நேபாள வெள்ளமும் சீனாவும்
பிபிசி செய்திகளிலிருந்து
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணித்திருப்பது துயருற செய்கிறது. குடியிருப்புகள், வாகனங்கள் பாலங்கள் என அனைத்தும் கடுமையான வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடீயோ காட்சிகள் நம்மை பதர வைக்கிறது.
திபெத் பகுதியிலிருந்து பாய்ந்து வந்த கட்டுக்கடங்காத திடீர் வெள்ள நீர், நேபாளத்தின் போடே கோஷி ஆற்றில் கலந்ததால் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
"பொதுவாக திடீர் வெள்ளப்பெருக்கு என்பது கனமழையால் ஏற்படுகிறது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நேபாளம், திபெத் போன்ற உயரமான மலைப் பகுதிகளில், ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவும் இத்தகைய வெள்ளங்கள் ஏற்படலாம்," என்று பிரிட்டனின் ரீடிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லிஸ் ஸ்டீபன்ஸ் கூறுகிறார்.
இந்தச் சம்பவத்தில், பனிச்சரிவுதான் வெள்ளப்பெருக்கைத் தூண்டியிருக்கலாம் என்பதே தற்போது நிலவும் முக்கியக் கருத்தாக உள்ளது.
பெருமளவிலான பனியும் பாறைகளும் ஏற்கெனவே ஆற்றில் இருந்த நீருடன் கலந்ததால், ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயர்ந்திருக்கலாம்.
மேலும், அந்தப் பனிச்சரிவு ஆற்றின் குறுகலான பகுதியை தற்காலிகமாக அடைத்திருக்கலாம். இதனால் இயற்கையாக ஒரு அணை உருவாகி, அதன் பின்னால் நீர் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது.
பின்னர் அந்த இயற்கை அணை உடையும்போது, "கீழ்ப்பகுதிகளில் திடீரென மிகப் பெரிய அளவில் நீரும் வண்டலும் பாய்ந்து பேரழிவை ஏற்படுத்தக்கூடும்" என்று பேராசிரியர் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்."
இமயமலைப் பிராந்தியம் மிகவும் நுட்பமான (Ecologically Sensitive) ஒரு பகுதி. சீனா தனது "பல்வேறு வர்த்தகப் பாதைகள்" மற்றும் "பெல்ட் அண்ட் ரோட் திட்டங்களுக்காகத் திபெத் மற்றும் நேபாள எல்லைப் பகுதிகளில் அணைக்கட்டுகள், சுரங்கங்கள், பிரம்மாண்ட நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறது.
மேலும் பொருளாதாரத்தின் விரிவாக்கத்திற்காகக் காடுகள் அழிக்கப்படுவதும், மலைகள் குடையப்படுவதும் நிலச்சரிவை தீவிரமாக்கி, பனி உருகலை வேகப்படுத்துகிறது.
சீனா தனது எல்லைப் பகுதியில் கட்டும் அணைகள் மற்றும் பனிப்பாறை ஏரிகள் குறித்த முன்-எச்சரிக்கை தரவுகளைச் சிறிய நாடான நேபாளத்துடன் பகிர்வதில்லை தகவல் இருட்டடிப்பு செய்கிறது என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.
சீனா திபெத்திய பீடபூமியில் அமைத்து வரும் அதிவேக ரயில் பாதை திட்டங்கள் நீர்மின் திட்டங்களுக்கான சுரங்கங்கள் மற்றும் சாலைகளுக்காக நிலத்தடியில் பெருமளவில் துளையிடுகிறது.இமயமலைப் பாறைகள் இயற்கையிலேயே விரிசல்கள் நிறைந்தவை. ராட்சத இயந்திரங்கள் மூலம் நிலத்தடிச் சுரங்கங்கள் அமைக்கும் போது, பாறைகளுக்குள் நீரோடும் இயற்கையான நிலத்தடிப் பாதைகள் அடைபட்டோ அல்லது திசைமாறியோ போகின்றன. இதனால், மலைகளுக்குள் சுரங்கங்களுக்கு மேல் நீரழுத்தம் அதிகரித்து, நில அதிர்வு அல்லது கனமழை ஏற்படும் போது மலை முழுமையாகப் பிளந்து பனி-பாறைச் சரிவாக ஆற்றில் விழுகிறது.
புவி வெப்பமயமாதல் மற்றும் எல் நினோ (கார்பன் வெளியேற்றம்)
உலகில் அதிக அளவு பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றும் ஏகாதிபத்திய நாடுகளில் சீனாவும் ஒன்று. தொழில்மயமாக்கல் மற்றும் லாப நோக்கிலான உற்பத்தியால் புவி வெப்பமடைந்து, இமயமலையின் பனிப்பாறைகள் வழக்கத்தை விட அதிவேகமாக உருகுதல் போன்ற காரணிகள் நேபாள பெருவெள்ளத்திற்கு அடிப்படையாக இருக்கின்றது.
- (பிபிசி தகவல்களிலிருந்து)
Disclaimer: இந்தப் பகுதியில் கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களை விடுத்து சீனாவை மட்டுமே பொறுப்பாக்குவது விமர்சனத்துக்குரியது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு