ரஷ்யாவுடன் தொடர்பிலிருக்கும் 19 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளுக்கு மௌனம் சாதிக்கும் இந்தியா

தமிழில்: விஜயன்

ரஷ்யாவுடன் தொடர்பிலிருக்கும் 19 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளுக்கு மௌனம் சாதிக்கும் இந்தியா

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை தவிர்ப்பதற்கு உதவும் “மூன்றாம் தரப்பு நாடுகளிலுள்ள தடை தவிர்ப்பு பேர்வழிகளை” கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க நிதித் துறை சார்பில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 17 நாடுகளிலுள்ள 400 கம்பனிகள், தனிநபர்கள் மீது இத்துறை மூலமாக பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இரஷ்யாவிற்கு இராணுவம்--இராணுவம் சாராத தேவைகளுக்கு என்ற பெயரில் “இரட்டைத் தேவைகளுக்காக” பயன்படுத்தப்படும் சாதனங்களை இரஷ்யாவிற்கு வழங்கிய 19 இந்திய கம்பனிகள்--தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை விதித்திருப்பது குறித்து இந்தியா சார்பில் எவ்வித நேரடியான எதிர்வினையும் வெளிப்படவில்லை.

கடந்த புதன்கிழமையன்று (அக்.30,2024) அமெரிக்கா விதித்துள்ள பொருளதார தடைகளை தவிர்ப்பதற்கு 17 மூன்றாம் தரப்பு நாடுகளிலுள்ள 400 கம்பனிகள், தனிநபர்கள் மீது அமெரிக்க நிதித் துறை சார்பாக பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஒரேயடியாக பெரும் எண்ணிக்கையிலான இந்தியாவைச் சேர்ந்த கம்பனிகள்--தனிநபர்கள் மீது அமெரிக்க விதித்துள்ள தடைகளுக்கு இந்தியாவின் பதில்வினை என்னவென்பது குறித்து பல்வேறு தரப்பினர் மத்தியிலிருந்தும் கடந்த வெள்ளியன்று (நவ.1, 2024) வந்த கேள்விகளுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

இதேபோல, வியாழன்று (அக்.31,2024) இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோருக்கு இடையில் நடந்த செல்போன் உரையாடல் வழியாக அமெரிக்கா விதித்த தடைகள் குறித்து பேசப்பட்டதா என்ற கேள்விக்கு வெளியுறவுத் துறை அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

“இந்தோ--பசிபிக் பிராந்தியத்திலும், சர்வதேச அளவிலும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு வேண்டிய நடவடிக்ககைகளை அதிகரிக்க வேண்டிய தேவைகளை மையப்படுத்தி அதாவது பிராந்திய அளவில் எழுந்துள்ள பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகள்” மையப்படுத்தி இருநாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்கள் விவாதித்தனர் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இரஷ்யத் தொடர்புடைய இந்திய கம்பனிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள தடை நடவடிக்கைகள் பற்றி அந்த செய்திக் குறிப்பில் எதுவும் இடம்பெறவில்லை.

முன்னிலும் அதிகரித்துவரும் நெருக்கம்

“இராணுவத் துறையில் ஒத்துழைப்பு, மாசில்லா எரிசக்தி துறையின் மொத்த விநியோகச் சங்கிலி உட்பட முக்கியத் துறைகளில் முன்னிலும் அதிகமான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு உண்டான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது” என்று வாசிக்கப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்து. இருநாடுகளும் சேர்ந்து வேகமாக வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கு,  2023--ல் iCET(Initiative on Critical and Emerging Technology) என்ற திட்டத்தை துவக்கியிருந்தார்கள். இத்திட்டம் வாயிலாக “இருநாடுகளுக்கு இடையிலான கூட்டணி எந்தளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது” என்பது குறித்தும்கூட அந்த செய்திக் குறிப்பில் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா போன்ற தனிப்பட்ட நாடுகள் “ஒருதலைபட்சமாக விதிக்கும் தடைகளை இந்தியா அங்கீகரிக்காது” என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக கூறி வந்தாலும்,  2022--ம் ஆண்டிலிருந்து இரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுடன் தொடர்பிலிருக்கும் பல்வேறு இந்திய கம்பனிகள் மீது அமெரிக்க நிதித் துறை விதித்துள்ள தடைகளுக்கு மோடி அரசு எவ்வித எதிர்வினையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ள தகவல்படி, தடைசெய்யப்பட்ட கம்பனிகள், உரிமையாளர்களின் அமெரிக்க சொத்துகள் முடக்கப்படுவதோடு, அமெரிக்க குடிமக்களுடன் எவ்வித தொடர்புகளும் வைத்துக் கொள்ள முடியாதளவிற்கு அனைத்து பரிவர்த்தனைகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

“உக்ரைனுக்கு எதிராக சட்டவிரோத, அநீதியான போரை நடத்தி வரும் இரஷ்யாவிற்கு உதவும் வகையில் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய கருவிகள், தொழில்நுட்பங்களை தடை செய்வதற்கு அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் தொடர்ந்து திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்” என்று இந்த வாரம் தடை குறித்து பேசும்போது அமெரிக்க நிதித் துறையின் துணைச் செயலாளர் வாலி அடியேமோ தெரிவித்திருந்தார்.

மெய்யான எல்லைக் கட்டுப்பாடுப் பகுதியில்(LAC) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த இரண்டு இராணுவ பதற்றம் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்ட இரண்டு நாள்களுக்கு பிறகுதான் அமெரிக்க--இந்திய பாதுகாப்பபு ஆலோசகர்களுக்கு இடையிலான செல்போன் உரையாடல் துவங்கியுள்ளது. நிஜ்ஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக இந்தியா, கனடா நாடுகளுக்கு இடையில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து பேசியுள்ளார்கள். 2023--ல் கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் இயக்கத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை படுகொலை செய்வதற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் உத்தரவிட்டுள்ளார் என்று சமீபத்தில் கனடா குற்றம் சாட்டியிருந்தது. அக்டோபர் 2024, சிங்கப்பூரில், இந்தியா மற்றும் கனடா நாட்டு உளவுத் துறையினருக்கு இடையில் நடந்த கூட்டத்தின் போது பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவல் அவர்களிடம் விசாரணையில் கண்டறியப்பட்ட தகவல் குறித்து தெரிவிக்கப்பட்டதோடு, இந்த படுகொலை சம்பவம் தொடர்பான இரகசியத் தகவல்களை பிரபல வாஷிங்டன் பத்திரிகை வழியாக கசியவிட்டதையும்கூட கனடா நாட்டு அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கனடா நாட்டின் மத்திய காவல் துறை(RCMP) ஆணையர் மட்டுமல்லாது, துணை வெளியுறவுத் துறை மந்திரியும் வெளிப்படையாக வைத்துள்ள குற்றச்சாட்டுகள் “கவலைப்பட வேண்டிய” ஒன்றாகத்தான் இருக்கிறது என்று அமெரிக்க உள்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும் இது குறித்து கேட்ட போது, “முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கனடா நாட்டு அரசாங்கத்திடம் தொடர்ந்து அமெரிக்கா அரசாங்கம் சார்பில் கலந்தாலோசிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

கனடா சார்பில் புதிதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் அல்லது இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் “அபத்தமானது”, “வாக்கு வங்கி அரசியல்”, நலனிற்கானது என்று அவ்வப்போது மறுத்துவந்த போதிலும் “கவலைப்பட வேண்டிய” ஒன்றுதான் என்று சமீபத்தில் அமெரிக்கா வெளியிட்ட செய்திக்குறிப்பு குறித்தும் இந்திய வெளியுறவு அமைச்சகம் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகிறது. இந்திய அதிகாரிகள் உத்தரவின் பேரில் அமெரிக்க காலிஸ்தான் இயக்க தலைவரான குர்பதவந்த் சிங் பன்னுன் என்பவர் படுகொலை செய்யப்பட்டதாகஅமெரிக்க வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக இந்திய அரசு சார்பில் “உயர்மட்ட” குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது, அதில் கண்டறியப்பட்ட தகவல் குறித்தும் அஜித் தோவால், ஜேக் சல்லிவன் ஆகியோருக்கு இடையில் நடந்த செல்போன் உரையாடலில் விவாதிக்கப்பட்டதா என்பது குறித்து எந்தவொரு தெளிவான தகவலும் வெளிவரவில்லை.

- விஜயன் (தமிழில்)