கறுப்பு பணத்தில் கட்சி நடத்த போட்ட கணக்கு!

அறம் இணைய இதழ்

கறுப்பு பணத்தில் கட்சி நடத்த போட்ட கணக்கு!

பாஜக அரசின் ஒவ்வொரு நகர்விலும் அரசியல் கணக்குகளே ஒளிந்திருக்கின்றன! 2000 ரூபாய் நோட்டு செல்லாது என சொல்லப்படுவது முந்தைய அதிரடி பணமிழப்பு நடவடிக்கை போன்று மக்களை  பாதிக்கும் பிரச்சினையல்ல. எனினும், இதற்கு பின்னணியில் பாஜகவின் நுட்பமான சொந்த ஆதாய அரசியல் ஒளிந்திருக்கிறது! 

2000 ரூபாயை எப்போது அறிமுகப்படுத்தினார்கள்? பணமதிப்பிழப்பின் போது அதிரடியாக அறிமுகமானதே 2000 ரூபாய் நோட்டுகள்! எதற்காக ஆயிரம் ரூபாயே செல்லாது எனும் போது இரண்டாயிரத்தை அறிமுகப்படுத்த வேண்டும்..? ஆயிரத்திற்கு குறைவான புதிய புதிய நோட்டுகளை அல்லவா அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும். காரணம், என்னவென்றால் தங்கள் சொந்த கட்சிக்காரர்களும், வேண்டப்பட்டவர்களும் உடனடியாக பணமாற்றப் பரிவர்த்தனையை எளிதாக நடத்திச் செல்லத் தான்! அதுவே நிஜத்திலும் நடந்தது.

ஆனால், அதே சமயம், அதிரடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி வாசலில் வரிசையில் நின்றதில் மயங்கி விழுந்தும், தற்கொலை செய்தும் 150 பேர் இறந்தனர்! எத்தனையோ கோடி பேர் எதிர்காலத்தை தொலைத்தனர். பல கோடி மக்களின் வாழ்க்கையை அது தலை கீழாக புரட்டிப் போட்டது. இந்திய பொருளாதாரத்தின் மீதான மரண அடியாக அது பார்க்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகான இந்தியா சந்தித்த சொல்லொண்ணா துயரம் அது!

கருப்பு பணத்தை ஒழித்தல், பயங்கரவாதத்திற்கு பணம் செல்வதை தடுத்தல், ஊழலை ஒழித்தல், பொருளாதாரத்தில் உள்ள பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவையே பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கான காரணமாக சொல்லப்பட்டது. ஆக, என்ன காரணத்திற்காக அறிவிக்கப் பட்டதோ அவை நடைபெறவில்லை என்பதும், மாறாக அதனால் ஏற்பட்ட அவலமும், ரணமும், காயங்களும் இன்றும் தொடர்கின்றன.

2018 க்குப் பிறகு ரூபாய் 2,000 நோட்டுகள் ஏன் அச்சடிக்கப்படவில்லை? என்பதை யோசித்தால், அப்போதிருந்தே அந்த நோட்டுகளை புழக்கத்தில் இருந்து தூக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு பாஜக அரசு வந்திருக்கிறது என்று தான் பொருள்! இரண்டாயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த போது சில்லறைகளை மாற்ற மக்கள் பட்ட அவஸ்த்தைகள் சொல்லி மாளாது. ஆனால் இந்த இரண்டாயிரம் தாளை கடந்த இரண்டாண்டுகளாகவே கண்ணில் பார்ப்பதே அபூர்வமாக இருந்தது! ஏறத்தாழ அது புழக்கத்தில் இருந்தாலும் இல்லை எனச் சொல்லக் கூடிய நிலையே இருந்தது.

கிட்டத்தட்ட ஆறு லட்சம் சொச்சம் கோடிக்கு 2,000 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் விட்ட நிலையில், அவற்றில் சரிபாதி எங்கோ பதுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன என்பது தான் உண்மை! அவை யாரிடம் உள்ளன? என்று பார்க்கப்போனால் கறுப்பு பணம் வைத்திருக்கும் தொழில் அதிபர்கள், சட்ட விரோத தொழில் செய்பவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரிடம் தான் உள்ளன! அதில் பாஜக ஆட்களும் உள்ளனர். அரசாங்கம் தங்களுடையதாக இருப்பதால் தங்கள் ஆட்களுக்கு செளரியமாக காரியம் செய்து கொடுத்துவிடுவார்கள். மற்றவர்களை அடையாளம் காணவும், அவர்களிடம் பேரம் நடத்தவும் இந்த 2000 நோட்டு செல்லாது அறிவிப்பு உதவும்.

இதற்கு தோதாகத் தான் எலக்டோரல் பாண்ட் எனப்படும் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ஏற்கனவே கொண்டு வந்துள்ளதே பாஜக அரசு!

ஒரு தனிநபரோ, கார்ப்பரேட் நிறுவனங்களோ அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பினால், அவர்கள் பாரத ஸ்டேட் வங்கி கிளை ஒன்றை அணுகி, விரும்பிய தொகை செலுத்தி அதற்கான மதிப்புடைய பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம் . அவ்வாறு பெற்ற தேர்தல் பத்திரங்களை தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளின் அதிகாரபூர்வ வங்கி கணக்குகளில் செலுத்தலாம் என்பதாக கறுப்பு பணத்தை தங்கள் கட்சிக்கு அதிகாரபூர்வமாக மாற்றிக் கொள்ளத் தோதாகத் தானே இதை கொண்டு வந்தனர்.

நன்கொடை அளித்த நபர்கள் வருமான வரித்துறையிடம் கணக்கு காண்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பது மட்டுமல்ல, இவர்களுக்கு வரிச்சலுகையும் உண்டு. கொடுத்தவர் யாருக்கு கொடுத்தேன் என்று சொல்ல வேண்டியதில்லை! கணக்கும் காட்ட வேண்டியதில்லை!

ஆக,தேர்தல் பத்திரங்கள் திட்டமானது  ஆளுங்கட்சிக்கு தங்கு தடையற்ற கார்பரேட் மற்றும் அனாமதேய நன்கொடைகளுக்கு வழி வகுத்துள்ளது என நாம் அப்போதே அறம் இதழில் குறிப்பிட்டு இருந்தோம்.

லஞ்சத்தை சட்ட பூர்வமாக்கும் தேர்தல் நிதி பத்திரங்கள்

இதற்கு எடுத்துக்காட்டாக குஜராத்தில் கொத்தாக வெற்றியை அள்ளிய பாஜகவின் பின்புலத்தில் இருந்தது இந்த தேர்தல் நிதி பத்திரங்களே என்பதையும், மொத்த தேர்தல் நிதியில் 94 சதவிகிதம் பாஜகவிற்கு மட்டுமே சென்றதையும் குறிப்பிட்டு இருந்தோம்.

ஆக, இந்த இரண்டாயிரம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் நாட்டிற்கோ, மக்களுக்கோ கடுகளவும் பயனில்லை! மாறாக, பாஜக காட்டில் பணமழை கொட்டோ கொட்டு என கொட்டப் போகிறது என்பது மட்டும் உண்மை!

சபாஷ்! இனி நம்ம காட்டில் பண மழை தான்!

இந்த இரண்டாயிரம் ரூபாய் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மற்றொரு பக்கம் அரசியல் நோக்கம் சார்ந்ததாகும். அது எதிர்கட்சிகளிடமோ, அதன் ஆதரவாளர்களிடமோ இருக்கும் பணத்தை செல்லாக்காசாக்குவதாகும். கர்நாடகா தேர்தலின் அனுபவமாகக் கூட இதைக் கருதலாம். அடுத்து வரவுள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேச தேர்தலை உத்தேசித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவும் இதை புரிந்து கொள்ள வேண்டும். எப்படியும் ஆட்சியில் இருப்பதால் எளிதில் தங்கள் கைகளுக்கு தான் கருப்பு  பணம் வந்து சேரும் என்ற கணக்கில் தான் பாஜக அரசு இதை செய்துள்ளது.

மக்கள் கண்ணோட்டத்தில் மற்றும் அன்றாட பணப் புழக்கம் சார்ந்த வியாபாரிகள் கண்ணோட்டத்தில் இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் தற்போது சுமார் 3,62,000 கோடிகள் புழக்கத்தில் இருக்கும் நிலையில் இதற்கு இணையான அளவுக்கு மாற்று ரூபாய் தாள்கள் இருக்குமா என்பது மிகவும் சந்தேகம் என்பதால் அடிக்கடி வங்கிக்கு அலைந்து அல்லல்பட நேரும் என்ற அச்சம் ஒரு பக்கம் இருக்கிறது என்பது உண்மையே! நியாயப்படி பார்த்தால் ஆயிரம் ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்திவிட்டாவது இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.

யார் கண்டது? அதிரடியாக இரண்டாயிரத்தை அறிமுகப்படுத்தியதை போல, திடீரென்று ஐயாயிரம் ரூபாய் அல்லது பத்தாயிரம் ரூபாய் என்று கூட இந்தக் கோமாளிகள் கொண்டு வர வாய்ப்புள்ளது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்.

aramonline.in /13621/bjp-is-black-money-party/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு