அதிமுக பாஜகவின் வெளிப்படையான கூட்டாளி - திமுகவோ பாஜகவின் ரகசியக் கூட்டாளி

சாவித்திரி கண்ணன்

அதிமுக பாஜகவின் வெளிப்படையான கூட்டாளி -  திமுகவோ பாஜகவின் ரகசியக் கூட்டாளி

எனக்கு எப்படி நம்புறதுன்னு தான் தெரியலை.

பாஜகவை எதிர்ப்பதில் யார் உறுதி காட்டினாலும் அவர்களை தலையில் வைத்துக் கொண்டாட நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.

ஆனால், நான் தான் பாஜகவை எதிர்ப்பதில் சாம்பியனாக்கும் என திமுக சொல்வது எப்படி சரியாக இருக்க முடியும்?

அதிமுகவினர் ஊழல் செய்துள்ளதால் பாஜகவிடம் அடங்கி நடக்க வேண்டிய கட்டாயத்தை எதிர்கொள்கிறார்கள் என்றால், அது திமுகவிற்கும் நூறு சதவிகிதம் பொருந்தும் தானே! 

இன்னும் சொல்வதென்றால், ஊழலில் திமுக தலைமையும், அமைச்சர் பட்டாளமும் இங்கு ஊழலில் உச்சம் அல்லவா தொட்டுள்ளனர்…!

எனில், ஊழல் செய்த அதிமுகவை அடிமையாக வைத்திருக்கும் பாஜக, அவர்களைவிட ஊழலில் சிக்ஸர் அடித்திருக்கும் திமுகவை ஏன் தன்னை எதிர்த்து செயல்பட அனுமதிக்க வேண்டும்…? அப்படியானால், இவர்களுக்குள் இருக்கும் அண்டர் ஸ்டாண்டிங்க் என்ன..?

# தமிழகத்தில் மணல் குவாரி மாபியாக்கள் இடங்களில் ரெய்டு நடத்திய அமலாக்கத் துறை அனுமதிக்கப்பட்ட வரம்புகளை கடந்து பல மடங்கு அதிகமாக அள்ளியதோடு, விற்பனை செய்யப்பட்ட தொகையில் 10 சதவிதத்திற்கும் குறைவே அரசு கஜானாவிற்கு வருகிறது என்றது. ஆனால், நடவடிக்கை இல்லை.

# டாஸ்மாக் மதுபான விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது எனக் கூறிய அமலாக்கத் துறை பின்பு அதை அடக்கி வாசித்தது ஏன்?

# இயற்கை வளம் சூறையாடப்பட்டு, மலைகள் தரைமட்டமாக்கப்படுகின்றன..என திமுக அரசின் ஊழல் குறித்து பல ஆதாரங்களுன் புத்தகம் வெளியிட்ட பாஜக இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டது ஏன்?

# உதயநிதி துணை முதல்வராக்கப்படுவதற்கு முன்பு அவர் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியை சந்திக்கவும், அவர் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பல்வேறு விழாக்களுக்கு வந்து கலந்து கொண்டதும் உதய நிதியை அரசியலில் மோடி அங்கீகரித்ததற்கான அடையாளம் தானே.

# முதல்வரின் மருமகன் சபரீசன் இந்தியாவிலேயே மிக பிரம்மாண்டமான அளவில் ரியல் எஸ்டேட் தொழிலில் பல சட்ட விதிமுறைகளை மீறி கொடி கட்டிப் பறப்பதோடு, ஆர்.எஸ்.எஸ்சுடன் நெருக்கம் பாராட்டுவது எப்படி?

# கார்ப்பரேட்களுக்கு 48,000 ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடம் இருந்து பறித்துக் கொடுக்கத் தோதாக நில ஒருங்கிணைப்பு மசோதாவை நிறைவேற்றி பாஜகவை பரவசப்படுத்திய ஆட்சி எது?

போக்குவரத்து துறை தனியார் மயம், தேசிய கல்வி கொள்கை தமிழக கல்வி கொள்கை என்ற அமலாக்கம், தொழிலாளர் விரோத சட்ட அமலாக்கம், பழவேற்காடு துறைமுகத்தை அதானிக்கு தாரை வார்த்தது, 20 முதல் 30 ஆண்டானாலும் மற்ற கைதிகளை விடுவிப்பது போல இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க மாட்டோம் என பாஜகவிற்கு விசுவாசம் பாராட்டியது, பாஜகவில் சேர்ந்த ரவுடிகள் மீது சட்ட நடவடிக்கைகளை தவிர்த்தது, ஆர்ம்ஸ்டிராங் கொலையாளிகளை பாதுகாப்பது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவலர்களுக்கு பதவி உயர்வு தந்தது…இப்படியாக ஐந்தாண்டு ஆட்சி முழுவதையுமே பாஜகவிற்கு அர்ப்பணிக்கும் ஆட்சியாக நடத்தியவர் தான் திரு. ஸ்டாலின்.

 இந்த உண்மையை திசை திருப்பவே திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதி ஆட்சி..என்று சவடால் விட்டும், பாஜகவை எதிர்ப்பது போல சவுண்டு கொடுத்துக் கொண்டே இருந்தால் தான் தன் மீது சந்தேகம் வராது என சாமார்த்தியமாக நடித்துக் கொண்டும் இருப்பவர்களை எப்படி பாஜக எதிர்ப்பாளர்கள் என நாம் நம்புவது?

தமிழ் மண் பாஜகவின் மதவாதத்தை அனுமதிக்காது, தமிழர்கள் பாஜகவை ஏற்கமாட்டார்கள் என்ற யதார்த்தத்தை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் திமுக, அதற்கு தன்னை தகுதிபடுத்திக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, தமிழகத்தில் அதிமுகவை காலி செய்து திமுக-பாஜக என்ற இருதுருவ அரசியலை முன்னெடுக்கவே காய் நகர்த்துகிறது. 

அதற்காகத் தான் இந்த சட்டமன்ற தேர்தலை தமிழகத்திற்கும், டெல்லிக்குமான போராட்டமாக திமுக சித்தரிக்கிறது…!

முன்னதாக திருப்பரங்குன்றம் தீப விவகாரத்திலும் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்குமான இணக்கத்தை குலைக்கத் துடிக்கும் பாஜகவின் மதவாத அரசியலுக்கு தோதாகவே – இரு துருவ அரசிலை முன்னெடுக்கவே - திமுக அதனை மிக மோசமாகக் கையாண்டது. 

அதிமுக ஆட்சி காலத்தில் இருப்பதே தெரியாமல் இருந்த பாஜக, திமுக ஆட்சி காலத்தில் ஒரு வலுவான இயக்கமாக தன்னை கட்டமைத்துக் கொள்ள அண்ணாமலைக்கு களம் அமைத்து தந்தது திரு.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி தான்.

கப்பம் கட்டியே அண்ணாமலையை குபேரனாக்கிய கழிசடை ஆட்சியே, திமுக ஆட்சி.

பல்லாயிரம் கோடிகள் ஊழல் பணத்தை குவித்து வைத்திருப்பவர் - அடுத்து தன் வாரிசான மகன் தடையின்றி அரியணை ஏற வேண்டும் என்பதில் கருத்தாக உள்ளவர் - பாஜகவிடம் ஒரு போதும் சமர் புரிய வாய்ப்பே இல்லை.

திமுக பாஜகவை எதிர்க்கிறது என்பதற்கு ஈடான அறியாமை உலகில் வேறில்லை.

அதிமுக பாஜகவின் வெளிப்படையான கூட்டாளி. ஆனால், திமுகவோ பாஜகவின் ரகசியக் கூட்டாளி.

ஆக, தமிழர்களாகிய நாம் நம் இயல்பின்படி பாஜகவை, அது நிற்கும் 27 தொகுதிகளிலும் மண்ணை கவ்வ வைப்போம்.

பாஜகவை தடுப்பதற்கான உள்ளார்ந்த அறச் சீற்றமும், ஆற்றலும் எந்தக் கட்சியின் செயல்களிலும் இல்லை. அது மக்களால் மட்டுமே சாத்தியமாகும்.

சாவித்திரி கண்ணன்

https://www.facebook.com/share/p/18akEnv9Tu/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு