ஊழல்வாதிகள் ஒன்னுக்குள் ஒன்னு! மக்கள் தலையில் மண்ணு!

அறம் இணைய இதழ்

ஊழல்வாதிகள் ஒன்னுக்குள் ஒன்னு! மக்கள் தலையில் மண்ணு!

அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் தொடர்பாக வழக்குகள் நடந்து இழுத்தடிக்கபடுவதோடு பார்த்துக் கொள்கிறார்கள். குற்றவாளிகளை தண்டிப்பதில் தமிழ் நாடு அரசும் முனைப்பு காட்டவில்லை. மத்திய பாஜக அரசும் ஒத்துழைப்பு தருவதில்லை என்பதற்கு இந்த விவகாரங்களே சாட்சி;

அன்றே பட்டுக்கோட்டையார்  எழுதி வைத்தார்.

அது இன்றும் பொருந்துகிறது. என்றுமே பொருந்தும் போல!

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா – இது

கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!

இதயம் திருந்த வழியை சொல்லடா!

விவகாரம் இது தான்!

அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில், ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98.25 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்ததில் அன்றைய நகராட்சித்துறை அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறி  தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இதோ கைதாக போகிறார்கள் என ஊடகங்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டது எல்லாம் பழைய கதை.

ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தினால், அறப்போர் இயக்கம் சார்பில் தொடர்ந்து நினைவூட்டல் செய்யப்பட்டது. இறுதியில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர்கள், எம்பிக்கள் மீதான வழக்கில் எதுவும் நகர்வதில்லை. மற்றவர் வழக்கில் வந்தே பாரத் ரயில் போல் வேகம் காட்டப்படுகிறது எனக்கூறியதுடன், இந்த வழக்கில் இன்னும் எவ்வளவு தான் காலம் தாழ்த்துவீர்கள்? எனக் கேட்டு இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளான அன்றைய கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், சென்னை மாநகராட்சி  ஆணையராக இருந்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ், மதுசூதன் ரெட்டி ஐ.ஏ.எஸ் கந்தசாமி ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட 12 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் தற்போது வரை சம்எதிராக மத்திய அரசின் அனுமதி பெற லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் கால அவகாசம் அளித்தது.

அதிமுக அமைச்சர்களுக்கு ஊழலில் ஒத்துழைத்த அதே ஐஏஎஸ் அதிகாரிகளே தற்போது திமுக அமைச்சர்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். இது தெரிந்தும் மத்திய பாஜக இதை விட்டு வைத்து ரசிக்கிறது ..என்றால்.., இவர்கள் ஒருவருக்கொருவர் கூட்டாளிகள் தானே!

இதே போல தொகுதி மேம்பாட்டு நிதி முறைகேடு, சொத்து குவிப்பு உள்பட இரு வழக்குகளில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ , தி. நகர் சத்யா என்ற சத்தியநாராயணன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர,  தமிழக அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்தது பழைய கதை.

சென்ற ஆண்டு இந்த வழக்கு விசாரணையின்போது, ஏன் இப்படி இழுத்தடிக்கிறீர்கள்? எப்போது குற்றப்பத்திரிக்கை என நீதிமன்றம் கறார் காட்டிய போது,  ‘இரு வழக்குகளில் புலன் விசாரணை நடந்து வருகிறது. நான்கு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என, தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது கடந்தாண்டு செப்டம்பரில், தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு தரப்பட்ட வாக்குறுதி. தற்போது வரை தமிழ்நாடு அரசு அனுமதி கிடைக்கவில்லையாம்….!

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா சம்பந்தப்பட்ட கொட நாடு கொலை, கொள்ளை வழக்கிலும் வேகம் இல்லை.

’’ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள்’’ என்றார், ஸ்டாலின்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்களை விலக்கி ஆறுமுகசாமி கமிஷன் தந்த அறிக்கையால் பலன் எதுவுமில்லை. அதுவும் திருக்குறளை மேற்கோள் காட்டி ‛வேல் ஏந்திய வீரர்களை வீழ்த்தும் ஆற்றல் உடைய யானை, சேற்றில் சிக்கிவிட்டால் நரிகள் கூட அதை கொன்றுவிடும்’ என பட்டவர்த்தனமாக ஜெயலலிதா கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டினார் ஆறுமுகச்சாமி.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் அக்.,18- 2022 ல்  தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில், ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி இறக்கவில்லை என்றும், டிசம்பர் 4ம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கே அவர் இறந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.

அதேபோல், ‛சசிகலா, டாக்டர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்து மூன்று வருடங்களாகிவிட்டன.

மத்திய பாஜக அரசானாலும் சரி, மாநில திமுக அரசானாலும் சரி ஊழல் அதிமுகவினர் விஷயத்தில் ஒரே அணுகுமுறை தான்!

கட்சிகளின் லேபிள் தான் வேறு, வேறு.

எதிர் எதிர் துருவமென்றாலும்,

பொதுச் சொத்தை களவாடுவதிலும்,

பொய் சொல்லி பிழைப்பதிலும்

அரசியல்வாதிகள் ஒற்றுமையானவர்களே!

இவர்களுக்காக ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்ளும் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

(சாவித்திரி கண்ணன்)

அறம் இணைய இதழ்

https://aramonline.in/23028/political-leaders-are-same/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு