பனிப்போரின் குவிமையமாக மாற்றப்படும் இந்தோ-பசிபிக் பிராந்தியம்

பகுதி -3

பனிப்போரின் குவிமையமாக மாற்றப்படும்  இந்தோ-பசிபிக் பிராந்தியம்

(பகுதி -1ன் தொடர்ச்சி)

 

குவாட்டின் அடுத்த கட்ட நகர்வுகள் 

செப்டம்பர் 24, 2021 அன்று ஜோ பைடன் தலைமையில் நடந்த 'குவாட்' நேரடி ஆய்வுக் கூட்டத்தில் பிற உறுப்பு நாடுகளான இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா கலந்து கொண்டன. அதில் கோவிட் தடுப்பூசி விநியோகம், உள்கட்டமைப்புத் திட்டங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பு; ஆப்கானிஸ்தான் பிரச்சினை, காலநிலை மாற்றம் (Climate change) போன்றவை குறித்து வாதிக்கப்பட்டன. நான்கு நாடுகளின் தலைவர்களும் சேர்ந்து விடுத்த கூட்டறிக்கை வருமாறு :

"சுதந்திரமான, கட்டுப்பாடற்ற இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்துதல் அவசியமாகியுள்ளது. அப்பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் வளத்தை மேம்படுத்த பலவந்தமில்லாத முறையில் சர்வதேச விதிக்கு உட்பட்டு சுதந்திரமான கட்டுப்பாடற்ற ஒரு புது ஒழுங்கை (order) உருவாக்க குவாட் உறுதியேற்றுள்ளது" என்கிறது அக்கூட்டறிக்கை. ஜநா விதிகள் பற்றியும், பலவந்தம் பற்றியும் போர்க் குற்றவாளியான அமெரிக்கா பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது.

குவாட் கூட்டமைப்பில் தென் கொரியா, வியட்நாம் மற்றும் நியூசிலாந்து ஆசிய நாடுகள் இணைக்கப்பட்டு குவாட் ப்ளஸ் (Quad plus) என பெயரிடப்பட்டுள்ளது. மார்ச் 2020- ல் உருவாக்கப்பட்ட குவாட் பிளஸ் கூட்டமைப்பின் செயற்பாடுகள் ஆக்கஸ் உருவாக்கத்திற்குப் பிறகு வேகம் பெற்றுள்ளன. அமெரிக்காவின் 'பைவோட் ஆசியா' எனப்படும் தெற்காசிய யுத்த தந்திரக் கொள்கை மூலம் 2011-லிருந்து அமெரிக்க துருப்புகள், போர்கப்பல்கள், போர் விமானங்கள் பசிபிக் பிராந்தியத்தில் குவிக்கப்பட்டு வருகின்றன. பிரிட்டனும் தனது போர்க் கப்பலை இந்தியப் பெருங்கடலிலிருந்து பசிபிக் பெருங்கடல் வரை ரோந்திற்காக நிறுத்தியுள்ளது. நவம்பர் 2020-ல் குவாட் கூட்டமைப்பு தனது முதல் கூட்டு இராணுவப் பயிற்சிகளை அங்கு மேற்கொண்டது. ஆக்கஸ் கூட்டமைப்பு உருவாக்கத்தால் குவாட் கூட்டமைப்பின் முக்கியத்துவம் குறைந்து விடுமோ எனவும், அதில் தனது தரகுத் தலைமைக்கு பங்கம் வந்து விடுமோ எனவும் மோடி கும்பல் கூட்டத்தில் கவலைப்பட்டதாக தெரிகிறது. மோடி கும்பலின் எஜமானரான அமெரிக்கா "அவ்வாறு நேர வாய்ப்பில்லை; குவாட் அரசியல் - பொருளாதார-வர்த்தக கூட்டமைப்பு; ஆக்கஸ் இராணுவக் கூட்டமைப்பு மட்டுமே" என்று தெரிவித்துள்ளது.

குவாட் மற்றும் ஆக்கஸ் கூட்டமைப்புகளுக்கிடையிலான ஒற்றுமைகள், வேற்றுமைகள் என்ன?

1) ஆக்கஸ் கூட்டமைப்பு இராணுவக் கூட்டமைப்பு மட்டுமே; மாறாக குவாட் கூட்டமைப்பு பாதுகாப்பு கூட்டமைப்பாக மட்டுமின்றி இராஜதந்திர கூட்டமைப்பாகவும் விளங்கும். அதாவது அரசியல் - பொருளாதார - வர்த்தக கூட்டமைப்பாகவும் குவாட் விளங்கும்.

2) ஆக்கஸ், இந்தோ - பசிபிக்கில் பாதுகாப்பு சம்பந்தமான விசயங்களில் மட்டுமே அக்கறை செலுத்தும். குவாட் இந்தோ-பசிபிக் நாடுகளுக்கிடையில் அரசியல் - பொருளாதார - வர்த்தகம் சம்பந்தமான விசயங்களில் அக்கறை செலுத்தும். அதாவது பருவ நிலைமாற்றம், கோவிட் தடுப்பூசி, வர்த்தக ஒப்பந்தங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தும்.

3) குவாட் மற்றும் ஆக்கஸ் கூட்டமைப்புகளின் ஒற்றுமை என்னவெனில், இந்தோ -பசிபிக்கில் சீனாவின் மேலாதிக்க முயற்சியை வீழ்த்துவதும், அமைதி, ஜனநாயகம் எனும் பெயர்களில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதுமேயாகும்.

சீனாவின் உலக மேலாதிக்கத்திற்கான 'ஒரு இணைப்பு ஒரு சாலை' (BRI), பிராந்திய பொருளாதார வர்த்தக கூட்டமைப்பு (RCEP), மற்றும் ஷாங்காய் கூட்டமைப்புகளுக்குப் போட்டியாகவே குவாட், ஆக்கஸ் போன்ற கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பிராந்திய மேலாதிக்க நலன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இந்தோ - பசிபிக் உள்ளிட்ட பிற உலக நாடுகளின் சந்தைகளை கைப்பற்றுவதற்காக உலக மேலாதிக்கத்திற்கான உள்கட்டமைப்பு திட்டம் ஒன்று, சீனாவின் மாபெரும் உள்கட்டமைப்பு திட்டமான 'ஒரு இணைப்பு, ஒரு சாலை' திட்டத்திற்கு போட்டியாக அமெரிக்காவால் 'ப்ளு டாட் நெட்வொர்க்' எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ளது.

ப்ளு டாட் நெட்வொர்க்: (BDNBlue dot network)

அமெரிக்கா, ஜப்பபான், ஆஸ்திரேலியா நாடுகள் தலைமையில் நவம்பர் 2019-இல் துவங்கப்பட்ட கூட்டமைப்பே ப்ளு டாட் நெட்வொர்க் கூட்டமைப்பாகும். இது சீனாவின் 'ஒரு இணைப்பு ஒரு சாலை' திட்டத்திற்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு பொருளாதார கூட்டமைப்பாகும். அமெரிக்காவின் உலக மேலாதிக்க நலன்களுக்கான இத்திட்டம் இந்தோ-பசிபிக்கில் தற்போது கவனத்தைக் குவித்துள்ளது எனவும், படிப்படியாக உலகம் முழுக்க இது விரிவுபடுத்தப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. பொதுத்துறை தனியார்துறை பங்கேற்பு (PPP) மாடலில் உள்கட்டமைப்பு (சாலைகள், இரயில் சேவை, துறைமுகம், விமான சேவை உள்ளிட்ட) திட்டங்களை உருவாக்குவதில் ப்ளு டாட் நெட்வொர்க் ஈடுபடும்; குவாட் திட்டத்தை இந்த திட்டம் அனைத்து வகையிலும் பலப்படுத்தும் எனவும் அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது. டிரம்ப் ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டம், பைடன் ஆட்சியில் தொடங்கப்பட்ட "மீண்டும் மேலான உலகத்தை கட்டியமைப்பது" (BBBWBuilding back better world) எனும் உலக மேலாதிக்க திட்டத்தின் அடித்தளமாக செயல்படவுள்ளது. இதற்கு ஜி-7 மற்றும் ஓ.இ.சி.டி (OECD) அமைப்புகள் ஒத்துழைக்க இசைந்துள்ளன.

இந்த வலைப்பின்னல் திட்டத்தின் (BDN) இலக்கு பற்றி அந்நாடுகளின் கூட்டறிக்கை கூறுவதாவது; "அரசாங்கங்கள், தனியார் துறைகள், சிவில் சமூகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, உலகளவிலான உள்கட்டமைப்பு வளர்ச்சியை உருவாக்குவதற்கான உயர்தர அளவீடுகளை (standards) உருவாக்கும் பலதரப்பு பங்குதாரர்களின் வலைப்பின்னலாக இது இருக்கும்" என அது கூறுகிறது.

இத்திட்டத்தின் கீழ் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு திட்ட உருவாக்கத்தில் முக்கிய பங்குதாரராக செயல்பட மோடி கும்பல் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் இதை செயல்படுத்தவுள்ளது மோடி ஆட்சி. இந்தியாவில் இதை நடைமுறைப்படுத்துவதற்காகவே கதி சக்தி, ஆத்ம நிர்பார், தேசிய பணமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. தெற்காசியாவில் மட்டும் இதன் மதிப்பு 1.7 டிரில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான பனிப்போரின் யுத்தக்களமான தெற்காசியா (அ) இந்தோ-பசிபிக் பிராந்தியம் மாற்றப்பட்டு வரும் சூழலில், இந்தியாவை அமெரிக்காவின் போர்வெறிக்கு பலியிடுவதற்கு மோடி ஆட்சி செயல்பட்டு வருகிறது. சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளையும் அதற்கான சீனாவின் புதிய எல்லைச் சட்டத்தையும் தென் சீனக் கடலில் அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் ஒரு காரணமாக எடுத்துக்காட்டி தனது தேசத் துரோகச் செயலை நியாயப்படுத்தி வருகிறது மோடி கும்பல். அண்மையில் அமெரிக்கா வெளியிட்டுள்ள 'இந்தோ-பசிபிக், யுத்ததந்திரக் கொள்கை' இதை வெளிப்படையாகவே நிரூபித்துள்ளது. அமெரிக்காவின் யுத்த தயாரிப்புகளுக்கு மோடி ஆட்சி இந்தியப் பெரும் தரகு முதலாளிகளின் நலன்களிலிருந்து முக்கிய கருவியாக செயல்பட்டு வருவதை நிரூபிக்கும் விதமாகவே அது உள்ளது.

அமெரிக்காவின் 'இந்தோ-பசிபிக் யுத்த தந்திரம்' (Indo-Pacific strategy)

இந்தோ - பசிபிக் பிராந்தியம் குறித்து தனது கொள்கை அறிக்கையை அமெரிக்கா அண்மையில் (பிப்ரவரி 2022) வெளியிட்டுள்ளது. இந்தியா தற்போது முக்கியமான புவிசார் அரசியல் சவால்களால் சூழப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனா மற்றும் அதன் மெய்யான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (சீனாவுடனான எல்லைக் கோடு) பற்றிய நிலைப்பாடு காரணமாக இந்த சவால் ஏற்பட்டுள்ளது என்கிறது அந்த அறிக்கை. இது ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தோ - பசிபிக் பிராந்தியம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள முதல் அறிக்கையாகும். இந்த அறிக்கையில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பு குறித்து கூடுதலாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அது சீனாவிற்கு எதிரான ஒத்துழைப்பாக இருக்கும் என வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா அக்டோபர் 2021-ல் வெளியிட்ட புதிய நில எல்லைச் சட்டம் ஜனவரி 2022-லிருந்து நடைமுறைக்கு வருவதை எடுத்துக்காட்டி சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு போட்டியாக இந்தியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்து இந்தோ பசிப்பிக்கை ஆக்கிரமிக்கவும் மறுபங்கீடு செய்யவும் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை பலப்படுத்துவது பற்றியும், அதில் இந்தியாவின் பிராந்திய ஒத்துழைப்பு குறித்தும் இந்த அறிக்கை பேசுகிறது.

இந்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ட்வீட் செய்துள்ளார்:

"எங்கள் இந்தோ-பசிபிக் உத்தியானது, ஒரு சுதந்திரமான, கட்டுப்பாடுகளற்ற, இணைக்கப்பட்ட, வளமான, பாதுகாப்பான மற்றும் மீள்திறன் கொண்ட ஒரு பிராந்தியத்திற்கான நெடுநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது. இந்தோ - பசிபிக் பகுதியில் உள்ள ஒரு நாடு என்ற நிலையில் அந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்க எங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்".

"தெற்காசியாவில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படுவோம் மற்றும் பிராந்திய குழுக்கள் மூலம் செயல்படும் செயல்தந்திர ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து உருவாக்குவோம்" என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், "அதே நேரத்தில் சுகாதாரம், விண்வெளி மற்றும் சைபர்ஸ்பேஸ் (cyber space) போன்ற புதிய பகுதிகளில் நாங்கள் ஒத்துழைக்கிறோம். எங்கள் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஆழமாக்குகிறோம் மற்றும் சுதந்திமான, கட்டுப்பாடுகளற்ற இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை (Free and Open IP) பராமரிக்க பணியாற்றுகிறோம்". என்று கூறியுள்ளது. அந்த அறிக்கை முழுக்க இந்தியாவை தனது ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளி என்று பின்வருமாறு அமெரிக்கா கூறியுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை கூறுவதாவது:

"தெற்காசியாவிலும், இந்தியப் பெருங்கடலிலும் ஒரே எண்ணம் கொண்ட கூட்டாளியாக இந்தியா இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இந்தியா தென் கிழக்காசியாவுடன் தீவிரமாக தொடர்பு கொண்டுள்ளது. அது குவாட் மற்றும் பிற பிராந்திய மன்றங்களுக்கு ஒரு உந்து சக்தி மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கான இஞ்சின் (Engine) போன்றது".

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதாரம், செயல் தந்திரம், இராணுவம் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றின் பலம் காரணமாக சீனா செல்வாக்கு செலுத்துகிறது எனவும், சீனா உலகின் செல்வாக்கு மிக்க சக்தியாக வளர விரும்புவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

"ஆஸ்திரேலியா மீதான பொருளாதார அழுத்தம், இந்தியாவுடனான எல்லை மோதல், தைவான் மீதான அழுத்தம் மற்றும் கிழக்கு - தெற்கு சீனக் கடலில் உள்ள அண்டை நாடுகள் மீதான அச்சுறுத்தல் என சீனாவின் நடத்தையின் சுமைகளை எங்கள் நட்பு நாடுகளும், கூட்டாளிகளும் சந்தித்து வருகின்றன. இந்தோ - பசிபிக் பிராந்தியத்திற்கும் உலகிற்கும் நன்மை பயக்க கூடிய வகையில் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை சீனா மாற்றுமா என்பதை அடுத்த பத்தாண்டுகளில் எங்கள் கூட்டு முயற்சிகள் தீர்மானிக்கும். எங்கள் நோக்கம் சீனாவை மாற்றுவது அல்ல; அது செயல்படும் செயல்தந்திர சூழலை வடிவமைப்பதாகும்" என்கிறது அந்த அறிக்கை.

பிராந்திய அளவில் தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுதல், கொரிய மற்றும் ஜப்பானிய நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளதோடு குவாட்டில் இந்தியா முக்கிய பங்காற்றி வருவதையும் அந்த அறிக்கை பேசுகிறது.

சீனா 'ஒரு இணைப்பு, ஒரு சாலை' திட்டம், ஆர்.சி.இ.பி (RCEP), புதிய நில எல்லைச் சட்டம், புதிய கடல் வழிச் சட்டம், சீன - பாகிஸ்தான் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் ஷாங்காய் கூட்டமைப்பு போன்ற அரசியல் - பொருளாதார - இராணுவ சட்ட நடவடிக்கைகளை உருவாக்கி உலக மேலாதிக்க முயற்சிகளில் குறிப்பாக தெற்காசிய மேலாதிக்க முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தோ - பசிபிக் நாடுகளை மறுபங்கீடு செய்து கொள்வதற்காக அமெரிக்காவும் சீனாவும்  இந்தோ பசிபிக் நாடுகளிடையே அணி சேர்க்கைகளை உருவாக்கி வருகின்றன. பனிப்போரின் குவிமையமாக இந்தோ-பசிபிக் மாற்றப்பட்டு வருகிறது.

 

(தொடர்ச்சி பகுதி-3 ல்)