வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா - ஆ.இரா.வேங்கடாசலபதி

நூல் அறிமுகம் - பாமரன்

வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா - ஆ.இரா.வேங்கடாசலபதி

செக்கிழுத்த சிதம்பரனாருக்கு கிடைக்க வேண்டிய தொகையை தராமல் அல்வா கொடுத்துவிட்டார் காந்தி என்கிற பரவலான பேச்சு ஒன்று ஊருக்குள் உண்டு. 

.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன? 

.

அந்தத் தொகையை அளித்தவர்கள் யார் யார்? எவ்வளவு அளித்தார்கள்? யாரிடம் அளித்தார்கள் ? எப்போது அளித்தார்கள் ? வறுமையில் வாடிய வ.உ.சி.க்கு பலகாலமாகியும் அது கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம்? என இதுவரை விடை கிடைக்காது முடியைப் பிய்த்துக் கொண்ட ஆய்வாளர்கள் அநேகம் பேர்.

.

இது தொடர்பாக தமிழகம் தொடங்கி தென்னாப்பிரிக்கா வரை நீண்டு பின்னப்பட்டிருந்த எண்ணற்ற  சிக்கலான  முடிச்சுக்களை  அவிழ்த்திருக்கிறார் ஆ. இரா. வேங்கடாசலபதி.

காலச்சுவடு வெளியிட்டுள்ள ”வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா” நூலின் மூலம்.

.

இதற்கான ஆதாரங்களைத் தேடி பல்வேறு ஆவணக்காப்பகங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள் என எண்ணற்ற இடங்களில் படியேறி படியெடுத்து இந்த அரிய பணியை முடித்திருக்கிறார் சலபதி.

.

22000 பக்கங்களில் மெகா மொக்கையாகவும் எழுதலாம்.

.

வெறும் 118 பக்கங்களில் செதுக்கினாற்போலும் எழுதலாம். 

இரண்டாவதுக்கு சலபதியின் இந்நூலே சாட்சி.

.

பொதுவாகவே வேங்கடாசலபதியின் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும் எனக்கு. 

”முச்சந்தி இலக்கியம்”… 

”திராவிடர் இயக்கமும் வேளாளரும்”… 

”அந்தக் காலத்தில் காப்பி இல்லை”… 

”ஆஷ் அடிச்சுவட்டில்”…  என நீளும் அவரது புத்தக வரிசை. 

.

அவரது எழுத்துக்களினுள்ளே மெலிதாக எட்டிப்பார்க்கும் அங்கதத்தையும் எட்டிப்பார்ப்பவர்களுக்கு மட்டுமே 

தட்டுப்படும் உள் குத்துக்களையும் 

வெகுவாக ரசிப்பவன் நான். 

.

வ.உ.சி. வழக்குரைஞர் தொழிலை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காமல் ஆங்கிலேயருக்கு எதிராக எழுந்த திருநெல்வேலி எழுச்சிக்கு பின்புலமாக நின்றது… 

.

தடை விதித்திருந்தும் சுயராஜ்ஜிய நாள் கொண்டாட்டங்களை நடத்தியது… 

.

பிரிட்டிஷாருக்குச் சொந்தமான ”கோரல்” ஆலைத் தொழிலாளர்களது போராட்டத்துக்குப் பக்கபலமாக நின்று நிர்வாகத்தை அடிபணிய வைத்தது…. 

.

போதாக்குறைக்கு…. 

ஒட்டு மொத்த இந்தியரும் வாயைப் பிளக்கும் வகையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கே சவால் விட்டு 

சுதேசி கப்பல் கம்பெனியை தூத்துக்குடியில் 

தொடங்கி கப்பல் விட்டது…

.

இவையெல்லாம் போதாதா… 

பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு?

.

1908  மார்ச் 12 இல் கைது செய்யப்பட்டு  பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படுகிறார்கள் வ.சி.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் 

.

1908 ஜூலை 7 இல் தீர்ப்பு:

ராஜதுரோகப் பேச்சுக்களுக்காக சுப்பிரமணிய சிவாவுக்கு பத்தாண்டுகள்.

.

வ.உ.சி.க்கு இருபது ஆண்டுகள் ஆயுள் தண்டனை.

.

அத்தோடு நில்லாமல் சிவாவின் பேச்சுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக 

மேலும் ஓர் ஆயுள் தண்டனை. 

.

ஆக வ.உ.சி.க்கு மட்டும் இரட்டை ஆயுள் தண்டனை.

.

தண்டனை விதிக்கப்பட்ட வ.உ.சி. 

கோவை சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுத்த கதையெல்லாம் நாம் ஏற்கெனவே “கப்பலோட்டிய தமிழன்”  சினிமாவிலும் பாடப் புத்தகங்களிலும் பார்த்தது படித்ததுதான்.

.

சிறைக்குப் போனார் சரி. ஆனால் அவர் குடும்பம்…?

.

தனது இரு குழந்தைகளோடு மீனாட்சி அம்மாள் பட்டபாடுகள்…. 

படியேறிய வீடுகள்…. 

ஊர் மக்களிடம் எதிர் கொண்ட ஏளனங்கள்… 

இரட்டை ஆயுள் ஊட்டிய கிலியில் பதுங்கிக் கொண்ட நட்புகள்/ உறவுகள்… 

நகைகள் சொத்துக்களை அடகு வைத்து ஏறி இறங்கிய வக்கீல் வீடுகள்… 

நீதி மன்றங்கள்… 

சிறைச்சாலைகள்… என எண்ணற்ற பெருந்துயரங்கள் பதிவாகியிருக்கின்றன இந்நூலில்.

.

இதுவரை வ.உ.சி. பட்டபாட்டை எண்ணற்றோர் எடுத்துச் சொல்லியாயிற்று. ஆனால் அவரை மணந்த மீனாட்சி அம்மாளின் துயர வாழ்வைச் சொல்லிய புத்தகம் இதுவாகத்தான் இருக்கும்.

.

தனது கணவரின் வழக்குக்காக நீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டியபோது சென்னை உயர்நீதி மன்றம் சற்றே செவிசாய்த்தது. 

வ.உ.சி.யின் இரட்டை ஆயுள் தண்டனையை ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைத்தது. அடுத்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றால் இன்றைய நாட்களைப் போல் டெல்லிக்குப் போக முடியாது. லண்டனில் இருந்த பிரிவி கவுன்சிலுக்குத்தான் போக வேண்டும். 

.

பிரிவி கவுன்சிலுக்குப் அப்பீல் செய்து வழக்காடுவதென்றால் எங்கே போவது அவ்வளவு பணத்துக்கு? (அப்போதைய கணக்கு 10000 ரூபாய்). 

.

தனது கணவரின் விடுதலைக்கு நிதி கோரி வேண்டுகோள் விடுக்கிறார் மீனாட்சி அம்மாள். அது பத்திரிக்கைகளில் அறிக்கையாக வெளி வருகிறது. 

அவரது வேண்டுகோளுக்கு இந்த நாட்டு மக்கள் மனமிரங்கினார்களோ இல்லையோ ஆனால் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் மனமிரங்கினார்கள்.

ஒப்பந்தத் தொழிலாளர்களாக சென்றவர்கள்…. அவர்களைத் தொடர்ந்து பல்வேறு சேவைப் பணிகளுக்காகச் சென்றவர்கள்…. என எண்ணற்றோர் தங்களால் ஆன தொகையை மீனாட்சி அம்மாளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். 

.

அவ்வகையில் ஒரு தொகைதான் இந்தியா திரும்பும் காந்தியிடமும் கொடுத்து அனுப்பப்படுகிறது. காந்தி கப்பலில் இந்தியாவுக்குப் பயணப்பட்ட பத்தாவது நாளே முதலாம் உலகப் போர் தொடங்கி விடுகிறது. எனவே நாடு திரும்ப தாமதமாகிறது. 

.

அப்படி ஒரு தொகை கொடுக்கப்பட்டதோ அது காந்தி அவர்களிடம் இருப்பதோ வ.உ.சி. அவர்களுக்கோ அவரது துணைவிக்கோ தெரியாது. 

.

ஆனால் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அப்படி அளித்த ஒரு தொகை தன்னிடம் இருப்பதை  காந்தியே 1915 ஏப்ரல் 21 ஆம் தேதி வ.உ.சி.க்கு எழுதிய கடிதத்தின் மூலம்தான் தெரிய வருகிறது. 

.

“சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் சார்பாகத் தென்னாப்பிரிக்காவில் திரட்டப்பட்ட பணத்தைத் தாங்கள் வரப்பெற்றீர்களா எனத் தங்களிடம் இருந்து அறிய விரும்புகிறேன். 

உங்களுக்கு அனுப்பப்பட்டதாக நான் கருதிய சில பணக்கட்டைகளைத் தேட முயன்றேன். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, என்னிடம் தரப்பட்ட பணம் தங்களிடம் வந்து சேர்ந்ததா எனத் தங்களிடம் இருந்தே அறிந்து கொள்ள விரும்புகிறேன்.” என்று காந்தியார் வ.உ.சி.க்கு எழுத… 

அதற்கு சிதம்பரனார் தனக்கோ தனது மனைவிக்கோ எந்தப் பணமும் காந்தியிடமிருந்து வரவில்லை என மறுநாளே பதில் எழுதுகிறார். 

.

அதிலிருந்து எண்ணற்ற கடிதப் பரிமாற்றங்கள் இருவருக்கும் இடையில். 

.

அனுப்பியது யார் யார் என்கிற பட்டியல் விவரம் தெரியாமல் பணத்தை அளிக்க முடியாது என்கிறார் காந்தி.  

(இவையெல்லாம் வ.உ.சி சிறையிலிருந்து விடுதலையான 1912 டிசம்பர் 24 க்குப் பின்னர் நடக்கும் சம்பவங்கள்.)

.

”கடந்த இரண்டாண்டுகளாக அந்த தென்னாப்பிரிக்க நண்பர்கள் செய்கிற உதவிதான் என்னையும் என் குடும்பத்தையும் காத்து வருகிறது. 

இந்த நிலையில் எனக்கென தரப்பட தயாராய் இருக்கும் பணத்தை வேண்டாம் என்று சொல்ல எக்காரணமும் இல்லை. இப்போது இருக்கும் நிலையில் அந்தப் பணம் வேண்டாம் என்று சொல்வேனேயானால் அது நான் எனக்கும் என் குடும்பத்திற்கும் இழைக்கும் தவறேயாகும். 

ஆதலால் தாங்கள் தங்களுக்கு வசதிப்பட்டபோது அன்போடு அப்பணத்தை அனுப்பி உதவ வேண்டுகின்றேன்” என்று தன் துயர நிலையை எழுதுகிறார் வ.உ.சி. 

.

பணம் செலுத்தியவர்கள் பட்டியல் வந்தவுடன் அனுப்புகிறேன் என்கிறார் காந்தி விடாப்பிடியாக.

.

அதன் பிறகும் இருவருக்குமிடையே மேலும் மேலும் கடிதப் போக்குவரத்துகள். 

.

"நூறு பெருந்தொகுதிகளாக வெளிவந்துள்ள மகாத்மா காந்தி தொகுப்பு நூல்களில் ஒரு முறைகூட இடம்பெறாத பெயர் வ.உ.சி.யினுடையது. 

அத்தகைய ஒருவருக்கும் காந்திக்கும் இடையே நெடும் கடிதப் போக்குவரத்து நடந்திருந்தது என்பது நகைமுரணே." என்கிற சலபதி இந்தக் கடிதங்கள் அனைத்தினது நகலையும் நூலில் பின்னிணைப்பாகக் கொடுத்திருக்கிறார். 

.

இந்த சம்பவங்களுக்கெல்லாம்  கிளைமேக்ஸ்  1916   ஜனவரி   20 இல்       காந்தி எழுதிய கடிதம்தான்.

.

“நெட்டாலில் இருந்து தகவல் வந்துவிட்டது. 

உங்களுக்குச் சேர வேண்டிய தொகை 347 ரூபாய் 12 அணா.” என்கிறது அக்கடிதம்.

.

அதன் பின்னர் காந்தியிடம் இருந்து அத்தொகை வந்து சேர்ந்ததும்  அதில் 100 ரூபாயை புதிய டைப்புகள் வார்ப்பதற்காக ஓர் அச்சாப்பீஸ்காரருக்குக் கொடுத்ததும்... 

மீதி இருந்த பணத்தில் ரூபாய் 50 ஐத் தவிர மற்ற கடன்களை எல்லாம் அடைத்ததும் தென்னாப்பிரிக்காவில் இருந்த அவரது நண்பர் வேதியப்பிள்ளைக்கு  வ.உ.சி  எழுதிய கடிதத்தில் இருந்து தெரிய வருகிறது.

.

வெள்ளையருக்கு எதிராகவே கப்பலோட்டியவரின் வறிய நிலை... 

நம்முள் பெருந்துயரை விளைவிக்கும் கடிதங்களாக விரிகின்றன. 

.

அவர் எந்த மக்களுக்காகப் போராடினாரோ அவர்களும் கண்டு கொள்ளவில்லை. 

.

அவர் எந்த இயக்கத்தில் இணைந்து போராடினாரோ அவர்களும் கைவிட்டனர் அவரை. 

.

சிறை மீண்ட பிறகும் அவ்வளவு இன்னல்களுக்கு மத்தியில் திருக்குறளின் அறத்துப்பாலுக்கான உரையினை வெளியிட்டார் வ.உ.சி.

.

1915 ஏப்ரல் 17 காந்தியாரின் சென்னை வருகையின் போது அவரைச் சந்திக்கும் பொருட்டு கடிதம் எழுதுகிறார் வ.உ.சி. 

.“அடுத்த வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு வந்தால் சில நிமிடங்களை உங்களுக்காக ஒதுக்க முடியும்” என்கிறார் காந்தி.( I could give you a few minutes.)

.

“சில நிமிடங்கள் போதாது. என் உரையாடல் சில நிமிடங்களுக்கு மேல் எடுக்கலாம். எனவே என் வருகையின் மூலம் தங்களைச் சிரமத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை” என பதில் எழுதுகிறார் வ.உ.சி.

.

அதிர்ச்சியடைந்த காந்தி “நீங்கள் விரும்பாவிட்டாலும் நானே தங்களைச் சந்திக்க விரும்புகிறேன். வரும் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை காலை 6 மணிக்கு சில நிமிடங்களை நீங்கள் எனக்கு ஒதுக்க முடியுமா?” என்று மீண்டும் எழுதுகிறார்.

.

“தேசாபிமானிகள் கேட்டுக் கொள்ளும்பட்சத்தில் சில நிமிடங்கள் அல்ல. என் வாழ்நாளையே அவர்களுடன் செலவிடச் சித்தமாக இருக்கிறேன். 

ஆனால் காலை 6 மணிக்கு பதிலாக 6.30 மணிக்கு மேல்தான் வந்து சந்திக்க முடியு”மென்கிறார் வ.உ.சி.

.

காந்தி இறங்கி வந்தும் ஏன் சந்திக்க மறுத்தார் வ.உ.சி. என்கிற துயர்மிகு எதார்த்தத்தை அறிந்தவர்கள் யாரும் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது.

.

சென்னையில் காந்தி தங்கி இருந்த இடம் : 

சுங்குராம செட்டி தெரு, ஜார்ஜ் டவுண்.

.

வ.உ.சி.யின் வாடகை வீடு இருந்த இடமோ : 

பரிபூரண விநாயகர் தெரு, மயிலாப்பூர்.

.

”நான் இருக்கும் மயிலாப்பூரில் இருந்து 

முதல் டிராம் காலை 5.30 மணிக்கு மேல்தான் புறப்படும் என்பதாலும்…. இப்போதுள்ள என் வசதிக்கு இதைத் தவிர வேறு பயண மார்க்கம் இல்லை என்பதாலும்…. ” என வரும் வ.உ.சி.யின் வரிகள்  நம் நெஞ்சத்தை நொறுக்குகின்றன. 

.

பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராக 

சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி மூலமாக 

கப்பல் விட்டவருக்கு அன்று சொந்தமாக ஒரு வாகனம் கூட இல்லாமல் டிராமில் செல்லக்கூடிய நிலைமை. 

.

இதுதான்  அந்த சுயமரியாதைக்காரரின் அன்றைய நிலை. 

.

தன் வீட்டு வாசலில் எண்ணற்ற கார்களோடு பலரைக் காத்திருக்க வைக்கும் அரசியல் லாவகமற்ற…

.

ஆன்மீகத்தை மூலதனமாக்கி சமயத்தை கவசமாக்கி பக்தகோடிகளுடன் பவனிவரத் தந்திரமற்ற ….

.

சாதிக்காரர்கள் புடைசூழ புஜபல பராக்கிரமத்தோடு உலாவரும் சாமர்த்தியமற்ற…

.

ஓர் சாமானியனின் வாழ்வே அச்சிதம்பரனாரின் வாழ்வு.

.

இந்நூலின் வாயிலாக அவ்வாழ்வுக்கு 

தனது மகத்தான மரியாதையைச் செலுத்தியிருக்கிறார் ஆ. இரா. வேங்கடாசலபதி. 

.

.

(பாமரன்)

(முகநூலிலிருந்து)

https://www.facebook.com/100000333281200/posts/pfbid0ohUPmDYzUHrzs87La9N1k5Fy9VZrb97a2DPdVEe8nVr2xHSrHmGoLiAos9mfj8xBl/?sfnsn=wiwspwa

நூல் வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு