இந்தியாவில் 8.7 கோடி இளைஞர்கள் ‘சும்மா இருக்கும்’ நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்: நிதி ஆயோக் அதிர்ச்சித் தகவல்
the hardline
இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் சுமார் 8.7 கோடி பேர் கல்வியிலும் ஈடுபடாமல், வேலைவாய்ப்பும் இன்றி, எந்தவிதத் தொழிற்பயிற்சியும் பெறாமல் 'N.E.E.T.' (Not in Education, Employment, or Training) என்ற கட்டமைப்பு சார்ந்த முடக்க நிலையில் சிக்கியுள்ளதாக ஒன்றிய அரசின் முக்கிய கொள்கை ஆலோசனைக் குழுவான நிதி ஆயோக் தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘விக்சித் பாரத் 2047-க்கான திறன் மேம்பாட்டை மறுசீரமைத்தல்’ என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, தேசிய மாதிரி சர்வேயின் (NSS) 78-வது சுற்றின் தரவுகளின் அடிப்படையில் விரிவாகத் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை இந்தியாவின் உழைக்கும் மற்றும் கற்கும் தலைமுறையை ஐந்து பிரதான பிரிவுகளாகப் பிரிக்கிறது. பள்ளிகளுக்குச் செல்வோர்; உயர்கல்விக்குச் செல்வோர்; முறைசார் மற்றும் முறைசாரா பணிகளில் ஈடுபட்டுள்ளோர்; பெண்கள் மற்றும் கல்வியோ, வேலைவாய்ப்போ, தொழில் பயிற்சியோ பெறாத 'NEET' நிலை இளைஞர்கள் என, அந்த பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
‘குடும்பத்தில் ஏற்கனவே இருக்கும் நிதி நெருக்கடிகளுக்கு இடையே, மேலும் கட்டணம் செலுத்தி புதிய திறன் பயிற்சிகளில் சேர்ந்து தங்களது தகுதிகளை வளர்த்துக்கொள்ளும் நிலையில் பெரும்பான்மையான இளைஞர்கள் இல்லை’ என்பதும் இதில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
எனவே, ‘இந்த ‘N.E.E.T.’ பிரிவைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்புச் சந்தையில் பின்தங்கியுள்ள பெண்களுக்கும் மானியக் கட்டணத்திலோ அல்லது முழுமையான கட்டணச் சலுகையிலோ தொழில் திறன் பயிற்சிகள் அளிக்க வேண்டும். அவர்களுக்கு நிதி ஆதரவும் வழங்கி ஊக்குவிக்க வேண்டியது அவசர அவசியம்’ என, நிதி ஆயோக் வலியுறுத்தியுள்ளது.
மேலும், ‘நாட்டின் புதிய தொழில் துறைகளின் வளர்ந்து வரும் தேவைகளுக்கும், சுயமாகத் தொழில் தொடங்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்ற வகையிலேயே இந்தத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட வேண்டும்’ என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
‘‘சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பொறுத்தவரையில், ‘கற்பதோடு சேர்ந்த சம்பாத்தியம்’ என்ற நடைமுறை சார்ந்த அணுகுமுறையே தற்போதைய முதன்மையான தேவையாக உருவெடுத்துள்ளது’’ என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
அதேவேளையில், இந்தியாவில் உயர்கல்வி கற்றுப் பட்டப் படிப்பை முடித்தவர்களிடையே நிலவும் வேலைவாய்ப்புத் தகுதி குறித்த கவலை அளிக்கும் புள்ளிவிவரத்தையும் நிதி ஆயோக் சுட்டிக்காட்டியுள்ளது.
கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களில் வெறும் 8.25 சதவீதத்தினர் மட்டுமே தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். முறையான உயர்கல்வியைப் பெற்ற இளைஞர்களிடையே கூட, செய்முறைப் பயிற்சிகளும், தற்போதைய தொழில் துறைக்குத் தேவையான நவீனத் திறன்களும் குறைவாக இருப்பதே அவர்களின் வேலைவாய்ப்புத் திறனைக் கட்டுப்படுத்தும் முதன்மைக் காரணியாக விளங்குகின்றன.
குறிப்பாக, குறைந்த வருவாய் கொண்ட எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களால், அன்றாடக் கல்லூரி மற்றும் கல்விச் செலவுகளோடு சேர்த்து, கூடுதல் திறன் பயிற்சிகளுக்கான கட்டணத்தையும் தனியாகச் செலுத்த முடிவதில்லை. இதன் காரணமாகவே, பட்டம் பெற்ற பிறகு தங்களின் தகுதிக்குக் குறைவாகவும், மிகக் குறைந்த ஊதியம் தருவதாகவும் இருந்தாலும் கூட, ஒரு நிலையான வருமானத்தை அளிக்கும் எந்தவொரு சாதாரணப் பணியையும் அவர்கள் வேறு வழியின்றி உடனடியாக ஏற்றுக்கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு தங்களுக்குப் பொருத்தமான அல்லது தற்காலிகப் பணிகளைக் கூட பெற முடியாத இளைஞர்கள், தொழிலாளர் சந்தைக்குள் நுழைய முடியாமல் முடங்கிப்போய், இறுதியில் 'NEET' எனும் நிலையை அடைகிறார்கள் என்று அந்த அறிக்கை விளக்குகிறது.
இந்தக் கட்டமைப்பு சார்ந்த சிக்கலுக்குத் தீர்வுகாணும் வகையில், முறைசார் கல்வியை முழுமையாக முடித்த பிறகு ஒரு விருப்பத் தேர்வாகத் திறன் பயிற்சியை வைப்பதற்குப் பதிலாக, பள்ளிப் பருவத்திலேயே முறைப்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்களைப் பாடத்திட்டத்துடன் இணைக்க வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
குறிப்பாக, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வியிலேயே 'பொதுவான வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் திறன்களை' மாணவர்களுக்குக் கற்பிப்பதோடு, 9ம் வகுப்பிலிருந்தே தெளிவான தொழிற்கல்விப் பாதைகளை உருவாக்கித் தர வேண்டும் என்றும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இளைஞர்களின் கல்வி மற்றும் பொருளாதாரத் தன்னிலைகளை உறுதிப்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு, கடந்த 10 ஆண்டுகளில், கல்விக் கொள்கைகளில் இந்துத்துவக் கொள்கைகளைத் திணக்கவும் பல்வேறு முறைகேடுகளைச் செய்யும் களமாகவும் கல்வித் துறையை மாற்றியுள்ளது.
இதனால், 8.7 கோடி இளைஞர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையால் தான் ஒன்றிய அரசுக்கு எதிராக இளைஞர்களால் போராட்டங்களில் குதித்தனர். இனியாவது இளைஞர் நலனிலும் கல்வியிலும் நேர்மையை பா.ஜ.க. அரசு கடைபிடிக்க வேண்டும் என்பதே நாட்டுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு