கடல்வழி நவீனமயமாக்கல் மூலம் போரை தூண்டும் ஏகாதிபத்திய நாடுகள்

தமிழில்: விஜயன்

கடல்வழி நவீனமயமாக்கல் மூலம் போரை தூண்டும் ஏகாதிபத்திய நாடுகள்

இந்தியப் பெருங்கடலின் நீர் வழிப் பாதையில் (SLOC) அதிகரித்து வரும் போர்த்தந்திர  முக்கியத்துவத்தை கணக்கில் கொண்டு புதிய கடற்படை தளங்களை உருவாக்குவதில் இந்தியாவும், பாகிஸ்தானும் முனைப்பு காட்டி வருகின்றன. இதன் விளைவாக இந்தியப் பெருங்கடலும், அரபிக்கடலும் இராணுவ மேலாதிக்க கனவுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான சிக்கலான ஆடுகளமாக மாறிவருகிறது. வாணிபத் தொடா்புகள், கடல்சார் மற்றும் பிற வா்த்தக ரீதியிலான போக்குவரத்துகள் அதிகமாக இந்தப் பகுதிகளில் நடப்பதால், இது தனித்த முக்கியத்தவம் பெறுகிறது. இதையொட்டி கடல்சார் போர்த்தந்திரங்களை வகுத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை SLOC உருவாக்கியுள்ளது. போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடா்முனைகள் (Check points) செல்வாக்கு மண்டலங்கள், போன்றவற்றையும் உள்ளடக்கியதாக SLOC விளங்குகிறது. மேலும் எதிராளிகளை விட தமது கைகள் போர்த்தந்திர அடிப்படையில் ஓங்கி இருப்பதற்கான சாதகநிலையை போட்டியிடும் நாடுகளுக்கு வழங்குகிறது. இந்தியாவும், பாகிஸ்தானும் கடல்சார் திட்டங்களை விரிவுபடுத்தும் போட்டியில் இறங்கியுள்ளன. இதன் காரணமாக இரண்டு நாடுகளுமே தம் வசமுள்ள போர்க்கப்பல்களில் சீர்வேக ஏவுகணை (Cruise) மற்றும் பெருந்தொலைவிற்கு பாயும் (Ballistic) உந்துகணைகளை பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகின்றனா்.

புவிசார் அடிப்படையிலான அரசியல் முரண்கள் கொதிநிலையை எட்டியுள்ள நிலையில் தற்போது இருந்துவரும் போர்த் தவிர்ப்பிற்கான தயக்கங்களை தகா்க்கும் வகையில் இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது கடல்சார் திறன்களை நவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.

தங்கள் வசமுள்ள கப்பற்படைத் தளங்களை நவீனப்படுத்துவது, மேம்படுத்துவது என்பன போன்ற விசயங்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் தீவிரம் காட்டி வருகின்றன. இது ஒரு புதிய ஆயுத வியாபாரப் போட்டியை துவங்குவதற்கே வாய்ப்புள்ளது. இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு ஆயுதங்களை வாங்கி குவித்தால் கூட அச்சத்தைக் காரணம் காட்டி மற்றோரு நாடும் படைபலத்தை பெருக்குவதில் இறங்கிவிடும். இந்திய பெருங்கடல் பகுதியில் வல்லரசு நாடுகளுக்கு இடையில் நடக்கும் போட்டி என்பது இந்தியா மற்றம் பாகிஸ்தான் நாடுகளின் ஆயுத நடவடிக்கையை தீவிரப்படுத்தவே செய்யும். இதனால் எதிராளிகளோடு போட்டியிடுவதற்கு முன்பு பாரதூரமான புவிசார் போர்தந்திர நலன்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கடற்படைத் தளபதிகள் குறிப்பிட்ட இடைவெளியில் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தற்செயல் நிகழ்வுகள் பெரும் சிக்கலாக மாறுவதை தடுப்பதற்கு இருநாடுகளுக்கும் இடையில் இருக்கும் சர்ச்சைக்குரிய கடல் எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான முறையில் இரு நாடுகளும் பரஸ்பரம் நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு பேராபத்துப்களை தவிர்க்க முடியும்.இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகி வரும் ஆயுத வியாபார போட்டியை தடுப்பதற்கும், இருந்துவரும் கட்டுப்பாடுகள் (தயக்கங்கள்) தகா்நதுவிடாமல் பார்த்துக்கொள்வதற்கும் இதுதான் தீர்வாகும்.

கடற்படையில் நவீனத்தை புகுத்துவதற்கான பெரு முயற்சி

அரேபியக் கடல் பல்வேறு வகையான நல்வாய்ப்புகளை வழங்கியது தான் வல்லாதிக்க நாடுகளுக்கு இடையில் போட்டியை உருவாக்கியது எனலாம். உதாரணத்திற்கு இந்த அம்சம்தான் “மித வெப்ப மண்டல கடற்பகுதிகளை நோக்கி நகா்வதற்கான ஒரு அடிப்படை உந்துவிசையை சோவியத் யூனியனுக்கு வழங்கியதுஎன ராபர்ட் கப்பான் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார். சீனாவை சுற்றிவளைப்பது பற்றி அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அதே போல, சீனாவும் பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) என்ற திட்டத்தின் கீழ் குவாதார் துறைமுகத்தில் முதலீடு செய்வதன் மூலம் பட்டை ஒன்று, சாலை ஒன்று (BRI) முன்னெடுப்பை சீனா கேடயமாக மாற்றியுள்ளது. இவை சமீபத்திய உதாரணங்களாகும். இதுபோன்ற பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, கடற்பகுதியையொட்டி அமைந்துள்ள நாடுகள் மாறிவரும் சுழலுக்கு ஏற்ப தங்களது முதன்மைத் தேவைகளை மாற்றியமைத்துக் கொள்வதற்கு நிர்பந்திக்கப்படுகின்றன. அதாவது, வல்லாதிக்க நாடுகளின் நலன்களுக்கு இசைந்து அவா்களின் வாலாக மாறிவிடுவது அல்லது போர்தந்திர அடிப்படையில் தங்களது நிலையை பலப்படுத்திக் கொள்வதற்கு கடற்பகுதியில்  தங்களுக்கான செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கிக் கொள்வதற்கான போட்டியில் புதிய கூட்டாளிகளாக மாறிவிடுவது என்பதன் அடிப்படையில் முதன்மைத் தேவைகளை மாற்றியமைத்துக் கொள்கின்றன. துருக்கி மற்றும் சீனாவோடு சோ்ந்துக் கொண்டு பாகிஸ்தான் எப்படி தனது படைக்கலன்களை நவீனப்படுத்த போர்க்கப்பல்களை வாங்கி வருகிறதோ அதே போலத்தான், இந்தியாவும் அமெரிக்கா ஆசியுடன் உள்நாட்டில் தயாரித்து நவீனப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் ஸ்கார்ப்பியன் ரக நீர்மூழ்கி கப்பல்களில் வளிமண்டல காற்றில்லா இன்ஜின்களை (AIP systems) பயன்படுத்துவது குறித்தும், அதை உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்தும் இந்திய இராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் முனைப்புக்காட்டி வருகிறது. இதே போல பாகிஸ்தானும் துருக்கி நாட்டில் தயாரிக்கப்பட்ட AIP தொழில்நுட்பத்தை தனது அகோஸ்டா 90B ரக நீர்மூழ்கி கப்பல்களில் பயன்படுத்துவது குறித்து முன்பே ஆராயத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நீரடி காற்றுவழங்கியை (snorkel) பயன்படுத்தாமலே அல்லது கடலின் மேற்பரபபிற்கு வந்து வளிமண்டல காற்றை பெறாமலே நீண்ட நாள்களுக்கு கடலுக்கடியில் இயங்குவதற்கு இந்த AIP தொழில்நுட்பம் உதவுகிறது. மேலும் தாம் நினைத்தபடியெல்லாம் மறைந்திருந்து தாக்குதல் தொடுப்பதற்கு ஏற்றபடியும் அமைந்துள்ளது.நாடுகளின் கடலோர எல்லையில் நீர்மூழ்கி கப்பல்கள் உலாவி வருவது பற்றியும், கடல்சார் எல்லைகளை மீறி வருவது பற்றியும் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இது தெற்காசியாவில் ஏற்கனவே இருந்து வரும் பாதுகாப்பு தொடர்பான பதற்றநிலையை பெரிதுபடுத்துவதாகவே இருந்து வருகிறது. இது போன்ற அத்துமீறல்களும், அதையொட்டி எழும் பதில் தாக்குதல்களும் பேராபத்தை விளைவிக்கக்கூடிய நவீன ஆயுதத் தொழில்நுட்பங்களை கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்துவதற்கு இட்டுச்செல்லும். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் இதற்கு முன்னதாக நடந்த மோதல்களில் இதே பாணியில் தான் பிரச்சினை பெரிதாக வளர்ந்து முற்றியுள்ளது. ஆயுதங்களை வாங்கி குவிப்பது, போர்த் தொழில்நுட்பங்களை ஈட்டுவது போன்ற நடவடிக்கைகள் அமைதியை நிலைநாட்டுவதற்கும், போர்தந்திர அடிப்படையில் நிலைத்தன்மை அடைவதற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும்.

டீசல்-மின்சத்தியால் இயங்கும் நீர் மூழ்கி கப்பல்களை விடவும் அதிக விலையுடைய, அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கி கப்பல்களுக்கு மாற்றாக பாகிஸ்தான் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வரவுள்ளது. இந்தியாவிடம் இருப்பது போல, அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் பாகிஸ்தானின் கடற்படையில் இருக்கவில்லை. இந்த பலவீனத்தை சரிகட்டுவதற்காக அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கு பாகிஸ்தான் முயற்சிக்கலாம். எனினும் இதை தொடர்ச்சியாக வழங்கக்கூடிய நம்பகமான நாடு கிடைக்கும் வரையில் இந்தியாவுடன் போட்டிபோடுவதற்கு இருக்கின்ற படைக்கலன்களை மேம்படுத்துவதற்கே அதிகம் வாய்ப்புள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சொல்லிக்கொள்ளும் வகையில் முக்கிய பங்காற்றுவதற்கும் நீல-நீர் கடற்படை(Blue-water navy) சக்தியாக மாறுவதற்கும் இந்தியா திட்டமிட்டு வருகிறது. அதேபால பாகிஸ்தானும் தனது கடற்படையின் வலிமையை மேம்படுத்துவதற்கு பசுமை-நீர் கடற்படையை(Green-water navy) பலப்படுத்தி வருகிறது. ஆக, ஒரு நாட்டின் ஆயுதச்சாலை நிரம்பினால், இது நேரடியாக எதிரி நாட்டின் ஆயுதசாலைகள் நிரம்புவதற்கு வழிவகுத்துவிடுகிறது. இரண்டு நாடுகளுமே, தங்களது இராணுவத்தை நவீனப்படுத்துவது அவசியமான வளர்ச்சி நடவடிக்கையாக பார்த்தாலும் கூட அதானால் எழும் சிக்கல்கள் நீண்ட கால பாதிப்புகளை விளைவிக்கக்கூடியதாக இருக்கும்.

ஆரம்பமாகும் ஆயுத வியாபாரம்

எங்கும் நம்பிக்கை பற்றாக்குறை நிலவும் தற்போதைய சூழலில், கடற்படையை நவீனப்படுத்துவதில் இறங்கியுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பரஸ்பரம் போர்தயாரிப்பு நடவடிக்கை என்பது போல தவறாக புரிந்து கொள்ளப்படுவதற்கே அதிகம் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தெற்காசியாவில் போர் தவிர்ப்பு, அணு ஆயுத தவிர்ப்பு சமநிலையை பேணுவது மிகுந்த சிக்கலுக்குரியதாக மாறியுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் தனித்தனியாக கடல்பகுதியில் தங்களது மேலாதிக்கத்தை நிறுவ முயன்றாலும் இதை அவர்கள் வல்லாதிக்க நாடுகளுடன் மிக நெருக்கமாக கூட்டு சேர்ந்துகொண்டே செய்கின்றனர். கடற்படை வலிமையை பெருக்குவதில் செய்யும் முதவீடுகளின் மூலம் ஒருவரை ஒருவர் எதிர்க்கின்றனர் என்பதே மறைமுகமாக சொல்படுகின்ற கருத்தாகும். இந்தியாவின் இலக்கு அடிப்படையிலான தகுந்த இடங்களில் கப்பல்களையும் விமானங்களையும் நிறுத்துதல்(Mission based deployments) என்ற திட்டத்தை வருங்காலங்களில் தங்களது கடற்படையை முடக்கிப்போடுவதற்கான செயல்தந்திரமாகத்தான் பாகிஸ்தானால் பார்க்கப்படுகிறது. அதேப்போல சீனாவுடன் பாகிஸ்தான் கூட்டு சேர்வது என்பது சீனக் கடற்படை(PLAN) விரிவாக்கம் செய்யப்படுவதாக இந்தியாக கருதுகிறது. இது சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக தோன்றினாலும், கடல் மேலாதிக்க போட்டியில் இருக்கும் சிக்கல்களை பார்க்கத் தவறுவதோடு, சரி செய்வதற்கு இரு நாடுகள் எடுக்கும் முயற்சியின் வேகத்தை வைத்து பார்க்கும் போது மறைமுகமாக சொல்லப்பட்டு வந்த கருத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது.

நீர்மூழ்கி கப்பலகளை வாங்குவதற்கான திட்டங்களில் முதலீடு செய்வது, அதை தாக்கி அழிப்பதற்கு தேவையான ஆயுதங்களுக்கான திட்டங்களில் முதலீடு செய்வது, தம்வசமுள்ள டீசல்-மின்சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களின் செயல்திறனை அதிகரிக்கச் செய்வது, அணுசக்தியில் இயங்கு நீர்மூழ்கி கப்பல்களை வாங்க முயல்வது என இவையனைத்தும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நடக்கும் போட்டியின் புதிய பரிமாணத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு தொடர்பாக எழும் குழப்பங்கள் பல அடுக்கிலமைந்த சூழல் ஏணி போன்ற உருவமைப்பாக காட்சியளிக்கிறது. அமெரிக்க – சீன வல்லரசுகளுக்கு இடையில் போட்டி நடக்கிறது. அந்தப் போட்டியாளர்களின் கைப்பாவையாக இருந்து கொண்டு தான் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தங்களது கடற்படை வலிமையை நவீனங்பபடுதுவதில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போடுகிறது.

முன்னுள்ள சவால்கள்

வல்லரசு நாடுகளுடன் சேர்ந்து கொண்டு போட்டி போடுவது என்பது சிக்கல்களை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும் என்பதால் இந்தியாவும், பாகிஸ்தானும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தங்களுக்கிடையில் இருக்கும் எல்லை முரண்பாடுகளை மறுவரையறை செய்து தீர்க்க முயல வேண்டும். முதலில், இந்தியாவும் பாகிஸ்தானும் கடற்பாதுகாப்பு சட்டங்களை ஆராய வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக மோதலைத் தவிர்ப்பதற்கு துணைபுரியாத, எப்படியும் மோதலுக்கு வழிவகுக்கக்கூடிய ஓட்டைகளை உடனடியாக கண்டறிந்து சரிசெய்ய வேண்டியுள்ளது. இதோடு கூடவே, இரு நாடுகளின் கடற்படையும் இந்தியப் பெருங்கடலில் தங்களுக்கு பொதுவாக பயன்தரக்கூடிய விசயங்களில் அதாவது, சட்டவிரோதமாக மீன்பிடிப்பது, கடலோர எல்லை பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கள்ளக் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற விசயங்களை கண்டறிந்து கூட்டு முயற்சியில் ஈடுபடலாம். மேலும், தற்செயலாக, தெரியாத்தனமாக, அல்லது அனுமதிபெறாமல் கடல் எல்லைகள் மீறப்படுகின்ற விசயத்திலும் இருநாடுகள் கூட்டு நடவடிக்கையில் ஈடுபடலாம். நிலப்பரப்பை ஒட்டி அமைந்துள்ள கடல் எல்லைகளே இருநாடுகளுக்கும் பிரச்சினைக்குரிய விசயமாக இருக்கிறது. இரு நாடுகளின் கூட்டு முயற்சியில் நீர் மூழ்கி கப்பல்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கு வேண்டிய ஒரு விரிவான சட்ட விதிகளை உருவாக்காத வரை வன்முறைகள் கடும் பின்வினைவுகளை தோற்றுவிக்கக்கூடும்.

வல்லரசு நாடுகளுக்கு மத்தியில் தீவிரமடைந்து வரும் போட்டியுடன், தற்போது உருவாகிவரும் போட்டிச் சூழல் மற்றும் உலகு தழுவிய தாக்கமும் சேரும் பொழுது, தெற்காசியாவின் நீர் வழிப் பாதை(SLOC) மிகக் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகவிருக்கிறது. தெற்காசியாவில் உருவாகிவரும் கடல்சார் முரண்பாடுகள் மும்முனையில் வெளிப்படுகிறது; முதலாவதாக, பிராந்தியங்களைத் தாண்டிய பலன்களை பெறுவதற்கு முயலும் வல்லாதிக்க நாடுகளினால் நேரடியாக இந்தியாவும், பாகிஸ்தானும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இரண்டாவதாக, பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இங்கொன்றும் அங்கொன்றுமாக குறிப்பிடத்தக்க வகையில் வெடித்த மோதல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் முரண்பாடுகளை தோற்றுவிக்கிறது. மூன்றாவதாக, இந்தியாவும் பாகிஸ்தானும் எந்தளவிற்கு இரானுவதத்தை நவீனப்படுத்தி தமது தாக்குதல் திறனை பெருக்க முயற்சி எடுக்கின்றனவோ அந்தளவிற்கு ஒருத்தரை பார்த்து ஒருத்தர் மிகுந்த அச்சத்திற்கும், சந்தேகத்திறகும் உள்ளாகுவார்கள். இதன் விளைவாக, இதுபோன்று பெருமளவில் நவீனப்படுத்துவதில் முனைப்புக் காட்டும் போது, அதுவும் பலதரப்பட்ட நாடுகளுடன் சேர்ந்து செய்யும் பொழுது, போர்த் தவிர்ப்பு சமநிலையை நேரடியாக சீர்குலைப்பதில் சென்று முடிவதற்கே அதிகம் வாய்ப்புள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போர் மூண்டது முதல், தைவான் நீர்ச்சந்தியில் எழுந்து வந்த நெருக்கடி நிலைக்கு மத்தியில் சீனாவும், அமெரிக்காவும் கடற்படை சார்ந்த செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. கூட்டு இராணுவப் பயிற்சிகள், போரக்கப்பல்களை அனுப்புவது போன்ற நடவடிக்கைள் சர்வதேசமயப்பட்ட தெற்காசியாவின் நீர்வழிப்பாதையில் போட்டி முகாம்கள் உருவாகுவதற்கும், ஏதேனும் ஒரு முகாமிற்குள் சரணடைவதற்கும் நிர்பந்திக்கப்பட்டுள்ளது. இது பிரதான குவி மையமாக இருந்து வரும் இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் நிச்சயமாக பற்றிப் படறுவதற்கு இட்டுச்செல்லும்.

கடற்கரையோரம் அமைந்துள்ள நாடுகளின் போர்த்தந்திர நிலைமையை வெகுவாக பாதிக்கக்கூடிய வகையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நீர்வழிப் பாதைகள் விளங்குகின்றன. கடல்சார் பாதுகாப்பு தொடர்பான சதிராட்டத்தில் மிக முக்கிய போட்டியாளராக இந்தியாவும் பாகிஸ்தானும் இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் விரிவான இடர் குறைப்பு செயல்திட்டம் மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்துவது போன்றவற்றில் இந்தியாவும், பாகிஸ்தாலும் ஈடுபடவில்லையெனில் பனிப்போர் கால போர்க் குழப்பித்தில் மாட்டிக்கொள்ள நேரிடும். வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டி மேலோங்கியுள்ள நிலையில் தான் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருத்தரை மாற்றி ஒருத்தர் விஞ்சுவதற்கு தம் வசமுள்ள கடல்மார்க்கத்தை நவீனப்படுத்துவது, போர்த்திறனை மேம்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எவ்வித வரைமுறையும், கட்டுப்பாட்டு அமைப்பு முறையும் இல்லாது மேற்கொள்ளப்படும் இது போன்ற நடவடிக்கைகள், அரேபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தற்போது இருந்து வரும் கடல்சார் கட்டமைப்பு மற்றும் வளர்நிலை போக்குகளை புரட்டிப் போடுவதாக அமைந்துவிடும்.

 - விஜயன் 

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://southasianvoices.org/maritime-modernization-threatens-deterrence-in-south-asia/