கைப்பற்றப்பட்ட உக்ரைன் நிலப்பரப்பில் உள்ள கனிம வளங்களை அமெரிக்காவுடன் பங்குபோட்டுக் கொள்வதற்கு ரஷ்யா முன்வந்துள்ளது

தமிழில்: விஜயன்

கைப்பற்றப்பட்ட உக்ரைன் நிலப்பரப்பில் உள்ள கனிம வளங்களை அமெரிக்காவுடன் பங்குபோட்டுக் கொள்வதற்கு ரஷ்யா முன்வந்துள்ளது

தற்போது ரஷ்ய இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள சில உக்ரைனிய பகுதிகளில் காணப்படும் அரிய வகை கனிமங்களையும், விலைமதிப்பற்ற உலோகங்களின் உரிமையையும் அமெரிக்காவுடன் பங்குபோட்டுக் கொள்வதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இப்பிரச்சினை தொடர்பான உளவுத் தகவல்களை அறிந்த இரண்டு அமெரிக்க அதிகாரிகள் மட்டுமல்லாது இந்த முன்மொழிவு குறித்துத் தெரிவிக்கப்பட்ட மற்றொரு நபர் மூலமாகவும் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

இதற்கு முன்னதாக, அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெஸ்ஸண்ட் இதேபோன்ற ஒரு உடன்படிக்கையை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் சமர்ப்பித்தார். ஆனால் ஜெலென்ஸ்கி அதனைத் தொடக்கத்தில் ஏற்க மறுத்தது, அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அதிருப்திக்குள்ளாக்கியது.

கடந்த வாரம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் முக்கிய ஆலோசகர்கள், டிரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகளுடன் சவுதி அரேபியாவில் நடைபெற்ற சந்திப்பின்போது ரஷ்யாவின் இந்த எண்ணத்தைப் பற்றி விவாதித்தனர் என்று அமெரிக்க அதிகாரிகளும், இந்த முன்மொழிவு குறித்துத் தகவலறிந்த நபரும் தெரிவித்தனர்.

டொனெட்ஸ்க் மற்றும் ஜபோரிஷியா ஆகிய இரு பிராந்தியங்களிலும் உள்ள கனிம வளங்களை பங்குபோட்டுக் கொள்வதற்கான திட்டங்கள் பற்றிக்கூட அமெரிக்க அதிகாரிகளுடன் ரஷ்யா விவாதிக்கத் தயாராக இருந்தது. இந்த இரண்டு பிராந்தியங்களையும் 2022ஆம் ஆண்டில் ரஷ்யா உரிமை கோரியது என்று அந்த இரண்டு அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அரிய கனிமங்கள் தொடர்பான அமெரிக்க-ரஷ்ய உடன்படிக்கைக்கு டிரம்ப் நிர்வாகம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதேசமயம், அந்த யோசனையை முற்றிலுமாக நிராகரிக்கவும் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகளும், அந்த முன்மொழிவு குறித்துத் தகவலறிந்த நபரும் கூறினர்.

"டிரம்ப் எப்பொழுதும் ஒப்பந்தங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார், இதனைப் புரிந்துகொண்ட புதின் இந்தத் திட்டத்தை வகுத்துள்ளார்," என்று இப்பிராந்திய விவகாரத்தில் அனுபவம் வாய்ந்த முன்னாள் அமெரிக்கத் தூதர் ஒருவர் தெரிவித்தார். மேலும், உக்ரைன் இயற்கை வளங்களை அடைவதற்கு ட்ரம்ப் காட்டும் தீவிரத்தையும், ஜெலென்ஸ்கி அதற்கு உடன்பட தயங்குவதையும் ரஷ்யர்கள் தெளிவாக உணர்ந்திருந்தனர் என்றும் அந்தத் தூதர் குறிப்பிட்டார்.

திங்களன்று, ரஷ்யாவுடன் ஒரு உடன்பாடு எட்டுவதற்குத் தான் ஆர்வமாக இருப்பதாக டிரம்ப் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

"நாங்கள் சில பொருளாதார மேம்பாட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளோம். நமக்குத் தேவையான ஏராளமான விஷயங்கள் அவர்களிடம் உள்ளன," என்று ரஷ்யாவைக் குறிப்பிட்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். "உங்களுக்குத் தெரியும், அவர்களிடம் மிகவும் அதிக அளவில் அரிய கனிமங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அது...மிகவும் பரந்து விரிந்தது." என்றார் டிரம்ப்.

"நாம் அவ்வாறு செய்ய முடிந்தால், அது உலக அமைதிக்கும் நிலையான அமைதிக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்று நான் நம்புகிறேன்," என்ற மேலும் கூறிய டிரம்ப், "உக்ரைனுடன் நாம் மேற்கொண்டு வருவது போல, ரஷ்யாவுடன் சில பொருளாதார மேம்பாடுகளைச் செய்து, நமக்குத் தேவையானவற்றை அடைய முடிந்தால், அதுபோன்ற ஒரு சூழ்நிலை(உலக அமைதி) உருவாகும்.".

தற்போது ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நிலப்பரப்பில் கிடைக்கும் கனிமங்களை பெறுவதற்கு ரஷ்யாவுடன் உடன்பாடு "ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது" என்று செவ்வாய்கிழமை டிரம்ப் கூறினார். எனினும், இது தொடர்பாக அவர் புதினுடன் பேசினாரா என்பதை அவர் குறிப்பிடவில்லை.

திங்கட்கிழமை ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் புதின் அளித்த பேட்டியில், ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளில் காணப்படும் அரிய கனிமங்களை அமெரிக்காவுடன் பங்குபோட்டுக் கொள்வதற்குத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ரஷ்யாவிலுள்ளவற்றையும் பெறுவதற்கு அனுமதியளிக்க முடியும் என்றார். 

உக்ரைன் கனிம வளங்கள் வாயிலாகக் கிடைக்கும் வருவாயைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்கா, உக்ரைனுடன் பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. இத்தகைய ஒப்பந்தம் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படுத்தாது என்றும், உக்ரைனை விட ரஷ்யாவே இந்த வளங்களைக் கூடுதலாய் கொண்டுள்ளது என்றும் புதின் சுட்டிக்காட்டினார். மேலும், அலுமினிய உலோகத்தை உற்பத்தி செய்வதில், விநியோகிப்பதில் தனது அரசாங்கமும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயலாற்ற முடியும் என்றும் புதின் குறிப்பிட்டார்.

அரிய கனிமங்களையும், இதர உலோகங்களையும் குறிப்பாக ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளிலுள்ள கனிமங்களை, அமெரிக்காவுடன் பங்குபோட்டுக் கொள்வது தொடர்பாக ரஷ்யா முன்மொழிந்த ஒப்பந்தம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் திங்களன்று டிரம்ப் வெளியிட்ட கருத்துகளையே சுட்டிக்காட்டி பேசியிருந்தார். 

இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதற்கு முன்னதாக, ஜெலென்ஸ்கி கடந்த ஆண்டு முன்வைத்திருந்த சமாதானத் திட்டத்தின் ஒரு பகுதியாக, உக்ரைன் இயற்கை வளங்களை கூட்டாக மேம்படுத்திப் பாதுகாப்பதற்கு "போர்த் தந்திர கூட்டாளிகளுடன்"(Strategic Partners) ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் எனும் யோசனையை முன்வைத்திருந்தார்.

சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு முக்கியக் கூட்டத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், ட்ரம்ப்பின் மத்திய கிழக்குப் பிரதிநிதியான ஸ்டீவ் விட்காஃப், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், மற்றும் புதினின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர் யூரி உஷாகோவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், அமெரிக்க அதிகாரிகளிடம் ஒரு புதிய பொருளாதாரக் கூட்டு முயற்சியை தொடங்கலாம் என்ற யோசனையை ரஷ்யா முன்வைத்தது. இந்த முயற்சியானது, 2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தபோது கைப்பற்றிய நிலப்பகுதிகளை உள்ளடக்கியதோடு, போர் முடிவுக்கு வருவதையொட்டிய நிகழ்வு பற்றியதாக இருக்கும் என்றும் தெரிய வருகிறது. தற்போது ரஷ்யாவின் வசமுள்ள பகுதிகள் மட்டுமல்லாது, அமைதி உடன்பாட்டின் மூலம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் உக்ரைனிய நிலப்பரப்பின் பெரும்பகுதியைத் தன்னகத்தே வைத்துக்கொள்வதே ரஷ்ய திட்டத்தின் சாரம்சமாகும். குறிப்பாக, போரை பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்து அமெரிக்க செலவுகளைப் குறைப்பதில் டிரம்ப் காட்டும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 500 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அரிய கனிம வளங்களை அமெரிக்காவுக்கு கைமாறாக உக்ரைன் வழங்க வேண்டும் என்று டிரம்ப் வற்புறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த கனிம வளங்களின் உரிமையை இரு நாடுகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டதாக என்.பி.சி செய்தி நிறுவனம் கூறுகிறது.

உக்ரைனின் அரிய கனிம வளங்கள் தொடர்பான உடன்படிக்கையில் கையெழுத்திடத் தமது குழு ஏறத்தாழ தயாராக உள்ளது என்று இந்த வாரம் டிரம்ப் தெரிவித்தார். மேலும், ஜெலென்ஸ்கியை விரைவில் சந்திக்கவிருப்பதாகவும் அவர் கூறினார். 

உக்ரைன் கனிம வளங்களை கூட்டாக பங்குபோட்டுக் கொள்வதற்கு அமெரிக்கா ஒப்புக்கொள்கிறபட்சத்தில், உக்ரைனை தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்க முயலும் ரஷ்யாவின் எண்ணம் வலுவிழக்கக்கூடும் என்ற போதிலும், உக்ரைனில் அமெரிக்க நலன்கள் குறித்தான டிரம்ப்’ன் பார்வையே மாறக்கூடும் என்பதால் ரஷ்யா தீவிர முனைப்புடன் செயற்படுவதாக கருதலாம் என்று இப்பிராந்திய விவகாரத்தில் அனுபவம் வாய்ந்த முன்னாள் அமெரிக்கத் தூதர் ஒருவர் தெரிவித்தார்.

உக்ரைனின் அரிய கனிமங்கள் பலவும் ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள அல்லது ரஷ்ய இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பிரதேசங்களில் அமைந்திருக்கின்றன. அதோடு, ரஷ்ய பெருவணிக கார்ப்பரேட்டுகள் ஏற்கனவே இந்தக் கனிமங்களில் சிலவற்றைச் சுரண்டி எடுத்து வருவதாக ஐந்து அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

உக்ரைனின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்தக் கனிமங்களைப் எடுத்துச் செல்வதென்பது சவால்கள் நிறைந்ததாகவும், அதிக செலவு பிடிப்பதாகவும் இருக்கக்கூடும்.

உக்ரைனில் சுமார் 1,56,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகளும், அபாயகரமான வெடிபொருட்களும் நிறைந்து காணப்படுவதாக இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் போர்க்களங்களில் வெடிபொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள HALO அறக்கட்டளையின் தலைவர் ஜேம்ஸ் கோவன் எச்சரித்தார்.

"உக்ரைன் கனிம வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான எந்தவொரு சிந்தனையும், கண்ணிவெடிகளை அகற்றும் திட்டத்தை உள்ளடக்கியதாக இருந்தால்தான் அது சாத்தியமாகும்," என்று ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் படைத் தலைவர் கோவன் அந்த நிகழ்வின்போது குறிப்பிட்டார்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.nbcnews.com/politics/national-security/russia-offered-us-deal-minerals-ukranian-territory-seized-rcna193700