ஊழல் என்பது முதலாளித்துவ உற்பத்தியின் தவிர்க்க இயலாத உபவிளைவாகும்

சந்திரன் தா - துரை. சண்முகம்

ஊழல் என்பது முதலாளித்துவ உற்பத்தியின் தவிர்க்க இயலாத உபவிளைவாகும்

முதல்வராக விஜய் பதவியேற்றதிலிருந்து முதல்வரும், அமைச்சர்களும் நிர்வாகம் வெளிப்படையாக இருக்கும் என்றும்,  யாரும் எதற்கும் லஞ்சம் தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

 இது ஊடகங்களிலும் வெளிவருகிறது.

 பள்ளிக்கல்வித்துறை,  பொதுப்பணித்துறை,  அரசு வாடகைக்கு எடுக்கும் கப்பல் உரிமையாளர்கள் என பலரும் இந்த ஆட்சியில் லஞ்சம் கொடுக்காமல் பணி நடைபெற்றதாக வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள்.

 பல இடங்களில் லஞ்சம் வாங்குவதில்லை என்று அரசுத்துறைகளை சுட்டிக்காட்டி பொதுமக்கள் சிலர் கொடுக்கிற பேட்டிகள் போன்றவையும் காணப்படுகிறது.

 இவைகளில் பெரும்பாலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

 ஊழல் என்பது எதோ மனிதர்களின் ஆசை சார்ந்தது என்றும், நேர்மையான நிர்வாகம் நடந்தால் ஊழல் ஒழிந்துவிடும் என்றும் முதலாளித்துவ சிந்தனையாளர்கள் பேசுவதை கேட்கிறோம்.

ஆனால் இது உண்மையல்ல.

மாறாக முதலாளித்துவ உற்பத்தியின்படி நடக்கும் சமூகத்தில் ஊழல் என்பது முதலாளித்துவ உற்பத்தியின் தவிர்க்க இயலாத உபவிளைவாகும்.

முதலாளித்துவம் இருக்கும்வரை ஊழல் பல்வேறு வடிவங்களில் தொடரவே செய்யும் .

அப்படி இருந்தும் விஜய் ஊழலை ஒழிப்பதற்காக ஒரு முயற்சி எடுப்பது என்பதை எப்படி பார்ப்பது ?

விஜய் சூதாட்டம் மிகுந்த சினிமா துறையில் தன்னுடைய நடிப்பால் பல நூறு கோடிகளை சம்பாரித்து வைத்திருக்கிறார்.

 இவை இந்தியாவில் வருமானம்  சம்பந்தப்பட்ட சட்டங்களோடு இணைத்துப் பார்க்கும்போது,  கண்டிப்பாக சட்டத்திற்கு புறம்பான வருமானம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

 அப்படிப்பட்ட ஒருவர் தனியாக கட்சி தொடங்கி,  இங்கே ஆட்சியை பிடித்து  ஆட்சி நடத்துவது என்பது,  இந்த சமூகத்தின் உற்பத்திக்கு அடித்தளமாக இருக்கிற முதலாளித்துவத்தின் அனுமதியில்லாமல் நடக்க முடியாது.

 இதைத்தான் மார்க்சியவாதிகள் பேச வேண்டும் .

கண்டிப்பாக முதலாளித்துவத்தினுடைய கொடுங்கரங்கள் இதற்கு பின்னால் இருக்கிறது .

இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களுக்கும் அவர்களை ஆதரித்த முதலாளித்துவ கட்சிகளுக்குப் பின்னாலும் இதே கொடுங்கரங்கள் தான் இருந்தது.

 இந்த முதலாளித்துவ உற்பத்தியின் தவிர்க்க முடியாத உபவிளைவான ஊழலை ஏற்றுக் கொண்டு,  அதில் பங்கு கொண்டு அந்தப் பங்களிப்பை நார்மலைஸ் செய்தவர்கள் தான் இதற்கு முன் ஆண்ட கட்சிகளும், அவர்களை ஆதரித்தவர்களும். முதலாளித்துவ சிந்தனையாளர்களும், முன்பு ஆட்சியிலிருந்தவர்களும் ஊழலை தவிர்க்கவே முடியாது , ஊழலை ஒழிக்கவே முடியாது என்ற ஒரு கருத்து திணிப்பை  மக்கள் மத்தியில் பரப்பினார்கள்.

 இந்த நிலையை  ஒரு கட்டத்திற்கு மேல் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் எதிர்ப்பு வரும் என்பதை முன்கூட்டியே முதலாளித்துவம் தீர்மானிக்கிறது.

ஆனால் முதலாளித்துவ அரசியல் கட்சிகள் இதை உணர்வதில்லை.

 எனவே ஊழல் மற்றும் சீரழிந்த அரசு நிர்வாகத்திற்கு  எதிரான மக்களிற் சிந்தனைப் போக்குகளை முதலாளித்துவமே தனது புதியவகை ஆட்களின் மூலம் கையாள நினைக்கிறது.

 அப்படிப்பட்டதொரு புதிய சக்தியை அதுவே  அறிமுகப்படுத்துகிறது .

அந்த சக்தியாக ஏற்கனவே ஊழல் ஒழிப்பு போராட்டத்தில் அண்ணா ஹசாரே,  அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள் தோன்றினார்கள் .

இப்போது கரப்பான் பூச்சிகள் தோன்றியிருக்கிறது.

 அதேபோன்றதொரு சக்தி தான் விஜயும்.

இவர்கள் என்ன செய்வார்கள் என்றால் மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகிற ஊழல்களை ஒழிப்பது போன்ற ஒரு அடையாள நடவடிக்கையை தொடர்ந்து எடுப்பார்கள்.

 அதேசமயம் பெருமளவில் முதலாளித்துவ சுரண்டலுக்கு வலிமை சேர்க்கிற சட்டங்களை,  திட்டங்களை,  அதற்கு தோதான நடைமுறைகளை உருவாக்கி தருவார்கள் .

இதை உருவாக்கி தருவதற்கு தான் இந்த கட்சிகள் ஆட்சிக்கு வர வைக்கப்படுகின்றன.

 எனவே இந்த கட்சிகளை ஏற்கனவே ஊழல் செய்த கட்சிகள்,  ஊழலை சொல்லி எதிர்க்க முடியாது.

 அந்த நம்பிக்கையால்தான் பாரதிய ஜனதா கட்சி இதுவரை இருந்த முதலாளித்துவ ஜனநாயக மதிப்பீடுகளை,  நடைமுறைகளை எல்லாம் உடைத்து எறிந்து விட்டு  எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, கட்சிகளையே விலைக்கு வாஙுகுவது, கட்சிகளை உடைப்பது போன்ற வேலைகளைச் செய்கிறது.

அதே வேலையைத்தான்  தவெக வும் செய்கிறது.

ஒட்டுமொத்த முதலாளித்துவ உற்பத்தி மேல்கட்டுமானத்தில் ஏற்படுத்தியிருக்கும் பண்பாடான " லாபத்திற்காக எதைச் செய்தாலும் தவறில்லை " என்ற பண்பு மக்களிடமும் ஏற்பட்டிருப்பதால்தான், பா ஜகவின் அரசியல் எடுபடுகிறது.

இதுதான் இங்கு தவெகவுக்கும் நடக்கும். விஜயபாஸ்கர்களை இணைப்பது அறமற்ற செயல் என்பதற்கு பதிலாக ராஜதந்திரமாக முதலாளித்துவத்தால் முன்வைக்கப்பட்டு பெருமைக்குரியதாக பரப்பப்படும்.

அமித் ஷாவினு பிம்பம் அப்படி உருவானதுதான் .

இதுபோன்ற செயல்களால் பா ஜகவிற்கு ஏற்படாத பாதிப்பு தவெகவுக்கும் ஏற்படாது.

இதைப் புரிந்து கொள்ளாமல்  விஜயபாஸ்கர் போன்ற ஊழல்வாதிகள் வந்துவிட்டதால் தவெக பயங்கரமாக அடிவாங்கி விடும் என்று பேசுவது ,  இன்றைக்கு  அரசியல் என்னவாக மாறி இருக்கிறது என்று புரியாதவர்களுடைய பேச்சாகும்.

ஆனால் இதற்கு நேர் எதிராக,  மார்க்சியத்தை, ஊழலுக்கு வாய்ப்பேயில்லாத மார்க்சிய சமூகம் பற்றிய கருத்தை, அதை அடைவதற்கான நடைமுறையை முன்வைக்காமல், தொடர்ந்து அந்த அடிப்படையில் போராடாமல் , நாம் விரும்பும் மாற்றத்தை அடைய முடியாது.

இதை மேலும் மேலும் அழுத்தம் திருத்தமாக சொல்லி மக்களுக்கு மார்க்சிய வழிமுறைகளை கொண்டு செல்வதுதான்  ஒரே தீர்வே தவிர  ஏற்கனவே இருந்த முதலாளித்து கட்சிகளில் ஒன்றைப் பொறுக்கி எடுத்து இதுதான் முற்போக்கானது என்று விற்பனை செய்கிற வேலையை செய்கிறவர்கள்,  மார்க்சியவாதிகள் அல்ல,  மார்க்சிவாதிகளின் பெயரில் உள்ள சந்தர்ப்பவாதிகள் . முதலாளித்துவ கட்சிகளின் கையாட்கள்.

சந்திரன் தா

https://www.facebook.com/61557347300989/posts/122289306548244910/?rdid=80igTBDfgoABAUf3

==========================================

நமது கண்ணுக்குத் தெரிவது கட்சிகள் இடையே ஆன முரண்பாடு.  தங்கள் ஜனநாயக வாடிக்கையாளர்களை கவர்வதற்காக விதவிதமான முழக்கங்களையும் முதலாளித்துவ எஞ்சின் மாடல்களையும் பெயராக வைத்துக் கொள்கின்றன. 

பொதுவில் முதலாளித்துவக் கட்சிகள் என்று சொன்னாலும் இவர்களுக்கு பின்னே முதலாளித்துவக் குழுக்களின் போட்டியும் இருக்கின்றன. 

முதலாளித்துவ கூறுகளின் கூறுகெட்ட தனத்தை கொள்கை முரண்பாடுகளாக கட்சிகள் வழியாக வெளியே சித்தரித்துக் கொள்கின்றன.

"பண மூட்டைகள் பங்கு பேரங்கள் ஒன்றுக்கு ஒன்று கழுத்தறுப்புகள்.."

  என்று முதலாளித்துவத்துக்கு உள்ளே வினையாற்றும் குழுக்களின் போட்டிகள் பற்றி மார்க்சிய ஆசான்களின் நூல்களில் படித்திருக்கிறோம். 

அதன் திருவிளையாடல் காட்சிகளை இப்போது தமிழகத்தில் பார்க்கிறோம். 

தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக சதி எனும் செய்திகளின் பின்னணியில் ஒரு கார்ப்பரேட் கம்பெனி முக்கிய பங்காற்றி இருப்பதாக செய்திகள் வருகின்றன. இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை! விஜய் மூலமாக முன்னேறி இருக்கும் முதலாளித்துவ போட்டி குழுவை 

கழுத்தறுக்கும் வேலையில் வேறு ஒரு முதலாளித்து குழு செயல்பட்டு இருக்கும். அரசியல் அரங்கில் அது கட்சிகள் பேரங்கள் மூலமாகத்தான் இயங்கும்.

அதிமுக எம்எல்ஏக்கள் வரிசையாக ராஜினாமா செய்வது தவெக பக்கம் வருவது என்பதெல்லாம் 

கூட இத்தகைய முதலாளித்துவ குழு நலன்களில் இருந்து கட்சிகள் பெயரில் வெட்டப்படும் காய்கள் தான். 

ஆட்சி அதிகாரத்திற்கு வரும் எல்லா முதலாளித்துவக் கட்சிகளும் இதை ஒரு உத்தியாக கடைபிடித்து தன்னை பலப்படுத்திக் கொள்வது என்பது இந்தப் பின்னணியில் நடப்பதுதான். 

அதிமுக எனும் கூடாரம் அம்மாவின் ஆன்மாவோடு திவசத் தண்ணி தெளிக்கப்பட்டு விட்டது. 

அதன் கட்சி கட்டமைப்பு உட்பூசல்கள் போன்ற பல காரணங்களால் வலுவிழந்து விட்டது. இந்த மண் குதிரையை பெரிதளவு நம்ப முதலாளி வர்க்கம் தயாராக இல்லை. 

இந்தச் சூழலில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த திமுக அதன் பின்னால் இருக்கும் பெரும் முதலாளித்துவ அடிப்படை பெருவாரியான அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்களை, 

ஒரு வகையில் 'வாழ்ந்து கெட்ட' குடும்பத்தை வாரிப் போட்டுக் கொண்டது. 

ஆய்வகத்து வைரஸ் திடீரென காற்றில் பரவி அட்டாக் செய்தது போல விஜய் அலை பரவி நிலைமை மாறி அசைக்க முடியாத அரண்மனைகள் சரிந்து விட்டன.

கோட்டைகட்டும் கனவோடு வந்தவன் கோவணப் பெருமையிலா இருக்க முடியும்?

சொச்ச காலத்து மிச்சம் மீதி கனவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்எல்ஏக்கள் பலரும் இப்போது  தவெக வுக்கு தாவி விட்டார்கள். இதுவெல்லாம் முதலாளித்துவர் கட்டமைப்பில் தனி நபர்களின் பாத்திரம்.

இதில் முன்விட்டை பின்விட்டை அரசியல் ஊடகப் பரபரப்புக்கே ஆகும்.

உலகில் அமெரிக்க முதலாளி வர்க்கம் தன்னுடைய மூலதன குவிப்புக்காக சில நாட்டு அதிபர்களையே காலி செய்திருக்கிறது. பல்வேறு கார்ப்பரேட் தேசங்கடந்த பெரு நிறுவனங்கள் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அரசை கவிழ்ப்பது தனக்கு தோதான பொம்மை ஆட்சியை நிறுவுவது என்பதெல்லாம் சேர்த்துதான் முதலாளித்துவ ஜனநாயகத்தின் முகம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக ஆட்சி என நம்மிடம் சொல்லப்படும் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு பின்னே இயக்கு சக்தியாக முதலாளித்து வர்க்கம் அதன் நலன் இருக்கிறது எனும் அரசியலை புரிந்து கொள்வதுதான் முக்கியமானது.

துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1052640777442718/?rdid=enuqx0zxVT8YNPHk

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு