தொகுதி மறுவரையறை - களம் மினி தொடர்
விகடன் இணையதளம்
தொகுதி மறுவரையறை குறித்து விகடன் இணையத்தில் 'களம்' பகுதியில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இங்கே....*
தொகுதி மறுவரையறை : 'ஜனநாயக முத்திரையோடு பெரும்பான்மைவாதம்' - கி.வெங்கட்ராமன் | களம் பகுதி 1
Click here: https://www.vikatan.com/government-and-politics/kivenkatraman-writes-about-parliament-delimitation
தொகுதி மறுவரையறை : `ஒரு வாக்கு, ஒரு மதிப்பு; எதிர்காலம் காக்க..!’ - இரா.சிந்தன்| களம் பகுதி 2
Click here: https://www.vikatan.com/government-and-politics/cpim-ra-sindhan-writes-about-parliament-delimitation
தொகுதி மறுவரையறை: `அண்ணல் அம்பேத்கரை குற்றம்சாட்டுகிறாரா ஸ்டாலின்?’ - பாஜக கனகசபாபதி | களம் பகுதி 3
தொகுதி மறுவரையறை: `தெற்கு தேய்கிறது; வடக்கு மேய்கிறது’ - ஆதவன் தீட்சண்யா | களம் பகுதி 4
Click here: https://www.vikatan.com/government-and-politics/article-about-parliament-delimitation-by-aadhavan-deetchanya
தொகுதி மறுவரையறை: `தென் இந்தியாவுக்கு எதிரான சூழ்ச்சி!’ - எஸ்.செந்தில்குமார், திமுக | களம் பகுதி 5
================================================
தொகுதி மறுவரையறை : 'ஜனநாயக முத்திரையோடு பெரும்பான்மைவாதம்' - கி.வெங்கட்ராமன் | களம் பகுதி 1
கி.வெங்கட்ராமன், பிரேம் குமார் எஸ்.கே.
எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’
இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது Delimitation - `தொகுதி மறுவரையறை’ விவகாரம். பல்துறைகளை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் தினம் ஒருவர் என அது குறித்து விரிவாக தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளார்கள்.
களம் : `தொகுதி மறுவரையறை’
பகுதி 1
எழுத்து : கி.வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)
நாடாளுமன்ற மக்களவையை 2026-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் மறு சீரமைப்பு செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது `இந்தி இன' ஆதிக்கத்தை நாடாளுமன்ற சனநாயகம் என்ற பெயரிலேயே வலுப்படுத்தி தமிழினத்தை வஞ்சிக்கும் திட்டமாகும்.
இப்போதுள்ள 543 நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே தமிழினத்திற்கு புதுச்சேரியையும் சேர்த்து 40 உறுப்பினர்களே உள்ளனர். ஆனால், இந்தி மாநிலங்களுக்கு 225 உறுப்பினர்கள் உள்ளனர். இதுவே இனச் சமநிலைக்கு எதிரானதாகும்.
இப்போது 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகையை, அதன் வளரச்சி விகிதத்தின் அடிப்படையில் 2026-ம் ஆண்டிற்குக் கணக்கிட்டு, அதனடிப்படையில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு
இந்திய அரசு அறிவித்த குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைச் செயல்படுத்திய முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதால் இதன் மக்கள்தொகை வளர்ச்சிவிகிதம் படிப்படியாகக் குறைந்து, இப்போது மக்கள்தொகை சுருக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மறுபுறம், இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்தாத உ.பி. பீகார் உள்ளிட்ட இந்தி மாநிலங்களில் மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்தது.
இந்தி மாநிலங்கள் Vs தமிழ்நாடு
இந்திய அரசின் திட்டப்படி புதிய மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை உறுப்பினர்களை முடிவு செய்வதாக இருந்தால், தமிழ்நாட்டுக்கு இப்போதுள்ள 39 மக்களவை உறுப்பினர்கள் என்பது 30 ஆகக் குறையும். மறுபுறம், உத்திரப்பிரதேசத்தின் எண்ணிக்கை 80 இலிருந்து 91 ஆக உயரும். பீகாரின் உறுப்பினர் எண்ணிக்கை 40 லிருந்து 50 ஆக உயரும். இவ்வாறு இந்தி மாநில உறுப்பி்னர்களின் எண்ணிக்கை 225 லிருந்து 259 ஆக உயரும்!
புதிய மக்கள்தொகை அடிப்படையில் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 848 ஆக உயர்த்தி சீரமைக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது (மிலன் வைஷ்ணவ் மற்றும் ஜே. கிங்ஸ்ட்டன் - 2019).
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பி்னர்களின் எண்ணிக்கை 39 லிருந்து 49 ஆக உயரும். அதே நேரம், உத்திரப்பிரதேசத்தின் 80 என்ற எண்ணிக்கை 143 ஆக உயரும். பீகாருக்கு 40 லிருந்து 79 ஆக உயரும். இவ்வாறு, இந்தி மாநிலங்களுக்கு 408 உறுப்பினர்கள் கிடைப்பார்கள்!
ஜனநாயக முத்திரையோடு `பெரும்பான்மைவாதம்'
ஏற்கெனவே, தமிழ்நாடு தற்போதைய நாடாளுமன்றத்தில் 39 என மிகச் சிறுபான்மையாக இருக்கிறது. இந்திய அரசின் திட்டப்படி மாற்றியமைக்கப்பட்டால், தமிழ்நாட்டின் குரல் முற்றிலும் ஒடுக்கப்படும். இந்தி மாநிலங்களின் விருப்பங்கள் மிக எளிதில் பெரும்பான்மை பலம் பெற்று சட்டதிட்டங்களாக வெளிவரும். இவ்வாறாக பெரும்பான்மைவாதம் (majoritarianism) சனநாயக முத்திரையோடு செயல்படும்.
இச்சிக்கல் குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில், இப்போதுள்ள எண்ணிக்கையே 2056 ஆம் ஆண்டுவரை தொடர வேண்டும் அல்லது தமிழ்நாட்டின் உறுப்பினர் எண்ணிக்கை தற்போதுள்ள 7.18 என்ற விழுக்காட்டிலேயே தொடர வேண்டும் எனத் தீர்மானம் இயற்றியுள்ளது.
இப்போதுள்ள விகிதமே தொடர்வது என்றாலும், இந்தி மாநிலங்களின் மேலாதிக்கம் கூடுதல் எண்ணிக்கை வலுவோடு தொடரவே செய்யும்.
மக்கள் தொகை Vs வாக்காளர்கள் தொகை
வேறு சில அறிஞர்கள் (பங்கஜ்குமார் பட்டேல் மற்றும் டி.வி சேகர் - 11-11-2024) மக்கள்தொகைக்குப் பதிலாக வாக்காளர்தொகை அடிப்படையில் மக்களவை உறுப்பினர்களைத் தீர்மானிக்கலாம் என்று இதற்குத் தீர்வு கூறுகிறார்கள். வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் தொகுதிகளை வரையறுத்தாலும், உத்திரப்பிரதேசத்தின் எண்ணிக்கை 80 லிருந்து 117 ஆகும், பீகாருக்கு 40 உறுப்பினர் என்பது 60 ஆக உயரும். இராசஸ்தானின் 25 உறுப்பினர் எண்ணிக்கை 41 ஆகும். இவ்வாறு இந்தி மாநிலங்களின் எண்ணிக்கை 225 லிருந்து 378 ஆகும். அப்போது தமிழ்நாட்டின் எண்ணிக்கை 39 லிருந்து 43 ஆகும் அவ்வளவுதான். இதுவும் இந்தி இன மேலாதிக்கத்திற்கு வலுசேர்க்கவே பயன்படும்.
நாங்கள் முன்வைக்கும் தீர்வு
இதற்குத் தீர்வாக இந்தியாவின் ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, சராசரி வாக்காளர் எண்ணிக்கை ஒரு தொகுதிக்கு 10 இலட்சம் பேராக இருக்கலாம் என்ற வகையில் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை வரையறுத்துக் கொள்ளலாம்.
அதில் ஏற்கெனவே 60 இலட்சம் மக்கள் தொகைக்கும் குறைவாக உள்ள சிறிய மாநிலங்களுக்கு மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு உள்ள 41 இடங்களை அப்படியே ஒதுக்கிவைத்துவிட்டு, மீதமுள்ள இடங்களை அனைத்து மொழி இன மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையில் பிரித்துவிடாலாம்.
ஏனெனில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி இந்தியா என்பது “மாநிலங்களின் ஒன்றியம்” (Union of States) ஆகும். 1956 ஆம் ஆண்டு மாநில சீரமைப்புச் சட்டத்திற்குப் பிறகு, மாநிலங்கள் என்பவை வெறும் நிர்வாகப் பிரிவுகள் அல்ல. அவை மொழி இன தாயகங்களாகும். அதாவது, இந்தியா என்பது மொழி இன மாநிலங்களின் ஒன்றியமாகும்.
தமிழினத்திற்கு தமிழ்நாடு, மலையாள இனத்திற்கு கேரளம், குசராத்தி மொழி இனத்திற்கு குசராத், மராட்டிய மொழி இனத்திற்கு மகாராட்டிரம் என்று மொழி இன தாயகங்கள் மாநிலங்களாகச் சீரமைக்கப்பட்டதைக் கவனிக்க வேண்டும்.
போஜ்புரி, மைத்திலி, கோசாலி, மகதி, ராசஸ்தானி முதலிய பல்வேறு மொழிஇனங்கள் தங்களுக்குள் யாருக்கும் தாய்மொழியாக இல்லாத இந்தி மொழியைப் பொதுமொழியாக ஏற்றுக் கொண்டு இனமாக ஒருங்கிணைந்து கொண்டிருக்கின்றனர் .இதனால்தான், இந்தி மொழி இனத்திற்குப் பத்து மாநிலங்கள் அமைந்திருக்கின்றன.
எப்போது மொழிஇன தாயகங்கள் மாநிலங்களாகச் சீரமைக்கப்பட்டதோ, அப்போதே இந்தியா என்பது மொழி இன மாநிலங்களின் ஒன்றியம் என்றாகிவிட்டது.
ஆனால், நாடாளுமன்ற மக்களவை இந்தப் புறநிலையை வெளிப்படுத்தவில்லை. 1950 சனவரி 26 அன்று இந்திய அரசமைப்புச் சட்டம் செயலுக்கு வந்து, அதனடிப்படையில் 1952-இல் நாடாளுமன்ற மக்களவை அமைக்கப்பட்டபோது, மாநிலங்கள் என்பவை வெறும் நிர்வாக பிரிவாக (Administrative unit) மட்டுமே இருந்தன.
மொழிஇன மாநிலங்கள் என்ற செங்கற்களின் ஒழுங்கமைந்த தொகுப்பே இந்திய ஒன்றியம்
மொழிவழி மாநிலங்களுக்கான போராட்டம் நடந்து அவற்றின் விளைவாக 1956-இல் பல்வேறு மொழி இனங்களுக்கான வரலாற்றுத் தாயகங்கள் (historical homelands) மாநிலங்களாகச் சீரமைக்கப்பட்டபின் இந்திய ஒன்றியம் என்பது மொழி இன தாயகங்களின் ஒன்றியமாக மறுவடிவம் பெற்றுவிட்டது.
அதாவது, `மொழிஇன மாநிலங்கள் என்ற செங்கற்களின் ஒழுங்கமைந்த தொகுப்பே இந்திய ஒன்றியம்’ என்ற கட்டடமாகியிருக்கிறது என்று பொருள். மொழிஇன மாநிலங்கள் இல்லாமல் இந்திய ஒன்றியம் இல்லை. அதற்கேற்ப இந்திய அரசமைப்பை அப்போதே மொழிஇனத் தாயகங்களின் சமநிலை ஆவணமாக மாற்றியமைத்திருக்க வேண்டும்.
அது நடைபெறாததால்தான் பல்வேறு பகுதிகளில் தனிநாட்டு கோரிக்கைகளும் மாநில தன்னாட்சிக் கோரிக்கைகளும் எழுந்தன.
அரசியல் களத்தில் அனைத்திந்திய கட்சிகள் சிறுத்து மாநிலக் கட்சிகள் புதிதுபுதிதாகத் தோன்றியதென்பது பல்வேறு மொழிஇன பண்பாட்டு சமூகங்களின் நிறைவேறாத விழைவுகளின் வெளிப்பாடே ஆகும்.
அதன் கொதிநிலை வெளிப்பாடாகத்தான் தற்போது மக்களவை மறுசீரமைப்பை ஒட்டி தமிழ்நாட்டிலும், தென்மாநிலங்களிலும் எழுந்துள்ள கொந்தளிப்பு.
இது, கட்சிகள் கூட்டணிகள் என்பதைத்தாண்டி, பல்வேறு மொழிஇன மக்களின் உண்மையான சிக்கல் என்பதை இந்திய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரசு உள்ளிட்ட அனைத்திந்திய கட்சிகளும் இந்த மெய்நிலையை உணர்ந்து தீர்வுகளைத் தேட வேண்டும்.
இந்தியா போன்ற பல்வேறு தனித்தனி வரலாறு கொண்ட மொழிஇன மக்கள் வாழும் நாட்டில் இனச் சமநிலைப் பாதுகாப்புதான் சனநாயகத்தை அதன் உண்மையாக பொருளில் நிலைநிறுத்தும். ஏதோ ஒரு மொழிஇனம் தனது எண்ணிக்கை வலுவை வைத்து சனநாயகம் என்ற பெயரால் பெரும்பான்மை வாதத்தைச் செயல்படுத்தி தங்கள் முடிவுகளை பிறர்மீது திணிக்க முயன்றால், அங்கே சனநாயகமும் நிலைக்காது, அந்த நாட்டின் ஒற்றுமையும் சீர்குலையும்.
எனவே, வெறும் மக்கள் தொகை அடிப்படையில் மீண்டும் மீண்டும் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதை விட்டுவிட்டு, அனைத்து மொழி இனங்களுக்கும் சம எண்ணிக்கையில் இடங்கள் வழங்கி நாடாளுமன்ற மக்களவையை மறுசீரமைக்க வேண்டும்.
கூட்டாட்சி அரசு - Federal Government
இந்தியா என்ற கட்டமைப்பே பிரித்தானிய பீரங்கிகளால் பல்வேறு மொழிஇனங்களின் வரலாற்றுத் தாயகங்கள் கட்டாயமாக ஒருங்கிணைத்து உருவான ஆட்சிப்பகுதி.
அதனால்தான், இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் வந்த 1946 ஆம் ஆண்டிலேயே, இந்தியாவின் பல்வேறு மொழிஇனங்களுக்கு அவை தனித்தனி நாடுகளாக இருந்தால், என்னென்ன உரிமைகளும் அதிகாரங்களும் இருக்குமோ அவையெல்லாம் வழங்கப்பட்டு, கூட்டாட்சி அரசுக்கு (Federal Government) அனைத்திந்திய தன்மை வாய்ந்த, மிகச்சில முக்கிய அதிகாரங்கள் மட்டுமே அளிக்கப்படும் என காந்தியடிகளும் காங்கிரசுக் கட்சியும் வாக்குறுதி அளித்தார்கள். அதன்படி, நாட்டுப் பாதுகாப்பு, பணம் அச்சடித்தல், வெளிஉறவு, அனைத்திந்திய தகவல்தொடர்பு ஆகியவை மட்டுமே இந்திய கூட்டாட்சி அரசிடம் இருக்கும். பிற அனைத்து அதிகாரங்களும் மாநிலங்களுக்கே இருக்கும் என உறுதியளிக்கப்பட்டது.
அது மட்டுமின்றி, 1920 களிலிருந்தே சுதந்திரம் பெற்ற இந்தியா மொழிவழி மாநிலங்களாக மறுசீரமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் காங்கிரசு மாநாடுகளில் மீண்டும் மீண்டும் தீர்மானங்களாக வடிக்கப்பட்டன.
பாகிஸ்தான் உருவாக்கம் காந்தியடிகள் படுகொலை வடஇந்தியாவில் இந்து முசுலிம் கலவரம் என்ற பதட்டமான சூழலில், இந்திய அரசமைப்புச் சட்டம் தோற்றத்தில் கூட்டாட்சி போன்று இருக்கும் ஒற்றையாட்சியாக உருவாக்கப்பட்டது. அப்போதே, மாநிலங்களுக்கான உரிமைக்குரல், இந்திய அரசமைப்பு அவையில் உரக்க ஒலித்ததையும் பார்க்க முடியும்.
இன்று, ஆளுநர் - மாநில ஆட்சி முரண்பாடு, நிதிப்பங்கீட்டில் மாநிலங்கள் புறக்கணிப்பு என்ற கூக்குரல், மாநில அதிகாரங்கள் பறிப்பு என்ற கொந்தளிப்பு, அதற்கு மேல் மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை சீரமைப்பு என்ற சிக்கல் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டால், உண்மையான மொழிஇனமக்களின் இறையாண்மை பகிர்வாக (Sharing of Sovereinty) இந்திய அரசமைப்பு அமைய வேண்டும் என்பது புரியும்.
எனவே, அனைத்து மொழிஇன மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கை உள்ள அவையாக நாடாளுமன்ற மக்களவையை மாற்றி அமைப்பதுடன், மேற்சொன்ன நான்கு அதிகாரங்கள் தவிர, பிற அனைத்து அதிகாரங்களும் மாநிலங்களுக்கே வழங்கப்பட்டு, உண்மையான கூட்டாட்சியாக இந்திய அரசமைப்பை மாற்றி அமைக்க வேண்டும்.
அவ்வாறான சூழலில், நாடாளுமன்றத்திற்கு தனியே மாநிலங்களவை என ஒன்று தேவையில்லை.!
================================================
தொகுதி மறுவரையறை : `ஒரு வாக்கு, ஒரு மதிப்பு; எதிர்காலம் காக்க..!’ - இரா.சிந்தன்| களம் பகுதி 2
இரா.சிந்தன், பிரேம் குமார் எஸ்.கே.
'தீ பரவுகிறது' – இப்போது நம் முன் உள்ள கேள்வி இதுதான். நெருப்பில் சுட்டு உண்போமா? நெருப்புக்கு நம்மை உண்ணக் கொடுப்போமா? எரிந்துகொண்டிருக்கும் கூரையைக் காக்கத் துடிக்கும் அதே அவசரத்தோடு இயங்குகிறது தமிழ்நாடு. இப்போது தீயாக நம்மை விழுங்கப்பார்ப்பது 'தொகுதி மறுவரையறை பிரச்சனை'.
இப்போது என்ன அவசரம்?
2021 ஆம் ஆண்டு நடக்கவிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், ஆண்டுகள் கடந்த பின்னரும் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு அறிவிக்கவில்லை. உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை தெரிந்துவிடும் என்பதுகூட காரணமாக இருக்கலாம்.
நாட்டின் பல திட்டமிடல் தேவைகளுக்கு இந்த கணக்கெடுப்பு அவசியம். ஆனால் ஒன்றிய அரசோ இந்த ஆண்டும் அதற்கான நிதியை ஒதுக்கவில்லை. எனவே மேலும் ஒரு ஆண்டு மக்கள் தொகை கணக்கீடு தள்ளிப்போகும் என்பது தெரிய வந்தது.
இனியும் ஓராண்டு இந்த கணக்கெடுப்பு தள்ளிப்போனால், அது தொகுதி மறுவரையறை செயல்பாட்டை 10 ஆண்டுகள் முன்கூட்டியே செய்வதை நோக்கி நம்மை தள்ளும். இந்த இடத்தில்தான் பிரச்சனை உருவானது (சாதாராண நடைமுறையில் சென்றிருந்தால் 2035 க்கு பின்னர் போயிருக்கும்). எனவே, பாஜக தன்னுடைய மறைமுக திட்டத்தை நோக்கி நாட்டை இழுத்துச் செல்கிறதோ என்ற சந்தேகம் அரசியல் பிரச்னையாக உருவெடுத்தது.
அப்படி என்ன திட்டம்?
பலவீனமான மாநிலங்கள், பலமான ஒன்றிய அரசு என்பதுதான் 'ஒற்றை ஆட்சி' கருதுகோளுக்கு அடிப்படை. இது பாஜகவின் சித்தாந்தம் ஆகும்.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், மாநில கட்சிகளின் ஒற்றுமையை பார்த்துவிட்ட பாஜக, மாநில கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்த வேண்டிய இடத்துக்கு சென்றுள்ளது. இந்த அனுபவத்திற்கு பின் பாஜகவுக்கு கூட்டாட்சி இந்தியா மேலும் கசப்பது அதிசயமல்ல. எனவே, தனது சித்தாந்த திசையில் வேகமாக செல்ல பாஜக தீர்மானித்தது. எனவேதான் அவர்கள் 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' என்ற திட்டத்தை வேகப்படுத்தினார்கள். மாநில கட்சிகளின் மீதான முரண்பாடுகளும் அதிகமாகின. நிதிக்குழுவுக்கு ஒன்றிய நிதியமைச்சகம் அனுப்பிய பரிந்துறை, மாநிலங்களுக்கான நிதியை 1% மேலும் வெட்டவேண்டும் என்று கூறியிருந்தது. செஸ் மற்றும் சர்சார்ஜ் போன்ற வரிகளின் சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் - மோடி
கூட்டணி தயவுடனே ஆட்சியில் இருந்துவரும் பாஜக, இந்த நிலைமையை பயன்படுத்தி 2026 ஆம் ஆண்டுக்கு பின் மக்கள் தொகை கணக்கீட்டை தள்ளிவிட்டால், அதன் பின்னர் தென் மாநிலங்களிலும், மாநில கட்சிகள் வலுவாக உள்ள பகுதிகளிலும் இருந்து வரக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சரிந்துவிடும். எனவே, திட்டத்தை எதிர்ப்பதுதான் அவசர அவசியமாக முன்வந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் எண்ணிக்கை குறையாதா?
ஆனால், தொகுதி மறுவரையறை செய்வது மிகச் சாதாரணமான நடைமுறைதான். அதன் மூலம் தமிழ்நாட்டுக்கு எம்.பி இடங்கள் குறையாது என்று பாஜகவின் தரப்பில் விளக்கம் தருகிறார்கள். ஆனால், இந்தியாவில் ஏற்கனவே 1951, 1961, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புகள் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.
அப்போது நாட்டில் 494 ஆக இருந்த மக்களவை இடங்கள், பின்னர் 522 மற்றும் 534 என உயர்த்தப்பட்டன. இதிலெல்லாம் மாநில இடங்கள் மக்கள் தொகை விகித அடிப்படையில் மாறி வந்தன. 1976-ல் கொண்டுவரப்பட்ட 42-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் மாநிலங்களைத் தண்டிக்கக் கூடாது என்ற வலுவான காரணத்துடன் தொகுதி மறுவரையறை செயல்முறையை ஒத்திவைத்தது.
பின்னர் 2002 ஆம் ஆண்டு, மாநில கட்சிகளின் தயவில் நடைபெற்ற ஒன்றிய அரசு, 2026 வரை கால நீட்டிப்பு செய்தது. இருப்பினும், பழங்குடி மக்கள், பட்டியல் சாதி மக்களின் தொகுதிகள் மட்டும் 2001 மக்கள் தொகை அடிப்படையில் பட்டியல் மாற்றப்பட்டன. மாநிலங்களுக்குள் தொகுதி வரையறையை மறுசீரமைக்கும் பணி மட்டும் மேற்கொள்ளப்பட்டன.
எனவே, உரிய அரசமைப்பு சட்ட திருத்தம் செய்யாமல் தமிழ்நாட்டின் இடங்கள் குறையாது என்றோ, ஒட்டுமொத்த விகிதாச்சாரத்தில் தமிழ்நாட்டின் அதிகாரம் குறையாது வெற்று வாய் வார்த்தைகளை வீசுவதால் தீர்வு கிட்டாது.
உண்மைப் புள்ளிவிவரங்கள் பேசுகின்றன!
நம் கண் முன்னே நடக்கும் இந்த மாற்றத்தின் அளவை புரிந்துகொள்ள, சில எண்கள் உதவும்:
1971 மக்கள்தொகை:
தமிழ்நாடு: சுமார் 4.5 கோடி (இந்தியாவின் மக்கள்தொகையில் 6%)
கேரளா: சுமார் 2.5 கோடி (இந்தியாவின் மக்கள்தொகையில் 3%)
உத்தரப் பிரதேசம்: சுமார் 10.5 கோடி (இந்தியாவின் மக்கள்தொகையில் 15%)
பீகார்: சுமார் 6.0 கோடி (இந்தியாவின் மக்கள்தொகையில் 8%)
2021 மதிப்பிடப்பட்ட மக்கள்தொகை:
தமிழ்நாடு: சுமார் 7.9 கோடி (இந்தியாவின் மக்கள்தொகையில் 5.9%)
கேரளா: சுமார் 3.5 கோடி (இந்தியாவின் மக்கள்தொகையில் 2.6%)
உத்தரப் பிரதேசம்: சுமார் 20.3 கோடி (இந்தியாவின் மக்கள்தொகையில் 16%)
பீகார்: சுமார் 12.7 கோடி (இந்தியாவின் மக்கள்தொகையில் 10%)
ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் இந்த மாநிலங்களுடைய மக்கள் தொகையை சதவீதமாகப் பார்க்கும்போது பெரிய மாற்றம் தெரியவில்லை. ஆனால், மிலன் வைஷ்ணவ், ஜேமி ஹின்ஸ்டன் ஆகிய ஆய்வாளர்கள் இந்த மக்கள் தொகை வளர்ச்சி அடிப்படையில் தொகுதி வரையறை நடந்தால் அதனால் என்ன மாற்றம் ஏற்படும் என கணித்து ஒரு ஆய்வறிக்கையை எழுதியுள்ளனர்.
அதன்படி, 2026-க்குப் பிறகு தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை இப்போது 39 ஆக இருப்பது, 31 ஆகக் குறையக்கூடும். கேரளாவில் 20 இருப்பது 12 ஆகும். மாறாக, உத்தரப் பிரதேசம், பீகார் இரு மாநிலங்கள் மட்டுமே கூட்டாக 21 தொகுதிகள் அதிகம் பெறும்.
ஒருவேளை, 2026 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை கூடுதலாக்கினால் உத்திர பிரதேசத்தில் 143, பீகாரில் 79, மத்திய பிரதேசத்தில் 52, ராஜஸ்தானில் 50 என அதிகரிக்கும். தமிழ்நாட்டிலோ 10 தொகுதிகள் மட்டும் அதிகமாகும். நாட்டின் நாடாளுமன்றத்தில் வடமாநிலங்களே ஆதிக்கம் செலுத்துவதாக நிலைமை மாறும்.
இந்த பிரச்சனையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் கண்டனக் கருத்துக்கு பதில் குறிப்பிட்டிருந்த பாஜக தலைவர் ஹெச்.ராஜா, "இப்போதுள்ள 543 இடங்களை 724 ஆக அதிகரிப்போம். இந்த முறையில் தமிழ்நாட்டுக்கு 52 இடங்கள் வரும்" என்று புதிய கணக்கீட்டை குறிப்பிட்டிருந்தார். இதை பாஜகவினர் புரோ-ராட்டா முறை என விளக்குகிறார்கள்.
ஆனால் நாம் இப்படியொரு சூத்திரத்தை மக்கள் பிரதிநிதிக்கு முன்வைக்க நாடாளுமன்றம் இருக்கும்போது, அங்கே ஏன் எல்லாம் மூடு மந்திரமாக மறைக்கப்படுகிறது? ரகசிய அமைப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் (ராஷ்டிரிய சுயம்சேவக் சங்) இந்த சூத்திரத்தை எங்கே உருவாக்கி ராஜாவிடம் கொடுத்தது? என்று கேட்க விரும்புகிறோம்.
பாஜகவினர் தங்களின் மறைமுக திட்டம் வெளிப்பட்டுவிட்ட பின்னணியில், சந்திரபாபு நாயுடுவை போன்ற சில கூட்டாளிகளை சமாளித்து உடன் வைத்துக் கொள்வதற்காகவே இந்த விகிதாச்சார கணக்கீட்டை போலியாக பரப்புகிறார்கள்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கூடுதல் இருக்கைகளுடன் கட்டப்பட்ட போது இந்த திட்டத்தை பாஜக வெளிப்படுத்தியதா? மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவில் தொகுதி மறுவரையை ஒரு நிபந்தனையாக சேர்க்கப்பட்ட போது பாஜக தன்னுடைய சூத்திரத்தை நாடாளுமன்றத்தில் வைத்ததா? ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற திட்டத்தில் வேகம் காட்டிய போதும் கூட பாஜகவின் தரப்பில் இருந்து இந்த பிரச்சனை பேசப்படவில்லையே? எதிர்ப்புக்குரல்கள் வலுப்பட்ட பின்னர் தானே பாஜகவினர் பதட்டத்தில் பலதும் பேசுகிறார்கள். இந்த வாய் வார்த்தைகளுக்கு சட்ட அதிகாரம் எதுவும் உள்ளதா?
`இப்போதுள்ள நாடாளுமன்ற எண்ணிக்கைகள் கூட உண்மையில் ஒவ்வொரு வாக்கையும் சமமான மதிப்புள்ளதாக மாற்றவில்லை.’
பழைய எண்ணிக்கை போதுமானதா?
தொகுதி மறுவரையறை பிரச்சனை உண்மையில் மாநிலங்களுக்கும், மாநில கட்சிகளுக்கும் எழுந்திருக்கும் சவால் மட்டுமே என்றால் நாம் இந்த பிரச்சனையில் அனைத்து கட்சிகள் முன்வைக்கும் தீர்மானத்தையே ஒரு தீர்வாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதுவொரு சாத்தியமான வாதக் கருத்துதான்.
கூடுதலான அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள், ஒவ்வொரு மாநிலமும் தனக்கான முடிவை தாமே எடுத்துக் கொள்ள முடியும் என்ற கூட்டாட்சி ஏற்பாடு வலுப்பட்டால்தான் தொகுதி மறு வரையறை குறித்து எழக்கூடிய அத்தனை சர்ச்சைகளுக்கும் நிரந்தரமான தீர்வு ஏற்படும். மாநில சுயாட்சி, தீர்வின் ஒரு அம்சம் ஆகும்.
தொகுதி மறுவரையரை செய்வதற்கு அடிப்படையாக சொல்லப்படும் 'ஒரு வாக்கு, ஒரு மதிப்பு' என்ற கருதுகோளை சீர்தூக்கி, வலுப்படுத்தும் போதுதான் இந்த பிரச்சனைக்கு உண்மையான தீர்வு கிடைக்கும். உண்மையில், இப்போதுள்ள நாடாளுமன்ற எண்ணிக்கைகள் கூட உண்மையில் ஒவ்வொரு வாக்கையும் சமமான மதிப்புள்ளதாக மாற்றவில்லை.
ஒரு தொகுதியில் 100 வாக்காளர்கள் இருந்தால் அதில் 70 பேர் வாக்களிக்கிறார்கள். அதில் 30 வாக்கு பெற்றவர் வெற்றிபெற்றால், 70 பேரால் அவர் நிராகரிக்கப்பட்டவராக இருக்கிறார். ஆனால் அவரே 100 சதவீதம் பேருக்கும் பிரதிநிதியாக அமைகிறார். இன்றைய தேர்தல் முறைப்படி தோல்வியடைந்த வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மதிப்பு இழக்கின்றன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி வேறு ஒரு கட்சிக்கு தாவினாலோ, கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக நடந்தாலோ அவரை திரும்ப அழைப்பதற்காக எந்த வழிமுறையும் நம்முடைய சட்டத்தில் இல்லை.
பாஜகவினால் புதிதாக முன் மொழியப்பட்டுள்ள 'ஒரே தேசம் ஒரே தேர்தல்' என்ற திட்டம் நடைமுறைக்கு வருமானால், மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வேட்பாளர்களை சந்திக்க முடியும். அவரே மக்கள் பிரதிநிதியாக மாறிவிட்டால், மக்களை சந்திக்க வேண்டும், வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும் என்ற எந்த கடப்பாடும் இல்லாதவராக ஆக்கப்படுகிறார்.
ஏற்கனவே, தேர்தலும் அரசியலும் கோடிக்கணக்கில் பணம் புழங்கக்கூடிய தொழில்களாக மாற்றப்பட்டு – மக்களின் தாக்கம் குறைந்த செயல்முறைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. எனவே, ஒரு வாக்கு ஒரு மதிப்பு என்ற திசையை நோக்கிச் செல்ல, மேற்சொன்ன அம்சங்களிலெல்லாம் தீவிரமான சீர்திருத்தங்களை நாம் கோர வேண்டியுள்ளது.
> சுயேட்சைகள், கட்சிகள் தமது கொள்கைகளை முன்னிருத்தி வாக்குகளை திரட்டக்கூடிய கலப்பு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை.
> கட்சிகள், வேட்பாளர்களை திரும்பப் பெறக்கூடிய எதிர் வாக்களிப்புக்கான வாய்ப்பு.
> பணபலத்தை மையப்படுத்திய தேர்தல் முறையை தீவிரமாக மாற்றியமைப்பது.
> அதிகாரப் பரவல் கொண்டதாக அரசியலமைப்பை சீர்திருத்தி அமைப்பது.
எனவே இந்த பிரச்சனை அரசியல் கட்சிகள், மாநில முதலமைச்சர்களின் பிரச்சனை மட்டுமல்ல. உண்மையில் இது மக்களின் அதிகாரத்தை அதன் உண்மைப் பொருளில் உறுதி செய்வதற்கான பிரச்சனை. எனவே, இந்த நெருப்பை நாம் தனலாக்கி கையிலேந்த வேண்டும். சாமானியர்களின் விரல்களின் நுணியை, மீண்டும் அதிகாரம் மிக்கதாக்க வேண்டும்.”
================================================================
தொகுதி மறுவரையறை: `அண்ணல் அம்பேத்கரை குற்றம்சாட்டுகிறாரா ஸ்டாலின்?’ - பாஜக கனகசபாபதி | களம் பகுதி 3
பேரா ப. கனகசபாபதி, பிரேம் குமார் எஸ்.கே.
கடந்த சில நாட்களாக திமுக தொகுதி வரையறை விசயத்தைக் கையிலெடுத்து தவறான தகவல்களைத் தந்து, அதை ஊதிப் பெரிதாக்கி முழுக்க முழுக்க மலிவான அரசியலைச் செய்து வருவது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் அரசு நிர்வாகம் அவசரமாகச் செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கின்றன. அரசின் பல துறைகளில் ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஊதியம் உள்ளிட்ட அவர்களின் பல அடிப்படை உரிமைகள் இன்னமும் மறுக்கப்பட்டு வருகின்றன. பல வருடங்களாகப் போராடியும் அவர்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இத்தனைக்கும் அவற்றில் பல திமுக ஆட்சிக்கு வரும் முன்னர் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டவை.
கட்டடங்கள் இல்லாத பள்ளிக் கூடங்களில் குழந்தைகள் மரத்தடியில் உட்கார்ந்து படிக்க வேண்டிய அவலம் நிலவி வருகிறது. பேருந்துகளில் ஏறிச் செல்லும்போது மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு செல்லும் வகையில் பழுது பார்க்கப்படாத பேருந்துகள் இன்னமும் பயணித்துக் கொண்டுள்ளன.
அதே சமயம் மதுபானக் கடைகள் புதிய பெயர்களில் தமிழகமெங்கும் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பல அமைச்சர்கள் ஊழல் புகார்களில் சிக்கி நீதிமன்றம் சென்று கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றங்கள் அறிவுறுத்தியும் ஊழல் பேர் வழிகள் அமைச்சர்களாக வலம் வருகிறார்கள். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது.
`இல்லாத ஒரு விசயத்தை...’
இந்தப் பிரச்னைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாத திராவிட மாடல் அரசு, தமது குறைகளை மறைக்கத் தொடர்ந்து மத்திய அரசைக் குறை கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இல்லாத ஒரு விசயத்தை தேசியக் கல்விக் கொள்கையில் இருப்பதாகச் சொல்லி முதலில் மத்திய அரசு இந்தியைத் திணிக்கிறது எனக் குறை கூறினார்கள். அது பொய்யென மக்கள் உணரத் தொடங்கியதும் இப்போது அவர்கள் எடுத்துள்ள விசயம் தான் தொகுதி மறுவரையறை என்பது.
`மோடி அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது; கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகச் செயல்படுகிறது; தமிழகம் மட்டுமல்லாமல், தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களின் பாராளுமன்றத் தொகுதிகளைக் குறைக்கத் திட்டம் தீட்டுகிறார்கள்; அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என திமுக மத்திய அரசைக் குற்றம் சாட்டி வருகிறது.
ஆனால் உண்மை நிலை என்ன? முதலில் இந்த விசயம் இப்போது மத்திய அரசால் எடுத்துக் கொள்ளப்படவேயில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னர் மட்டுமே பரிசீலனைக்கு எடுக்கப்பட வேண்டிய விசயத்தை, இன்னமும் மக்கள் தொகை கணக்கெடுப்பே ஆரம்பிக்கப்படாத சூழ்நிலையிலேயே திமுக ஏன் கிளப்புகிறது?. மலிவான அரசியல்.
இரண்டாவது, தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏதோ, திரு நரேந்திர மோடி அவர்கள் 2014 ஆம் வருடம் பிரதமராக வந்த பின்னர், கொண்டு வந்த திட்டமல்ல. இது சுதந்திரம் அடைந்த காலம் தொடங்கி செயல்பட்டு வரும் திட்டம். அரசியலமைப்புச் சட்டம் 82 ஆவது பிரிவின் படி, ஒவ்வொரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து முடிந்த பின்னரும், அதன் அடிப்படையில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு தொகுதிகளின் எண்ணிக்கைகள் முடிவு செய்யப்பட வேண்டும்.
அப்படித்தான் 1951, 1961 மற்றும் 1971 ஆம் வருடங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்புகள் முடிந்த பின்னர் 1952, 1962 மற்றும் 1973 ஆம் வருடங்களில் தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டன. அந்தப் பணிகளை மறுசீரமைப்பு குழு சட்டப்படி 1951 ஆம் வருடம் அமைக்கப்பட்டுள்ள மறுசீரமைப்புக் குழுவானது மேற்கொள்ளும்.
அப்படித்தான் 1952 ஆம் வருடம் 494 பாராளுமன்றத் தொகுதிகள் என முடிவு செய்யப்பட்டு, பின்னர் மக்கள் தொகை அடிப்படையில் 1973-ல் 543 என அதிகமாக்கப்பட்டது. அதன் பின் 1976-ம் வருடம் இந்திரா காந்தி அம்மையார் ஆட்சிக் காலத்தில் அவசர நிலைச் சட்டம் இருந்த போது, 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முடியும் வரை இருக்கின்ற தொகுதிகள் அதே அளவு நீடிக்கும் வகையில் எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
`அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில்...’
தொடர்ந்து 2001 ஆம் வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பின்னர், அப்போதைய பிரதமர் திரு.வாஜ்பாய் அவர்கள் தென் மாநிலங்களின் கருத்துகளின் அடிப்படையில் பாராளுமன்றத் தொகுதிகள் மறு வரையறையை ஒத்தி வைத்தார். அதே சமயம் 2002 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள மாநில சட்டமன்றங்களின் மொத்த எண்ணிக்கை 3,997 என்பதிலிருந்து 4,123 ஆக அதிகரிக்கப்பட்டது.
அதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் 84 ஆவது திருத்தச் சட்டம் 2002 ஆம் வருடம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டமானது தொகுதிகள் மறுவரையறை என்பது 2026-ம் வருடத்துக்குப் பின் எடுக்கப்படும் மக்கள் தொகையின் அடிப்படையில் இருக்கும் எனச் சொல்கிறது. எனவே சுதந்திரத்துக்குப் பின் இதுவரை நடைபெற்ற நான்கு தொகுதி மறுவரையறைகள் மற்றும் பாராளுமன்ற – சட்டமன்றத் தொகுதிகளின் அதிகரிப்பு என்பவை அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தொகுதி மறுவரையறைக்குழு மேற்கொண்டு வருபவை தான்.
எனவே இந்த விசயத்தில் மோடி அரசு எங்கே வந்தது? திரு.ஸ்டாலின் ஏன் மோடி அரசு வஞ்சிப்பதாகச் சொல்கிறார்? மத்திய அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எனவே முதல்வர் தெரியாமல் சொல்கிறாரா? தெரிந்து சொல்வதாக இருந்தால், அவர் மறைமுகமாக அரசியலமைப்புச் சட்டத்தையும் அதை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட பெருமக்களையும் குற்றம் சாட்டுகிறாரா? எனவே இது முழுக்க முழுக்க அரசியல்.
இந்த விசயத்தில் நாட்டைப் பல வருட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ், தேசியக் கட்சியான கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் திமுக-வின் நிலைப்பாட்டை ஆதரித்தும், கள்ள மௌனம் காத்தும் வருவது வருத்தமளிக்கும் செயலாகும். இந்தி மொழியை எதிர்த்துப் பேசி காணாமல் போன ’இந்தி’ கூட்டணிக் கட்சிகளின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்ட திமுக, இப்போது அதைச் சரி செய்ய தென் மாநில முதல்வர்களைச் சந்தித்து தொகுதி மறுவரையறை விசயத்தில் தம்மை முன்னிறுத்திக் கொள்ளலாம் என்னும் கற்பனையில் நடவடிக்கைகளை எடுக்கிறது. தமது கட்சித் தலைவர்களை குறிப்பிட்ட ஏழு மாநில முதல்வர்களைச் சந்திக்கச் சொல்லி அனுப்பிவுள்ளது.
பத்து நாட்கள் முன் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்கள் கோவை வந்திருந்த போது தொகுதி மறுசீரமைப்பு விசயத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகள் குறைக்கப்படாது எனச் சொல்லியிருக்கிறார். உள்துறை அமைச்சரே அறிவித்த பின்னரும், திமுக ஏன் மீண்டும் மீண்டும் மத்திய அரசைக் குறை சொல்லி இந்த விசயத்தைப் பேசி வருகிறது?
தங்களின் ஊழல்கள் மற்றும் நிர்வாகத் திறமையின்மையை மறைக்கவும், திமுக மேல் மக்களுக்கு ஏற்பட்டு வரும் வெறுப்புகளைத் திசை திருப்பவுமே இப்போது மறுவரையறை விசயத்தைக் கையில் எடுத்துள்ளது. மோடி அவர்களின் அரசு எந்த மாநில அரசுக்கும் எதிரானதல்ல. மாறாக மாநிலங்களுடன் இணைந்து தேசத்தை முன்னேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அரசு.
ஆகையால் முழுக்க முழுக்க மலிவு அரசியலுக்காக திமுக அரசு எடுத்துள்ள தொகுதி மறுவரையறை விசயம் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும். மாநிலம் முழுதும் வியாபித்திருக்கும் ஊழல்களைத் தடுத்து நிறுத்தி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைத் திமுக அரசு இனிமேலாவது செய்ய முயற்சிக்க வேண்டும்.”
========================================
தொகுதி மறுவரையறை: `தெற்கு தேய்கிறது; வடக்கு மேய்கிறது’ - ஆதவன் தீட்சண்யா | களம் பகுதி 4
ஆதவன் தீட்சண்யா, பிரேம் குமார் எஸ்.கே.
ஒன்றிய பாஜக அரசின் எந்தவொரு முடிவும் செயலும் நாட்டின் வளர்ச்சிக்கும் ஜனநாயகத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரானதாக மட்டுமன்றி, அந்தக் கட்சியின் ஆதாயங்களுக்காக பெருமளவு முறைகேடானதாகவும் இருக்கும் என்பதற்கு பெரிய ஆய்வுகள் தேவையில்லை.
அது கடந்தகாலத்தில் கொண்டுவந்த நீட், பணமதிப்பிழப்பு, தேர்தல் பத்திரம், குடியுரிமைத் திருத்தச்சட்டம், வேளாண் திருத்தச்சட்டம், தொழிலுறவுச் சட்டம், அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கம், ஜி.எஸ்.டி, தேசிய கல்விக்கொள்கை, இந்திய குற்றவியல் சட்டத்திருத்தம் என ஏராளமான சான்றுகள் அதற்குப் போதுமானதாக உள்ளன.
அந்த அனுபவத்திலிருந்தே, அதாவது நாட்டுக்கு நன்மைபயக்கும் எதுவொன்றையும் பாஜக செய்துவிடாது என்கிற பட்டறிவிலிருந்தே - அது செயல்படுத்த முனையும் “தொகுதி மறுவரையறை” என்பதை எடுத்தயெடுப்பில் நாட்டுநலனுக்கு எதிரானது என்று சொல்லிவிட முடியும்தான். ஆனால் அதற்கும் அப்பால் சென்று தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது.
தொகுதி எல்லை வரையறுப்பும் தேர்தலும்தான் நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தாங்கும் இரட்டைத்தூண்கள் என்று போற்றப்படுவதன் பொருள், தொகுதி வரையறுப்பின் பேரில் நடைபெறும் தேர்தலே, மக்களின் சரியான பிரதிநிதித்துவமாக இருக்கமுடியும் என்பதாகும்.
சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ செல்லும் ஒவ்வொரு பிரதிநிதியும் சமமான மக்கள்தொகை கொண்ட தொகுதியின் பிரதிநிதியாகச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போதே ஒவ்வொருவரது வாக்கும் சமமதிப்புடையதாகிறது என்பதை கணக்கில்கொண்டே ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்தபிறகும் அதனடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையையும் எல்லையையும் மறுவரையறை செய்வதுடன், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான தொகுதிகளை அடையாளப்படுத்தவும் வேண்டும் என்று பணிக்கிறது அரசியல் சாசனம்.
மக்கள் தொகை அடைப்படையில்..!
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதற்கு முன்னோட்டமாக, 1952ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதல் எல்லை நிர்ணய ஆணையம், 1951 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 494 என வரையறுத்தது.
1963ஆம் ஆண்டு இரண்டாவது ஆணையம், 1961 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தொகுதிகளின் எண்ணிக்கையை 522 ஆக உயர்த்தியது. 1973ஆம் ஆண்டில் மூன்றாவது ஆணையம் இந்த எண்ணிக்கையை 543 என உயர்த்தியது. இதனிடையே 1952ஆம் ஆண்டு முதல் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் மக்கள்தொகை கட்டுப்பாட்டு விகிதம் சமநிலையில் இல்லாததை பரிசீலித்த இந்திரா காந்தி அரசாங்கம், அடுத்த 25ஆண்டுகளில் சமநிலையை எட்டவேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, 2001 மக்கள்தொகை கணக்கெடுப்புவரை மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுவரையறையை (42ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்,1976 மூலம்) நிறுத்திவைத்தது.
1976 - 2000 வரையான 25 ஆண்டுகளில் தமிழ்நாடு, கேரளா ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்கள் மக்கள்தொகைப் பெருக்கத்தை பெருமளவு கட்டுப்படுத்தயிருந்தன. ஆனால் வடமாநிலங்களிலோ எதிர்மாறான நிலை. மக்கள்தொகைப் பெருக்க விகிதம் இவ்வாறு தொடர்ந்து சமநிலையில் இல்லாத சூழலில், 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தங்களது தொகுதிகள் குறையும் ஆபத்து இருப்பதை நன்குணர்ந்த தென்மாநிலங்கள், தொகுதி மறுவரையறை ஆணையம் (2002) அமைக்கப்படுவதற்கே கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் வேறு வழியின்றி, தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் எல்லைகளை மட்டும் சீரமைப்பதாக அந்த ஆணையத்தின் பணியை மட்டுப்படுத்திய அப்போதைய வாஜ்பாய் அரசு (84ஆவது அரசியல் சட்டத்திருத்தம், 2002 மூலமாக) மேலும் 25ஆண்டுகளுக்கு அதாவது 2026ஆம் ஆண்டுவரை தொகுதி மறுவரையறை செய்வதை நிறுத்திவைத்தது. அதனால், நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையும் விகிதாச்சாரமும் மாற்றமின்றி தொடர்கின்றன.
கொரோனாவை காரணம் காட்டி..!
2026ஆம் ஆண்டில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டுமாயின், அது 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நடக்கவேண்டும். ஆனால், மோடியின் ஒன்றிய அரசோ கொரானா பொதுமுடக்கத்தைக் காரணங்காட்டி 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் முடக்கிவிட்டது. பிறப்பு – இறப்பு விகிதத்திற்கிடையேயான வேறுபாட்டை வைத்து கொரானாவினால் செத்தவர்கள் எவ்வளவு பேர் என்கிற உண்மை விவரம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதனாலேயே கணக்கெடுப்பை முடக்கியிருக்கலாம் என்றொரு குற்றச்சாட்டும் நிலவுகிறது.
அமெரிக்கா, பிரிட்டன்... அவ்வளவு ஏன் கொரானாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீனா கூட மக்கள்தொகை கணக்கெடுப்பை இதேகாலத்தில் தடையின்றி நடத்திவிட்ட நிலையில் உலகத்துக்கே வழிகாட்டும் விஸ்வகுரு மோடியின் அரசு ஏன் நடத்தவில்லை? இதே பொதுமுடக்கக் காலத்தின் கெடுபிடிகளைத் தளர்த்தி பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களை நடத்திமுடித்த மோடி அரசு, பொதுமுடக்கம் முடிந்த பிறகாவது மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியிருக்கலாமே? அவ்வாறெல்லாம் செய்யாமல் இப்போது 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யலாம் என்கிறது. இதிலென்ன பிரச்னை?
பிரிட்டிஷ் காலனியாட்சி முதன்முதலில்...
ஒரு நாட்டை நிர்வகிக்கவும் மக்கள்தொகை பரவலாக்கம், வசிப்பிடம், கல்வி, மருத்துவம், உற்பத்தி, விநியோகம் சார்ந்த திட்டமிடுதலுக்காகவும் அந்நாட்டின் மக்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் அரசிடம் இருக்கவேண்டும் என்கிற கண்ணோட்டம் சேமநல அரசுகள் உருவான காலந்தொட்டே உலகெங்கும் இருந்துவருகிறது.
“பொருளாதார, சமூகப் பிரச்னைகளை திறமையாக கையாண்டு தீர்வு காண்பதற்கும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயனுள்ள விதமாக அரசை நடத்திச் செல்வதற்கும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அந்தச் சான்றுகளைத் திரட்டித்தரும் அறிவியல்பூர்வமான நடவடிக்கையே மக்கள்தொகை கணக்கெடுப்பு” என்கிறது ஐநா மன்றம்.
இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாட்சி முதன்முதலில் 1872ஆம் ஆண்டு வெளியிட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரம் சுமார் ஆறாண்டுகாலம் திரட்டிய தகவல்களின் தொகுப்பாகும். அப்போதிருந்து 2011ஆம் ஆண்டு வரை பத்தாண்டுகளுக்கொரு முறை என இதுவரை 15 முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்துள்ளது. இரண்டாம் உலகப்போர், இந்திய - சீன எல்லை மோதல், வங்கதேச விடுதலைப்போர் ஆகியவற்றினால் இடையூறுகள் ஏற்பட்ட நிலையிலும்கூட 1941, 1961, 1971 ஆம் ஆண்டுகளில் கணக்கெடுப்பு தடைபடாமல் நடந்துள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பின் இணை இயக்குநராக பணியாற்றிய A.W.மகாத்மே, “இந்தக் கணக்கெடுப்புகள் நகர்ப்புற கிராமப்புற பாகுபாடுகள், பாலினம், வயது, திருமணநிலை, மதம், மொழி, கல்வியறிவு, கல்விநிலை, தொழில், இடப்பெயர்வு, வீட்டு நிலைமைகள் போன்றவை பற்றிய தகவல்களைச் சேகரித்துள்ளன. 1872 முதல் 1931 வரை, மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு நபரிடமும் அவர் ஏதேனும் உடல் அல்லது மனக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று விசாரித்திருக்கிறது. 1941 முதல் 1971 வரை, இந்தக்கேள்வி மக்கள்தொகை கணக்கெடுப்பு வினாத்தாளிலிருந்து முற்றிலும் விலக்கப்பட்டது.
National Democratic Alliance அரசு அல்ல... No Data Alliance அரசு
1981 மக்கள்தொகை கணக்கெடுப்பில், இக்கேள்வியை குறிப்பிட்டளவில் விசாரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வீடுகளைப் பட்டியலிடும் கட்டத்தில், ஒரு வீட்டில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர், உறுப்பினர்களில் யாராவது முற்றிலும் பார்வையற்றவர்களா, அல்லது முற்றிலும் ஊனமுற்றவர்களா, அப்படியானால் எத்தனை பேர் என்று கூடுதல் கேள்வி கேட்கப்பட்டது” என்கிறார்.
இவற்றுக்கும் அப்பால், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டு வரம்பை உயர்த்தவும், தொகுதி மறுவரையறைக்கும், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இப்போதேனும் வழங்குவதற்காகவும் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு தேவை. ஆனால் அப்படியான அறிவியல்பூர்வமான தரவுகள் எதுவும் மோடி அரசுக்குத் தேவைப்படவில்லை.
WINTERLINE PRODUCTION
“புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றியோ, விவசாயிகள் தற்கொலை பற்றியோ, கோவிட் இறப்புகள் பற்றியோ, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்தோ எந்தவொரு சரியான தரவையும் தராத இந்த National Democratic Alliance அரசை No Data Alliance அரசு என்றழைப்பதே பொருத்தமாக இருக்கும்” என்று எதிர்கட்சிகளின் கேலிக்கு ஆளாகியிருந்தது மோடி அரசு.
உண்மையில் அரசிடம் தரவுகள் இல்லாமலில்லை. தரவுகளிலிருந்து தெரியவரும் உண்மைகள் அரசின் தவறான கொள்கைகளை அம்பலப்படுத்துவதாக இருந்ததால் திட்டமிட்டே அவற்றை மறைத்தும் திரித்தும் முறைகேடுகள் செய்வதற்கு உகந்தளவில் வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதே அணுகுமுறைதான் மக்கள்தொகை பற்றி எந்த மேம்படுத்தப்பட்ட தரவுகளையும் வெளியிடாமல் 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யலாம் என்கிறது.
சமனற்ற இந்நிலைக்கு எதிராக...
மக்கள்தொகைப் பெருக்கம், பிறப்பு - இறப்பு விகிதம், சராசரி வாழ்நாள், மக்கள்தொகை அடர்த்தி, பரவலாக்கம், வீட்டுடமை, இடப்பெயர்வு உள்ளிட்ட தரவுகளில் 2001ஆம் ஆண்டு நிலவிய சமமற்ற நிலை 2011ஆம் ஆண்டில் பெரிதாக மாறியிருக்க வாய்ப்பில்லாதபோது, 2001 கணக்கெடுப்பை தொகுதி மறுவரையறைக்கு அடிப்படையாக கொள்ளக்கூடாது என்கிற தென்மாநிங்களின் நிலைப்பாடு 2011 கணக்கெடுப்புக்கும் பொருந்தும்.
மறுவரையறையினால் நாடாளுமன்றத்தொகுதிகளின் எண்ணிக்கை ஒருவேளை மாற்றியமைக்கப்படவில்லை என்றால் மக்கள்தொகை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 9 தொகுதிகள் குறையும். அதாவது நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7% என்ற நிலையிலிருந்து 5.5% என குறையும். ஒருவேளை மக்கள்தொகைப்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 753 என மாற்றியமைக்கப்படுமானால் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகள் 41 என்றாகும். இது முந்தைய இடங்களைவிட இரண்டு இடங்கள் கூடுதல் என்றாலும் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் தற்போதுள்ள 7% என்பதிலிருந்து 5.4% என்கிற நிலைக்குச் சரியும்.
தமிழ்நாட்டைப் போலவே கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிஸா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கும் இதேகதிதான். ஆனால் மேற்சொன்ன இரண்டு விதங்களில் எதுவொன்றின்படி மறுவரையறை செய்தாலும் உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற வடமாநிலங்கள் கூடுதலான இடங்களையும் பிரதிநிதித்துவ விகிதாச்சாரத்தையும் பெறுகின்றன. சமனற்ற இந்நிலைக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் எழுப்பும் கேள்விகளுக்கு ஒன்றிய ஆட்சியாளர்களும் பாஜகவினரும் முன்னுக்குப்பின் முரணாக குயுக்தியுடன் பதிலளித்து குழப்பிவருகின்றனர்.
மக்கள்தொகையில் மட்டுமன்றி மனிதவள மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் மாநிலங்களின் பங்களிப்பையும் உள்ளடக்கி பிரதிநிதித்துவம் வழங்குவது பற்றியெல்லாம் வெளியாகும் முன்வைப்புகளை மோடியின் ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ளவில்லை. கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை முன்கூட்டியே கட்டிவிட்டதன் மூலம், உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து மாநிலங்களுக்கிடையே சமனற்ற நிலையை உருவாக்கி மோதவிடுவதில் தான் அது அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
கூட்டாட்சி, நாடாளுமன்ற ஜனநாயகம், நாட்டின் பன்மைத்துவம், குடிமக்களுக்கிடையே சமமதிப்பு, சமூகநீதி ஆகியவற்றில் அக்கறையுள்ளவர்கள் பிரதிநிதித்துவத்தில் சமத்துவம் என்கிற நிலையை உருவாக்கும் விதமாக தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டுமென ஒன்றிய அரசை நோக்கி குரலெழுப்புவது அவசியம்.!
=============================
தொகுதி மறுவரையறை: `தென் இந்தியாவுக்கு எதிரான சூழ்ச்சி!’ - எஸ்.செந்தில்குமார், திமுக | களம் பகுதி 5
Guest Contributor, பிரேம் குமார் எஸ்.கே.
மத்திய பா.ஜ.க அரசின் நயவஞ்சகம் நிறைந்த செயல் திட்டங்களில் ஒன்றுதான், ‘தொகுதி மறுவரையறை’. வட மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்… அதே வேளையில், தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, அரசியல் ரீதியில் தென்னகத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வின் திட்டம். இதற்கு எதிராகத்தான் பிற மாநிலங்களை அணிதிரட்டும் வேலையில் தி.மு.க இறங்கியிருக்கிறது.
சமீபத்தில் கோவைக்கு வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுவரையறைக்கு தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் எதிர்ப்பைப் பார்த்துவிட்டு, ‘தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறையாது’ என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால், தொகுதி மறுவரையறையால், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொகுதிகள் கணிசமாக அதிகரிக்கப்போவது பற்றி அவர் வாய்திறக்கவில்லை.
‘நாம் இருவர் நமக்கு இருவர்’ டு ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’
மக்கள்தொகை அடிப்படையில்தான், சட்டமன்ற, நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பான வழிகாட்டல்களை தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பாகக் கடைப்பிடித்தன. ஆரம்பத்தில், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்று தொடங்கி, பிறகு ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்று தீவிர பிரசாரம் நடைபெற்றது. இப்படியாக, அரசின் மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதன் மூலம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள்தொகைக் கட்டுப்பாடு திட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை. எனவே, அந்த மாநிலங்களில் மக்கள்தொகை அதிகரித்திருக்கிறது. அதனால், அந்த மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படியென்றால், மக்கள்தொகை கட்டுப்பாடுத் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தி, நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியதற்காக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்டனை தரப்போகிறார்களா என்ற கேள்வி இன்று எழுந்திருக்கிறது.
அரசியல் ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் மத்திய பா.ஜ.க அரசிடமிருந்து தென் மாநிலங்கள் முரண்படுகின்றன. இந்த சூழலில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க-வால் வளர முடியவில்லை. இந்த மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பும் இல்லை. இத்தகைய சூழலில்தான், தொகுதி மறுவரையறையைக் கொண்டு ஒரு சூழ்ச்சி வலையை பா.ஜ.க பின்னுகிறது. அந்தப் பின்னணியிலிருந்துதான் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், மக்களவை உறுப்பினர்களுக்கான இருக்கைகளை அதிகரித்தார்கள். தற்போது, மொத்தம் 543 மக்களவை உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், அங்கு 1,033 இருக்கைகளை அமைத்திருக்கிறார்கள். மிகப்பெரிய சூழ்ச்சியும், ஆபத்தும் அதன்பின்னால் இருக்கிறது.
தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு எம்.பி-க்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரிக்கும், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு எவ்வளவு அதிகரிக்கும் என்பதனை முன்கூட்டியே கணித்து வைத்துக்கொண்டுதான், நாடாளுமன்றத்தில் எம்.பி-க்களுக்கான இருக்கைகளை அதிகரித்திருக்கிறார்கள். நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 848 ஆக அதிகரிக்கப்ட்டு, தற்போதைய விகிதாச்சாரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், தமிழகத்துக்கு பத்து தொகுதிகள் மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். இதனால், நாம் 12 கூடுதல் தொகுதிகளை இழந்துவிடுவோம். இது ஏதோ தொகுதிகளின் எண்ணிக்கை சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டும் அல்ல. இது, நமது மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை.
எச்சரிக்கை மணி
இந்த ஆபத்தை உணர்ந்துதான், ‘தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென் இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது’ என்று எச்சரிக்கை மணியை ஒலித்தார் தமிழக முதல்வர். எனவேதான், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்தும், மாநில உரிமையைக் காப்பது குறித்தும் விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை தமிழக முதல்வர் கடந்த மார்ச் 5-ம் தேதி கூட்டினார்.
அதில், மக்கள்தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலேயே மக்களவைத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று 2000-ம் ஆண்டு அன்றைய பிரதமர் உறுதியளித்தார். அதுபோல, இந்த வரையறை 2026-லிருந்து அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
அரசியல் பிரதிநிதித்துவ உரிமை மீதான தாக்குதல்
தொகுதி மறுவரையறை பிரச்னை, ஒட்டுமொத்த தென் இந்தியாவுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. இது, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு கிடைத்துவரும் அரசியல் பிரதிநிதித்துவ உரிமை மீதான தாக்குதல் என்பதால், இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், முதல்வர் ஸ்டாலின், 7 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கும், முன்னாள் முதல்வர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் மார்ச் 7-ம் தேதி கடிதமாக எழுதியுள்ளார்.
அந்த வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார். சென்னையில் மார்ச் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்குவதற்கான ஆலோசனையும் இருக்கிறது.
தேசத்துக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளில் பா.ஜ.க எந்தளவுக்கு சூழ்ச்சியுடன் இறங்கும் என்பதை நன்கு அறிந்திருப்பதால்தான், இந்த விவகாரத்தில் இவ்வளவு தீவிரமாக தமிழக முதல்வர் களமிறங்கியிருக்கிறார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370-ஐ பா.ஜ.க அரசு எப்படி நீக்கியது என்பதை அனைவரும் பார்த்தோம். நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், சம்பந்தப்பட்ட மக்களிடம் கருத்து கேட்காமல் அதிரடியாக அதை நீக்கினார்கள்.
அதேபோல, மூன்று வேளாண் சட்டங்களையும் அப்படித்தான் கொண்டுவந்தார்கள். அப்போது நான் மக்களவை உறுப்பினராக இருந்தேன். பா.ஜ.க அரசு எப்படியெல்லாம் சதிவேலைகளில் ஈடுபடும் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். ஆகவே, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அப்படி எதுவும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதுதான் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் எண்ணமாக இருக்கிறது.
ஒன்றிய அரசால் தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை. கல்வித்திட்டத்துக்கான நிதியைத் தர மறுக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையில் ஒன்றிய அரசு சொல்வதை நாம் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த நிலையில், ஒன்றிய அரசின் அநீதிகளுக்கு எதிராக தமிழக எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் தீவிரமாகக் குரல் கொடுத்துவருகிறார்கள். இப்படியான சூழலில்தான், தொகுதி மறுவரையறை மூலமாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டுமேன்று சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.
அவர்களின் திட்டம் நிறைவேறினால், தமிழ்நாட்டை கண்டுகொள்ளவே மாட்டார்கள். தமிழ்நாட்டுக்கு எந்த வளர்ச்சித் திட்டமும் வராது. மொத்தத்தில், கூட்டாட்சித் தத்துவம் கேள்விக்குறியாகிவிடும். எனவேதான், இந்த விவகாரத்தை தி.மு.க மிகவும் சீரியஸாகப் பார்க்கிறது. இதில் எங்களுடைய போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வாய்ப்பே இல்லை என்று ஒன்றிய அரசும், பா.ஜ.க தலைவர்களும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், விவசாயிகள் போராட்டத்துக்கு அடிபணித்து, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்துசெய்தது ஒன்றிய பா.ஜ.க அரசு.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நிச்சயம் அதுதான் நடக்கும்!
(களம்: தொகுதி மறுவரையறை... முற்றும்)
========================================
தென்மாநிலங்களின் உரிமைக்கே உலையா?' - தொகுதி மறுவரையறை: அவசியமா... ஆபத்தா?
VM மன்சூர் கைரி, சே. பாலாஜி
மத்திய அரசு நாளை (ஏப்ரல் 16) முதல் 18 வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு எதிர்க்கட்சிகளுக்கு விடுத்திருக்கிறது. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதோடு, தொகுதி மறுவரையறைப் பணியையும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, தொகுதி மறுவரையறை திட்டம் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் கடுமையான விமர்சிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், `தொகுதி மறுவரையறையை அமல்படுத்தினால் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும்.
அதன் விளைவை மத்திய அரசு எதிர்க்கொள்ளவேண்டியிருக்கும்' எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து மூத்த ஊடகவியலாளர் அய்யநாதனைத் தொடர்புகொண்டு விரிவாகப் பேசினோம்.
அவர், ``பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது என்பது தற்போதைய சூழலிலேயே சாத்தியமான ஒன்றுதான். தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே இந்த இட ஒதுக்கீட்டை வழங்க முடியும் என்பதில் எந்தவித முகாந்திரமும் இல்லை. ஆனால், இதற்குப் பின்னால் ஓர் ஆழமான அரசியல் நோக்கம் மறைந்திருக்கிறது.
ஆளும் தரப்பிற்குப் பெரும் செல்வாக்குள்ள வடமாநிலங்களில், தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் தங்களது அதிகாரத்தை நிரந்தரமாக்க அவர்கள் திட்டமிடுகின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகையின் அடிப்படையிலேயே செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது, மக்கள் தொகை அதிகம் கொண்ட வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு, ஒட்டுமொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்பட்டு, அவை மக்கள் தொகை விகிதாச்சாரப்படி பிரிக்கப்பட்டால், வடமாநிலங்களில் மட்டுமே சுமார் 500 தொகுதிகள் வரை வந்துவிடும். ஆனால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்காது அல்லது மிகக் குறைவாகவே இருக்கும்.
இதன் மூலம், தென்மாநிலங்களின் ஆதரவே தேவையில்லாமல் வடமாநிலங்களை மட்டுமே வைத்து மத்தியில் ஆட்சியைத் தீர்மானிக்கும் நிலையை அவர்கள் அடையப் பார்க்கிறார்கள். தென்னிந்தியாவில் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த முடியாததற்கு மற்றொரு முக்கியக் காரணம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) முறைகேடுகளை இங்கு செய்ய முடியவில்லை.
அசுர வேகத்தில் உயரும் உத்தரப்பிரதேசம்
ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் விழிப்புணர்வு அதிகம் இருப்பதால், முறைகேடுகள் செய்வது கடினமாக உள்ளது. ஆனால் வடமாநிலங்களில், வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் 'படிவம் 17சி' (Form 17C) போன்ற முக்கியமான ஆவணங்களைக் கூட கேட்டுப் பெறாத நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, வாக்குகளைத் தன்னிச்சையாக அதிகரித்து வெற்றி பெறுவது எளிதாக உள்ளது. இந்த அரசியல் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளவே, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை அவர்கள் தீவிரமாக முன்னெடுக்கிறார்கள்.
தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகையின் அடிப்படையிலேயே அமையப்போவதால், கடந்த கால மக்கள் தொகை கணக்கெடுப்புகளை நாம் உற்றுநோக்க வேண்டும். 2001 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில், தமிழ்நாட்டின் மக்கள் தொகை உயர்வு என்பது மிகக் குறைவாகவே உள்ளது. ஆனால், அதே காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகை வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது. தமிழ்நாடு Vs உத்தரப்பிரதேசம் குறிப்பாக, 1971-ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 50 ஆண்டுகளில் (1981, 1991, 2001, 2011 கணக்கெடுப்புகள் படி), உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகை வளர்ச்சி என்பது அசுர வேகத்தில் உயர்ந்து, கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.
ஜனநாயக ரீதியான பிரதிநிதித்துவம் என்பது மக்கள் தொகையின் அடிப்படையில் அமையும்போது, இந்த அதீத வளர்ச்சி வடமாநிலங்களுக்குச் சாதகமாக மாறிவிடுகிறது. இதனால்தான் மத்திய அரசு இந்தத் தொகுதி மறுசீரமைப்பைத் தீவிரமாக வேகப்படுத்த முயல்கிறது. `அனைத்து மாநிலங்களுக்கும் தொகுதிகளை 50 சதவிகிதம் உயர்த்துவோம்' என்று அவர்கள் கூறுவது வெறும் கண்துடைப்பு மற்றும் ஏமாற்று வேலை மட்டுமே. இதில் எந்தவிதமான தர்க்கரீதியான அடிப்படையும் இல்லை. ஆரம்பத்தில் இப்படிச் சொல்லி நம்மைச் சம்மதிக்க வைத்துவிட்டு, பின்னாளில் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடும்போது நாம் வஞ்சிக்கப்படுவோம்.
எனவே, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திச் சமூக முன்னேற்றத்தை அடைந்த தென்மாநிலங்கள், நாடாளுமன்றத்தில் தங்களது வலிமையான குரலை இழந்து வெறும் பார்வையாளர்களாக மட்டுமே எஞ்சியிருக்கும் சூழல் உருவாகும்.
தென்னகத்தின் அதிகாரமும் அச்சமும்!
மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் தற்போது 207 தொகுதிகள் உள்ள வடமாநிலங்கள், மறுவரையறைக்குப் பின் 366 தொகுதிகளாக உயரும். இதன் விளைவாக, இந்திய அரசியலின் மையப்புள்ளி முற்றிலும் வடமாநிலங்களை நோக்கி நகர்ந்துவிடும்.
தென்மாநிலங்களின் ஆதரவே தேவையில்லாமல் மத்தியில் ஓர் அமைச்சரவை அமையும் சூழல் உருவானால், அது மிகப்பெரிய ஜனநாயகச் சரிவை ஏற்படுத்தும். தற்போதைய நிலையிலேயே தமிழ்நாடு 9 பைசா வரி செலுத்தினால், நமக்குத் திரும்பக் கிடைப்பது வெறும் 4 பைசாதான். ஆனால் பீகார் போன்ற மாநிலங்கள் 2 பைசா வரி செலுத்திவிட்டு 10 பைசாவைப் பெறுகின்றன. உத்தரப் பிரதேசம் 8 பைசா செலுத்திவிட்டு 16 பைசாவைப் பெறுகிறது.
கட்சி அரசியல் அல்ல... தமிழ்நாட்டின் உரிமை
இந்த விவகாரத்தை ஒரு குறிப்பிட்ட கட்சி சார்ந்து பார்க்க முடியாது. எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் அல்லது சீமான் எனத் தலைவர்கள் இன்று இருப்பார்கள், நாளை மாறலாம். ஆனால், தமிழ்நாடு என்பதும் அதன் நிலமும் மக்களும் நிரந்தரமானவர்கள்.
இது ஒட்டுமொத்தத் தென்னிந்தியாவின் (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா) வாழ்வுரிமைப் போராட்டம். மாநிலங்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும்போது, ஒரு கட்டத்தில் `மரியாதை இல்லாமல் நாம் ஏன் இருக்க வேண்டும்? தனியாகப் பிரிந்து சென்றால் நாம் இன்னும் சிறப்பாக வாழலாமே' என்கிற எண்ணம் மக்களிடையே தோன்றும். இது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கே வேட்டு வைக்கும் பிரிவினைவாதச் சிந்தனைகளுக்கு வித்திடும்.
அதேநேரம், இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான திட்டங்களை ஒன்றிய ஆளும் தரப்பு முன்னெடுக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், அவர்களின் சித்தாந்தமே இந்தி மற்றும் சம்ஸ்கிருத மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் நோக்கம், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி, அதன் மூலம் 'இந்து ராஷ்டிரம்' எனும் இலக்கை அடைவதே ஆகும். எனவே, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சமமான திட்டங்களை அவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது இயலாத ஒன்று. தென்னகத்தின் ஆற்றலையும் திறமையையும் ஒடுக்கும் இத்தகைய போக்கு நீடித்தால், அது தேசத்தின் அமைதிக்கே பெரும் சவாலாக முடியும்." எனப் பேசினார்.
எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோர் `தொகுதி மறுவரையரை' குறித்து தெரிவிக்கும் ஐயப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து, பா.ஜ.க தரப்பில், தமிழ்நாடு பா.ஜ.க வழக்கறிஞர் அணித் தலைவர் குமரகுருவிடம் பேசினோம். அவர், ``தொகுதி மறுவரையறை என்பது இப்போது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இது 2001-ம் ஆண்டிலேயே வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது, தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணியில் இருந்த காலத்திலேயே எடுக்கப்பட்ட ஒரு கொள்கை முடிவு. மக்கள் தொகைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விகிதாச்சாரம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக, 2026-ம் ஆண்டில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று அப்போதே தீர்மானிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு அன்று உடன்பட்டுவிட்டு, இப்போது அதை எதிர்ப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
தி.மு.க-வின் பயமுறுத்தல் அரசியலும் பிம்பக் கட்டுமானமும்
தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இருக்காது என்பதாலேயே, முதல்வர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறை விவகாரத்தைக் கையில் எடுத்துப் பயமுறுத்தப்பார்க்கிறார். 'பா.ஜ.க மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்துத் தமிழ்நாட்டை வஞ்சிக்கப் பார்த்தது, நான்தான் தடுத்து நிறுத்தினேன்' என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்கவே இப்படிப் பேசுகின்றனர். மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் உத்தரப் பிரதேசத்திற்கு 220 சீட்கள் வரும், தமிழ்நாட்டிற்கு 30 சீட்கள்தான் வரும் என்று பரப்பப்படும் தகவல்கள் தவறானவை. இது தேவையற்ற அச்சத்தை விதைக்கும் முயற்சி.
விகிதாச்சார அடிப்படையில் தொகுதி உயர்வு
முக்கியமாக, மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதிகள் பிரிக்கப்படாது என்பதை அமித் ஷா உள்ளிட்டோர் நாடாளுமன்றத்திலேயே தெளிவுபடுத்தியுள்ளனர். தொகுதிகள் 'விகிதாச்சார அடிப்படையில்' மட்டுமே அதிகரிக்கப்படும். அதாவது, ஒட்டுமொத்த தொகுதிகள் 543-லிருந்து 850-ஆக உயரும்போது, அனைத்து மாநிலங்களிலும் அதே சதவிகிதத்தில் தொகுதிகள் உயர்த்தப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டின் தொகுதிகள் 39-லிருந்து 56 அல்லது 58 ஆக உயருமே தவிர, குறைய வாய்ப்பில்லை. அதேபோல் உத்தரப் பிரதேசத்திலும் இடங்கள் உயரும். இது சமமான வளர்ச்சியாகவே அமையும்.
கொள்கை முடிவில் மாற்றமில்லை
2026 என்பது வாஜ்பாய் காலத்திலேயே நிர்ணயிக்கப்பட்ட ஓர் இலக்கு. `அன்று அமைதியாக இருந்துவிட்டு, இப்போது அதன் பின்விளைவுகள் தெரிகிறது' என்று கூறுவது ஒரு நிர்வாகத்திற்கு அழகல்ல. ஒரு மாநிலத்திற்காக மட்டும் தேசிய அளவில் எடுக்கப்பட்ட பாலிசி முடிவை மாற்ற முடியாது. அவ்வாறு மாற்றினால், மேற்கு வங்காளம் போன்ற பிற மாநிலங்களும் கேள்வி எழுப்பும். எனவே, இது ஒரு முறையான நிர்வாக நடவடிக்கை மட்டுமே; இதில் எந்த மாநிலத்தின் உரிமையும் பறிக்கப்படாது" என்றார்.
https://www.vikatan.com/government-and-politics/a-detailed-discussion-on-centres-delimitation-bill
விகடன் இணையதளம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு