இந்திய நாட்டின் செழிப்பு மக்களின் செழிப்பாக மாறாதது ஏன்?
the hardline
கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8% வளர்ச்சி கண்டுள்ளதாக பா.ஜ.க. கூறுவது நாட்டின் உண்மையான பொருளாதாரத்தைப் பற்றிய ‘மிகவும் தவறான பிம்பத்தை’ காட்டமைப்பதாகக் காங்கிரஸ் சாடியுள்ளது.
புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஜி.டி.பி. புள்ளிவிவரங்களை வெளியிட்டது. அதில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் உற்பத்தித் துறை 9.2% வளர்ச்சி கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. முந்தைய ஆண்டில் இதே முதல் காலாண்டில் 8.3% வளர்ச்சியே பதிவாகி இருந்தது. அதேபோல், சேவைத் துறை 10% வளர்ச்சி கண்டுள்ளது. இது ஓராண்டுக்கு முன்பு 8% ஆக இருந்ததாக அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.
அமைச்சகம் வெளியிட்ட ஒட்டுமொத்த ஜிடிபி புள்ளிவிவரங்கள், அந்தக் காலாண்டிற்காக இந்திய ரிசர்வ் வங்கி கணித்திருந்த 7% என்ற அளவை விட அதிகமாக இருந்தன.
மேற்கு ஆசியாவில் நிலவும் போருக்கு மத்தியிலும், ‘எண்ணெய் விலை அதிர்வுகள் மற்றும் வினியோகச் சங்கிலிச் சிக்கல்கள்’ இருந்தபோதிலும் நாடு அடைந்த இந்த வளர்ச்சியை, பிரதமர் நரேந்திர மோடி ஒரு ‘மகத்தான சாதனை’ என்று வர்ணித்தார். ‘‘எதிர்மறைக் கருத்துகளைக் கூறியவர்கள் தோல்வியடைந்தனர்; இந்தியா மீண்டும் ஒருமுறை மலர்ந்துள்ளது,’’ என்று அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
இருப்பினும், ‘‘பொருளாதாரத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு என இரு வகையிலும் தனியார் முதலீட்டாளர்களின் மனநிலை மிகவும் மந்தமாக இருப்பதை இந்த ஜிடிபி புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தவில்லை. பிரதமரின் இந்தக் கொண்டாட்டம் முந்திரிக்கொட்டைத் தனமானது,’’ என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
மேலும் அவர், ‘‘அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. அதே வேளையில் படித்த இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் அதிகமாகவே உள்ளது,’’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏப்ரல் 1ம் தேதி ‘நிதிரீதியான வெளிப்படைத்தன்மைக்கான மையம்' (Centre for Financial Accountability) மற்றும் Tax The Top ஆகிய அமைப்புகள் வெளியிட்ட '2026 வெல்த் டிராக்கர் இந்தியா' (2026 Wealth Tracker India) ஆய்வை மேற்கோள் காட்டியே அவர், ‘‘இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஐந்து குடும்பங்களின் சொத்து மதிப்பு 2019ம் ஆண்டுக்கும் 2025க்கும் இடைப்பட்ட காலத்தில் 400% அதிகரித்துள்ளது. அதேவேளையில், நாட்டின் ஒட்டுமொத்தச் சொத்து மதிப்பில் மக்கள்தொகையின் அடிமட்டத்திலுள்ள 50% மக்களின் பங்கு 2024ம் ஆண்டில் 6.4% என்ற அளவிலேயே தேக்கமடைந்துள்ளது,’’ என்ற ஆதாரங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
‘‘இந்திய நாட்டின் செழிப்பு ஏன் அங்கே வாழும் மக்களின் செழிப்பாக மாறவில்லை?’’ எனக் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பவன் கேராவும் தனது ஆதங்கத்தை எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ‘‘மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) நாட்டின் உற்பத்தி அளவை மட்டுமே அளவிடுகிறது. வேலைவாய்ப்பு, ஊதியம் அல்லது குடிமக்களுக்கான பொருளாதார வாய்ப்புகளைப் பிரதிபலிக்கவில்லை. பரவலாக நிலவும் வேலையின்மை, தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் சீர்குலைந்து வரும் கல்வி அமைப்பு ஆகியவைதான் எதார்த்த நிலை என்றால், இந்தியா உண்மையில் எப்படி வளர்ச்சி காணும், மலர்ச்சி காணும்?" என்று சாடியுள்ளார்.
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு