்றங்கள் இதுவரையில் கண்டிராத ஒரு வழக்காகும். மறு சீராய்வு மனு தாக்கல் செய்து 14 ஆண்டுகள் கடந்த போதும் இதுவரையில் எந்தவொரு திருப்திகரமான, நியாயமான காரணங்களையும் மத்திய அரசு முன்வைக்கவில்லை என்று தீர்புரையில் கூறப்பட்டிருந்தது.

தொடர்ந்து நடந்து வரும் மக்கள் போராட்டம்

நீதிமன்றம் தங்களை வஞ்சித்துவிட்டது என்று பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆவேசத்துடன் எதிர்த்து வருகின்றனர். தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை நீதிமன்றம் புறக்கணித்துவிட்டது என்றும், தங்களுக்கு நீதி மறுக்கப்பட்டுவிட்டது என்றும் கூறுகிறார்கள். வழக்கை வெற்றிபெறச் செய்யும் நோக்கில் உறுதியாக சட்டப்போராட்டம் நடத்தத் தவறிய மத்திய அரசையும் விமர்சித்து வருகிறார்கள். 2020ல் அமெரிக்க அதிகபர் டிரம்ப் வருகையை எதிர்த்தும் இம்மக்கள் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் போராட்டம், அனுஉலை எதிர்ப்பு போராட்டம், சுற்றுச்சூழல் போராட்டம் போன்றவற்றிலும் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இன்னும் சிலர் இயற்கை நீதியும், மனித உரிமையையும், நிலைநாட்ட உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறிவருகின்றனர்.

- செந்தளம் செய்திப்பிரிவு