தமிழர்களுக்கு முருகன் கொற்றவையின் மகன்

இரா. முருகவேள்

தமிழர்களுக்கு முருகன் கொற்றவையின் மகன்

கொற்றவை சிறுவ, மலைமகள் மகனே, பழையோள் குழவி என்று தாய்வழி அடையாளத்துடன் தான் திருமுருகாற்றுப்படை போன்றவை சுட்டுகின்றன.

காதலினால் துயர் அடைந்திருக்கும் தலைவியை சரி செய்ய அம்மா வேலானாட்டம் ஏற்பாடு செய்கிறாள். இங்கே முருகனுக்கு கொடுக்கப்படும் பலி தலைவியின் காதலனுக்கு போய்ச் சேர்ந்து அவள் துயர் தீர்க்குமா என்று குறுந்தொகையில் தோழி கிண்டல் செய்கிறாள். பல நூல்களில் இந்தக் கிண்டல் வருகிறது என்று மயிலை பாலு கூறுகிறார். ( சங்க இலக்கியங்களில் வைதீக எதிர்ப்பு - மயிலை பாலு).

கடவுள் மக்களுக்கு நெருக்கமாக இருந்த காலம் அது. மக்கள் கடவுளை நம்புகின்றனர். கேலி செய்கின்றனர். அதனோடு விளையாடுகின்றனர். 

வர்க்கமும் ஆணாதிக்கமும் தீவிரமாக இல்லாத சமூகம் அது. 

பின்பு பழங்குடி சமூகங்கள் புதிதாக உருவாக்கி வந்த அரசுகளுடன் இணைத்த போது அவர்கள் கடவுளான முருகன் என்னும் வேலனுக்கு திருமுருகாற்றுப்படை உயர் சமூகம் வணங்குவதற்கு ஏற்ற வடிவத்தை வழங்குகிறது. ஆனால் அப்போதும் முருகன் கொற்றவை மகனாகவே அழைக்கப் படுகிறான். 

சூர் முதல் தடிந்த  என்று மிக லேசாக சூரபத்மன் பற்றி திருமுருகாற்றுப் படையில் ஆங்காங்கே வருகிறது. ஆனால் 6 நாள் போர் எல்லாம் இல்லை.

(சூரபத்மன், சூர சம்ஹாரம் 

எல்லாம் பழம் தமிழகத்தில்  இல்லை என்பதை திருமுருகாற்று படையில் இல்லை என்பது போல பொருள் வரும்படி எழுதி விட்டேன். இப்போது மாற்றிவிட்டேன். சுட்டிக் காட்டிய தோழர் அருள் குமார் Arul Kumar அவர்களுக்கு நன்றி).

ஹரியானா பகுதியின் ஸ்கந்தன் என்னும் கார்த்திகேயன் யுதேயா Yudheya பழங்குடி இனத்தின் கடவுள். இவர்களின் நாணயங்களில் ஸ்கந்தன்  வேல், மயிலுடன் காணப் 

படுகிறான். 

குஷான வம்சத்தின் தெய்வம் மகாசேனா. போர்க் கடவுள். இந்த இரண்டு தெய்வங்களும்  இணைந்து தேவர்களின் தளபதியான ஸ்கந்தன் உருவாகிறான். 

கிபி 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் கந்த புராணத்தில் தான் நமது முருகன், ஸ்கந்தன் எல்லோரும் இணைந்து இப்போதைய வடிவத்துக்கு வருகிறான். 

பழங்குடி மக்கள் தங்கள் இணையத் தேடும் காதல் திருவிழாவான தீபாவளி கொஞ்சம் ஏடாகூடமாக 

சூரசம்ஹாரத்துடன் இணைகிறது. ( இன்றும் தலை தீபாவளி என்பது மணமகன் மணமகள் வீட்டுக்கு போகும் விழா தானே. பழைய செழுமைத் திருவிழாவின் மீதம் இது). இது எப்படி என்று தெரியவில்லை.

சூர சம்ஹாரத்தின் இறுதியில் சூரனின் மாமரம் முருகனால் பிளக்கப் பட்டு மயிலாகவும், சேவலாகவும் மாறுவது வடமொழி ஸ்கந்த புராணத்தில் இல்லையாம். முருகனைப் பற்றிய கதையில் கொஞ்சமும் சுவாரசியம் இல்லாத இடம் இந்த சூரசம்ஹாரம். 

மாமரம் சங்ககால மன்னன்

நன்னன் என்பவரின் அடையாள மரம். அது எப்படி இதில் வந்தது என்று புரியவில்லை. வேறு பல பழங்குடி இனங்களும் மாமரத்தை அடையாளமாகக் கொண்டு 

இருந்திருக்கலாம்.

எண்ணற்ற நிறைவேறாத கனவுகளில் இன்னொன்றும் இருக்கிறது. ஒருநாள் முருகன் பற்றி ஆவணப்படம் எடுப்போம். பாட்னா மியூசியத்தில் கார்த்திகேயன் படம் பொறிக்கப்பட்ட நாணயங்களை படமாக காட்டுகிறார்கள். அதைப் பார்த்ததில் இருந்து....

இரா. முருகவேள்

https://www.facebook.com/1714910257/posts/10217492144131560/?rdid=0xubahNdjEKU8dbr

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு