‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ : பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

மாநில ஆட்சி மற்றும் மக்களாட்சி முறைகளை ஒழித்து கார்ப்பரேட் நலன்களுக்கான பாசிச ஒற்றையாட்சி முறையை உருவாக்க வழிசெய்யும் ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ முயற்சியை முறியடிப்போம்!

‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ :   பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி  அறிக்கை
‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ :   பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி  அறிக்கை

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி  அறிக்கை

 

கடந்த திசம்பர் 15 அன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜீ, ”ஒரே தேசம், ஒரே தேர்தல்” தொடர்பாக சட்டக் குழு பரிசீலிப்பதாக தெரிவித்ததோடு இந்திய சட்ட ஆணையம் இது குறித்து முடிவுசெய்யும் என கூறினார். இந்திய சட்ட ஆணையமும் உடனே களம் இறங்கி, ”ஒரே தேசம், ஒரே தேர்தல்” குறித்து 6-கேள்விகளை முன்வைத்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அனுப்பி கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுள்ளது.

 

இவர்கள் கூறுகிற “ஒரே தேசம், ஒரே தேர்தல்” என்ற ஒற்றை சர்வாதிகாரத்திற்கான முயற்சி 1983 ஆம் ஆண்டு இந்திரா காந்தியால் மேற்கொள்ளப்பட்டது. பிறகு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1999ல் முழுமைப்படுத்தப்பட்டு 170வது - தேர்தல் சீர்திருத்த அறிக்கையாக சட்ட ஆணையத்தால் மே 1 1999ல் வெளியிடப்பட்டது. இப்போது தன்னுடைய பெரும்பான்மை பலத்தை வைத்து நிறைவேற்ற மோடி ஆட்சி அதற்கான தொடக்கப்பணியை ஆரம்பித்துவிட்டது.

 

1999ல் தேர்தல் சீர்திருத்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த பல்வேறு பரிந்துரைகளான தேர்தல் செலவு, கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிதி வரவு ஆகியனவற்றைக் கட்டுப்படுத்துவது, 5%க்கும் குறைவான வாக்குகள் பெறும் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது, குற்றப் பின்னணி உள்ளவர்களைத் தடுப்பது, சுயேட்சையாக போட்டியிடும் முறையை ஒழிப்பது ஆகியவை குறித்தும் மாற்று முறைகளில் ஏற்கெனவே உள்ள தேர்தல் முறையோடு பெண்கள், சிறுபான்மையினர் உட்பட அனைத்து பிரதிநிதிகளும் அடங்கிய விகிதாச்சார பிரதிநிதித்துவமுறையை இணைத்து கலப்பு முறையை கொண்டுவருவது கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் என பல்வேறு மாற்றங்களை முன்மொழிந்தது. அப்பரிந்துரைகளில் ’ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்பதும் ஒன்றாகும். இதை மட்டும் இப்போது நடைமுறைப்படுத்த மோடி அரசு துடிக்கிறது.

 

”ஒரே தேசம் ஒரே தேர்தல்” என்பது சட்டமன்றம், நாடாளுமன்றம் என எல்லா தேர்தல்களையும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே நேரத்தில் நாடு முழுவதும் நடத்துவது, சட்டப்பிரிவு 356 ஐ பயன்படுத்தி மாநில ஆட்சிகளை கலைக்க நேர்ந்தாலோ அல்லது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் ஒன்றிய ஆட்சி கலைக்கப்பட்டாலோ மீதம் இருக்கிற காலத்திற்கு மட்டும் ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் நடத்துவது அல்லது ஆளுநர் அல்லது குடியரசு தலைவர் ஆட்சியை இடைக்காலங்களில் நடைமுறைப்படுத்துவது ஆகியவையே சட்ட ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்ட மாற்று முறையாகும்.

 

தேர்தல் செலவினங்களைக் குறைக்க முடியும் என்றும் (அதாவது வாக்குச் சீட்டுமுறையை ஒழித்து மின்னணு வாக்குமுறைகள் மூலம் தேர்தல் நடைமுறை செலவைக் குறைத்தது போல்), அரசியல் கட்சிகள் செய்யும் செலவைக் குறைக்க முடியும் என்றும், ஆட்சியின் நிலைத் தன்மையற்று இருப்பதை மாற்றி வளர்ச்சிப் பணிகளை தடையின்றி கொண்டு செல்ல முடியும் என்றும் 1999ஆம் ஆண்டு தேர்தல் சீர்திருத்த சட்ட ஆணையத்தின் அறிக்கையில் ஒரே தேர்தல் முறையைப் படிப்படியாக கொண்டுவர வேண்டும் என்பதற்கான் காரணங்களாக சொல்லப்பட்டன.

 

இவர்கள் சொல்லுகின்ற காரணங்களும் கொண்டுவருகிற நோக்கமும் வேறுவேறாகும்.

 

ஒருமுறை ஆட்சிக்கு வந்துவிட்டால் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்யக் கூடிய வாய்ப்பை ஒன்றிய அரசில் ஆட்சிக்கு வருவோர் பெற்றுவிடுவர். மராட்டியம், கோவா, மேகாலயா, திரிபுரா, நாகலாந்து என பல மாநிலங்களிலும் குதிரை பேர அரசியல் மூலம் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடித்துள்ள பாஜகவின் சீரழிந்த வரலாற்றை மறுக்க முடியாது. அப்படி கலைக்க முடியாத மாநிலத்தைப் பொறுத்தவரை தொங்கு சட்டப்பேரவை அமைந்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டி ஏற்பட்டால் ஐந்து ஆண்டு நிறைவடையும் வரை ஆளுநர் ஆட்சியின் கீழ் அம்மாநிலம் போய்விடும். ஒன்றிய அரசுடன் முரண்படும் மாநில அரசுகளைக் கலைத்துவிட்டு ஆளுநர் வழியாக ஒன்றிய அரசே ஆள்வதை சட்டப்பூர்வமாக ஆக்கிவிடும். 2018 ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட சம்மு – காசுமீர் சட்டப்பேரவைக்கு இன்றைக்கு வரை தேர்தல் நடத்தாமல் காலங்கடத்தி வருகிறது பாசக . ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பது நடைமுறைக்கு வந்துவிட்டால் சட்டத்தின் பெயராலேயே இவற்றையெல்லாம் செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் இந்திய தேர்தல் ஆணையத்தை மட்டும் வைத்துக் கொண்டு மாநில தேர்தல் ஆணையங்களைக் கலைப்பதற்கு வழிவகுக்கும்.

 

நிலையான ஆட்சி அமையாததால் வளர்ச்சிப் பணிகளைத் தடையின்றி கொண்டு செல்ல முடியவில்லை, நாட்டை பலவீனப்படுத்துகிறது அதற்கு இந்த தேர்தல் முறை தடையாக இருக்கிறது என்று முன்வைக்கப்படும் காரணம் மோசடியானதாகும். ஆட்சியாளர்கள் கடைபிடித்து வரும் தாராளமய, தனியார்மய அரசியல் கொள்கைகளால் ஏற்பட்ட அதிருப்திகளால்தான், ஆட்சியாளர்கள் கடைபிடிக்கும் மக்கள் விரோத கொள்கைகளால்தான் மக்களின் செல்வாக்கை இழந்தார்கள், இப்போதைய பாஜக ஆட்சியும் பல மாநிலங்களில் செல்வாக்கை இழந்துக்கொண்டிருக்கிறது. எந்த கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாத போது தொங்கு பாராளுமன்றம், தொங்கு சட்டமன்றம் அமைகிறது. அதுபோன்ற நிலைகளில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்து வாக்கெடுப்பு நடத்தி ஓர் ஆட்சி பாதியிலேயே முடிவுக்கு கொண்டுவரப் பட்டு மீண்டும் தேர்தல் நடத்த நேர்கிறது. இங்கு மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு ஏற்ப கொள்கையை மாற்றுவதற்கு மாறாக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த வழிசெய்யும் விதிகளை மாற்றி அதை ஒழித்துக்கட்டி ஓர் எதேச்சதிகார தேர்தல் முறையின் மூலமாகவே நிலையான ஆட்சியை அமைக்க முயல்கிறது பாசக. இது பாசிசத்திற்கு வழிவகுக்கும்.

 

இப்போதுள்ள பாசிச பாஜக ஆட்சியும் ஏகபோக நிதிமூலதன ஆற்றல்களுக்கு சார்பான கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறது. அதற்கு உகந்த நிரந்தரமான ஆட்சியை உருவாக்கிவருகிறது. பாஜக மட்டுமே தொடர்ந்து ஆள்வதற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறது. நிலையான ஆட்சி என்ற பெயரில் தனக்கு எதிராக இருக்கும் மாநிலங்களின் ஆட்சிகளை கலைப்பது அல்லது கைப்பற்றுவது, மாநில பட்டியலில் இருக்கும் இனங்களின் அதிகாரங்களை பொதுப்பட்டியல் அல்லது ஒன்றியப் பட்டியலில் கொண்டுவருவது என மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களையும் பறித்து குவித்துக் கொள்ள முனைகிறது. அதாவது, ஒற்றையாட்சி சர்வாதிகாரத்திற்கு மாநிலக் கட்சிகள் தேர்தலில் வெற்றிப் பெற்று மாநில அரசில் ஆட்சியைப் பிடிப்பது தடையாக இருப்பதாக பாஜக கருதுகிறது. ஒரே தேசம், ஒரே தேர்தல் என்று வரும்போது அனைத்திந்திய கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலின் பொருட்டு உருவாக்கும் கதையாடல் சட்டப்பேரவைக்கான தேர்தலிலும் செல்வாக்கு செலுத்தும். இது அனைத்திந்திய கட்சிகளுக்கு சாதகமாக அமையும். பஞ்சாயத்து தேர்தல் கூட ஒரே நேரத்தில் நடத்த முயற்சிக்கும்.

 

இதனோடு 5% ற்கும் குறைவான வாக்குகளை பெறும் கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது என்ற இன்னொரு தேர்தல் சீர்திருத்தத்தையும் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும். இது எல்லா மாநில கட்சிகளையும் நாடாளுமன்றத் தேர்தல் முறை மூலம் ஒழித்துக் கட்டுவதாகும். மாநில அளவில் பல்வேறு பிரதிநிதிகள் குறிப்பாக சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் ஆகியோருக்கான கட்சிகள் தேர்தலில் பங்கேற்பதை தடை செய்யும் நோக்கோடு பரிந்து செய்யப்பட்டுள்ள சீர்திருத்தமாகும். இது எல்லா வகையான மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புக்கும் தடைகளை உருவாக்கி பெரும்பான்மைவாத பாசிச ஆட்சி முறைக்கு வழிவகுக்கும். மேலும், இதை நடைமுறைப்படுத்தும் போக்கில் ஜெர்மனியில் ஹிட்லர் செய்தது போல் தேர்தலற்ற அதிபர் ஆட்சியமைக்கும் நோக்கமும் பாஜகவுக்கு இருக்கிறது. நாளடைவில் தேர்தல் இல்லாமல் நாட்டை ஆள்வது என்பதை நோக்கி இந்த மாற்றம் போவதற்கான வாய்ப்பு உண்டு.

 

மக்களுக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்தவதற்கு என்னவிலை கொடுத்தாவது அதிகாரத்தைப் பரவலாக்காமல் நிதி சிக்கலை காரணம் காட்டி அரைகுறை உரிமைக் கொண்ட மக்களாட்சியிலிருந்து மீண்டும் எதேச்சதிகார ஆட்சி முறைக்கு பின்னிழுத்துச் செல்லவே தற்போது இந்த மாற்றத்தைக் கொண்டுவரத் துடிக்கிறார்கள்.

 

தேர்தல் செலவுகள் மற்றும் கட்சிகள் செய்யும் செலவுகள் ஆகியவை “ஒரே தேர்தல்” முறை மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணமாக கூறுகிறது. உண்மையில், தனது எஜமானர்களான கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டல் தடையின்றி தொடர ஒற்றையாட்சி சர்வாதிகாரத்தை முற்றும் முழுதாக நிறுவ துடிக்கின்றது பாசிச பாஜக அரசு.

 

கார்ப்பரேட்டுகள் கட்சிகளுக்கு கொடுக்கும் நிதிதான் இன்று நாட்டின் கொள்கைகளை தீர்மானிப்பதாக மாறியிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனஙள், மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சிகளுக்கு நேரடியாக நிதி அளிக்காமல் அரசிடம் அளிக்க வேண்டும் என்று இந்திரஜித் குப்தா ஆணையம் (1998) பரிந்துரைத்தது.  இதன்மூலம் இந்த கட்சிகள் பெறும் கார்ப்பரேட் நன்கொடைகளை தடுக்க முடியும். ஆனால், அந்த பரிந்துரையை அப்படியே புதைத்துவிட்டு, எல்லா கட்சிகளும் சேர்ந்து எவ்வளவு நிதியை வேண்டுமென்றாலும் திரட்ட அவர்களே சட்டம் இயற்றி கட்சிகளின் நிதி கொள்ளைக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுக்கொண்டார்கள். 2018-2022 காலத்தில் பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் 5,270 கோடி ரூபாய் பெற்றது; காங்கிரஸ் 253 கோடி ரூபாய் பெற்றது. தேர்தல் நன்கொடைகளை எடுத்துக்கொண்டால் 2022ஆம் ஆண்டு மொத்தம் 920 கோடி ரூபாயில் 94 சதவிகிதத்தை பாஜக கட்சி மட்டுமே பெற்றது. செலவினங்களை தடுப்பதாக மக்களை நம்பச் செய்து இவர்கள் கார்ப்பரேட்டுகளிடம் பங்குபத்திரம் மூலம் பல ஆயிரம் கோடிகளை வாரி சுருட்டிக் கொள்வதை சட்டரீதியாகவே செய்து கொள்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்திருக்கிறது. வருடத்திற்கு சராசரியாக 3 லட்சம் கோடி ரூபாய் மானியமாகவும் ஊக்கத் தொகையாகவும் வரி தள்ளுபடியாகவும் ஒன்றிய அரசு கார்ப்பரேட்டுகளுக்கு வாரிகொடுக்கின்றது, பட்ஜெட்டில் 40% இராணுவத்திற்கு செலவழிக்கிறது. 35% கார்ப்பரேட்டுகளுகளின் வளர்ச்சிக்காக வாங்கும் அந்நிய கடனுக்கு வட்டி கட்டுகிறது. தேர்தல் செலவுதான் நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதாக கூறி இந்த தேசவெறியூட்டுகிற மோடி கும்பல் நீலிக் கண்ணீர் வடிக்கிறது.

 

செலவு குறைப்பதற்காக தேர்தல் முறையை மாற்றுகின்ற முறை பாசிசம் நிலைப்பெறுவதற்கு பயன்படுகிறதே ஒழிய மக்களாட்சி மலர இந்த நிதி சேமிப்பு முறைப் பயன்படவில்லை என்பதை கடந்த 9 ஆண்டுகளாக ஆள்கின்ற பாஜக ஆட்சியின் ஒடுக்குமுறையிலிருந்து எவர் ஒருவரும் முடிவுக்கு வரலாம்.

 

கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி தனிநபராகவோ குழுவாகவோ கட்சி தாவக் கூடாது என்றும் அப்படி தாவினால் அவர்கள் மீது அவைமுன்னவரோ அல்லது சபாநாயகரோ, தேர்தல் ஆணையமோ நடவடிக்கை எடுத்து அவர்களைப் பதவி நீக்கம் செய்யலாம். ஆனால், சட்ட ஆணையம் 2015 ஆம் ஆண்டு தனது 255 அறிக்கையில், கட்சி தாவக்கூடிய தனிநபர் அல்லது குழு மீது தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநர், குடியரசு தலைவருக்கே உண்டு என மாற்றி அமைத்துள்ளது.  ஆளுநரும் சரி குடியரசு தலைவரும் சரி ஒன்றிய அசின் கைப்பாவைகள் என்பதால் கட்சித் தாவுவோரை நீக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசு தன் கையில் எடுத்துக்கொள்கிறது என்பதே இதன் பொருள்.

 

நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களைக் கார்ப்பரேட்களிடம் இருந்து நன்கொடையாகப் பெறும் பாசக, மராட்டியம், கோவா, மேகாலயா, திரிபுரா, நாகலாந்து என பல மாநிலங்களிலும் குதிரை பேர அரசியல் மூலம் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடித்துள்ளது. ஒரு கட்சியில் உள்ள மூன்றில் இரு பங்கினர் கட்சி மாறினாலோ அல்லது கட்சியில் இருந்து வெளியேறினாலோ அதை கட்சித் தாவல் தடை சட்டம் தடுக்கவில்லை. அதற்கு குறைவானோர் கட்சி மாறுவதை இச்சட்டம் தடுக்கும் நிலையில் சட்டப்பேரவை, மக்களவையில் அவைத்தலைவரிடம் இருக்கும் அதிகாரத்தைப் பறித்து ஆளுநரிடமும் குடியரசு தலைவரிடமும் கையளிப்பது குதிரை பேர அரசியலுக்கு இருக்கும் எல்லாத் தடைகளையும் நீக்குவதே ஆகும். இது கட்சித் தாவல் தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து கார்ப்பரேட் ஏகாபோகங்கள் கோடிகளை வீசியெறிந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி தேர்தல், வாக்குசாவடி, மக்களாட்சி என்பதை கேலிப்பொருளாக்க வைக்கும்.

 

எனவே, ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற முழக்கமும் கட்சித் தாவல் தடை சட்டத் திருத்தமும் ஒற்றையாட்சி சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்து பாசிச அரச வடிவமெடுப்பதற்கு வழிவகுக்கும் என்பதால் சனநாயக ஆற்றல்கள் அனைவரும் இதை எதிர்த்து நிற்க வேண்டும் என்று பாசிச எதிர்ப்ப்பு மக்கள் முன்னணி அறைகூவல் விடுகின்றது..

இப்படிக்கு,

                                                                                                                   பாலன்,
ஒருங்கிணைப்பாளர்,
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி

Disclaimer: இந்த பகுதி முன்னணியின்  பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும்  இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு