பனிப்போரின் குவிமையமாக மாற்றப்படும் இந்தோ-பசிபிக் பிராந்தியம்
பகுதி -1
சீனாவின் தெற்காசிய மேலாதிக்கத்தை முறியடித்து தனது மேலாதிக்கத்தை நிறுவும் பொருட்டு, குவாட் மற்றும் குவாட் பிளஸ் (Quad plus) திட்டங்களைத் தொடர்ந்து 'ஆக்கஸ்'-AUKUS (A-Australia, UK-Britain, US-America) எனப்படும் இராணுவக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது அமெரிக்கா. 'பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப் போர்' எனும் வெளியுறவுக் கொள்கையிலிருந்து, 'சீனா - ரசியாவிற்கு எதிரான உலகப் போர்' என்பதாக அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்ட பிறகு தெற்காசியப் பிராந்தியத்தை மையப்படுத்தி அமெரிக்கா உருவாக்கியுள்ள இந்த கூட்டமைப்பு 2வது உலகப் போருக்குப் பிறகு உருவாகியுள்ள யுத்த தயாரிப்பிற்கான முக்கியமான கூட்டமைப்பாகும். தென் சீனக் கடலுக்கு முழு உரிமை கோரும் சீனாவின் புதிய கடல் மார்க்க சட்டம் (Maritime law), சீன - பாகிஸ்தான் அணு சக்தி ஒப்பந்தம், தென் சீனக் கடலிலுள்ள தீவுகளில் இராணுவதளம் அமைத்தல் என ஷாங்காய் கூட்டமைப்பும் யுத்த தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றது. உக்ரைனில் பனிப்போர் உக்கிரமான போராக வெடித்துள்ளது. தென் சீனக் கடல் மற்றும் தைவானை மையப்படுத்தி பனிப்போர் தயாரிப்புகள் தீவிரம் அடைந்துள்ளன.
ஆக்கஸ் (AUKUS) கூட்டமைப்பு என்றால் என்ன?
ஆப்கனிலிருந்து அவமானகரமான முறையில் வெளியேறிய கையோடு செப்டம்பர் 15, 2021-ம் அன்று ஆக்கஸ் கூட்டமைப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் முக்கியமான நாடாக உள்ள ஆஸ்திரோலியாவிற்கு 8 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அமெரிக்காவும், பிரிட்டனும் வழங்குவதற்கு இக்கூட்டமைப்பில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை எதிர்கொள்வதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரோலியா, பிரிட்டன், அமெரிக்கா என மூன்று நாடுகளை உள்ளடக்கிய இந்த முத்தரப்பு (அ) முக்கூட்டமைப்பு சீனாவிற்கும் ரசியாவிற்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, ஜரோப்பிய யூனியனிலும் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தைவான், வியட்நாம் போன்ற நாடுகள் ஆக்கஸ் கூட்டமைப்பை ஆதரித்துள்ளன.
ஜரோப்பிய யூனியனிலும், நேட்டோவிலும் முக்கியமான ஏகாதிபத்திய நாடாக உள்ள பிரான்சிடமிருந்து டீசல் நீர்மூழ்சி கப்பல்களை வாங்குவதற்காக ஆஸ்திரேலியா சுமார் 90 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி இரத்து செய்துவிட்டு அமெரிக்கா-பிரிட்டனுடன் ஆக்கஸ் ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மூன்று நாடுகளும் ஆக்கஸ் ஒப்பந்தத்தின் மூலம் தனது முதுகில் குத்திவிட்டதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லி டிரியன் கண்டித்துள்ளார். மேலும் 17 செப்டம்பர் 2021- அன்று ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிற்கான தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார். மட்டுமின்றி நேட்டோவில் நீடிப்பது குறித்தும் பரிசீலினை செய்ய வேண்டியுள்ளதாகவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பிரான்சும், ஜெர்மனியும் 'ஜரோப்பிய இராணுவக்' (European Army) கூட்டமைப்பை' உருவாக்க வேண்டும் எனவும், அமெரிக்க சார்பைக் குறைத்து சுயேச்சைத் தன்மையுடன் கூடிய போர்த்தந்திரக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளன. உக்ரைனை நேட்டோவில் இணைக்க ஜெர்மனியும் பிரான்சும் மறுத்துவிட்டன. ரசியாவுடனான எண்ணை மற்றும் எரிவாயு வர்த்தக உறவுகளை அவை இழக்கத் தயாரில்லை. ஜரோப்பிய நலன்களுக்கு எதிரானது என கூறி ஜெர்மனி ஆக்கஸ் கூட்டமைப்பை எதிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனி பிரான்சு துருக்கி போன்ற நாடுகள் ஐரோப்பிய மேலாதிக்கத்திற்கு திட்டமிடுகின்றன.
ஆக்கஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது மிகவும் பொறுப்பற்ற செயல் எனவும், அமெரிக்கா பனிப்போர் மனநிலையில் செயல்பட்டு வருவதாகவும் சீனா கூறியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக விளங்கி வரும் ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் குவாட் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போதே முரண்பாடுகள் துவங்கிவிட்டன. கொரோனவை பரப்பியது சீனாதான் எனவும், அது சீன வைரஸ் எனவும் அமெரிக்காவுடன் இணைந்து ஆஸ்திரோலியாவும் அறிவியலற்ற பிரச்சாரம் மேற்கொண்டது. ஆஸ்திரேலிய யுத்த தந்திர கொள்கை நிறுவனம் (ASPI – Australian Strategic Policy Institute) எனப்படும் அறிவுக் குழாம் நிறுவனம் கொரோனா, உய்கூர் பிரச்சினைகளில் சீனாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காகவே அமெரிக்காவால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்காவின் லாக்கீட் மார்டின், ரேதியான், நார்த்டிராப் குரூமெய்ன் போன்ற இராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதியில் இயங்குகின்றன.
ஆக்கஸ் கூட்டமைப்பின் இலக்கு குறித்து மூன்று நாடுகளின் கூட்டறிக்கை கூறுவதாவது:
1) சுதந்திரமான, கட்டுப்பாடற்ற, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை உத்திரவாதப்படுத்துதல் (Free and open Indo-Pacific)
2) மூன்று நாடுகளின் கூட்டு செயல் திறன்களையும் பரஸ்பர இயங்கு தன்மையையும் அதிகப்படுத்துவது; அதன் மூலம் சைபர் தொழிநுட்பத் திறன் (Cyber capabilities), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) குவாண்டம் தொழில்நுட்பம் (Quantum technology) மற்றும் கூடுதல் கடலடி செயல்திறன் (Undersea capabilities) போன்றவற்றின் மீது ஆக்கஸ் முழு கவனம் செலுத்தும்.
3) முக்கியமான தகவல் மற்றும் தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்வதை ஆக்கஸ் நாடுகள் ஊக்குவிக்கும். காவல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அறிவியல், தொழில்நுட்பம், தொழிற்தளங்கள், மற்றும் விநியோகச் சங்கிலி போன்றவற்றில் ஆழமான ஒத்துழைப்பை ஆக்கஸ் கூட்டமைப்பு வளர்த்தெடுக்கும்.
4) இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுதல்; சுதந்திரமான, கட்டுப்பாடற்ற இந்தோ-பசிபிக் பிராந்தியம்; அங்கு அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுதல்;
ஆக்கஸ் கூட்டமைப்பு இவ்வாறு கூறுவதன் பொருள் அப்பிராந்தியத்தில் சீனாவின் கட்டுப்பாடுகளை, மேலாதிக்கத்தை முறியடிப்பது என்பதே. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை என்பது சுதந்திரத்திற்கானது அல்ல; அது காலனியாதிக்கத்திற்கான ஸ்திரத்தன்மை. இக்கூட்டமைப்பு சீனாவை எதிரி என நேரடியாக கூறாவிட்டாலும் உண்மையில் அது சீனாவையே இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆக்கஸ் கூட்டமைப்பு குறித்து ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) கூறுவதாவது:
"எமது தொழில்நுட்பம், விஞ்ஞானம், தொழிற்துறை, பாதுகாப்பு படைகள் ஒருங்கிணைந்து இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநாட்டும் பட்சத்தில் அது அனைவருக்கும் பலனளிப்பதாக இருக்கும்."
இந்தோ-பசிபிக்கில் ஆக்கஸ் கூட்டமைப்பின் மேலாதிக்க நலன்களைத்தான் அனைவருக்குமான நலன் என்கிறார் மோரிசன். அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சிகள் மற்றும் இராணுவ தளம் அமைக்கும் திட்டங்களில் ஈடுபட சுமார் 600 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்போவதாக ஆஸ்திரேலியா கூறியுள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது;
"பூகோளரீதியாக நாங்கள் பிரிந்திருந்தாலும் எங்களது நலன்களும் மதிப்புகளும் இணைந்தே உள்ளன; அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மூன்று நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள்" "இந்தோ-பசிபிக்கில் எங்களது நலன்களைப் பாதுகாப்பதற்கான எமது நட்பில் இது ஒரு புது அத்தியாயம்" என்று 'ஆக்கஸ்' பற்றி கூறுகிறார்.
மேலும், "இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் எமது ஆசியான் (ASEAN) நண்பர்கள், இருதரப்பு யுத்தந்திர கூட்டாளிகள், குவாட், ஐந்து கண் கூட்டமைப்பு (Five eye alliance) மற்றும் நேசத்திற்குரிய பசிபிக் குடும்பத்துடன் வளர்ந்து வரும் கூட்டணியின் வலைப்பின்னலுக்கு ஆக்கஸ் எமது பங்களிப்புகளை மேம்படுத்தவுள்ளது" என்றும் கூறியுள்ளார்.
ஐந்து கண் கூட்டமைப்பு என்பது ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை உள்ளடக்கிய தகவல் பரிமாற்ற கூட்டமைப்பாகும். இது இரண்டாம் உலகப் போருக்கு பின்பு முதல் பனிப்போர் கட்டத்தில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு யுத்தந்திர காலங்களில் அதற்கு செயலாற்றியது. தற்போது மீண்டும் இந்த 2-வது பனிப் போர் கட்டத்தில் வேகமாக செயல்படத் துவங்கியுள்ளது. இது பரஸ்பரம் பாதுகாப்பு சார்ந்த தகவல்களையும், தீவிரவாதிகள் பற்றிய உளவு தகவல்களையும் பரிமாறிக் கொள்ளும் (Intelligence sharing) கூட்டமைப்பாகும். பிரிட்டன் பிரதமரின் மேற்கண்ட கூற்றுகள் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுடன் மறுபங்கீட்டிற்கான போட்டியில் யுத்த தயாரிப்புகளில் ஆக்கஸ் கூட்டமைப்பு ஈடுபட்டு வருவதை எடுத்ததுக்காட்டுகின்றன.
ஆக்கஸ் ஒப்பந்ததத்தின் படி பிரிட்டனும் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவிற்கு அணுசக்தியில் இயங்கும் 8 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை வழங்கவுள்ளன. இவை ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்டு இந்தோ - பசிபிக் பெருங்கடலில் நிறுத்தப்பட்டவுள்ளது. நீர்மூழ்கி கப்பல்களின் அணு உலைகள் இயங்குவதற்கு தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா வழங்கவுள்ளது. தற்போது அணு உலையில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை வைத்துள்ள நாடுகள் பட்டியலில் (சீனா, பிரான்சு, ரசியா, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா) ஆஸ்திரேலியாவும் சேரவுள்ளது.
இவ்வாறு அமெரிக்காவும், பிரிட்டனும் ஆஸ்திரேலியாவிற்கு யுரேனியம் வழங்குவது அணு ஆயத பரவல் தடை ஒப்பந்தத்திற்கு எதிரானதாகும். ஏனெனில் இவை இராணுவத் தேவைக்காக துவங்கப்பட்டுள்ள ஆக்கஸ் கூட்டமைப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
ஜோபைடன் இது அணு ஆயுத பரவலுக்கு எதிரானது இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் அணு ஆற்றல் பற்றிய ஆய்வாளர்கள் இது அணு ஆயுத பரவல் என்றே கூறுகின்றனர். அணு ஆயுதம் இல்லாத நாடுகள் பிற தேவைகளுக்கு யுரேனியச் செறிவூட்டல் மூலம் அணு உலைகளைத் தயாரித்துக் கொள்ள அணு ஆயுத தடை ஒப்பந்தம் அனுமதிக்ககிறது. ஆஸ்திரேலியா அணு ஆயுதம் இல்லாத நாடெனினும், அணு ஆயுத நாடுகளான அமெரிக்காவும் பிரிட்டனும், யுத்த தயாரிப்புகளுக்காக யுரேனியச் செறிவூட்டல் மூலம் அணு உலை நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிக்க உதவுவது அணு ஆயுதப் பரவல் என்றே கூறமுடியும்.
சீனாவும், ரசியாவும் தனது பிரதான எதிரிகள் என அமெரிக்காவின் 2017 யுத்தத்தந்திர கொள்கைப் பிரகடனம் தெரிவித்துள்ளது. ஆப்கனிலிருந்து வெளியேறும் போது "தாலிபான்களுடன் போரைத் தொடர்வதை விட வளர்ந்து வரும் எதிரியான சீனாவிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்வதற்காக நாங்கள் அமெரிக்காவைத் தயார்படுத்த வேண்டியுள்ளது. 21-ம் நூற்றாண்டில் எங்கள் பிராதான இலக்கு சீனாவின் ஆதிக்கத்தை எதிர்ப்பதுதான்" என்றார் பைடன். எனவே ஆக்கஸ் கூட்டமைப்பின் நோக்கம் சீனாவின் காலனியாதிக்க முயற்சிகளை முறியடித்து தனது காலனியப் பிரதேசமாக இந்தோ-பசிபிக் பிரதேசத்தை மாற்றுவதே ஆகும். தென் சீனக் கடலுக்கு முழு உரிமை கோரி அங்குள்ள தீவுகளில் இராணுவ தளங்கள் அமைத்தும், கடல் வழி வர்த்தகப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பில் மேலாதிக்கம் செலுத்தியும் வரும் சீனாவின் மறுபங்கீட்டு முயற்சிகளை முறியடித்து தனது மறுபங்கீடு, மேலாதிக்க நலன்களை உத்திரவாதப்படுத்துவதே ஆக்கஸ் கூட்டமைப்பின் நோக்குமாகும்.
(தொடர்ச்சி பகுதி-2 ல்)