வர்ணமும் சாதியும் அடித்தளமா ? மேல் கட்டுமானமா ? என்பது குறித்த சுருக்கமான மார்க்சிய கண்ணோட்டம்.

Sidhambaram Voc

வர்ணமும் சாதியும் அடித்தளமா ? மேல் கட்டுமானமா ? என்பது குறித்த சுருக்கமான மார்க்சிய கண்ணோட்டம்.

அடித்தளம் என்பது உற்பத்தி முறையைக் குறிக்கின்றது. உற்பத்தி முறையானது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் இரண்டையும் உள்ளடக்கியது. அதிலிருந்து எழுகின்ற, அதை பாதுகாக்கின்ற அம்சங்கள் ஒரு சமூகத்தின் மேல் கட்டுமானங்களாக அமைகின்றன. மேல் கட்டுமானம் அடித்தளத்தின் மீது செல்வாக்கு செலுத்தினாலும், அடித்தள மாற்றமே சமூக மாற்றத்திற்கான அடிப்படை. சமூக அடித்தளத்தை வர்க்கப் புரட்சியின் மூலம் மாற்றியமைப்பதன் மூலமாகவே மேல் கட்டுமானத்தையும் மாற்ற முடியும். இதுவே மார்க்சியத்தின் அடிப்படை. 

உற்பத்தி உறவுகள் எனபது திட்டவட்டமான வர்க்க உறவுகளைக் குறிப்பதாக  மார்க்சியம் வரையறுக்கிறது. அதாவது உற்பத்தி உறவு என்பது உற்பத்தி சக்திகள் மீதான பல்வேறு வர்க்கங்களின் பொருளாயாத உறவை குறிக்கிறது. ஆகவே  அவை வர்ண உறவுகளாகவோ சாதி உறவுகளாகவோ இருக்க முடியாது. காரணம் வர்ணம் மற்றும் சாதிகளில் பல்வேறு வர்க்கப் பிரிவுகள் உண்டு. ஆகவே உற்பத்தி உறவுகளும் சாதி உறவுகளும் ஒன்று என  சொல்வது வர்ணம் மற்றும் சாதிகளில் இருந்த - இருக்கின்ற பல்வேறு வர்க்க வேறுபாடுகளை மூடி மறைப்பதாக ஆகிவிடும். ஆக சமூகத்தில் வாழும் அனைத்து மனிதர்களையும் உற்பத்தி உறவுகளாக கருதக்கூடாது. உற்பத்தியினால் ஏற்படும் திட்டவட்டமான பொருளாயாத உறவுகளே ( Relations  based on production ) உற்பத்தி உறவுகளாக அமைகின்றன.  உற்பத்தி முறைக்கு வெளியே எந்தெந்த பிரிவினர்  நிறுத்தப்பட்டுள்ளார்கள் என பார்க்க  வேண்டும். 

இந்தியாவில் நிலவிய வர்ண சமூகத்தை ஆண்டான் அடிமைச் சமூகம் என கூறுகிறோம்.    அதாவது வர்ணமும் வர்க்கமும் ஒன்று  எனும் பொருளில் நாம்  கூறவில்லை.  தனிச்சொத்துடமை மீதான ஆதிக்க ( ஆண்டை) வர்க்கம் , சொத்துடமையற்ற  அடிமை வர்க்கம் என்று அச்சமூகம் வர்க்க சமூகமாகவே இயங்கியது. இங்கு வர்ணங்கள் அடித்தளம் என சொல்ல முடியுமா ? முடியாது. ஏனெனில் அனைத்து வர்ணங்களும்  தனிச்சொத்துடமை மற்றும் உற்பத்தி சாதனம் மீதான உரிமை பெறவில்லை. நால் வர்ணங்களுக்குள் இருந்த ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும்,  நால் வர்ணத்திற்கு அப்பால நிறுத்தப்பட்ட பஞ்சமர் எனப்படும் அவர்ணாஸ்களும்  இந்த உற்பத்தி முறையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். இந்த வர்க்க அடிப்படையிலான உற்பத்தி முறையை பாதுகாத்து நியாயப்படுத்தவே  நால் வர்ணக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. மதத்தின் தோற்றமும் இந்த முதல் வர்க்க சமூகத்தில் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் பொருட்டு  உருவாக  துவங்குகிறது. இந்த உற்பத்தியை பாதுகாக்க  அரசும் தோற்றம் பெறுகிறது. ஆகவே அவை  மேல் கட்டுமானங்களாக அமைகின்றன. 

வேளாண்மயமாக்கலின் வளர்ச்சியின் ஊடாக தோன்றிய நிலவுடமை சமூகத்தில் ( மன்னராட்சி )  வர்ணங்கள்  பல நூறு சாதிகளாக பிளவுண்டன. சாதிகளில் இன்னமும் புதிய  பல வர்க்க வேறுபாடுகள் உருவாகின. இந்த உற்பத்தி முறையில் அனைத்து சாதிகளும் உற்பத்தியில் ஈடுபட்டார்களா ? எனில் இல்லை. இந்த உற்பத்தி முறையில்  நில உடமையாளர்கள் - விவசாயிகள்,  பண்ணையடிமைகள், விவசாயக்கூலிகள் என்பதாகவே உற்பத்தி உறவுகள் அமைந்தன - அமைகின்றன. அவை சாதிய உறவுகளாக இல்லை. வர்க்க உறவுகளாகவே உள்ளன.  பார்ப்பன சாதியிலும் கூட  நிலம் உள்ளிட்ட உற்பத்தி சக்திகள் மீது உரிமை பெறாத சவுண்டி பார்ப்பனர் ( பார்ப்பனருக்கு ஈமச்சடங்கு செய்வோர் ) , சமையல் செய்யும் பார்ப்பனர் எனும் வர்க்க வேறுபாடுகள்  வேலைப்பிரிவினை அடிப்படையில் உருவாகின. பறையரிலும் கூட ஒரு சிறு பிரிவுக்கு  நிலங்களை காவல் காக்கும் பொருட்டு  சிறிதளவில் நிலம் வழங்கப்பட்டன. ஆகவே இதுவும் வர்க்க சமூகமாகவே இயங்கியது. ஒவ்வொரு சாதியிலும் பல்வேறு  வர்க்கங்கள் இவ்வாறு  நிலவுடமை உற்பத்தி முறையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.  இந்த  நிலவுடமை உற்பத்தி முறைக்கு வெளியே நிறுத்தப்பட்ட இப்பிரிவினரிடையே உருவான இழிவான தொழில்களின்  வேலைப்பிரிவினையே சாதியமைப்பின் அடிப்படையாகும். ஆகவே இந்த சாதியமைப்பும்,  அதனை நியாயபடுத்திய பார்ப்பனியம் மற்றும்  மனுவின் சனாதன தர்மமும் மேல் கட்டுமானமாக அமைகின்றன.  இந்த கட்டத்தில்  அகமணமுறை, பார்ப்பனிய சடங்குகள் மற்றும் சாதிகளை நிறுவனப்படுத்துவதன் மூலமாக மதமும்  தன்னை நிறுவனப்படுத்திக்கொண்டது. 

ஆகவே  வர்ணமும் சாதியும் அடித்தளம் அல்ல என்பதும் , வர்ணம் மற்றும் சாதிகளில் பல்வேறு வர்க்க வேறுபாடுகளும் இருந்தன, இருக்கின்றன என்பதும் தெளிவு. இந்த நிலவுடமை உற்பத்தியை ஒழித்து  கூட்டுப்பண்ணைகள் உருவாக்கி வேளான் துறையில்  முதலாளித்துவ வளர்ச்சியை கட்டியமைத்தால்தான் சாதியமைப்பை முற்றாக மிச்ச சொச்சமின்றி   தகர்க்க இயலும்.  சாதி இன்னமும்  நீடித்து வருவதற்கான காரணம் அரைநிலவுடமை முறை வெவ்வேறு வடிவங்களில் இன்னமும்  நீடிப்பதேயாகும். இந்தியாவில் சாதியமைப்பும் பார்ப்பனியமும் ஓரளவு  தகர்ந்து வருவதற்கான காரணம் ( இன்னமும் முற்றாக தகரவில்லை. புதிய ஜனநாயகப்புரட்சியின் மூலம் முதலாளியத்திற்கு முந்தய உற்பத்தியை ஒழிக்கும்போதுதான் அவற்றை  நெட்டித்தள்ளி  முற்றாக தகர்க்கமுடியும்) இங்கு ஏற்பட்டும் வரும் அரைகுறை முதலாளித்துவ வளர்ச்சியே தவிர பெரியார் அம்பேத்காரால் அல்ல என்பதையும் நாம்  புரிந்துகொள்ள வேண்டும். 

வர்ணமும் சாதியும் உற்பத்தி உறவுகளாக ( அடித்தளம்)  இருந்தன , இருக்கின்றன என்றால் வர்ணம் - சாதியும்  வர்க்கமும் ஒன்று என  பொருள். அவையிரண்டும்  எப்போதும் அடித்தளமாக இருந்ததில்லை. இருக்கவும் இயலாது. அவ்வாறு இருந்ததாக சொல்வது சாதிதான் அடித்தளம் - எனவே சாதியப் போராட்டம்தான் பிரதானம்; வர்க்கப் போராட்டம் தேவையில்லை எனும் புதிய இடதுகளின் கலைப்புவாத - அடையாள அரசியலாகும்.  புதிய இடது கலைப்புவாதி அ.மார்க்சு, ந.முத்துமோகன் உள்ளிட்டோர் சாதியும் வர்க்கமும் ஒன்று, சாதிதான் அடித்தளம் என்கின்றனர்.  வர்ணமும் சாதியும்  அடித்தளம் என்று சொல்லியே சாதியவாத அடையாள  அரசியலை நியாயப்படுத்துகின்றனர். இதற்கு பெரியார் -அம்பேத்கரின் கருத்துகளை முன்வைத்து வலு சேர்க்கின்றனர். பெரியாரும் அம்பேத்கரும் சாதி, மதம், பார்ப்பனியத்தை அடித்தளம் எனும் பொருளில்தான் பேசியுள்ளனர். அதனால்தான் அதை ஒழிப்பதே சமூக மாற்றத்தின் துவக்கம் என்கின்றனர். அவர்கள்  வர்க்கப்போராட்டத்தை ஏற்கவில்லை. 

திரிபுவாதியான கிராம்சி அடித்தளம், மேல்  கட்டுமானம் இரண்டும் ஒன்றிணைந்த வரலாற்று முழுமை ( Historical block ) என்கிறார். இதிலிருந்துதான் மேற்சொன்ன  புதிய இடதுகள் சாதி , மதம் இரண்டும்  அடித்தளமாகவும் மேல் கட்டுமானமாகவும் செயல்படுகிறது எனும் திரிபுவாதத்தை முன்வைக்கின்றனர். இவ்விதம் அடையாள அரசியலுக்கு மார்க்சிய முகமூடி அணிவிக்கின்றனர். 

ஆகவே வர்ணமும் சாதியும் மேல் கட்டுமானம் என்றே மார்க்சியம் வரையறுக்கிறது. அவை அடித்தளம் என்பது பெரியாரிய, அம்பேத்கரிய, புதிய இடதுகளின் கலைப்புவாத கருத்தாகும். அது அடையாள அரசியலுக்கான வழியாகும்.

- Sidhambaram Voc

https://www.facebook.com/100028720695743/posts/pfbid07f5164VRpsceNJR8WNicH1kLJZYFcSkE6o1U1Gdtxn97Vq7hdK5jt8qcNKaSNADtl/?app=fbl