அமெரிக்க - வெனிசுலா எண்ணெய் ஒப்பந்தம் - ட்ரம்ப் அறிவிப்பு
செந்தளம் செய்திபிரிவு
ஏகாதிபத்தியத்தின் உச்சம் !.. போர் மட்டுமல்ல, அமைதி வழி மூலதன ஒப்பந்தமும் தான் !…. என்பார் லெனின்
வெனிசுலா நாட்டுடன் அமெரிக்கா வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தைச் செய்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் 2026 ஆகஸ்ட் 28 அன்று தனது 'Truth Social' தளத்தில் அறிவித்துள்ளார்.
முன்னதாக 2026 ஜனவரி 3 அன்று, 'ஆபரேஷன் அப்ஸலூட் ரிசால்வ்' என்ற பெயரில் கராகஸில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் ராணுவத் தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியது. அப்போது வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரைக் கைது செய்து நியூயார்க்கிற்கு கடத்திச் சென்றது உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து தனக்கு சாதமான டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால அதிபராக்கி, அந்நாட்டின் எண்ணெய் வளத்தின் மீது தனது பொருளாதாரக் கட்டுப்பாட்டையும் முதலீட்டு ஒப்பந்தங்களையும் அமெரிக்கா ஏற்படுத்தியது.
இதன் அடுத்த நடவடிக்கையாக அமெரிக்கா-வெனிசுலா ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுலாவில் உள்ள 6,500 கோடி (65 Billion) பீப்பாய் உறுதி செய்யப்பட்ட எண்ணெய் இருப்புகளின் மீது அமெரிக்கா பெரும்பான்மைக் கட்டுப்பாட்டைப் பெறுகிறது என்று டொனால்ட் டிரம்ப் தன்னிசையாக சமூக வலைதளத்தில் வெளியீட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் ஆகியோரின் கூட்டு பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் உள்ள 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்த சுமார் 10,000 கோடி அமெரிக்க டாலர் ($100 Billion) முதலீடு ஈர்க்கப்படும் என்றும், இதன் மூலம் வெனிசுலா அரசுக்கு 20,900 கோடி அமெரிக்க டாலர் வரி வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மறுபக்கம், வெனிஸுலாவின் எண்ணைய் வளங்களை கைப்பற்றும் அமெரிக்காவின் அடுத்த நடவடிக்கையே ஆகும். இந்த ஒப்பந்தம் "உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இது அமெரிக்காவின் எண்ணெய் இருப்பை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்தும் என்றும், அமெரிக்க மக்களுக்கு எரிபொருள் (Gas) விலையைக் குறைக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் எரிபொருள் விலை குறையும் என்று டிரம்ப் குறிப்பிட்டாலும், உடனடி விலை வீழ்ச்சி சாத்தியமில்லை என்றே தெரிகிறது. கச்சா எண்ணெய் விலையில் உடனடியாக பெரிய வீழ்ச்சி இருக்காது. ஏனெனில், வெனிசுலாவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளைச் சீரமைத்து, உற்பத்தியை அதிகரிக்க பல ஆண்டுகள் ஆகும். அமெரிக்க அவசர கால இருப்பு (Strategic Petroleum Reserve): அமெரிக்கா தனக்குக் கிடைக்கும் எண்ணெயைக் கொண்டு தனது அவசரகால இருப்பை நிரப்பத் திட்டமிட்டுள்ளது. இது எதிர்காலத்தில் சந்தையில் ஏற்படும் எந்தவொரு விலை ஏற்ற இறக்கத்தையும் அமெரிக்கா கட்டுப்படுத்த வழிவகுக்கும்.
இதனால் சவுதி அரேபியா தலைமையிலான ஓபெக் (OPEC) நாடுகள் எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கக் கூடும். வெனிசுலாவில் அமெரிக்கா அதிகளவில் உற்பத்தி செய்யும்போது, OPEC அமைப்பின் சந்தைக் கட்டுப்பாடு பலவீனமடையும் நிலை உருவாகும். ஈரான் போன்ற நாடுகளிலிருந்து சர்வதேச சந்தைக்கு எண்ணெய் வருவதில் தடை ஏற்பட்டாலும், வெனிசுலா மூலம் அந்த பற்றாக்குறையை ஈடுசெய்ய முயற்சிக்கும். இதன் மூலம் கச்சா எண்ணையின் மீதான தனது ஏகபோகத்தையும் மேலாதிக்கத்தையும் அமெரிக்கா நிலைநிறுத்திக்கொள்ளும்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி தேவையில் பெரும்பகுதி இறக்குமதி சார்ந்ததே. இந்தியாவுக்கான் எண்ணெய் இறக்குமதி மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடும் மேலாதிக்கமும் இன்னும் அதிகரிக்கும்.
ஒரு நாட்டின் அதிபரைக் கைது செய்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய பின் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், ராணுவப் பலம் மூலம் பொருளாதார ஆதிக்கத்தை நிறுவும் ஏகாதிபத்திய நடவடிக்கையாகும். "ஏகாதிபத்திய வல்லரசுகள் வளங்களைப் பங்கிடவும் ஆதிக்க மண்டலத்தை விரிவாக்கவும் பிற நாடுகளின் இறையாண்மையில் தலையிடும்" என்ற லெனினின் கூற்றிற்கேற்ப, அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் போர் மற்றும் அமைதி வழி ஒப்பந்தங்கள் மூலமாகத் தங்கள் போட்டி மேலாதிக்கத்தை நிறுவி வருகின்றன.
- செந்தளம் செய்திபிரிவு