போலி அறிவியல் - போலி தத்துவ மாநாடு
எஸ்.கே. அருண்மூர்த்தி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO), ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை இணைந்து “ஆகாயம் பற்றிய தத்துவம்” (AkashTatva) எனும் தலைப்பில் டேராடூனில் வருகிற நவம்பர் 5-7 தேதிகளில் மாநாடு நடத்த உள்ளன. அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்த மாநாடா னது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தது. இந்தியாவின் பண்டைக்கால அறிவியலையும், நவீன அறிவியலையும் இளைஞர்களுக்கு வெளிப்படுத்தும் என்று கூறி இருக்கிறார்.
இந்தியாவின் பண்டைக்கால அறிவியலுக்கும், நவீன அறிவியலுக்கும் இடையில் ஏதேனும் பொருத்தப்பாடு இருக்கிறதா என்பதை நாம் பரிசீலனை செய்ய வேண்டி உள்ளது. ஆகாயத் தத்துவம் மற்றும் பஞ்சபூதங்கள் எனும் சிந்தனைகளை கொண்ட பண்டைக்கால தத்துவப் பிரிவுகள் அனைத்தும் போலி அறிவியல் மட்டுமல்ல; போலியான தத்துவத்தைக் கொண்டதுமாகும். இந்த போலி அறிவியல்-போலி தத்துவத்தை பற்றித் தான், இஸ்ரோவும், ஆர்எஸ்எஸ்சும்,ஒன்றிய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகமும் இணைந்து ஆய்வு நடத்தப்போகின்றன. விஜன பாரதி (Vijana Bharati) என்பது சுதேசி அறி வியலை பரப்பும் ஆர்எஸ்எஸ் சின் துணை அமைப்பாகும். இந்த அமைப்புதான் ஆகாயம் பற்றிய தத்துவம் குறித்து விரிவாக ஆராய திட்டமிட்டுள்ளதுஎன கூறப்படுகிறது. ஒன்றிய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங்கிடம் பத்திரிகையாளர்கள் இந்த மாநாடு போலி அறிவியலை அல்லவா பரப்பும் என்று கேட்டனர். அதற்குத்தான் அமைச்சர், மாநாடானது இந்திய பண்டைய அறிவியலறிவு மற்றும் நவீன அறிவியலறிவை இளைஞர்களுக்கு வெகுவாக உணர்த்தும் என்று கூறியிருக்கிறார்.
ஒத்திசைவு - தொடர்பு உள்ளதா?
பண்டைக்காலத்தில் அறிவியல் பற்றிய சிந்தனையை, நவீன அறிவியலுடன் ஒன்றிணைக்க முடியுமா? இந்த இணைப்பு சரிதானா? இவை இரண்டுக்கும் இடையில் ஒத்திசைவான கொள்கைகள் ஏதேனும் உள்ளனவா? உண்மையில், பண்டைக் கால தத்துவப் பிரிவுகள் கூறும் பஞ்சபூதங்கள் என்ற விளக்கமே நவீன அறிவியலுக்கும், பண்டைக் கால அறிவியலுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்பதை உணர்த்துகிறது.
இந்திய இருத்தலியல் (Ontology) கொள்கையில், பொருட்களுக்கு பஞ்சபூதங்கள் என்று அர்த்தம். பஞ்சபூதங்கள் என்ற சொல் “பூ” (Bhu)என்ற வேர்ச் சொல்லில் இருந்து பெறப்படுகிறது. அதற்கு உருவாக்கம் என்று அர்த்தமாகும். பஞ்சபூதங்கள் என்று அறியப்படும் பொருட்களில் பூமி, காற்று, நெருப்பு, நீர் ஆகாயம் (விண்வெளி) ஆகியவை உள்ளன. இவை பழங்கால இந்தியா பொருண்மைசாராவாத தத்துவப் பிரிவு சிந்தனையாளர்களின் (Metaphysical School of Thoughts) கருத்துகளாகும்.
இவர்கள் கடவுள், ஆன்மா ஆகியவற்றில் மட்டுமே அக்கறை செலுத்தியவர்கள் ஆவார்கள். பஞ்சபூதங்கள் என்ற தத்துவத்தை விளக்கியவர்கள் சாங்கியம், யோகம், நியாயம்( Nyaya)மற்றும் வைசேசிகம் (Vaisheshika)ஆகிய நான்கு மரபார்ந்த இந்திய தத்துவப் பிரிவு சிந்தனையாளர்களாவர். இந்த நான்கு தத்துவ மரபு பிரிவுகளோடு மீமாம்சம் மற்றும் வேதாந்தம் (Mimasa , Vedanta) ஆகிய தத்துவ மரபுகளையும் சேர்த்து இந்திய தத்துவ மரபில் ஆறு மரபார்ந்த தத்துவ சிந்தனைப் பிரிவுகள் உள்ளன. (வயர் இணைய இதழில் வெளிவந்துள்ள” போலி அறிவியல் எவ்வாறு நாசிசத்தின் மையக் கொள்கையாக மாறியது “என்ற கட்டுரையையும் வாசகர்கள் படிக்க வேண்டும்).
அனுமானத்தின் அடிப்படையில்
பொருள் உருவாவதற்கு முன்பு நடைபெற்ற பரிணாம வளர்ச்சிப் போக்கில் எவ்வாறு பொருள் உருவானது என்பதை பற்றி சாங்கியம் பேசுகிறது. இந்த செயல்முறை போக்கில், பிரகிருதியில் (Prakrit) (முதன்மை மூலப் பொருள்) இருந்து பொருள் உருவாக்க -பரிணாமப் போக்கு செயல்முறை தொடங்கியதாக சாங்கியம் அனுமானிக்கிறது. இதுவே சாங்கியத்தின் இருத்தலியல் தத்துவம். மேலும் குணங்கள், சத்வம், தமஸ் (Gunas,Sattva,Tamas) ஆகியவை பற்றி சாங்கியம் பேசுகிறது. இவைகள் யாவும் பிரகிருதியில் ஒன்றுக் கொன்று சமநிலையிலான எதிர்ப்பில் இயங்கினவாம். சாங்கிய மரபு சிந்தனையாளர்களின் படி, இந்த உலகம் உருவாவதற்கு முன்பு பிரகிருதியில் இருந்த சமநிலை சிதைவுறும் நிலையில் இருந்தது. இந்த சமநிலை பாதிக்கப்பட்ட போது குணங்கள் பல்வேறு பரிணாமம் பெற்று பல்வேறு பொருட்களாக உருவாவதற்கு வழி வகுத்தது. இந்த பரிணாமக் கொள்கையில் மேலும் இருபத்து மூன்று கருத்துக்களை சாங்கியம் அனுமானிக்கிறது.
பரிணாமத்தின் போக்கில் பிரகிருதி, மகத் (Mahat) ஆக மாற்றமடைகிறது. இது பஞ்சபூதங்கள் உருவாகியது வரை நடந்தது. பஞ்சபூதங்கள் உருவாவதற்கு முன்பு ஐந்து தன்மாத்திராக்கள்(Tanmatras) உருவாகின. அதாவது சப்தம் (Sound), ஸ்பானம் (தொடு உணர்வு) ரூபம் (நிறம்) , ரஜாஸ் ( ருசி உணர்வு) மற்றும் காந்தா ஆகிய தன்மாத்திராக்கள் தொடக்க முதன்மை கூறுகளாக இருந்ததாக சாங்கியம் சொல்கிறது. இந்த தொடக்க வடிவ முதன்மை கூறுகளில் இருந்து மகாபூதங்கள்உருவானதாம். இதேபோன்று, நியாயம் ,வைசேசிகம் ஆகிய சிந்தனை பிரிவைச் சார்ந்த சிந்தனையாளர்களும் பிரபஞ்சத்தை பொருண்மைசாரா வாத அணுகு முறையிலேயே பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து அனுமான அடிப்படையில் கருத்துக்களை முன் வைத்தனர்.
இந்த இரண்டு தத்துவ மரபைச் சேர்ந்த சிந்தனையா ளர்கள் ஏழு வகையான பதார்த்தங்கள் எனும் கருத்தை முன்வைக்கின்றனர். அவற்றுள் திரவிய பதார்த்தம் முக்கியமான பொருளாகும். பிரித்வி (Pritvi) ( பூமி), ஆப்(நீர்), தேஜாஸ் (நெருப்பு), காற்று எனும் வாயு, ஆகாயம் ஆகிய ஐந்து பஞ்சபூதங்களை இந்த மரபுகள் கூறுகின்றன. இந்த இரண்டு வகையான தத்துவ மரபுகளிலும் பஞ்சபூதங்கள் பற்றிய விளக்கத்தை பார்த்தோம். பிரபஞ்சத் தோற்றம் பற்றி நமது முன்னோர்கள் ஊகத்தின் அடிப்படையில் கோட்பாடுகளை உருவாக்கினர். அவைகள் ஆய்வனுபவ அடிப்படையில் உருவாக்கப்படவில்லை.இந்த இரண்டு மரபுகளின் விளக்கங்களுக்கும் நவீன அறிவியலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.
வம்படி இணைப்பு
சுரேந்திரநாத் தாஸ்குப்தா எழுதிய “இந்துக்களின் இயற்கை அறிவியல் (1987) மற்றும் பிரஜேந்திரநாத் எழுதிய “பண்டைக் கால இந்துக்களின் நேர்மறை அறிவியல் (1915) “ ஆகிய இரண்டு புத்தகங்களும் பண்டைக்கால இந்தியாவின் தத்துவ மரபுகளை பற்றிப் பேசும் பிரபலமான புத்தகங்கள் ஆகும். பிரஜேந்திரநாத் நவீன அறிவியல் சொற்களை, பண்டைக்கால கருத்துக்களுடன்(சமஸ்கிருத சொற்கள்) வம்படியாக இணைக்கிறார். இவ்வாறு இவர் நவீன அறிவிய லுடன் பண்டைக்கால கொள்கைகளை அறிவியல் என்று இணைப்பது குழப்பமானதாகவும், தெளிவற்றதாகவும், புரிந்து கொள்ள முடியாததாகவும் இருக்கிறது.
“இந்திய தத்துவ மரபு- ஒரு அறிமுகம் (1986)” எனும் புத்தகத்தில் தேவிபிரசாத் சட்டோபாத்யாய 19ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய அறிவியலை, பண்டைக்கால இந்திய தத்துவ மரபுகளில் தேடுவது அபாயகரமானதாகும் என்றார். இந்த பின்புலத்தில்,” ஆகாய தத்துவ “ஆய்வரங்க மாநாட்டை நடத்துபவர்கள் சட்டோபாத்யாயவின் வார்த்தைகளை கவனத்தில் கொள்வது நல்லது. பண்டைக்கால சிந்தனைகளில் நவீன அறிவியலை தேடும் தங்கள் முயற்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய சிந்தனை மரபுகள் ஆன்மாவின் விடுதலை பற்றிய தேடலில்தான் உள்ளன.
இந்திய கலாச்சாரம் -நாகரிகம் பற்றிய தத்துவங்கள் விவாதம் -பகுப்பாய்வு அடிப்படையில் தனித் துறையாக என்றுமே இயங்கியதில்லை என்று அறிவுலக வட்டாரங்கள் பேசுகின்றன. இந்தியாவின் அனைத்து சிந்தனை மரபுகளும் இறையியல் மற்றும் ஆன்மாவின் விடுதலை ஆகிய சிந்தனைகளிலேயே தங்களை குறுக்கிக் கொள்கின்றன. நவீன அறிவியலுடன், இந்திய பண்டைய கால சிந்தனையை பொருத்தும் சுரேந்திரநாத் தாஸ்குப்தா கூட பண்டைக்கால இந்திய சிந்தனை எப்போதுமே எல்லையற்ற பரம்பொருள் பற்றியே ஏங்குகிறது என்று கூறியுள்ளார். இதைத் தாண்டி இந்துக்கள் இயற்கை விதிகளை ஆய்வு செய்வதை பற்றி என்றுமே கவலைப்பட்டதில்லை என்று மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் சொல்கிறார். இதன்படி இந்திய தத்துவ சிந்தனைகளில் இருந்து உருவான ஆகாயத் தத்துவம் மற்றும் பஞ்சபூதங்கள் ஆகியவை போலியான அறிவியல் மற்றும் போலியான தத்துவமாகும். தனது ரகசிய செயல் திட்டங்களின் படி , ஒன்றிய அரசு நடத்தும் ஆகாய தத்துவம் ஆய்வரங்கம் மூலமாக உண்மையான நவீன அறிவியல் தத்துவத்திற்கும், இந்தியாவின் பண்டைக்கால தத்துவங்களுக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாக நிறுவ முயற்சிப்பது போலி அறிவியல்தான்.
நன்றி :வயர் இணைய இதழ்
தமிழில் : ம.கதிரேசன்
- வாட்சப் உலா
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம்
– செந்தளம் செய்திப் பிரிவு