ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி: பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் உழைக்கும் மக்களின் குரல்
செந்தளம் செய்திப்பிரிவு

நெதன்யாகு கும்பல் இஸ்ரேலின் காசா மீதான இனப்படுகொலைத் தாக்குதல்களுக்கு எதிராக, ஏகாதிபத்திய நாடுகளின் மையங்களிலேயே மக்கள் சக்தி கிளர்ந்தெழுந்துள்ளது. சென்ற ஜூன் மாதத்தில் உலகம் முழுவதும் பெரும்பாலும் ஐரோப்பா நகரங்கள் எங்கும் பாலஸ்தீனத்தை ஆதரித்தும், இஸ்ரேலில் தேசிய இனப் படுகொலையை எதிர்த்தும் மாபெரும் போராட்டங்கள் வெடித்தது. நெதர்லாந்தில் தி ஹேக் நகரம், பிரேசிலில் சாவோ பாலா, கிரீசில் ஏதன்ஸ், பெல்ஜியத்தில் பிரசல்ஸ், ஸ்பெயினில் பார்சிலோனா, போர்ச்சுகலில் ரியா டி அவிரொ, மெக்சிக்கோ, ஸ்வீடனில் ஸ்டாக்ஹோம், பிரிட்டனில் லண்டன் என்று உலகம் முழுக்க அதிர்ந்தது. ஐரோப்பிய நகரங்களில் வெடித்தெழுந்த மாபெரும் மக்கள் போராட்டங்கள், முதலாளித்துவ அரசுகளின் போலித்தனமான நிலைப்பாடுகளையும், பாலஸ்தீன மக்கள் மீதான இந்த அரசுகளின் வர்க்க விரோதத்தையும் அம்பலப்படுத்துகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்கள், வெறும் கோபத்தின் வெளிப்பாடுகள் அல்ல; அவை ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் இரட்டை வேடம்: அரசும் மக்களும் நேர் எதிர் முனைகளில் இலண்டனில் பெரும்போராட்டம்:
2025 ஜூன் மாதம் பல ஆயிரக்கணக்கான மக்களும் ஜனநாயக சக்திகளும், போர் எதிர்ப்பு இயக்கங்களும், பாலஸ்தீன ஆதரவு குழுக்களும் பெரும் போராட்டத்தை நடத்தின. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக "பாலஸ்தீன் ஆக்ஷன்" குழு இங்கிலாந்தின் மிகப்பெரிய விமானப்படை தளமான ராப் ப்ரைஸ் நார்டன் (RAF Brize Norton)-ல் நுழைந்து, இரண்டு ராயல் ஏர்ஃபோர்ஸ் ஏர்பஸ் வொயேஜர் (Airbus Voyager) இராணுவ போர் விமானங்களின் டர்பைன் என்ஜின்களில் பைண்ட் ஸ்ப்ரேயர் (Paint Sprayer) மூலம் சிகப்பு சாயம் பூசினர். இதனால் இரு விமானங்களும் சேதமடைந்ததாக கூறி அந்த இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்து தடை செய்துள்ளது இங்கிலாந்து பாராளுமன்றம். மாவோ, ஏகாபத்தியங்கள் ஒரு காகித புலிகள் என்று கூறினார். ஏகாதிபத்திய போர் விமானங்கள் பெய்ண்டை பூசியதற்கே பறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று படிக்கும்போது அவர் கூற்று எவ்வளவு உண்மை என்று புலப்படுகிறது. இந்த சாயப் பூசுதல்தான் தீவிரவாதமாகவும், பயங்கரவாதமாகவும் கூறி இங்கிலாந்து நாடாளுமன்றம் பாலஸ்தீன் ஆக்ஷனை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய 382-க்கு 26 வாக்குகளுடன் வாக்களித்தனர். இதை கண்டித்து இலண்டன் வீதிகளில் இன்று பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றது.
ஜெர்மன் முதலாளித்துவ அரசு, "இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு" என்ற ஏகாதிபத்திய முழக்கத்தை இடைவிடாமல் பறைசாற்றுகிறது. அதேப்போல ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலான நாட்டு அரசுகள் இந்த முழக்கத்தை இடைவிடாமல் பிரச்சாரம் செய்கிறது. இது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக, மத்திய கிழக்கில் தனது நலன்களைப் பாதுகாக்க, தேசிய இன ஒடுக்குமுறைக்கும் நவகாலனித்துவ திட்டத்திற்கு அளிக்கும் அப்பட்டமான ஆதரவாகும். அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் போன்ற முதலாளித்துவ அரசியல்வாதிகள், "இஸ்ரேலிய ராணுவத்தின் நோக்கம் புரியவில்லை" என்று அவ்வப்போது வெளியிடும் கவலை தோய்ந்த அறிக்கைகள், மக்களின் போராட்ட உணர்வைத் தணிக்கும் ஒரு நயவஞ்சக நாடகமே அன்றி வேறில்லை. ஆயுத ஏற்றுமதியைத் தொடர்வதன் மூலம், ஜெர்மன் அரசு இந்த இனப்படுகொலையில் தனது பங்களிப்பைத் தொடர்ந்து செய்து வருகிறது.
