சீனப் புரட்சியில் மாவோவின் நீண்ட மக்கள்யுத்தப் பயணப் பாதை….

செந்தளம் செய்திப்பிரிவு

சீனப் புரட்சியில் மாவோவின் நீண்ட மக்கள்யுத்தப் பயணப் பாதை….

துப்பாக்கி முனையிலிருந்துதான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது - மாவோ-

சீனா வரலாற்றில் ஓர் அழியாத அடையாளத்தை விட்டுச்சென்ற தலைவர்- ‘சீனத்தின் தந்தை’ என்று போற்றப்படும் மாவோவின் பிறந்த நாளான இன்று அவர் கட்டி எழுப்பிய சோசலிசப் பாதையை  திரும்பிப் பார்ப்பது, இன்றைய காலத்தின் கட்டாயமாகும். ரஷ்யா- சீனாவின் முதலாளித்துவ மீட்சிக்கு பின்பு- ஒருபுறம் சோசலிச சகாப்தம் முற்றுப்பெற்று விட்டதாகவும் முதலாளித்துவ சகாப்தமே தொடரும் என்றும் முதலாளித்துவம் கொக்கரக்கிறது. அது  உலகம் முழுவதும் தனது மூலதன குவியலை கொண்டு உலக மேலாதிகத்திற்காக்கவும்- தனது சந்தை சுரண்டலுக்காக- இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளை மறுபங்கீடு செய்யவும் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே தீவிர பனிப்போர் துவக்கி உள்ளது.  மறுபுறம் ட்ராட்ஸ்கியவாதிகளும் கோர்பச்சேவ் திரிபுவாதிகளும்  உலகப் புரட்சி என்றும் அமைதி வழி புரட்சி என்றும் கூறிக்கொண்டு  மார்க்சிய- லெனினிய- மாவோ சிந்தனைக்கு புறம்பான  வழியில்- ஒற்றை துருவ மேலாதிக்கத்திற்கு பதில் பல்துருவ மேலாதிக்கம் வந்தால்- உலக பாட்டாளி வர்க்க புரட்சியை அமைதிவழியிலே கட்டிவிட முடியும் என்று கனவு காண்கிறார்கள் - மக்களுக்கு துரோகமே செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில்- மாவோவின் பாட்டாளி வர்க்க புரட்சிகர சகாப்தத்தை ஆழ்ந்து படிப்பதும் அவர் வழியில் பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஒவ்வொரு நாட்டிலும் முன்னெடுத்து செல்வதுமே அவரை நினைவு  கூறுவது ஆகும்.

"நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை என் எதிரிதான் தீர்மானிக்கிறான்"  -புரட்சியாளன் மாவோ 

மா சே துங், டிசம்பர் 261893 ஆம் ஆண்டில் சீனாவில் ஹூனான் மாகாணத்தின் ஷாவ்ஷான் என்ற கிராமத்தில்  எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளமையில் கல்வி பயிலும் பருவத்திலே ஆறு மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றார். இவர், பல நூற்றாண்டு கால மன்னர் கொடுங்கோல் ஆட்சி முறையிலும், அன்னிய ஆக்கிரமிப்புக்கும்  உட்பட்ட மக்கள் அடிமைத்தனத்திலும், பசிபட்டினியிலும், தீராத துன்பத்திலும்  வாழ்ந்து வந்ததை சகித்துக்கொள்ள முடியாமல், தமது 25 வயதில், அவரது கூட்டாளிகளுடன் இணைந்து, நாட்டின் விடுதலையை வேண்டி, புதிய மக்கள் சமூக இயக்கத்தை உருவாக்கினர். கோமின்டாங் கட்சியின் தலைவர் சன் யாட் சென் தலைமையில், 1928-இல் சீனாவை ஒன்றிணைத்து தேசிய குடியரசாக, தேசியவாத அரசாங்கத்தை நிறுவினார். ஆனால், முறையற்ற ஆட்சிமுறையால்  பசிபட்டினி மரணங்கள் நீடிக்கவே செய்தன, புரட்சி ஓயவில்லை. பின் துரோகத்தால் கட்சியைப் கைப்பற்றிய சியாங்கே ஷேக் 30 கோடி சீனா  மக்களையும் மிக கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாக்கினான். தொடர்ந்து, ஜப்பான் ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்து ஜப்பானின் காலனிய நாடாக மாற்றினான். 

1917 இன் ரஷ்யப் புரட்சியால் ஈர்க்கப்பட்டு, மார்க்சிய - லெனினிய  கோட்பாட்டை மிகத் தெளிவாக கற்றுத் தேர்ந்து - 1921 ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடைமைக் கட்சியைத் தோற்றுவித்த 12 பெருந்தலைவர்களுள் ஒருவராக மா-சே-துங் திகழ்ந்தார். இருபதாம் நூற்றாண்டில் சீனாவில்    நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். அரை நிலப்பரப்புத்துவ அரைக்காலனிய சீனா நாட்டின்  சூழல்- அரசியல்- இரண்டாம் உலகப் போரில்; ஏகாதிபத்திய ஜப்பானின் ஆக்கிரமிப்பு போர்  மற்றும்   மக்களின் பாட்டாளி வர்க்க சோசலிசப்போர் என்று மூன்று சகாப்த புரட்சிகளை அடுத்தடுத்து நடத்தி வெற்றி கண்டார் என்பது உலகில் வேறு எங்கும் நிகழாத ஓர் அரிய  சகாப்தம் என்றால் அது மிகையல்ல! 

மார்க்சிய - லெனினிய கோட்பாட்டின் படி, இரகசிய கட்சியும், கட்சிக்கு குவியமாக திகழும் கட்சிக் கிளைகளையும், பெரும் மாகாணங்களில் இரகசிய செம்படைகளையும் கட்டி, ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆராய்ந்து,  தலைமை தாங்கி திறம் பட வழி நடத்தினார்.  இந்தப் பின்னணியில்தான் – செஞ்சேனையிடமிருந்தும் சீன சோவியத் அமைப்புகளிடமிருந்தும் தென் மாநிலங்களைக் கைப்பற்றாவிட்டால் தென்சீனம் செஞ்சீனமாகிவிடும் என்றஞ்சிய சியாங்கே ஷேக் கோமின்டாங் படைகளைக் களமிறக்கினான். அதனால் தென்பகுதிச் செஞ்சேனை தொடர்பு துண்டிக்கப்பட்டு முற்றாகத் துடைத்தெறியப்படும் அபாயம் நெருங்கி வருவதை உணர்ந்து கொண்ட சிவப்பியக்கம் அவசரமாகக் கூட்டிய ராணுவ மாநாட்டில் எடுத்த மாவோவின் முடிவுதான் – நீண்ட பயணம்! 

செஞ்சேனை படை மறவர்களோடு தொடங்கிய  போர்ப் பயணம்:

1929 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தின் போது செஞ்சேனை வட கியாங்கினை நோக்கி நகர்ந்தது. வழிநெடுக தாக்குதலை மேற்கொண்டும் பல நகரங்களைக் கைப்பற்றிக்கொண்டும், கோமிண்டாங் இராணுவங்களின் மீது எண்ணிலடங்காத தோல்விகளை ஏற்படுத்திக்கொண்டும் செஞ்சேனை முன்னேறியது. 1934 அக்டோபர் 22 இல், ப்யூக்கின் என்ற தென் சீன நகரிலிருந்து 95,000 வீரர்களோடு தொடங்கிய இந்தப் போர்நடைப்பயணம் 368 நாட்கள் நடந்தது. அவற்றில் 235 நாட்கள் நடப்பதில் செலவாயின. நடைப்பயணம் நிறுத்தப்பட்ட நாட்கள் 100. அந்த 100 நாட்களில் பயணத்தை மறித்து அதன் நோக்கத்தை முறியடிக்க முயன்ற சியாங்கே ஷேக் அரசின் சேனையோடு செஞ்சேனை போர் புரியச் செலவிட்ட நாட்கள் 56. ஆம், 95,000 செஞ்சேனை மறவர்களோடு தொடங்கிய போர்ப் பயணம் ஷென்சியில் 1935 அக்டோபர் 25 இல், முடிவுற்ற போது 45,000 வீரர்களே எஞ்சி இருந்தனர். இந்தப் பெருந்தியாகம் – நாற்பதாயிரம் வீரர்களின் உயிர்த்தியாகம் – இல்லாமல் நெடும்பயணம் நிறைவேறியிருக்க முடியாது. Migration of a Nation’ – ‘ஒரு தேசமே இடம் பெயர்வது போன்ற சரித்திர சாகசம்’ என்று எழுதிய எட்கார் ஸ்நோவின் கூற்று மிகையல்ல. 

இரண்டாம் உலகப் போர் நெருங்கிக்கொண்டிருந்தது, சீனப் பொதுவுடமைக் கட்சிக்குப் பெருந்தோல்விகள் ஏற்பட்டன. 1935 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கட்சியின் வலிமை படிப்படியாக வளர்ந்தது.  ஜப்பானை எதிர்த்து போரிட, சீனத்தின் செம்படை தளபதியான மாவோ, கோமிண்டாங்  அரசுக்கு அழைப்பு விடுகிறார்.  ஆனால் சீனாவில்  கோமிண்டாங் உயரடுக்கு ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க மறுத்தது, இது சீனாவிலுள்ள மற்ற ஜனநாயக அமைப்புகள் வலியுறுத்தியது. நவம்பர் 1944 இல், சியாங் கே-ஷேக் அரசாங்கத்தின் அமைப்பில் பல மாற்றங்களைச் செய்தார், இது கோமிண்டாங்கின் இராணுவ-அரசியல் தலைமையில் கம்யூனிச  செம்படையை  வலுப்படுத்துவதையும், உள்நாட்டுப் போரைத் தொடங்குவதற்கான  திட்டங்களையும் சுட்டிக்காட்டியது. 1945 ஆம் ஆண்டில், ஜப்பானின் குவாண்டங் இராணுவத்தை தோற்கடித்து, சோவியத் துருப்புக்களால் நாட்டின் வடகிழக்கு விடுதலைக்குப் பிறகு,  குறிப்பிடத்தக்க பிரதேசங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. கோமிண்டாங் அரசாங்கம் மக்கள் இராணுவத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க முயன்றது. மற்றும் மூன்று ஆண்டுகள் (1946-1949) நீடித்த ஒரு புதிய உள்நாட்டுப் போரை கட்டவிழ்த்து விட்டது. நாடு தழுவிய புரட்சிகர எழுச்சி கோமிண்டாங் ஆட்சியின் சரிவை விரைவுப்படுத்தியது.  இது கோமின்டாங் அரசின் தோல்வியை அங்கீகரித்ததைக் குறிக்கிறது.  சீன உள்நாட்டுப் போரில், கோமின்டாங்கை எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி கண்டது.  இதன் பின், அக்டோபர் 11949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை மாவோ அறிவித்தார்.

1950-1976 காலப்பகுதியில் "மக்கள் சீன குடியரசு" தோற்றுவிக்கப்பட்டபோது சியாங்கே சேக் தப்பியோடி தைவானில் அடைக்கலம் ஆனான். மறுபுறம் 1952 வாக்கில் சீனாவில் நில உரிமையை நீக்குதல் மற்றும் பரஸ்பர உதவிக்காக ஏராளமான சிறிய தனியார் பண்ணைகள் மற்றும் கிராமப்புற கூட்டுறவு கூட்டாண்மைகளை உருவாக்குதல், கூட்டு விவசாய பண்ணை உருவாக்குதல் அத்துடன் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் பெரிய தொழில்துறை நிறுவனங்களை தேசியமயமாக்குதல் ஆகியவற்றின் விளைவாக, பொருளாதாரத்தின் பொதுத்துறை தொழில்துறை உற்பத்தியில் 41% மட்டுமே வளர்ச்சி பெற்றது. பொருளாதாரத்தில் அரச சார்பற்ற துறையின் இத்தகைய கணிசமான பங்கிற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியால் (CCP)  எதிர்வினையாற்ற முடியவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. ஏற்கனவே 1952 இல், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணி முடிந்துவிட்டது. முதலாளித்துவம் இனி தேவையில்லை என்று முடிவு செய்த CCP, லஞ்சம், வரி ஏய்ப்பு, அரசு சொத்து திருட்டு, அரசாங்க உத்தரவுகளை நாசப்படுத்துதல், பயன்படுத்துதல் போன்ற முழக்கத்தை முன்வைத்தது. தனிப்பட்ட நோக்கங்கள் மற்றும் அதிகாரத்துவத்திற்கான இரகசிய பொருளாதார தகவல், மேலும் தேசிய முதலாளித்துவத்தின் முதல் அழிப்பை நடத்துகிறது. இது கம்யூனிச சிந்தனை கொண்ட சீனர்கள், கம்யூனிச உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதிரியின் படி, தூய்மைப்படுத்தல் என்று அழைக்கப்படுகிறார்கள்.  அந்தத் தருணத்திலிருந்து, பொதுக் கூட்டமைப்பு இறுதியாக அரசு கட்டியெழுப்பும் பொது ஜனநாயகக் கோட்பாடுகளிலிருந்து மாறி சோசலிசத்தைக் கட்டியெழுப்பியது. ஆம், மாவோ ஆட்சிக்   காலத்தில், சுரண்டலற்ற முறையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம்,  அறிவியல் தொழில்நுட்பம் என எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கியது. 

பண்பாட்டுப் புரட்சி:

சீனப் சமூகத்திலும், பொதுவுடைமைக் கட்சிக்குள்ளும் "தாராளமய பூர்சுவாக்கள்" ஊடுருவி இருப்பத்தையும், அவர்கள் சீனாவில் மீண்டும் முதலாளித்துவத்தைக் கொண்டுவர முயல்வதையும் அறிந்த மாவோ, 1966 ஆம் ஆண்டு மே 16 ஆம் நாள் பண்பாட்டுப் புரட்சியொன்றைத் தொடங்கிவைத்தார். அத்தகையவர்களை புரட்சிக்குப் பிந்திய வகுப்புப் போராட்டம் மூலம் இனங்கண்டு நீக்க வேண்டும் என வலியுறுத்திய மாவோ, இதற்காகச் சீன இளைஞர்களின் சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் ஒன்று திரட்டுவதற்காக இளைஞர்களைக் கொண்ட செம்படை ஒன்றையும் அமைத்தார். இந்த இயக்கம், படைத்துறை, நகர்ப்புறத் தொழிலாளர், கட்சித் தலைமை போன்ற எல்லா இடங்களுக்கும் பரவியது. கலாச்சாரப் புரட்சி முற்றுப் பெற்றுவிட்டதாக 1969 ஆம் ஆண்டில் மாவோவே அறிவித்தார். மாவோ செப்டம்பர் 9, 1976  பெய்ஜிங்சீனாவில் இறந்த பின்னர், பண்பாட்டுப் புரட்சிக்கு எதிரான டெங் சியாவோபிங் தலைமையிலான குழுவினர் சீனப் பொதுவுடைமைக் கட்சியில் முன்னணிக்கு வந்தனர். முதலாளித்துவ மீட்சிக்கு வித்திட்டனர். 

தனி ஒரு நாட்டில், தேசிய விடுதலைக்கான போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்பு போர், புதிய ஜனநாயகப் புரட்சி, பாட்டாளி வர்க்க புரட்சி, சோவியத் சீனாவை கட்டியமைத்தல் மற்றும் முதலாளித்துவ மீட்சியை முறியடிக்க கலாச்சாரப் புரட்சி என்று ஒரு புதிய தத்துவ கோட்பாட்டை நிறுவி, பாட்டாளி வர்க்கத்திற்கு வழிகாட்டும் சர்வதேசிய கோட்பாட்டை வகுத்துள்ளார். மேலும் பாட்டாளி வர்க்க  நலனையே தனது இறுதி மூச்சு வரை சிந்தித்திருந்த மாவீரன் மாவோவின் பிறந்த நாளில் சபதமேற்போம்! அவர் கோட்பாட்டின் படி, பாட்டாளி வர்க்க புரட்சியை முன்னெடுப்போம்!! சோவித் இந்தியாவை படைப்போம் வாருங்கள்!!!. 

- செந்தளம் செய்திப்பிரிவு