தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் மாநில கல்விக் கொள்கை: பேராசிரியர் ஜவகர் நேசன் குற்றச்சாட்டு

royam murali

தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் மாநில கல்விக் கொள்கை: பேராசிரியர் ஜவகர் நேசன் குற்றச்சாட்டு

எதிர்பார்த்தது நிகழ்ந்து விட்டது. தமிழக அரசின் கல்விக் கொள்கை தயாரிக்க அமைக்கப்பட்ட உயர்நிலை குழுவில் இருந்து அதன் அமைப்பாளர் பேராசிரியர் ஜவகர் நேசன் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார்.

தொடர்ந்து மறைமுகமாக தேசிய கல்விக் கொள்கையின் பல கூறுகளை மாநில அரசின் கல்விக் கொள்கைக்குள் கொண்டுவர பல சக்திகள் முயன்றதாக முயலுவதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும் திரு.உதயச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரி தன்னை மிகவும் தரக்குறைவாக நடத்தி அவமானப்படுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஜவகர் நேசன் அவர்கள் முதல் கட்டமாக 150 பக்கங்கள் கொண்ட பிராப்ளம் ஸ்டேட்மெண்ட் என்ற ஒரு ஆவணத்தை தயாரித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கின்ற 13 குழுக்களை உருவாக்கி, அதில் பல கல்வியாளர்களை இடம்பெறச் செய்து, அந்தக் குழுக்களும் தொடர்ந்து உரையாடல்களை நிகழ்த்தி, அவர்கள் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்த வேளையில்,

இது குறித்தெல்லாம் கவலை கொள்ள முடியாது, என்ற போக்கில் மாநிலக் கல்விக் கொள்கைக் குழு ஜனநாயக முறையில் இயங்காமல், யாரோ திணிக்கின்ற சில கருத்துக்களை இடம்பெற செய்ய திட்டமிடுவதாகவும் ஜவகர் நேசன் குறிப்பிடுகிறார். அவருடைய பத்திரிக்கை அறிக்கை தமிழகத்தில் கல்வியின் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் உருவாக்கும்.

இதுகுறித்து முதலமைச்சருக்கு அவர் 250 பக்க ஆவணத்தை சமர்ப்பித்தும் எதுவும் நிகழாததை அவர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

ஒருபுறம் தேசிய கல்விக் கொள்கை திணிப்பு, மறுபுறம் அதிகாரிகளின் எதேச்சதிகாரம், இன்னொரு புறம் இது குறித்து அக்கறை காட்டாத ஆட்சியாளர்கள் என்ற நிலையில் தன்னுடைய எதிர்ப்பை காட்டும் வகையில் ஜவகர் நேசன் அவர்கள் 13 குழுக்களின் கருத்தாக்கங்களையும் தொகுத்து சமர்ப்பித்து விட்டு பதவி விலகல் செய்திருக்கிறார்.

வேதனையுடன் அவர் பகிர்ந்து உள்ள தகவல்கள் தமிழகத்தின் கல்வி நிலையை தோலுரித்துக் காட்டுகின்றது.

இதில் கட்சி அரசியல் பேசாமல் கல்வி அரசியல் பேசுவது அவசியம்.

- Royam Murali

(முகநூலில்) 

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு