அமெரிக்க வங்கி திவாலில் நாம் அறிய வேண்டியது என்ன?
அறம் இணைய இதழ்
உலகின் மிகப் பெரிய பணக்கார நாடான அமெரிக்காவிலேயே மூன்று வங்கிகள் திவாலாகி உள்ளன! இவை எப்படி திவாலாகின? என்னென்ன காரணங்கள்? அமெரிக்க மக்களும், அரசும் இவற்றை எப்படி அணுகுகின்றன? இதன் எதிர் வினையாக இந்தியா என்ன பாதிப்பை சந்திக்கும். இந்திய வங்கிகள் பலமாக உள்ளனவா..? ஒரு அலசல்!
உலகம் முழுக்க ஒரு வித பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது! அடுத்தடுத்து என ஒரே வாரத்தில், அமெரிக்காவின் மூன்று வங்கிகள் திவாலாகி விட்டன. திவாலானதில் மிகப் புகழ் பெற்ற பெரிய வங்கி, சிலிக்கான் வேலி வங்கியாகும். இதன் சொத்து மதிப்பு 17.12 லட்சம் கோடிகளாம்! அடுத்தது, சிக்னேச்சர் வங்கி! இதன் சொத்து மதிப்பு சுமார் 10.00 லட்சம் கோடி ரூபாயாகும்! மூன்றாவது மிகச் சிறிய சில்வர் கேட் வங்கி. இது நிழல் பொருளாதாரமான க்ரிப்டோகரன்சி வர்த்தகத்துடன் தொடர்புடையது .
இதில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநகரை தலைமையிடமாக கொண்ட சிலிக்கான் வேலி வங்கி திவாலானது தான் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இவ்வதிர்ச்சி அமெரிக்காவுடன் முடியாமல், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளையும் பெரிதும் தாக்கியுள்ளது. இந்திய பங்குச்சந்தையில் வங்கிகளின் பங்குகள் பெருமளவு சரிந்து வங்கிகளின் உறுதியை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
இவ் வங்கியின் வாடிக்கையாளர்கள் சாமானியர்களல்ல, தொழில்நுட்பம் அறிந்து தெளிந்த ஸ்டார்ட் அப் கம்பெனிகள். வேடிக்கை என்னவென்றால், இத்தொழில் முனைவோர் மட்டுமின்றி, இவர்களுக்கு பணம் கொடுத்து உதவும் வென்ச்சர் கேபிடல் முதலாளிகளும் இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள். சிலிக்கான் வங்கி உடனடி பாதிப்புக்குள்ளான ‘ஸ்டார்ட் அப்’ களுக்கு அதிகம் கடன் கொடுத்திருக்கிறது. அது மட்டுமின்றி, தனது வங்கியில் செலுத்தப்பட்டுள்ள டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் வங்கியாக சிலிகான் வங்கி இருந்திருக்கிறது.
தொழில் ரகசியம் என்னவென்றால், அதிக வட்டி, அதிக சலுகைகள் தான் . இந்த உத்தி தான் இவர்களுக்கு அதிக வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்க்க உதவியது எனலாம்.
புகழ்பெற்ற மொபைல் விளையாட்டு நிறுவனங்கள் இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள். இவர்களது அன்றாட பெரும் பண வைப்பு இவ்வங்கிக்கு அதிகபட்ச கரன்சியை கொடுத்தது எனலாம். இதைப்போன்றே 2,500க்கும் மேலான வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களும் இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள்.
அதிக பண புழக்கம், அதிக கையிருப்பு , ஆனால் லாபம்?
தனது கைவசமுள்ள உள்ள பணத்தில் சிலிக்கான் வேலி வங்கி 5% மட்டும் கையிருப்பாக வைத்துக்கொண்டு, மீதமுள்ள பணத்தை அமெரிக்க அரசின் பத்திரங்களில் முதலீடு செய்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் என்றழைக்கப்படும் நிதி ஆணையம் பண வீக்கத்தை கட்டுப்படுத்த தனது வட்டி விகிதங்களில் மாற்றம் செய்ததால் பெருத்த நட்டத்தை சந்திக்க நேர்ந்ததாக கூறப்படுகிறது. அதாவது 0.25% மாக இருந்த வட்டியை படிப்படியாக உயர்த்தி 4.75% மாக்கிவிட்டது! இதனால், ஓரிரு நாட்களில் சிலிக்கான் வேலி வங்கி 2 பில்லியன் டாலர் இழந்தது.
இதை அறிந்த வாடிக்கையாளர்கள் – ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் மற்றும் வென்ச்சர் மூலதன முதலாளிகள் தங்களது பணம் என்னவாகுமோ என்று பதைபதைத்து தங்களது பணத்தை வங்கியிலிருந்து எடுக்க முனைய , வங்கி பணம்தர முடியாமல் திணற, சிக்கல் வெடித்தது. சிலிக்கான் வங்கியில் முதலீடு செய்த அமெரிக்க மக்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை! ஒரே நாளில் வங்கியில் இருந்து 3.44 லட்சம் கோடியை எடுத்துவிட்டனர்.
இறுதியில் அமெரிக்க அரசு தலையிட்டு வங்கியை தங்கள் வசம் எடுத்துள்ளனர் . FDIC ‘பெடரல் டெப்பாசிட் இன்ஷூரன்ஸ் கேப்’ என்ற அமைப்பை ரிசீவராக நியமிக்கப்பட்டு, ‘நேஷனல் பாங் ஆப் சான்டா கிளாரா’ உருவாக்கப்பட்டு அதன் வசம் சிலிக்கான் வேலி ஒப்படைக்க பட்டுள்ளது .
அமெரிக்க அதிபர் பைடனும் நிதி அமைச்சக தலைவர் ஜானட் எல்லென்னும் ‘ அமெரிக்க அரசு இந்த வங்கிக்கு ஜாமீன் கொடுத்து காப்பாற்றவில்லை ‘ மக்கள் பணத்தை வங்கியை காப்பாற்ற உபயோகிக்க மாட்டோம் என்று கூறி வந்தனர் . இதற்கு காரணம், சாமானியர்களின் பணம் வர்த்தக சூதாட்டத்தில் நட்டமடைந்த வங்கி முதலாளிகளை காப்பாற்ற பயன்படுத்தக் கூடாது என்பது தான்.
2008ல் நடந்த நிதிச் சரிவைத் தொடர்ந்த நான்காண்டுகளில் மட்டும் சுமார் 475 வங்கிகள் திவாலானதில் பொருளாதாரமே நொறுங்கி அமெரிக்க நிதி உலகத்தையே அதல பாதாளத்திற்கு இட்டுச் சென்ற போது அமெரிக்க அரசு அந்த வங்கி முதலாளிகளுக்கு மக்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து கைதூக்கி விட்டது. இதை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் ஏன் ஐரோப்பாவிலும் வால் ஸ்டீரீட்டை ஆக்கிரமிப்போம் -OCCUPY WALL STREET- என்ற இயக்கம் , போராட்டம் நடந்தது.
அத்தகைய நிலைமையை தவிர்ப்பதை மனதில் கொண்டே , ”அமெரிக்க அரசு வங்கி முதலாளிகளுக்கு ஜாமீன் கொடுக்கவில்லை” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகிறார். அமெரிக்க அரசு பணவீக்கத்தை சமாளிக்க எடுத்த நடவடிக்கைகளின் தொடர் விளைவே வங்கிகள் திவால் எனும் குற்றச்சாட்டுகள் வலுக்கும் போது, இந்த நெருக்கடியை சமாளிக்க அரசே கடன் அளிக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் உருவாகிவிட்டது என்று கூட சொல்லலாம்!
இதனால், சிலிக்கான் வேலி வங்கி முதலீட்டாளர்களை காப்பாற்ற 151 பி. டாலர் பணமும் அதை தொடர்ந்து திவாலான நியூயார்க்கை சேர்ந்த சிக்னேச்சர் வங்கிக்கு 70 பி. டாலரும் அமெரிக்க அரசு ஒதுக்கி , கை தூக்கி விட்டுள்ளது.
இதை எதிர்த்து அமெரிக்க சாமான்ய மக்களிடம் பெரும் கொந்தளிப்பே ஏற்பட்டுள்ளது. ”அரசின் பணம் அதாவது மக்களின் வரிப்பணம் ஏழை எளியவர்களை காப்பாற்ற அவர்களை கைதூக்கிவிட உதவ வேண்டுமே ஒழிய, பணக்கார முதலாளிகளுக்கு உதவிட அல்ல” என்ற குரல் இன்று ஓங்கி ஒலிக்கிறது. 2008ல் பெர்னி சான்டர்ஸ் என்ற அமெரிக்க செனட்டரின் தலைமையில் கிளம்பிய போராட்டம் இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது என்பதை இன்றைய நிலைமை நமக்கு உணர்த்துகிறது.
உண்மையில் வங்கிகள் உங்களது பணத்திற்கு பாதுகாப்பா?
வங்கிகள்தான் பாதுகாப்பான, நிலையான, உறுதியான நிறுவனம் என்று எண்ணியே மக்கள் தங்கள் சேமிப்புகளை , வைப்பு தொகைகளை, மற்றும் தங்களது பாதுகாப்பு பத்திரங்களை வங்கிகளில் வைக்கின்றனர்.
நிதானமாக முன்னேறும், ஆமை போன்று உறுதியாக ஆனால் ‘தொடர்ந்து’ ஓடி முன்னேறும் வங்கிகள் ஏன் தடுமாறி திவாலாகின்றன?
பேராசையும், லாபத்தின் மீது தீரா வேட்கையும், ஸ்பெக்குலேஷன் எனப்படும் வர்த்தக சூதாட்டமும் இதன் அடிப்படை காரணிகள் என்பதை மறுக்க முடியுமா? இம்மூன்றும் முதலாளித்துவத்தின் பிரிக்கமுடியா பண்புகள் என்பதை யாரால் மறுக்க முடியும்.
கொழுத்த லாபத்தை நோக்கி வாடிக்கையாளர்களும் ( வென்ச்சர் கேப்பிடல் முதலாளிகள் மற்றும் ஸ்டார்ட் அப் தொழில் முன்னோடிகள்) நகர்வது இயற்கை என்றால், வங்கிகள் சமூக பொறுப்பை மறந்து, லாபத்தை நோக்கி நகர்ந்து மேன்மேலும் சூதாடுவதை தடுக்க இயலுமா?
இது கேப்பிட்டலிசத்தின் அடிப்படை பண்பு. ஆனால், மக்கள் நலன் பற்றி பேசும் “அரசு”கள் பெரும்பான்மை மக்களுக்கு உதவாமல்
சூதாடி தோற்கும் முதலாளிகளுக்கும் கொழுத்த லாபத்தை விரும்பும் வாடிக்கையாளர்களான வென்ச்சர் முதலாளிகள் மற்றும் ஸடார்ட் அப் டெக் முதலாளிகளுக்கும் உதவ முன்வருவது என்ன நியாயம்? அப் பணம் யாருடைய பணம் என்று கேள்விகள் எழும்புவது நியாயந்தானே!
”இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பெரும்பணம் சிலிக்கான் வேலி வங்கியில் மாட்டியுள்ளது! இவர்களுக்கு உதவ நான் நிதி அமைச்சரிடம் பேசுவேன், பிரதமர் மோடியின் கொள்கையால் கிளர்ந்தெழுந்த ஸ்டார்ட் அப் முதலாளிகளுக்கு இந்தியா உதவும்” என்று உளறிக் கொண்டிருக்கும் ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஏன் வங்கிகள் அடிக்கடி திவாலாகின்றன என்பதற்கு காரணத்தை விளக்குவாரா? இழந்த பணத்திற்கு யார் பொறுப்பு என்பதை எடுத்துரைப்பாரா?
எழுதுகின்ற பத்திரிக்கையாளர்கள் தான் உள்ளதைக் கூறுகின்றனரா?
இந்திய வங்கிகளில் தகுதிக்கு மீறி கடன்வாங்கி ஏய்த்துவிட்டு வெளிநாட்டிற்கு ஓடிப் போனார்களே, அவர்களும் உள்ளூரில் கடனை செலுத்தாமல் ஒளிந்திருப்போரும் சேர்ந்து இந்திய வங்கிகளின் வாராக்கடனை இரண்டரை லட்சம் கோடிகளுக்கு மேல் உயர்த்திய பொழுது, இந்திய அரசு இந்த வங்கிகளுக்கு வழங்கிய இரண்டரை லட்சம் கோடி ரூபாய்கள் யாருடைய பணம்? , யாரைக்கேட்டு ஆட்சியில் இருப்போர் இதைக் கொடுத்தனர்?
அமெரிக்க வங்கிகள் திவாலாவதை நாம் படிப்பினையாக கொள்ள வேண்டும். நம்முடைய ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டிய முதலாளிகளுக்கு வங்கிகள் கடன் தர நிர்பந்தித்து பொதுமக்கள் பணத்தை பொறுபில்லாமல் கையாளுகின்றனர். இந்திய வங்கிகளும் பலவீனமான நிலையில் தான் உள்ளன! வாராக்கடன் பிரச்சினையை திவால் சட்டம், பின்னடைந்த வங்கி (bad bank), கடன் தள்ளுபடி போன்ற அணுகுமுறைகளின் வழியாக பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது இந்திய அரசு.
அந்நிய செலவாணிக் கையிருப்பை நாம் டாலருக்கு மாற்றாக யூரோ போன்ற மற்ற நாணயங்களுக்கு மாற்றலாம் என்ற பொருளாதார நிபுணர்களின் யோசனைகளையும் அரசு பரிசீலிக்கலாம்!
பொதுநலன் சார்ந்த பார்வை இல்லாத பெரும் முதலாளிகளுக்கு தொண்டு செய்வதையே லட்சியமாகக் கொண்ட ஆட்சியாளர்கள் இருக்கும் வரை இந்த பித்தலாட்டங்கள் தொடரும்!
கட்டுரையாளர்: ச.அருணாசலம்
- அறம் இணைய இதழ்
aramonline.in /12795/america-bankruptcy/
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு