இந்திய-அமெரிக்க உறவை பலப்படுத்தும் உக்ரைன் போர்
ரஷ்யா – உக்ரைன் இடையிலான நெருக்கடி தொடர்ச்சியாக இந்தியா-அமெரிக்கா இடையிலான எரிசக்தி வர்த்தக உறவை பலப்படுத்தவே செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. 2023 ஆம் நிதியாண்டில் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 191 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவை எட்டியுள்ளது KPMG India மற்றும் AMCHAM India நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடந்து வருகிற போரினால் உலகமே எரிபொருள் பற்றாக்குறையால் ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதே போர் தான் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவை குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் இருநாடுகளுக்கும் இருந்து வந்த வர்த்தக உறவை பலப்படுத்தியுள்ளது என்று இந்த மாதத்தின் துவக்கத்தில் KPMG India மற்றும் AMCHAM India நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த நிதியாண்டில்(2023) இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 191 பில்லியன் டாலர்கள் என்ற அளவை எட்டியுள்ளதால் அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உருவெடுத்துள்ளது. இராணுவம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழலை பாதிக்காத எரிசக்தி(Clean energy) மற்றும் விண்வெளித் துறை போன்று பல துறைகளில் இரு நாடுகளும் கூட்டு சேர்ந்து முனைப்பாக பணியாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான நெருக்கடியும், அதைத் தொடர்ந்து ரஷ்யாவின் கச்சா எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்வதில் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட தடையும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவை பலப்படுத்தவே செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெட்ரோலியப் பொருள்கள்
“காலங்காலமாக ரஷ்யாவிடமிருந்தே கலப்படமற்ற சுத்தமான பெட்ரோலிய எண்ணெயை அமெரிக்கா வாங்கி வந்துள்ளது. அதை தற்போது இந்தியாவின் இரண்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வாங்கிக்கொள்கிறது. இதன் காரணமாகவே, அதிகளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை இந்தியாவிடமிருந்து வாங்கும் நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது(டிசம்பர் 2022 நிலவரப்படி)” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
உதாரணத்திற்கு, 2020 ஆம் நிதியாண்டில் 2.3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது; கொரோனா காலமான 2021 ஆம் நிதியாண்டில் இறக்குமதி என்பது 1.15 பில்லியன் டாலர்கள் என்றளவிற்கு குறைந்தது. இவ்வாறிருக்க, 2022 ஆம் நிதியாண்டில் 5.10 பில்லியன் டாலர்கள் என்றளவிற்கு உயர்ந்ததோடு இந்த நிதியாண்டில்(2023) 6.04 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்று இந்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2020ஆம் நிதியாண்டில் இந்தியாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால், இந்தத் தரநிலை 2021 ஆம் நிதியாண்டில் ஐந்தாவது இடமாக சரிந்தது. இவ்வாறிருக்க, 2022ஆம் நிதியாண்டில் நான்காம் இடத்திற்கும், 2023 ஆம் நிதியாண்டில் மூன்றாம் இடத்திற்கும் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கவிருப்பதாக பெட்ரோலிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபேக் பிளஸ்(OPEC +) அறிவித்ததை அடுத்து பிற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதோடு, கச்சா எண்ணெய் பொருட்களை பெறுவதற்கு மத்திய கிழக்கு நாடுளை மட்டுமே நம்பியிருக்கும் நிலைமையை குறைப்பதில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது என்று KPMG India மற்றும் AMCHAM India நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
“இப்படிப்பட்டதொரு சூழல் நிலவியதால் அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய் பொருட்களை இந்தியா அதிகளவில் பெறத் துவங்கியதை தொடர்ந்து சமீபத்தில் அமெரிக்காவின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, 2022 ஆம் நிதியாண்டின் கடைசி மூன்று மாதங்களில் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் பொருட்களை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியிலில் அமெரிக்கா ஐந்தாவது இடத்தை பிடித்தது” என்று அந்த ஆய்வறிக்கை மேலும் கூறியது.
2017 ஆம் ஆண்டின் ஜீலை மாதம் முதலிருந்தே அமெரிக்காவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்யத் துவங்கிவிட்டது.
வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின் படி, 2020 ஆம் நிதியாண்டில் 4.9 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான கச்சா எண்ணெய் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த போது, இந்தியாவிற்கு அதிகமான கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா நான்காவது இடத்தில் இருந்தது. 2021 மற்றும் 2022 ஆம் நிதியாண்டில் தனது நான்காவது இடத்தை தக்க வைத்துக் கொண்டதோடு, அவ்வாண்டுகளில் முறையே 5.40 பில்லியன் டாலர்கள் மற்றும் 11.32 பில்லியன் டாலர்கள் அளவிற்கான சரக்குகள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த நிதியாண்டில்(2023) அமெரிக்கா ஐந்தாவது இடத்திற்கு சரிந்ததோடு 10.18 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான கச்சா எண்ணெய் பொருட்களையே இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
ரஷ்ய கச்சா எண்ணெய்
இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் ஈடுபடக்கூடிய நிறுவனங்களுக்கு வசமான வாய்ப்பாக குறைந்த விலையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்துகொள்வதற்கு ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் இடமளித்தது என்றபோதிலும், அமெரிக்காவுடனான எரிசக்தி உறவுகளை பலப்படுத்துவதற்கே இந்தியா விரும்புவதால் அமெரிக்காவிடமிருந்து இந்தியா இறக்கமதி செய்யும் அளவில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கடந்த ஜனவரி 2023 ல், S&P குளோபல் நிறுவனத்தின் கமோடிட்டி இன்சைட்ஸ் பிரிவு(எரிசக்தி மற்றும் சரக்குகளின் சந்தை நிலவரம் குறித்து ஆய்வு செய்யும் பிரிவு) சார்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.
ரஷ்ய – உக்ரைன் போர் ஏற்படுவதற்கு முன்பு, மத்தியக் கிழக்கு நாடுகளிடமிருந்தே இந்தியா 60 சதவீதமளவிற்கு கச்சா எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்தது; வட அமெரிக்காவிலிருந்து 14 சதவீதமும், மேற்கு ஆப்பரிக்காவிலிருந்து 12 சதவீதமும், லத்தீன் அமெரிக்காவிலிருந்து 5 சதவீதமும் என்ற அளவில் இந்தியாவிற்கு வேண்டிய கச்சா எண்ணெய் இறக்கமதி செய்யப்பட்டது. இதில் ரஷ்யாவிலிருந்து இறக்குமதியான அளவு 2 சதவீதம் மட்டுமே.
எப்ரல் 2022ல், இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் தேவையில் 5 முதல் 6 சதவீதம் வரை அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்டு வந்தது. நவம்பர் 2022 ல் இந்த நிலைமை 10 சதவீதம் என்றளவிற்கு உயர்ந்தது. 2022 ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில், இந்தியாவிற்கு அதிகளவில் கச்சா எண்ணெய் வழங்கி வரும் நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்திலிருந்த குவைத் நாட்டை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
(ரிஷி ரஞ்சன் கலா)
- விஜயன்
(தமிழில்)