ஆனால், ஜெர்மன் பாட்டாளி வர்க்கமும், முற்போக்கு மக்களும் இந்த ஏகாதிபத்திய சதியை நிராகரிக்கிறார்கள். ARD கருத்துக் கணிப்பின்படி, 63% ஜெர்மானியர்கள் இஸ்ரேலின் இராணுவ வெறியாட்டத்தை "மிகத் தீவிரமானது" என்றும், 73% மக்கள், ஹமாஸை அழிப்பதாகக் கூறி அப்பாவி மக்களைக் கொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கருதுகின்றனர். இது ஆளும் வர்க்கத்திற்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையிலான அடிப்படை முரண்பாட்டைத் தெளிவாகக் காட்டுகிறது. இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தைக் குறைக்கவோ அல்லது முற்றிலுமாக நிறுத்தவோ 73% மக்கள் கோருவது, ஏகாதிபத்தியப் போர்வெறிக்கு எதிரான மக்கள் சக்தியின் தீர்ப்பாகும்.
பெர்லின் தெருக்களில் போர்க்குணம்: அரசின் ஒடுக்குமுறையைத் தகர்த்தெறிந்த மக்கள் சக்தி
அரசின் கடுமையான ஒடுக்குமுறைகளையும், தணிக்கைகளையும் மீறி, பெர்லினில் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்கள் புதிய வீரியத்துடன் வெடித்துள்ளன. ஜூன் 21 அன்று நடந்த மாபெரும் பேரணி, அரசின் அடக்குமுறை எந்திரம் மக்களை முடக்கிவிட முடியாது என்பதற்கான சான்றாகும். காவல்துறையின் முதலாளித்துவக் கணக்குகளைப் பொய்யாக்கி, குறைந்தது 30,000 பேர் திரண்டதாக அமைப்பாளர்கள் அறிவித்தது, மக்கள் எழுச்சியின் உண்மையான பரிமாணத்தைக் காட்டுகிறது.
1948-இல் பாலஸ்தீன மக்கள் தங்கள் தாயகத்திலிருந்து விரட்டப்பட்ட நக்லா தினத்தில் நடந்த போராட்டத்தில், அரசின் அடக்குமுறை ஏவிவிடப்பட்டு 50 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த அடக்குமுறைகள், முதலாளித்துவ அரசு எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை நசுக்கவே முயலும் என்ற மார்க்சியப் பேருண்மையை மீண்டும் உறுதி செய்கிறது.
இந்த இயக்கத்தின் உயிர்நாடியாக, களத்தில் உள்ள ஜனநாயக அமைப்புகளும், சமூக ஊடகங்கள் வழியான மக்கள் திரட்டலும் விளங்குகின்றன. இந்த நிகழ்ச்சி அமைப்பாளர்களில் ஒருவரான அபேட் ஹசன் கூறுவது போல, ஜெர்மனியின் மூலை முடுக்கிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தோழர்கள், ஜனநாயக சக்திகள் அணிதிரண்டு வந்ததனர் என்று கூறியுள்ளார். இந்த கூற்றிலிருந்து இது ஒரு சர்வதேச பாட்டாளி வர்க்கப் போராட்டப் பிரச்சினை என்பதை உணர்த்துகிறது. அயர்லாந்து தோழர்கள், ஜெர்மன் இளைஞர்கள், இடதுசாரிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என அனைவரும் வர்க்கமாய் ஒன்றுபட்டு நிற்பது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வர்க்க அமைப்பின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. பாலஸ்தீன வண்ண உடையணிந்த சீனத் தம்பதியினர், இந்த உலகளாவிய வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே.
"நதியிலிருந்து கடல் வரை" (From the river to the sea) என்ற பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளின் முழக்கத்தை ஜெர்மன் அரசு "ஹமாஸின் சின்னம்" என்று முத்திரை குத்தி தடை செய்ய முயன்றது. ஆனால், நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியது. ஜெர்மன் அரசு தனது அடக்குமுறையால் ஒரு "அச்ச உணர்வை" விதைக்கப் பார்க்கிறது. இருப்பினும், அரசின் கண்காணிப்பையும் மீறி, பாராளுமன்றத்தின் முன் பல்லாயிரக்கணக்கானோர் "நதியிலிருந்து கடல் வரை" என்று முழங்கியது, அவர்களின் போர்க்குணத்தையும், விடுதலையின் மீதான அசைக்க முடியாத உறுதியையும் காட்டுகிறது. "இஸ்ரேல் மீது தடைகளை விதி; இந்த இனப்படுகொலைக்கும், அதன் மூல காரணமான காலனியாதிக்க அமைப்புக்கு முடிவு கட்டு" என்பதே அவர்களின் புரட்சிகரமான கோரிக்கையாகும். "நதியிலிருந்து கடல் வரை" என்பது பாலஸ்தீன போராளி அமைப்புகள் இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்க மறுப்பதும், இஸ்ரேல் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க மறுப்பதும்தான் இப்பிரச்சனை. இஸ்ரேல் - பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை அங்கீகரிப்பும் ஏகாதிபத்திய தலையீடற்ற சுதந்திர அரசுகளாக அமைய வேண்டும் என்பதுதான் உலக உழைக்கும் மக்களின் விடுதலை குரல்.
தி ஹேக்: செங்கடல் எனத் திரண்ட மக்கள் சேனை
நெதர்லாந்தின் தெருக்கள், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் டச்சு ஏகாதிபத்திய அரசைக் கண்டித்து இலட்சக்கணக்கான உழைக்கும் மக்களால் செந்நிறத்தில் மூழ்கின. 150,000 பேர் அணிவகுத்து, "செங்கோடு கடந்துவிட்டது" என்று தங்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இது வெறும் குறியீடு அல்ல; இனப்படுகொலையில் கூட்டாளியாக இருக்கும் ஒரு முதலாளித்துவ அரசை, மக்கள் சக்தி விசாரணை செய்வதாகும். தென்னாப்பிரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக இனப்படுகொலை வழக்கைத் தொடுத்திருக்கும் சர்வதேச நீதிமன்றத்தைக் கடந்து இந்தப் பேரணி சென்றது, உலக மக்களின் நீதிமன்றத்தில் நெதன்யாகுவின் அரசும், அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதைப் பறைசாற்றியது.
ஐர்லாந்தின் டப்ளின் நகர்:
பாலஸ்தீனிய நக்பாவின் 77வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி மே மாதம் டப்ளின் நகரில் நடைபெற்ற பெரிய அளவிலான பாலஸ்தீன் ஆதரவுப் பேரணி நடைபெற்றது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் சியோனிச கைப்பாவையான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போருக்கு எதிராக, அயர்லாந்து மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் அழுத்தத்தின் விளைவாக, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குத் தடை விதிக்கும் மசோதாவிற்கு அயர்லாந்து அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. மக்கள் போராட்டத்தின் அழுத்தங்களால் வெற்றி இது போன்ற போலி முகமூடியை அணிய வேண்டிய அவசியத்திற்கு அவ்வரசுக்கு அழுத்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
சமீபத்தில், அயர்லாந்து-பாலஸ்தீன ஒருமைப்பாட்டுக் குழு (IPSC) ஏற்பாடு செய்திருந்த தேசிய ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, காசாவில் உடனடிப் போர்நிறுத்தம் கோரியும், இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் அமைப்பாளர்கள் கூறுகையில், "காசாவில் நடப்பது ஒரு வரலாற்று நிகழ்வு அல்ல; ஒவ்வொரு நொடியும் நிகழும் ஒரு படுகொலை. காசா மக்கள் ஏற்கனவே அகதிகளாக உள்ளனர், இப்போது அவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலிருந்து பலமுறை வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர்," என்றனர்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் காலனித்துவப் பஞ்சத்தின் கொடூரத்தை அனுபவித்த அயர்லாந்து மக்கள், இன்று பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் திணிக்கும் "கட்டாயப் பசிக்கு" எதிராகக் குரல் கொடுப்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் சர்வதேச பாட்டாளி வர்க்க ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்துகிறது. மக்கள் அழுத்தத்தின் காரணமாக, அயர்லாந்து ஜனாதிபதி மைக்கேல் டி. ஹிக்கின்ஸ் போன்ற முதலாளித்துவ அரசியல்வாதிகள் கூட, காசாவில் நடப்பது "கட்டாயப் பசி" என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
உலகளாவிய பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்
பெர்லின், தி ஹேக் மட்டுமல்ல; பார்சிலோனா முதல் ஏதென்ஸ் வரை, மெக்சிகோ சிட்டி முதல் ரியோ டி ஜெனிரோ வரை, உலகெங்கிலும் பாட்டாளி வர்க்கம் பாலஸ்தீன விடுதலைக்காக வீதியில் இறங்கிப் போராடுகிறது. இஸ்ரேலியப் படைகளால் கடலில் சிறைபிடிக்கப்பட்ட பிரேசிலியப் போராளி டியாகோ அயிலா , "இப்போது உலகம் சியோனிசத்தைத் தோற்கடித்து, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அதற்குப் பதிலாக, சுரண்டலற்ற, சமத்துவமான ஒரு புதிய சோசலிச சமூகத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது." என்று கூறுவது போல ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் தமது உடனடியான கடமைகளும் திட்டங்களையும் நோக்கி அணித்திரளவேண்டும்.
இஸ்ரேல் - அமெரிக்க ஏகாதிபத்தியத்திய இன அழிப்பு போரில், 55,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைப் படுகொலை செய்துள்ளது. இந்தப் படுகொலைகளுக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்புகள், வெறும் போர் நிறுத்தத்திற்கான அழுத்தங்கள் அல்ல. அவை, பாலஸ்தீன மக்களின் முழுமையான விடுதலைக்கும், அதன் பின்னணியில் உள்ள உலக முதலாளித்துவ-ஏகாதிபத்திய அமைப்பின் வீழ்ச்சிக்குமான போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதிகளாகும். அமெரிக்க தலைமையிலான நேட்டோ அணியின் முழு ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையாகும். இந்த இனப் படுகொலையையோ, தேசியப்போராட்டங்களை வெற்றி பெறவோ இன்னொரு ஏகாதிபத்திய முகாமை நம்புவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை காசா மீண்டும் ஒரு சாட்சியமாகும். ஒரு தசாப்தத்திற்கு முன் ஈழத்தில் இனப்படுகொலையை நடத்தி முடித்த இராஜபக்சே கும்பல். இதற்கு போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்தது சீன-இரசிய அணி. இந்த சீன-இரசிய செல்வாக்கிற்கு இலங்கை செல்லாமல் இருக்க அமெரிக்க தலைமையிலான அணியும் இனப் படுகொலைக்கும் ஆதரவாக பல்வேறு உதவிகளை செய்தது. இதே நிலைதான் காசாவில் இனப்படுகொலைக்கு இரு முகாம்களும் உதவிகொண்டிருக்கின்றன. இஸ்ரேலின் இனப்படுகொலையை பெயரளவில் கண்டித்து, தங்களின் இஸ்ரேல் மீதான மேலாதிக்கத்தை பெறுவதற்கே அதை பயன்படுத்துகிறது. ஏனென்றால் இஸ்ரேலிலும் தங்களின் முதலீடுகளை வைத்துள்ளது இந்த முகாம். இந்த இரு முகாம்களின் வேட்டைகாடாக இஸ்ரேலிய உழைக்கும் மக்களும் பாலஸ்தீன தேசம் உள்ளது. எந்த ஒரு தேசியப் போராட்டங்களுக்கும், விடுதலை போராட்டங்களுக்கும் ஏகாதிபத்தியங்கள் அனுமதிப்பதில்லை, ஆதரவளிப்பதும் இல்லை. ஏகாதிபத்தியம் என்றாலே நாடுகளை கட்டுப்படுத்துவது; நாடுகளின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிப்பது; தேசிய கூறுகளை அழிப்பது; தேசங்களை சுரண்டுவது; தேசங்களிடையே விரோதத்தை ஏற்படுத்தி பிளவுப்படுத்தி அமைதியை சீர்குலைப்பது; போர்களை உருவாக்குவது என்பதுதான் லெனினியம். இவைகளை எதிர்த்து உலகெங்கும் பல இலட்சக் கணக்கான உழைக்கும் மக்கள் இத்தகைய ஏகாதிபத்திய சீர்குலைவுகளை எதிர்த்தும் பாலஸ்தீன விடுதலைக்காகவும் திரள்கின்றனர். அதில் இந்த இரு முகாம்களை சேர்ந்த உழைக்கும் மக்களும் அடங்குவர். ஆனால் இந்த நிகழ்வுகளை தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் தங்கள் வசப்படுத்த முயல்கின்றனர். இந்த தொண்டு நிறுவனங்கள் உதட்டளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பும், மனதளவில் ஏகாதிபத்திய சேவையையும் கைக்கொள்கின்றனர். ஏனென்றால் இத்தொண்டு நிறுவனங்களை இயக்குவதே ஏகாதிபத்திய நிதி மூலதன் கும்பல்கள்தான். இதன் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் இறையாண்மை மிக்க பாலஸ்தீன விடுதலை என்பதிலிருந்து மக்களை திசை திருப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளதை உழைக்கும் வர்க்க மக்கள் எச்சரிக்கையுடன் அனுகவேண்டும். பாலஸ்தீனம் மட்டுமல்ல ஏகாதிபத்திய நவகாலனியத்திலிருந்து அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் விடுதலைக்காகவும் போராடுவோம்! குரல்கொடுப்போம்.
- செந்தளம் செய்திப்பிரிவு