எதிர்கட்சியினரை அச்சுறுத்தி அடக்கும் பாசிச பாஜக அரசு

தமிழில்: விஜயன்

எதிர்கட்சியினரை அச்சுறுத்தி அடக்கும் பாசிச பாஜக அரசு

டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு அத்துமீறல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கம் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராடியதால், இரு அவைகளிலும் தொடர்ந்து இடையூறுகள் ஏற்பட்டதன் விளைவாக இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 18, திங்கட்கிழமையன்று, இரு அவைகளிலும் மொத்தம் 78 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர், டிசம்பர் 15 முதல் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. மக்களவையில் இருந்து 33 பேரும், மாநிலங்களவையிலிருந்து 45 எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 14ஆம் தேதி மக்களவையில் 13 பேரும், மாநிலங்களவையில் ஒருவரும் என மொத்தம் 14 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளுமே மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்பட்டதால் இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 13-ம் தேதி, இரண்டு நபர்கள் பார்வையாளர்கள் கேலரியில் இருந்து மக்களவை அரங்கத்திற்குள் குதித்து, புகை குப்பிகளை வீசினர். பாதுகாப்பு அத்துமீறல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடியதற்கு எதிர்வினையாக இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

திங்களன்று, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், தற்போது பாதுகாப்பு அத்துமீறல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் சில பரிந்துரைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலதிக பரிசீலனைகள் நடந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"அரசியல் ஆதாயத்திற்கான விசயமாக இந்த விவகாரம் மாற்றப்படுவது வருத்தமளிக்கிறது. அவையின் மையத்திற்கு வந்து கோஷம் எழுப்புவதென்பது அவையின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதோடு, அவையின் கண்ணியத்திற்கும் எதிரானது," என்று அவர் கூறினார்.

மக்களவையில் திங்கள்கிழமையன்று 33 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்

பிற்பகலில் கூடிய அமர்வில், நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்கள் "நடத்தை விதிகளை மீறுதல்" மற்றும் "பெருத்த அவமதிப்பு" ஆகியவற்றைக் காரணம் காட்டி, 30 எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்வைத்தார். மேலும், மூன்று காங்கிரஸ் எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது குறித்து சிறப்புரிமைக் குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

திங்களன்று மக்களவையில் எஞ்சியுள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்கு இடைகாலமாக தடை விதிக்கப்பட்ட எம்.பி.க்கள்: கல்யாண் பானர்ஜி (டிஎம்சி), ஏ. ராஜா (திமுக), தயாநிதி மாறன் (திமுக), அபரூபா போத்தார் (டிஎம்சி), பிரசூன் பானர்ஜி (டிஎம்சி), இ.டி. முகமது பஷீர் (ஐயுஎம்எல்), ஜி.செல்வம் (திமுக), சி.என். அண்ணாதுரை (திமுக), ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (காங்கிரஸ்), டி.சுமதி (திமுக), கே.நவஸ்கனி (ஐயுஎம்எல்), கே.வீராசாமி (திமுக), என்.கே. பிரேம்சந்திரன் (ஆர்எஸ்பி), சவுகதா ராய் (டிஎம்சி), சதாப்தி ராய் (டிஎம்சி), அசித் குமார் மால் (டிஎம்சி), கௌஷேலேந்திர குமார் (ஜேடியு), ஆண்டோ ஆண்டனி (காங்கிரஸ்), எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக), திருநாவுக்கரசர் (காங்கிரஸ்), பிரதிமா மோண்டல் (திமுக), ககோலி கோஷ் தஸ்திதார் (திமுக), கே.முரளீதரன் (காங்கிரஸ்), சுனில் குமார் மண்டல் (திமுக), எஸ்.ராமலிங்கம் (திமுக), கே.சுரேஷ் (காங்கிரஸ்) ., அமர் சிங் (காங்கிரஸ்), ராஜ்மோகன் உன்னிதன் (காங்கிரஸ்), கௌரவ் கோகோய் (காங்கிரஸ்), டி.ஆர். பாலு (திமுக).

மேலும், கே.ஜெயக்குமார், அப்துல் கலீக் மற்றும் விஜய் வசந்த் ஆகிய மூன்று காங்கிரஸ் எம்.பி.க்களின் இடைநீக்க காலத்தை சிறப்புரிமைக் குழு முடிவு செய்யவுள்ளது.

மாநிலங்களவையில் திங்கள்கிழமையன்று 45 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்

மாநிலங்களவையில், அவைத் தலைவர் பியூஷ் கோயல், "முறையற்ற நடத்தை", “தொடர்ந்து கோஷங்களை எழுப்பியது”, “அவையின் மையத்திற்கு வந்து நாள் முழுவதும் அவை விதிகளை மீறியதன்” காரணமாக 34 எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். 

பிரமோத் திவாரி (காங்கிரஸ்), ஜெய்ராம் ரமேஷ் (காங்கிரஸ்), அமீ யாஜ்னிக் (காங்கிரஸ்), நாரன்பாய் (காங்கிரஸ்), சையத் நசீர் உசேன் (காங்கிரஸ்), பூலோ தேவி நேதம் (காங்கிரஸ்), சக்தி சின் கோஹில் (காங்கிரஸ்), கே.சி. வேணுகோபால் (காங்கிரஸ்), ரஜனி பாட்டீல் (காங்கிரஸ்), ரஞ்சீத் ரஞ்சன் (காங்கிரஸ்), இம்ரான் பிரதாப்காரி (காங்கிரஸ்), ரன்தீப் சிங் சுர்ஜேவாலா (காங்கிரஸ்), சுகேந்து சேகர் ராய் (டிஎம்சி), முகமது நதிமுல் ஹக் (டிஎம்சி), அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ் (டிஎம்சி) , சாந்தனு சென் (TMC), மௌசம் நூர் (TMC), பிரகாஷ் சிக் பராய்க் (TMC), சமீர் இஸ்லாம் (TMC), M. சண்முகம் (DMK), N.R. இளங்கோ, கனிமொழி என்.வி.என். சோமு (திமுக), ஆர்.கிரிராஜன் (திமுக), மனோஜ் குமார் ஜா (ஆர்ஜேடி), ஃபயாஸ் அகமது (ஆர்ஜேடி), வி.சிவதாசன் (சிபிஐ-எம்), ராம் நாத் தாக்கூர் (ஜேடியு), அனீல் பிரசாத் ஹெக்டே (ஜேடியு), வந்தனா சவான் (என்சிபி), ராம் கோபால் யாதவ் (எஸ்பி), ஜாவேத் அலி கான் (எஸ்பி), மஹுவா மாஜி (ஜேஎம்எம்), ஜோஸ் கே. மணி (கேரள காங்கிரஸ் எம்), அஜித் குமார் புயான் (சுயேச்சை) ஆகியோருக்கு எதிராக இந்த இடைநீக்கத் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

மேலும், பதினொரு எம்.பி.க்களை எவ்வளவு காலத்திற்கு இடைநீக்கம் செய்யலாம் என்பது குறித்து தீர்மானிப்பதற்காக சிறப்புரிமைக் குழுவின் பரிசீலனைக்கு பியூஷ் கோயல் அனுப்பியுள்ளார்.

இதில் ஜெபி மாதர் ஹிஷாம் (காங்கிரஸ்), எல். ஹனுமந்தய்யா (காங்கிரஸ்), நீரஜ் டாங்கி (காங்கிரஸ்), ராஜ்மணி படேல் (காங்கிரஸ்), குமார் கேட்கர் (காங்கிரஸ்), ஜி.சி. சந்திரசேகர், பினாய் விஸ்வம் மற்றும் சந்தோஷ் குமார் (சிபிஐ), ஜான் பிரிட்டாஸ் (சிபிஐஎம்), எம். முகமது அப்துல்லா (திமுக), ஏ.ஏ. ரஹீம் (சிபிஐ-எம்) ஆகியோரின் பெயர்களே சிறப்புரிமைக் குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 14-ம் தேதி, திரினாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரெக் ஓ பிரையனை சேர்க்கிறபோது, மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை இப்போது 46 ஆக இருக்கும்.

"ஜனநாயக நெறிமுறைகள் குப்பைத் தொட்டியில் வீசப்படுகின்றன"

திங்களன்று இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மோடி அரசாங்கம் "சர்வாதிகாரமாக" நடந்து கொள்வதாகக் கூறி கடுமையாக விமர்சித்தனர்.

மாநிலங்களவை எம்.பி.யும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, "47 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வதன் மூலம் சர்வாதிகார மோடி அரசு ஜனநாயக நெறிமுறைகளை குப்பைத்தொட்டியில் வீசியுள்ளது" என்று தெரிவித்தார்.

"எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தில், மோடி அரசாங்கம் இப்போது நிலுவையில் உள்ள முக்கியமான சட்டங்களை எளிதில் நிறைவேற்ற முடியும் என்பதோடு, எந்தவொரு விவாதத்திலும் ஈடுபடாமல், மாற்றுக் கருத்துக்களை நசுக்கிட முடியும்" என்று அவர் X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டிருந்தார்.

பாதுகாப்பு அத்துமீறல் குறித்து அமித் ஷாவிடம் அறிக்கை தருமாறு கோருவதோடு, இரு அவைகளிலும் முறையான விவாதம் நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோருகின்றன என்றும் அவர் கூறினார்.

உள்துறை அமைச்சரிடம் அறிக்கை கோரிய 45 இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், மக்களவையில் நடந்த நிகழ்வுகளை "ஈவு இரக்கமற்றது" என்று விவரித்தார்.

"சுவாரஸ்யமாக, எனது 19 ஆண்டுகால நாடாளுமன்றப் பயணத்தில் முதன்முறையாக இந்த கௌரவப் பட்டியலில் நான் இடம்பிடித்துள்ளேன்" என்று அவர் X தளத்தில் குறிப்பிட்டார். "மோடியின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் இந்தியாவில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருவதையே இது பிரதிபலிக்கிறது.!" 

திங்களன்று இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் ஒருவரான கோகோய், நாட்டில் உள்ள மக்களின் உரிமைகளை மோடி அரசு பறிக்கிறது எனக் கூறினார்.

"அவர்கள் எதிர்கட்சியினரை வல்லடியாக அச்சுறுத்தி அடக்குகிறார்கள், மேலும், அவை உறுப்பினர்களின் தார்மீக உரிமைகளை காலில் போட்டு மிதிக்கிறார்கள். இவையனைத்தும், திறம்பட அவையை நடத்தவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை என்பதையே தெளிவாக காட்டுகிறது," என்று அவர் PTI ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். "இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நாடாளுமன்றத்தைப் பாதுகாப்பதில் அமித் ஷா அடைந்த தோல்வியை மூடிமறைப்பதற்கான ஒரு தந்திரம் மட்டுமே."

“நாடாளுமன்ற ஆட்சி நடக்கும் நாட்டில் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று கேட்டதற்காக எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி. சசி தரூர் கூறினார்.

"அமைச்சர்கள் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவில்லை என்றால் நாடாளுமன்றம் எதற்கு? நாடாளுமன்றம் வெறுமனே அறிப்பு பலகை போல, இரப்பர் ஸ்டாம்ப் போல செயல்பட வேண்டுமா?"

ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் குமார் ஜா, இடைநீக்கம் செய்யப்பட்டதை பெருமைக்குரிய விஷயமாக தான் கருதுவதாக கூறினார்.

"நெருக்கடியான காலங்கள் இருந்தபோது, சர்வாதிகாரிகள் இது போன்ற ஒரு நாடாளுமன்றத்தையே விரும்பினார்கள். நாங்கள் நாடாளுமன்ற கட்டிடத்தை மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்பு குறித்தும் கவலை கொள்கிறோம். உங்களால் அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கையை வழங்க முடியவில்லையா? உங்கள் எண்ணம்தான் என்ன? எதிர்க்கட்சி இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்கியுள்ளீர்கள். எஞ்சியிருப்பவர்களை நாளை(இடைநீக்கம் செய்வதற்கு) வாக்கெடுப்பு நடத்தவுள்ளீர்கள். பிரதமர் மோடியின் இரண்டாவது பதவிக்காலம் துவங்கியது முதல் அவரின் பலவீனமான காலகட்டமாக இந்தக் காலகட்டமே நினைவுகூரப்படும். ஒரு பலவீனமான நபர் மட்டுமே நாடாளுமன்ற விவகார அமைச்சர் மூலம் இதுபோன்ற நடவடிக்கைகளை செய்வதற்கு தூண்டுதலாக இருக்க முடியும் என்று ANI செய்தி நிறுவனத்திற்கு இந்தியில் அளித்த பேட்டியில் கூறினார்.

46 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது "எதிர்ப்புக் குரல்களை நசுக்குவதில் ஒரு நெத்தியடி" என்று கூறியதோடு, அமித்ஷா இனி "எளிமையாக, வசதியாக ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு" வழிபிறந்துள்ளது என்று திரினாமூல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தது.

எதிர்கட்சியினர் பாதுகாப்பு குளறுபடிகளில் அரசியல் ஆதாயம் தேடி 

முயல்கின்றனர்: அமித் ஷா

அமித் ஷா நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் குறித்து பேசவில்லை என்றாலும், ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதன் மூலம் ஆதாயம் தேட முயல்வதாக குற்றம் சாட்டினார்.

வெள்ளிக்கிழமையன்று, இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியின் போது, 

பாதுகாப்பு அத்துமீறல் ஒரு "தீவிரமான பிரச்சினை" என்றும் "பாதுகாப்பு குறைபாடு"தான் என்றும் அமித் ஷா ஒப்புக்கொண்டார். எனினும், இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாக அவர் குற்றம்சாட்டினார்.

“நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு மக்களவை சபாநாயகரே பொறுப்பு என்பது அனைவரும் அறிந்ததே” என்றார் அமித் ஷா.

உயர்மட்ட விசாரணை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"கடந்த காலங்களில் சுமார் 40 சம்பவங்கள் இதுபோல் நடந்துள்ளன, ஒவ்வொரு நிகழ்விலும், மக்களவை சபாநாயகரே இந்த விஷயத்தை கையாண்டுள்ளார். விசாரணை அறிக்கை அடுத்த 15-20 நாட்களில் வெளியிடப்படும், மேலும் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாடாளுமன்ற பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான வழிகளையும் விசாரணைக் குழு ஆய்வு செய்யும்.இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தி நாளிதழான டைனிக் ஜாக்ரனுக்கு அளித்த பேட்டியில், பாதுகாப்பு அத்துமீறல் என்பது ஒரு தீவிரமான பிரச்சினைதான் என்றும் அதை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார்.

“கூட்டாக தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இது போன்ற விஷயங்களில் தேவையற்ற சச்சரவுகளை அனைவரும் தவிர்க்க வேண்டும்," என அவர் அறிவுறுத்தினார்.

“நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்தின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது.” என்றார் மோடி.

மோடி அரசு எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்துள்ள நிலையில், கடந்த வாரம் நாடாளுமன்ற பாதுகாப்பை மீறியவர்களுக்கு அனுமதிசீட்டு வழங்கிய பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://thewire.in/government/bulldozing-opposition-78-mps-suspended-parliament

Disclaimer: கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு